Monday, October 7, 2024
முகப்புபுதிய ஜனநாயகம்கம்யூனிசக் கல்விநக்சல்பாரி இயக்கத்தின் வரலாறு !

நக்சல்பாரி இயக்கத்தின் வரலாறு !

-

நக்சல்பாரி – புரட்சியின் இடிமுழக்கம்

ந்தச் சொல்லை ஏதாவது ஒரு வகையில் நீங்கள் கேள்விப்படாமல் இருக்க முடியாது.

நாளேடுகளில், வானொலியில், தொலைக்காட்சியில் அன்றாடம் அடிபட்டுக் கொண்டுதானே இருக்கிறது. ஆனால் அந்தச் சொல்லுக்கு நல்லவிதமான கருத்தைத் தரும்வகையில் அவை ஒரு போதும் செய்திகள் கொடுத்ததே இல்லை.

“நிலப்பிரப்புகள், அரசியல்பிரமுகர்கள் நக்சல்பாரிகளால் சுட்டுக்கொலை”, “நக்சல்பாரிகள் போலீசு நிலையங்களை தாக்கி துப்பாக்கிகள் பறிமுதல்”, “நக்சல்பாரிகள் வைத்த நிலக்கண்ணி வெடித்து போலீசார் பலி”, “ரயில்நிலையவங்கள், பாலங்களைத் தீவிரவாதிகள் தகர்த்தனர்”, “வெடிகுண்டுகள் பயங்கர ஆயுதங்களுடன் தீவிரவாதிகள் கைது”, “போலிசுடன் நடந்த மோதலில் நக்சல் பாரிகள் கொல்லப்பட்டனர்”.

– இப்படியான செய்திகளைக் கொண்டு நக்சல்பாரிகள் என்றாலே நோக்கமற்ற, சமூக விரோத பயங்கரவாதிகள், தீவிரவாதிகள், வன்முறையாளர்கள் என்ற எண்ணம் பரப்பப்படுகிறது.

“தனிநபர் அநீதிக்கு இலக்கானவர்கள், வேலை வாயப்பற்ற இளைஞர்கள் நக்சல்பாரிகளாக மாறி தவறாக வழிநடத்தப்பட்டு அப்பாவி மக்களையும் சமூகத்தையும் பழிவாங்கத் துடிப்பவர்கள்” என்று கோமல் சுவாமிநாதன், கமலஹாசன் போன்ற சினிமாக்காரர்களால் கொச்சைப்படுத்தப்பட்டதைப் பார்த்திருப்பீர்கள்.

“சமூக விரோதிகள்”, “தீவிரவாதிகள்”, “பயங்கரவாதிகள்”. “நக்சலைட்டுகள்”, நக்சல்பாரிகள்”, “தீ கம்யூனிஸ்டுகள்”, இப்படிப் பலவாறு எதிரிகளால் குறிப்பிடப்படும் கம்யூனிசப் புரட்சியாளர்கள் எவரும் இதனாலெல்லாம் வருந்தவோ, வெட்கப்படவோ கிடையாது.

ஏனென்றால் சாவுக்கு அஞ்சாதவர்கள்தாம் நக்சல்பாரிகள். “போலீசுடன் மோதல்” என்கிற பெயரில் படுகொலை செய்யப்படுவதில் இருந்து பிழைத்தவர்களைப் பிடித்து வந்து குற்றுயிரும் குலையுயிருமாக வழக்குமன்றத்தில் நிறுத்தப்பட்டபோதும் நக்சல்பாரிகள் சொன்னார்கள் “ஆம்! நாங்கள்தான் பண்ணையார்களைக் கொன்றோம்; மக்கள் எதிரிகளை அழித்தொழிப்பது குற்றமில்லை! தூக்குத் தண்டனையா, கொடு! தீர்ப்பை முடிவு செய்துவிட்டு விசாரணை என்று ஏன் நாடகமாடுகிறாய்?” என்று கலகக் குரல் எழுப்பினார்கள்.

ஆகவே, எதிரிகளின் அவதூறுகளைக் கண்டு நக்சல்பாரிகள் அஞ்சுவதில்லை. அந்த அவதூறுகளால் நக்சல்பாரிகளை மக்களிடம் இருந்து தனிமைப்படுத்தவும் முடியாது. ஏனென்றால், நக்சல்பாரி – அது குமுறிக் கொண்டிருக்கும் கோடானு கோடி உழைக்கும் மக்களின் விடிவெள்ளி; கூலி, ஏழை விவசாயிகள், தொழிலாளர்களின் வர்க்க கோபத்தின் வடிவம். தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களின் ஒடுக்கப்பட்டவர்களின் குரல்.

ஆனால் இதற்குப் பெயர் ஏன் நக்சல்பாரி என்று வந்தது?

நக்சல்பாரி –-

இமயமலையின் அடிவாரத்தில் உள்ள ஒரு சிறுகிராம்ம். மேற்கு வங்க மாநிலம், டார்ஜிலிங் மாவட்டம், சிலிகுரி வட்டத்தில் உள்ளது அந்த கிராமம். பண்ணை நிலப்பிரபுக்கள் மிட்டா மிராசுகள், கந்துவட்டி லேவாதேவிக்காரர்கள், அரசு அதிகார வர்க்கத்தினர், போலீசு ஆகியோரின் சுரண்டல், ஒடுக்கு முறைக் கொடுமைகளை மௌனமாக அனுபவித்துக் கொண்டுள்ள இலட்சக்கணக்கான இந்தியக் கிராமங்களில் ஒன்றாகத்தான் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது.

அன்று, அரசாங்கக் குறிப்பேடுகளில் மட்டுமே அறியப்பட்ட இருள்கப்பிய கிராமமாகத்தான் இருந்தது, அந்த நக்சல்பாரி.

ஆனால் இன்றோ, உலகப்புரட்சி வரலாற்றில் அழிக்க முடியாத இடத்தைப் பெற்றிருக்கிறது. உலகின் எல்லா மொழி அகராதியிலும் அதற்குத் தனி விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.

இனிமேலும் நக்சல்பாரி என்ற சொல் அந்தச் சிறு கிராமத்தை மட்டும் குறிக்கவில்லை.

நக்சல்பாரி என்ற சொல்லைக் கேட்ட மாத்திரத்தில் தரகு அதிகாரவர்க்க முதலாளிகளையும் ஏகாதிபத்தியவாதிகளையும் அச்சம் கொள்ள வைக்கிறது.

பண்ணை நிலப்பிரபுக்களையும், கந்து வட்டி லேவாதேவிக்காரர்களையும், கொள்ளை வியாபாரிகளையும், அதிகார வர்க்கத்தினர்களையும் குலைநடுங்கச் செய்கிறது.

ஏனென்றால் நக்சல்பாரி என்பது இப்போது,

– ஒரு மாபெரும் அரசியல் இயக்கத்தைக் குறிக்கிறது.

– ஒரு ஆயுதந்தாங்கிய பேரெழுச்சியைக் குறிக்கிறது.

– நாடாளுமன்ற போலி ஜனநாயகத்துக்கு வெளியே உழைக்கும் மக்கள் அணிதிரளும் மையமாக விளங்குகிறது.

– நாடாளுமன்றத் தொழுவத்தில் விழுந்து புரளும் பன்றிகளாகிய அரசியல் கட்சிகளை எள்ளி நகையாடும் அரங்கமாகத் திகழ்கிறது.

– எல்லாவற்றுக்கும் மேலாக, அதிகாரவர்க்க – இராணுவ அரசு அமைப்பைத் தாக்கித் தகர்ப்பதற்கான போராயுதமாக எழுகிறது.

– உழைக்கும் மக்கள் நேரடியாக அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஒரே பாதையாகத் தெரிகிறது.

நக்சல்பாரி இயக்கத்தைப் பற்றி உலகம் முழுவதும் அறிந்திருந்தாலும் அதற்கு இந்தப் பெயர் எப்படி வந்தது என்பது பலருக்கும் தெரியாது.

அது இப்படித்தான் நிகழ்ந்தது.

1871-ம் ஆண்டு பிரெஞ்சுத் தலைநகர் பாரிசில் ஆயுதந்தாங்கிய பேரெழுச்சியில் கிளர்ந்தெழுந்த தொழிலாளர்கள் முதலாளிகளின் அரசு அமைப்பைத் தகர்த்து பாரிசு கம்யூன் என்னும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவினார்கள். அது இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டு தோல்வியுற்றாலும் அதன் மூலம் உழைக்கும் மக்கள் அதிகாரத்தை நிறுவிக் கொள்வதற்கான முன் மாதிரி ஒன்றை உலகுக்கு எடுத்து காட்டினார்கள்.

அதைப் போலத்தான் “உழுபவனுக்கே நிலம்,உழைப்பவனுக்கே அதிகாரம்” என்கிற முழக்கத்தை முன் வைத்து, 1967-ம் ஆண்டு மே மாதம் ஆயுதந்தாங்கிய பேரெழுச்சியை நடத்தி, அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி, நக்சல்பாரி, விவசாயிகள் இந்தியப் புரட்ச்க்கான போர்ப் பிரகடனம் செய்தார்கள்.

அன்று, நக்சல்பாரி உழவர்கள் மூட்டிய சிறு பொறி பெருங்காட்டுத் தீயாக மாறி நாடு முழுவதும் பற்றிப் படர்ந்ததைக் குறிப்பதுதான் நக்சல்பாரி இயக்கம்.

மேற்கு வங்கம், டார்ஜிலிங் மாவட்டத்தில் சுமார் முன்னூறு சதுர மைல் பரப்பளவை உள்ளடக்கிய மூன்று கிராமங்கள் நக்சல்பாரி, கரிபாரி, பன்சிதேவா ஆகியவை. வடக்கே நேபாளம், கிழக்கே சிக்கிம், பூடான், தெற்கே வங்கதேசம் (அன்றைய கிழக்கு பாகிஸ்தான்) இவற்றுக்கு இடையே வடகிழக்கிந்தியாவை இணைக்கும் மெல்லிய கழுத்துப் பகுதியில் ஓடும் ‘மெச்சி’ ஆற்றின் கரையில் அமைந்துள்ளது, நக்சல்பாரி கிராமம்.

நக்சல்பாரி விவசாயிகளில் பெரும்பாலும் சந்தால், ராஜபான்ஷி, ஒரேயன் ஆகிய பழங்குடி இனத்தவர்கள். விதை, ஏர், மாடு ஆகிய அனைத்தையும் கொடுத்து, விளைச்சலில் பெரும் பங்கை குத்தகையாக விழுங்கிக் கொண்டிருந்த “ஜோத்திதார்” எனப்படும் நிலப்பிரபுக்களின் ஆதிக்கத்தில் சிக்கியிருந்தது அக்கிராமம் முழுவதும்.

ஜோத்திதார்களின் ஆதிக்கம் கண்டஞ்சி எப்போதும் சும்மா அடங்கிக் கிடந்தவர்கள் அல்ல நக்சல்பாரி கிராம மக்கள். 1951- 54 ஆகிய ஆண்டுகளில் பல்வேறு சிறு சிறு போராட்டங்கள் மூலம் வலுவான விவசாயிகள் சங்கமாகவும், கம்யூனிசக் கட்சி அமைப்பாகவும் அணி திரண்டனர். 1955 – 57 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்தில் நக்சல்பாரி விவசாயிகள் தங்களை இணைத்துக் கொண்டனர். தேயிலைத் தோட்ட முதலாளிகளின் அடியாட்களாகக் கொண்டு வரப்பட்ட போலீசுப் படையைப் பின்வாங்கும்படி விரட்டியடித்தவர்கள்.

அங்கே தொழிலாளர்கள் தலைமையில் விவசாயிகள் திரண்டதும், தொழிலாளர்- விவசாயிகள் கூட்டணி உருவானதும் இயல்பாகவும் அவசியமாகவும், தவிக்கவியலாத்தாகவும் அமைந்தது.

பல்லாயிரக்கணக்கான ஏக்கர் தேயிலைத் தோட்டங்களை வைத்திருந்த முதலாளிகள், தோட்டத் தொழிலாளர்களையே தங்களது விவசாய விளைநிலங்களில் குத்தகைதார்ர்களாகப் பயன்படுத்தினர். நில உச்சவரம்புச் சட்டம் வந்தபோது விவசாய நிலங்களையும் தேயிலைத் தோட்டம் என்று கணக்குக் காட்டி ஏய்த்தனர். ஒருபுறம் தாங்கள் நினைத்த போதெல்லாம் தோட்டத் தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்தனர். மறுபுறம் ஜோத்திதார்கள் பெருமளவு விவசாயிகளை தமது குத்தகை நிலத்திலிருந்து வெளியேற்றினர்.

1958 – 62 ஆகிய ஆண்டுகளில் நக்சல்பாரியில் விவசாயிகளின் இயக்கம் மேலும் போர்க்குணமடைந்தது. நில வெளியேற்றத்துக்கு எதிராக “குத்தகைதார விவசாயிகளே அறுவடையைக் கைப்பற்றுவது, பயிர்களைக் காப்பதற்காக ஆயுதமேந்துவது, போலீசின் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ளத் தயாராயிருப்பது” என்று நக்சல்பாரி விவசாயிகளுக்குத் தலைமையேற்றிருந்த கம்யூனிஸ்டுக் குழு வழிகாட்டியது.

1966–ல் சிலிகுரி பகுதியில் நடந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் 16 நாள் வேலை நிறுத்தம், அடுத்த ஆண்டு வெடிக்கக் காத்திருந்த நக்சல்பாரி உழவர் பேரெழுச்சியில் முன்னணிப் பாத்திரமாற்றத் தொழிலாளர்களைத் தயார் செய்தது.

1967-ம் ஆண்டு இந்திய நாடாளுமன்ற அரசியலில் கூட முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது. ஏகபோகமாக இந்தியாவை ஆண்டுவந்த காங்கிரசு எட்டு மாநிலங்களில் வீழ்த்தப் பட்டு, எதிர்க்கட்சி அணிகள் ஆட்சிக்கு வந்தன. அவற்றில் ஒன்று மேற்கு வங்கம். அங்கே 14 கட்சி ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு வந்தது. வங்காளக் காங்கிரசின் தலைவர் அஜய் முகர்ஜி முதலமைச்சர், போலி மார்க்சிஸ்டு கட்சித் தலைவர் ஜோதிபாசு போலீசு அமைச்சர் ஆனார்கள்.

நிலச் சீர்திருத்தம் – நில உச்சவரம்புச் சட்டம் தீவிரமாக அமுலாக்கப்பட்டு உபரி நிலங்களைக் கைப்பற்றி உடனடியாகவே கூலி, ஏழை விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் என்று தேர்தலுக்கு முனனும் பின்னும் வாக்குறுதிகிகளை வாரி வழங்கினர், போலிக் கம்யூனிஸ்டுகள். அவர்களது நிலம் மற்றும் வருவாய்த் துறை அமைச்சராக இருந்த அரே கிருஷ்ண கோனார் அதையே உறுதிசெய்ததோடு, நில விநியாகம் வெற்றியடைய வேண்டுமானால் அமைப்பாகத் திரண்ட விவசாயிகள் கீழ் இருந்து “முன் முயற்சி” எடுக்க வேண்டும் என்று ஒரு பேச்சுக்கு சொல்லி வைத்தார்.

கீழிருந்து கட்டவிழ்ந்து கிளம்பும் விவசாயிகளின் “முன் முயற்சி” போலி மார்க்சிஸ்டுகளின் முகத்திரையைக் கிழித்துவிடும், அவர்களுடைய பதவி நாற்காலியையே பறித்து விடும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. நிலச் சீர்திருத்தம் – நில உச்சவரம்பு வந்தது. ஆனால் ஒரு துண்டு நிலம் கூட நிலப்பிரபுக்களிடம் இருந்து கைப்பற்றப்படவில்லை. வழக்கம்போல நிலங்கள் எல்லாம் பினாமி பெயர்களுக்கு மாற்றப்பட்டன. ஆயிரக்கணக்கான வழக்குகளும், வழக்கு மன்றத் தடையுத்தரவுகளும் இரண்டு இலட்சம் ஏக்கர் நிலங்கள் மீது போடப்பட்டன. அதிகாரவர்க்கம் நிலப்பிரபுக்களுக்குத் துணை நின்றது.

“பினாமி பெயரால் நடந்துள்ள மோசடியான மாற்றங்களைப் பற்றி அரசாங்கம் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. அரசியல் சட்டத்தாலும் நீதிமன்றங்களாலும் காகிதக் கட்டுக்களாலும் ஆவணங்களாலும் போடப்படுகின்ற தடங்கல்கள் ஏராளம், ஏராளம்” என்று புலம்பினார் அரே கிருஷ்ண கோனார்.

மக்களின் போராட்டங்களுக்கு ஆதரவளிக்கவும், வர்க்கப் போராட்டத்தின் கருவியாக அரசாங்கத்தைப் பயமன்படுத்துவதற்காகவுமே பதவியேற்பதாகக் கூறிக் கொண்ட அந்தப் போலி இடது சாரிகளால் எதையுமே செய்ய முடியவில்லை.

இன்னொருபுறம், ஏராளமான குத்தகை விவசாயிகளை நில வெளியேற்றம் செய்வது அதிகரித்தது. அவற்றைத் தடுக்கவோ, பண்ணை நிலப்பிரபுக்களிடமிருந்து சட்டப்படியான உபரி நிலங்களைக் கைப்பற்றி வாக்களித்தபடி கூலி, ஏழை விவசாயிகளுக்கு வழங்கவோ இல்லை. அப்படிச் செய்தால் தரகு அதிகார முதலாளிகள் – நிலப்பிரபுக்களின் கருவியான மத்திய அரசு இவர்களின் மாநில அரசை பதவி நீக்கம் செய்துவிடும் என்று அஞ்சினர். பேசாமல் மனுக்களை சமர்ப்பித்து விட்டு பொறுமையாகக் காத்திருக்கும்படி விவசாயிகளுக்கு உபதேசம் செய்தார்கள், போலி மார்க்சிஸ்டு அமைச்சர்கள். மேற்கு வங்க ஐக்கிய முன்னணிக்கு இக்கட்டான நிலையை ஏற்படுத்தி பதவி பறிபோகும் சூழ்நிலை உருவாகாமல் தடுப்பதே விவசாயிகள் உட்பட எல்லா இயக்கங்களின் கடமையாக இருக்கவேண்டுமென அறிவுறுத்திவந்தனர்.

அரசியல் நிர்ணயச் சட்டம், வழக்குமன்றம், அதிகார வர்க்கம் ஆகியவற்றிக்குக் கட்டுப்பட்டு பதவியைத் தக்க வைத்துக் கொள்வதா, அல்லது இவற்றை மீறி உபரி, குத்தகை நிலங்களைப் பறிமுதல் செய்து விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிப்பதா? தங்களது பதவியா, விவசாயிகளுக்கு நிலமா? இரண்டிலொன்றை தெரிந்தெடுத்துக் கொள்ளும்படி போலி இடதுசாரிகள் நிர்பந்திக்கப்பட்டார்கள்.

ஆனால் அவர்கள் தமது வர்க்க பாசத்தை, வர்க்க குணத்தை, துரோகத்தனத்தைக் காட்டிவிட்டார்கள். அரசாங்கப் பதவிதான் தமக்கு அவசியமானது, அதைக் காப்பதற்காக உழைக்கும் மக்களின் நலனைப் பலியிடவும், தாங்களே அவர்களை ஒடுக்கவும் துணிந்து விட்டார்கள்.

கடந்த பல ஆண்டுகளாக ஓட்டுப் பொறுக்கி அரசியல் கட்சிகள், குறிப்பாக இடதுசாரிக் கட்சிகள் முழங்கி வரும் முற்போக்கு, சீர்திருத்தம் எல்லாம் வெறும் மோசடிகள் தாம் என்பதற்குச் சாட்சியமாக அமைந்தது நக்சல்பாரி உழவர்களின் எழுச்சி.

மார்ச் – 18, 1967 சிலிகுரி வட்ட ‘மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு’ கட்சியின் தலைமையிலான விவசாயிகள் சங்க மாநாடு வெற்றிகரமாகக் கூடியது. அன்று அங்கே போலி மார்க்சிஸ்டுகளின் ஐக்கிய முன்னணிக்கு, நாற்காலிப் புரட்சிக்கு எதிராகக் கலகக் கொடி ஏற்றப்பட்டது.

“நிலப்பிரபுக்களின் நிலங்கள் பறிமுதல் செய்யப்படவேண்டும். பறிமுதலும் விநியோகமும் செய்யும் அதிகாரம் விவசாயிகள் கமிட்டிகளுடையதுதான். இதைச் செய்ய வேண்டுமெனில் நிலப்பிரபுக்களின் எதிர்ப்பைச் சமாளிக்க நாம் ஆயுதம் ஏந்த வேண்டும். நிலப்பிரப்புத்துவ எதிர்ப்புப் போராட்டம் என்பது நிலப்பிரபுக்களை எதிர்ப்பதுடன் முடிந்துவிடாது; அவர்களுக்கு ஆதரவாக வருகின்ற மத்திய, மாநில அரசுகளையும் நாம் எதிர்த்து நின்றாக வேண்டும். எனவே ஒரு நீண்டகாலப் போருக்கு நாம் தயாராக வேண்டும்” என்று விவசாயிகளின் சங்கத்தின் சிலிகுரி தாலுகா செயலர் ஜங்கல் சந்தாலும், ‘மார்க்சிஸ்டு’ கட்சியின் மாவட்டக் கமிட்டி உறுப்பினர் கனு சன்யாலும் விடுத்த அழைப்பை பெரும் எழுச்சி ஆரவாரத்தோடு வரவேற்று விவசாயிகள் அனைவரும் அங்கீகரித்தனர்.

ஏற்கனவே போர்க்குணமிக்க போராட்டங்களால் விழிப்புணர்வும், அமைப்புப் பலமும் கொண்டிருந்த சிலிகுரி வட்ட, குறிப்பாக நக்சல்பாரிப் பகுதி விவசாயிகள் எதிர்ப்பார்ப்புடன் காத்திருந்தனர். மழையிலும், வெயிலிலும் ஜோத்திதார்களின் நிலங்களில் உழைத்துக் களைத்தும் கருகியும் போயிருந்த உழவர்களின் முகங்களில் நம்பிக்கை சுடர்விடத் தொடங்கியது.

நக்சல்பாரி கிராமத்தில் நடந்த ஒரு சம்பவம் அந்த விவசாயிகளின் நெஞ்சில் கனலை மீட்டியது. பிகுல் கிஷன் என்ற குத்தகை விவசாயி, நிலப்பிரபுவால் வெறியேற்றப்பட்டார். வழக்குமன்ற உத்திரவு பிகுல் கிஷனுக்கு சாதகமாக இருந்த போதிலும் நிலப்பிரபுவின் ஆட்கள் அவரை அடித்து விரட்டினர். வழக்கு மன்றமோ, அரசாங்கமோ தங்களைப் பாதுகாக்காது என்பதை இச்சம்பவம் விவசாயிகளுக்குப் புரியவைத்தது. சிலிகுரி வட்ட விவசாயிகள் மாநாட்டு அழைப்பை உடனடியாக அமலாக்குவதே சரியானது என்று அவர்கள் முடிவு செய்தனர்.

ஏப்ரல் மாதத்திற்குள் அந்த வட்டாரத்திலிருந்த எல்லா கிராமங்களிலும் விவசாயிகள் கமிட்டி அமைக்கப்பட்டுவிட்டது. 15,000 முதல் 20,000 விவசாயிகள் தங்களை முழுநேர ஊழியர்களாகப் பதிவு செய்து கொண்டனர். எல்லா கிராமங்களிலும் ஆயுதம் தாங்கிய செங்காவலர் குழுக்கள் அமைக்கப்பட்டன.

உடனே துவங்கின நடவடிக்கைகள்; பட்டாக்கள், கடன் பத்திரங்கள் அனைத்தும் எரிக்கப்பட்டன. நிலப்பிரபுக்களின் பத்திரங்கள் அனைத்தும் எரிக்கப்பட்டன. நிலப்பிரபுக்களின் ஆயுதங்களும், துப்பாகிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. கொடும் நிலப்பிரபுக்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. வில்லும் அம்பும், கோடரியும், துப்பாக்கிகளும் ஏந்திய விவசாயிகள் நிர்வாகத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொண்டனர். இந்தப் பிராந்தியத்தின் காவல் நிலையங்கள் செயலிழந்தன. விவசாயிகளின் அனுமதியின்றி யாரும் அப்பிராந்தியத்தினுள் நுழையக் கூட முடியாது என்ற நிலைமை மே மாதத்தில் உருவானது.

நிலைமை கட்டுக்கு மீறிச் செல்வதைக் கண்டு அஞ்சிய வருவாய்த்துறை அமைச்சர் அரே கிருஷ்ண கோனார் அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்த சிலிகுரிக்கு விரைந்தார். “நக்சல்பாரியில் நடக்கும் சட்டவிரோதமான நிலப் பறிமுதல்கள் எல்லாம் உடனே நிறுத்தப்படும்” என்றும், “கனு சன்யால், ஜங்கல் சந்தால் போன்ற போலீசால் தேடப்படும் நபர்கள் சரண்டையவும் ஒப்புக் கொண்டுவிட்ட”தாகவும் அறிவித்தார். “இது கடைந்தெடுத்த பொய்” என்று மறுத்தனர்,புரட்சியாளர்கள்.

மே-23, 1967 நக்சல்பாரி விவசாயிகளுக்கு எதிரான அரசின் போர் தொடங்கியது. தங்களது தலைவர்களைக் கைது செய்ய முயன்ற போலீஸ் படையை ஆயுதம் தாங்கிய விவசாயிகள் திருப்பித் தாக்கினர். ஒரு காவலர் கொல்லப்பட்டவுடன் பின் வாங்கிய போலீசு 25-ம் தேதி பெரும்படையுடன் வந்து மீண்டும் தாக்கியது. ஆறு பெண்கள், இரு குழந்தைகள் உள்ளிட்ட 9 பேரை கொன்றது, விவசாயிகள் பலர் கைது செய்யப்பட்டனர், தலைவர்களைக் காட்டிக் கொடுக்குமாறு போலீசு செய்த சித்திரவதைகளால் இம்மியும் பயனில்லை.”போலீசை ஏன் தாக்கினர்கள்?” என்ற கேள்விக்கு விவசாயிகள் பதிலளித்தார்கள்; “நாங்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்க விரும்பினோம்”.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ‘மார்க்சிஸ்டு’ கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் பெரும் கொந்தளிப்பை தேற்றுவித்தது. கட்சித் தலைமை இறந்து போனவர்களுக்காக நீலிக் கண்ணீர் வடித்தது. ஆனால் ‘மார்க்சிஸ்டு’ கட்சி இரு கூறாகப் பிளவுபடுவதை நீலிக்கண்ணீரால் தடுக்க இயலவில்லை.

“நக்சல்பாரிப் பாதையே விவசாயப் புரட்சியின் பாதை” “கொலைகாரன் அஜய் முகர்ஜியே ராஜினாமா செய்” என்ற முழக்கங்களால் கல்கத்தா நகரச் சுவர்களை அதிரவைத்தனர். கல்கத்தாவின் புரட்சிகர மாணவர்கள்.

போலிகள், மக்கள் விரோதிகளுக்கு மரண அடி
உழைக்கும் மக்களின் அரசியல் மூச்சாய் நக்சல்பாரி!

க்சல்பாரியோ தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வந்தது. ஜூன் 8 முதல் 10 தேதிகளுக்குள் 80 நிலபறிமுதல்கள், 13 நிலப்பிரபுக்களின் வீடுகளில் கொள்ளை, இரண்டு கொலைகள், ஒரு கடத்தல், ஆயுதம் தாங்கிய குழுக்களின் வரிவசூல் நடவடிக்கைகள், விவசாயிகளின் மக்கள் நீதிமன்றம்…. என புள்ளி விவரங்களைக் காட்டி அலறியது போலீசு.

நக்சல்பாரியில் ‘தீவிரவாதி’களின் நடவடிக்கை காரணமாக சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக பாராளுமன்றத்தில் அறிவித்தார் மத்திய உள்துறை அமைச்சர் ஒய்.பி. சவாண் (இவ்வறிவிப்பின் மூலம் மார்க்சிஸ்டு கட்சிக்கு உள்ளேயே இருக்கும் தீவிரவாதிகளைத் தனியே பிரித்து அடையாளம் காட்டினார் சவாண்). அரே கிருஷ்ண கோனார், வலது கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த பாசனத்துறை அமைச்சர் விஸ்வநாத் முகர்ஜி மற்றும் சிலர் அடங்கிய அமைச்சர்கள் குழு ‘தீவிரவாதி’ களை நல்வழிப்படுத்த நக்சல்பாரிக்கு விரைந்தது; சென்ற வேகத்தில் தோல்வி கண்டு திரும்பியது.

ஜூன் இறுதியில் மார்க்சிஸ்டு கட்சித் தலைமை நக்சல்பாரி புரட்சியாளர்களை வெளிப்படையாகத் தாக்கத் தொடங்கியது மார்க்சிஸ்டு கட்சியிலிருந்த புரட்சிகர அணிகளும் கல்லூரி மாணவர்களும் “நக்சல்பாரி விவசாயிகள் போராட்ட ஆதரவுக் குழு” ஒன்றைக் கட்டி ஜூன் 27-ம் தேதி சட்டசபையின் முன் பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். மார்க்சிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சுசிதல் ராய் சவுத்ரி உள்ளிட்ட 19 பேர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

“சீறிவரும் இந்தியப் புரட்சிச் சிறுத்தையின் முன் பாதம்” என்று நக்சல்பாரி எழுச்சியை தனது ஜூன் 28-ம் தேதி ஒலிபரப்பில் வருனித்த பீகிங் வானொலி, மார்க்சிஸ்டுக்களின் ஜக்கிய முன்னணி சர்க்காரை “மக்களை ஏய்க்கும் எதிர்ப்புரட்சியாளர்களின் கருவி” எனச் சாடியது.

ஜூலை 12-ம் தேதி மிருக பலத்துடன் மீண்டும் நக்சல்பாரிகள் மீது படையெடுத்தது போலீசு. ஜங்கள் சந்தாலும் முன்னணிபோராட்ட போராட்ட வீர்ர்கள் பலரும் கைது செய்ய்பட்டனர்.

மார்க்சிஸ்டு கட்சியின் வங்காளி வார இதழான தேஷ் – ஹிதாஷியின் ஆசிரியராக இருந்த சுசிதல்ராய் சவுத்ரி கட்சியில் இருந்து வெளியேற்றப்படுவதற்கு முன்பிருந்தே நக்சல்பாரி எழுச்சியை ஆதரித்து அதில் எழுதி வந்தார். வெளியேற்றப்பட்ட பின் பத்திரிகை அலுவலகத்தை கைப்பற்ற மார்க்சிஸ்ட் குண்டர்கள் முயன்ற போது மோதல் வெடித்தது.

சுசிதல்ராய் சவுத்ரி ‘தேசப்ரதி’ என்ற வங்காள நாளேட்டையும் பின்னர் ‘லிபரேசன்’ ஆங்கில இதழையும் தொடங்கினார். இரண்டு இதழ்களும் ‘மார்க்சிஸ்டு’களைச் சித்தாந்தாந்த ரீதியாகத் தோலுரிக்கத் தொடங்கின. சீனத்தின் மக்கள் தினசரியும், பீகிங் வானொலியும் தொடர்ச்சியாக ‘மார்க்சிஸ்டு’களின் திருத்தல் வாதத்தை அம்பலப்படுத்தினர். வங்காளத்தின் வடமுனையில் பற்றிய தீ நாடெங்கும் ‘மார்கசிஸ்டு’கட்சியைச் சுட்டெரிக்க தொடங்கியது.

மார்க்சிஸ்டு கட்சித் தலைமையும் நாற்காலிப் புரட்சிக்கு எதிராக நக்சல்பாரியில் கலக்க் கொடி உயர்ந்தது ஏதோ தற்செயலாக நடந்து விட்ட சம்பவமல்ல. மார்க்சிஸ்டு கட்சிக்குள் இருந்த முன்னணியாளர்கள் சாரு மஜும்தார், கனு சண்யால், சசிதல் ராய் போன்ற தோழர்களின் தலைமையின் திருத்தல்வாதத்தை எதிர்த்து போராடி, புரட்சிகர நிலைப்பாடுகளை முன்வைத்து, அணிகளில் பலரை வளர்த்தெடுத்ததுதான் காரணம். மார்க்சிஸ்டு தலைமையின் நாடாளுமன்ற சமரச சரண்டைவுப் பாதையைக் கைவிட்டு புரட்சிப் பாதையை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை அவர்கள் 1965-ம் ஆண்டு முதலே வலியுறுத்தி வந்தனர். இதன் அடிப்படையில் சிறு சிறு அமைப்பு இயக்கங்களையும் கட்டி அமைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஜோதிபாசு, பிரமோத் தாஸ் குப்தா ஆகிய திருத்தல் வாத துரோகிகள் புரட்சியாளர்களை வெளியேற்றியும், குறிப்பாக தோழர் சாரு மஜும்தாரை பைத்தியக்காரன், போலீசு உளவாளி என்றும் வசைபாடினர். ஆனால் இந்த அவதூறுகளால் நக்சல்பாரி எழுச்சியை அவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை.

நக்சல்பாரி எழுச்சியும் ஆதரவாளர்களை குறுங்குழுவாதிகள், வறட்சிவாதிகள், சாகசவாதிகள் என்பதாக மட்டுமல்ல, சி.ஐ.ஏ. உளவாளிகள் என்றெல்லாம் இடதுசாரி கட்சிகள் அவதூறு செய்தன. ஆனால் அக்கட்சிகளுக்குள் வெடிக்கத் துவங்கிய கலகத்தை அவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை. 1967-ம் ஆண்டு “மார்க்சிஸ்டு” கட்சி தலைமை மதுரையில் மத்தியக் கமிட்டியைக் கூட்டி நக்சல்பாரி எழுச்சியை கொச்சைப்படுத்தி, முழுக்க முழுக்க திருத்தல்வாதிகள் என்பதை அம்பலப்படுத்திக் கொண்டது.

இதைத் தொடர்ந்து காசுமீர், உத்திரப்பிரதேசம், ஆந்திரா ஆகியவற்றில் பெரும்பான்மையான மாநில கமிட்டிகளை வெளியேறின. “கட்சித் தலைமைக்கெதிராக கலகக் கொடி உயர்த்துங்கள்” என்ற அறைகூவல் எதிரொலித்தது. பஞ்சாப், கேரளா, தமிழ்நாடு, பீகார், ஓரிசா எனப் பல மாநிலங்களிலும் புரட்சியாளர்கள் கலகம் செய்து போலி மார்க்கசிஸ்டு கட்சியை விட்டு வெளியேறினர்.

ஜூன் மாதத்தில் தோற்றுவிக்கப்பட்ட “நக்சல்பாரி விவசாயிகள் போராட்ட ஆதரவுக் குழு” பல்வேறு மாவோயிசக் குழுக்களின் பாலமாகச் செயல்பட்டது. நவம்பர் மாதத்தில் அக்குழு கூட்டிய அனைத்திந்திய மாநாட்டில் “அனைத்திந்திய புரட்சியாளர் ஒருங்கிணைப்புக் கமிட்டி” என்றொரு அமைப்பை ஏற்படுத்துவது என முடிவு செய்தது; கீழ்க்கண்ட அறைகூவலையும் விடுத்தது.

“நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் புரட்சிகர விவசாயிகளின் போராட்டங்கள் வெடித்தெழுவதை தோழர்கள் அவதானித்திருப்பீர்கள். பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படை என்ற முறையில் இவற்றை வளர்த்தெடுப்பதும், தலைமை தாங்கி வழி நடத்துவதும் நம் கடமை. நாட்டின் பல்வேறு மூலைகளில், தனித்தனியே, மக்கள் போராட்டங்களின் பல்வேறு அரங்குகளில் கட்சிக்கு (மார்க்சிஸ்ட்) உள்ளேயும் வெளியேயும் செயலாற்றி வரும் சக்திகளெல்லாம் ஒன்று படவேண்டும். மார்க்சியம்-லெனினியம் – மா சே துங் சிந்தனையின் ஒளியில் ஒரு புரட்சிகரக் கட்சியைக் கட்டியமைக்க வேண்டும். மதுரையில் வெளிப்பட்ட இறுதியான, தீர்மானகரமான துரோகத்திற்குப் பின் இனியும் தாமதிக்கவியலாது.”

தனது முதல் பிரகடனத்தில் ஒருங்கிணைப்புக் கமிட்டி நாட்டின் பல பகுதிகளிலும் வெடித்திருந்த விவசாயிகளின் போராட்டங்களுக்கு தலைமை தாங்கி வழி நடத்திச் செல்ல வேண்டும் என்றும் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க ஒரு புரட்சிகர கட்சியைக் கட்ட வேண்டும் என்று தீர்மானித்தது. ஒருங்கிணைப்புக் கமிட்டியின் சார்பில் ‘லிபரேஷன்’ என்ற ஆங்கில பத்திரிகை கொண்டு வரப்பட்டது. இந்தியா அரசியல் சுதந்திரம் பெறாத அரைக் காலனிய – அரை நிலப்பிரபுத்துவ நாடு; இந்தியப் புரட்சியின் இலக்குகள் அமெரிக்க ஏகாதிபத்தியம், சோவியத் சமூக ஏகாதிபத்தியம், தரகு அதிகார வர்க்க முதலாளித்துவம், நிலப்பிரபுத்துவம்; இந்தியப் புரட்சி, விவசாயிகளின் விவசாயப் புரட்சியை சாராம்சமாகக் கொண்ட புதிய ஜனநாயகப் புரட்சி; புரட்சிக்கான பாதை நீண்டகால மக்கள் யுத்தப் பாதையே; தேர்தலை புரட்சிக் காலம் முழுவதும் புறக்கணிப்பது போன்ற அரசியல் அடிப்படை நிலைப்பாடுகளை ஒருங்கிணைப்புக் கமிட்டி அறிவித்தது. மார்க்சிய – லெனினிய – மாவோ சிந்தனையே சித்தாந்த வழிகாட்டி எனவும் பிரகடனம் செய்தது.

நக்சல்பாரி எழுச்சி ஓர் உண்மையான, புரட்சிகரமான கம்யூனிஸ்டு கட்சிக்கு அடித்தளமிட்டது. ஆளும் வர்க்கங்கள் அச்சத்துடனும், வெறுப்புடனும், ஆத்திரத்துடனும் குறிப்பிடும் நக்சல்பாரிகளின் கட்சி – இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) – ஏப்ரல் 22, 1969 அன்று பிறப்பெடுத்தது.

நக்சல்பாரி பகுதியைப் பொருத்தவரை, அங்கு எழுந்த அந்தப் பேரெழுச்சியை போலி மார்க்சிஸ்டுகளின் தலைமையிலான ஜக்கிய முன்னணி ஏவிய போலீசுத் தாக்குதலால் அப்போதைக்கு ஒடுக்கப்பட்டுவிட்டது. ஆனால் அதன் பிறகு இந்திய நாடு பழைய இந்திய நாடாக ஒருபோதும் நீடிக்க முடியவில்லை.

அதைத் தொடர்ந்து வந்த சங்கிலித் தொடரான விளைவுகளும் எதிர்விளைவுகளும் அடங்கிய நிகழ்வுகள் அரசியல்களத்தை மட்டுமல்ல, நாட்டின் பல பகுதிகளிலும் சமூக, பண்பாட்டு சூழலையே குலுக்கி எடுத்துவிட்டது. ஆண்டாண்டு காலமாய் அநீதிக்கும் அக்கிரமங்களுக்கும் இலக்காகி இருக்கும் கூலி ஏழை உழவர்களின் உலகை – அதாவது இந்திய நாட்டின் இருள் சூழ்ந்த மூலைமுடுக்குகளுக்கெல்லாம் வெவ்வேறு பகுதிகளில் நாட்டுப்புற ஏழை எளிய மக்கள் நடத்திய அடுத்தடுத்த ஆயுதந்தாங்கிய போராட்டங்கள் ஒளிபெறச் செய்தன.

சிறீகாகுளம், தெலுங்கானா, பஞ்சாப், உ.பி., பீகார், கேரளா, தமிழ்நாடு,அசாம், காசுமீர் என்று குறுக்கு நெடுக்காக நாடெங்கிலும் விவசாயிகளின் வர்க்கப் போர் காட்டுத் தீயாய்ப் பற்றிப் படர்ந்தது. வெட்டியெறியப்பட்ட நிலப்பிரபுக்களின் தலைகள் மட்டுமே கிராமங்களில் தங்கின. வெட்டப்படாத தலைகளோ நகரங்களை நோக்கி ஓடின.

‘வேலை நிறுத்தம் என்றால் கதவடைப்பு’ என்று மிரட்டிய ஆலை முதலாளிகளை முற்றுகையிடும் தொழிலாளர்களைக் கண்டு நிர்வாகம் அஞ்சி நடுநடுங்கியது. நக்சல்பாரித் தொழிற்சங்கங்களின் போர்க்குணமிக்க “கெரோ” போராட்டங்கள் பரவின.

நாடு முழுவதும் அரசு அலுவலர்கள் வேலைகளைத் துறந்து, மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளைத் துறந்து நக்சல்பாரி இயக்கத்துடன் தம்மை இணைத்துக் கொண்டனர். விவசாயிகளை அணிதிரட்ட கிராமங்களை நோக்கிச் சென்றனர்.

1970-களின் துவக்கத்தில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட் _ லெனினிஸ்ட்), மற்றும் சிறு குழுக்களின் தலைமையில் நக்சல்பாரி இயக்கம் உச்சநிலையை எட்டியது. ஆந்திராவின் 15 மாவட்டங்களில் கம்யூனிசப் புரட்சியாளர்களின் தலைமையில் அணிதிரண்ட உழவர்கள், குறிப்பாக ஆதிவாசிகிரிஜனங்கள் 300-க்கும் மேற்பட்ட நிலப்பிரபுக்களை அழித்தொழித்தனர் அல்லது கிராமங்களை விட்டுத் துரத்தியடித்தனர். அதன்மூலம் கிராம்ப் புறங்களில் மாற்று அரசியல் அதிகாரமாகத் தங்களை நிறுவிக் கொள்ளமுயன்றனர். இதே முறையில் இரகசிய கொரில்லா குழுக்களைக் கட்டி நிலப்பிரபுக்களை அழித்தொழிப்பதற்கான நடவடிக்கைகளில் பீகார், மேற்கு வங்கம், பஞ்சாப் ஒரிசா, தமிழ்நாடு, கேரளாவில் கம்யூனிசப் புரட்சியாளர்கள் ஈடுபட்டனர். இதுகண்டு எழுச்சியுற்ற வங்காள இளைஞர்கள் கல்கத்தா நகரில் கல்வி நிறுவனங்களையும், பிற்போக்குப் பண்பாட்டு சின்னங்களாக கருதி சீர்திருத்தவாதிகளின் சிலைகளையும் தாக்கினர். போலீசு நிலையங்களைத் தாக்கி ஆயுதங்களைப் பறிமுதல் செய்வதும், சிறைகளைத் தகர்த்துக் கொண்டு வெளியேறுவதும்கூட நிகழ்ந்தன.

ஆனால் போதிய ஆயுதங்களும், பயிற்சியும் இல்லாத உழவர் படைக் குழுக்களுக்கு எதிராக துணை இராணுவமும் போலீசுப் படையும் ஏவி விடப்பட்டபோது, அரசு பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டபோது, நக்சல்பாரி இயக்கம் பின்னடைவைச் சந்தித்தது. தலைமையின் செயல்முறை தவறுகளும் இதற்கு இன்னொரு காரணமாக அமைந்தது. நூற்றுக்கணக்கான நக்சல்பாரிகளும், அவர்களின் ஆதரவாளர்களும் போலீசின் சந்தேகத்துக்கு இலக்கான அப்பாவி இளைஞர்களும் “போலீசுடன் மோதல்” என்கிற பெயரில் படுகொலை செய்யப்பட்டனர். ஆந்திராவின் காடு-வயல்வெளிகளிலும், கல்கத்தா நகரத் தெருக்களிலும் குண்டுதுளைத்த நக்சல்பாரிகளின் பிணங்களை விசிறியடித்து பயபீதி திட்டமிட்டு பரப்பப்பட்டது.

1973-க்குள் 32,000 நக்சல்பாரிகளும் அவர்களது ஆதரவாளர்களும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு சிறைகளிலும் அடைக்கப் பட்டனர். அவர்களில் பலர்மீது கொலை, கொள்ளை மற்றும் சதி வழக்குகள் போடப்பட்டன. சிறைச்சாலைக்குள் போலீசு சித்திரவதைகளும், துப்பாக்கிச் சூடுகளும் ஒருவழக்கமாகி விட்டன. 1970-72 ஆகிய மூன்றாண்டுக்குள் குறைந்தது 20 துப்பாக்கிச் சூடுகள் நடத்தி நூற்றுக்கும் மேற்பட்ட நக்சல்பாரிகள் கொல்லப்பட்டனர். 1975-76 அவசர நிலை ஆட்சிக் காலத்திலும் இதே நிலை நீடித்தது. நக்சல்பாரிகளை ஒடுக்குவதற்கென்றே ஒவ்வொரு மாநிலத்திலும் சிறப்புப் போலீசுப் படையும் சித்தரவதைக் கூடங்களும் உருவாக்கப்பட்டன.

ஆனால், இவை எதுவும் நக்சல்பாரி இயக்கத்தை இந்த மண்ணில் இருந்து முற்றாகத் துடைத்தெறிந்து விடவில்லை. தெலுங்கானா – தண்டகாரண்யாவிலும், பீகாரிலும் ஆயுதப்போராட்டமாகவும், தமிழ்நாடு,கேரளா,மேற்கு வங்கத்தில் போர்க்குணமிக்க மக்கள் திரள் போராட்டமாகவும் நக்சல்பாரி இயக்கம் தொடர்ந்து வளர்ந்து பரவுகிறது. அரசு பயங்கரவாத ஒடுக்குமுறைகள் நக்சல்பாரி இயக்கத்தால் துண்டிவிடப்படும் மக்களின் எழுச்சிக் குரலையோ, அதுகாட்டிய ஆயதப் போராட்டப் பாதையையோ ஒருபோதும் அடக்கி விடமுடியாது. எங்கெல்லாம் நக்சல்பாரியின் குரல் ஒலிக்கும். அது வெட்ட வெட்டத் துளிர்க்கும்,வளரும். அது நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம், அடர்ந்த காடுகளில் எல்லாம் எதிரோலித்துக் கொண்டே இருக்கும்.

மடியாது… மறையாது நக்சல்பாரி!

நக்சல்பாரி உழவர் பேரழுச்சியும், அதைத் தொடர்ந்து நக்சல் பாரி இயக்கமும் தோன்றி முப்பதாண்டுகளாகின்றன. இருந்தபோதும் அதை ஒரு வரலாற்று நினைவாகக் கருதி ஒதுக்கிவிட முடியாது.

இன்றைய இந்திய அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டு நிலைமைகளில் நக்சல்பாரி முன்னிலும் பன்மடங்கு முக்கியத்துவமும் அவசியமும் பெறுகிறது.

நக்சல்பாரி இயக்கம் தோன்றிய ஒரு 15 ஆண்டுகளுக்கு முற்போக்கு நாடகமாடி ஓட்டுப் பொறுக்குவதை பிற்போக்கு இந்து மதவெறி ஆர்.எஸ்.எஸ்.-ன் அரசியல் அவதாரங்கள் உட்பட எல்லா அரசியல் கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு செய்தன. அநேகமாக எல்லா மாநிலங்களிலும், நில உச்சவரம்பு, நிலச் சீர்திருத்தச் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன.

அன்றைய சோவியத் சமூக ஏகாதிபத்திய ருசியாவுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திக் கொண்டு பல அரசு ஏகபோகத் தொழில்களைத் துவங்கி, அவை பொதுத்துறைத் தொழில்கள், ஜனநாயக சோசலிசத்தின் சின்னங்கள் என மோசடி நாடகத்தை நடத்தினார், பாசிச இந்திரா. மேலும் பல தனியார் தொழில்கள் அரசுடமையாக்கப்பட்டன. நிலக்கரிச் சுரங்கங்கள் முதல் உணவு தானிய மொத்த வியாபாரம் வரை பல துறைகளும் அரசு ஏகபோகமாக்கப்பட்டன.

முதலில் 14, பிறகு 6 என்று 20 பெரிய தனியார் வங்கிகள் அரசுடமையாக்கப்பட்டன. இதோடு மன்னர் மானிய ஒழிப்பு போன்ற பல நடவடிக்கைகளுக்கும் முற்போக்கு, சோசலிச முத்திரை குத்திக் கொண்டார்கள். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், உரம்-உணவு தானியத்திற்கு மானியம் போன்ற சலுகைகளைக் காட்டி ஏய்த்தும், பாகிஸ்தானுடன் போரில் வெற்றி என்கிற தேசிய கௌரவத்தைத் தூண்டியும் அதிகப் பெரும்பான்மையுடன் இந்திரா ஆட்சிக்கு வந்தார். “சோசலிசத்தலைவி” என்று இந்திராவை தி.மு.க. முதல் போலிக் கம்யூனிஸ்டுகள் வரை புகழ்ந்தனர்.

ஆனால் அவர் “பாசிச காளி” தான் என்பது விரைவிலேயே தெரிந்தது. நக்சல்பாரி இயக்கத்தின் மீது மட்டுமல்ல, தொழிற்சங்கக் கோரிக்கைக்காக போராடிய இரயில்வே உட்பட பல பொதுத்துறைத் தொழிலாளர்களையும், அவரது இலஞ்ச ஊழல் அதிகார முறைகேடுகளுக்கு எதிராகப் போராடிய குஜராத், பீகார் மாணவர் இயக்கத்தையும் கொடூரமாக ஒடுக்கினார். தேர்தல் தில்லுமுல்லுகள் அம்பலமாகி பதவி பறிபோகும் நிலை உருவானதும் “தேசத்துக்கே ஆபத்து”, “சி.ஐ.ஏ.சதி”, “இந்தியாதான் இந்திரா, இந்திராதான் இந்தியா” எனக் கூச்சலிட்டு அவசரநிலை பாசிச ஆட்சியைப் பிரகடனம் செய்தார். புரட்சியாளர்களை ம்ட்டுமல்ல, பிற்போக்குக் கட்சிகள் உட்பட போலிக் கம்யூனிஸ்டுகள் தவிர – எல்லா எதிர்த் தரப்பினரையும் கொடிய சிறையில் தள்ளினார். பலரை சித்திரவதைக்குள்ளாக்கிக் கொன்றார்.

இந்திராவின் முற்போக்கு முகத்திரை கிழிந்து பாசிச முகத்தை அடையாளம் கண்டு கொண்ட மக்கள், காங்கிரசு ஆட்சியை வீழ்த்தினர். நிலையான மாற்று தலைமையைத் தர முடியாத ஜனதாக் கட்சி கூட்டணி ஆட்சியும் சிறுது காலத்திலேயே நொறுங்கியது. மீண்டும் ஆட்சிக்கு வந்த இந்திரா முற்போக்கு நாடகங்களை மூட்டைகட்டி வைத்துவிட்டு, ஏற்றுமதி அடிப்படையிலான உற்பத்தி, இராணுவமயமான பொருளாதாரம், உழைக்கும் மக்கள் மீதான ஒடுக்குமுறை என்கிற கொள்கையைத் தீவிரமாக்கினார்.

பஞ்சாப், அசாம், காசுமீர் என்று அரசு பயங்கரவாத அடக்குமுறையை விரிவுபடுத்தி, தீராப் பகையை வளர்த்து தானே அதற்குப் பலியானார். இலஞ்ச – ஊழல், அதிகார முறைகேடுகள் என்னும் நோய்பிடித்த, பயங்கரவாத ஒடுக்குமுறை வெறிபிடித்த அரசு எந்திரத்தை வரித்துக்கொண்ட இந்திராவின் வாரிசு ராஜீவ், ஆயிரக்கணக்கான சீக்கியர்களைப் படுகொலை செய்து இரத்த வெள்ளத்தில் நீந்தி ஆட்சிக் கட்டில் ஏறினார்.

“எனக்கு இடது – வலது, முற்போக்கு – பிற்போக்கு சித்தாந்தம், கொள்கைகள் எதுவும் கிடையாது. எல்லாம் தாராளமயம், உலகமயம், நவீனமயமாக்கி இருபத்தோராம் நூற்றாண்டுக்கு நாட்டை அழைத்துச்செல்வதுதான் குறி” என்று பிரகடனம் செய்தார், ராஜீவ்

தாயைப் போலவே பாசிசப் பாதையில் நடைபோட்டு, ஈழத்தின்மீது ஆக்கிரமிப்புப் போர்த்தொடுத்து தானே உருவாக்கிய பகைமைக்குப் பலியானார். உள்நாட்டில் மட்டுமல்ல; இராணுவத்தை நவீனமயமாக்குவதாக சவடாலடித்துக் கொண்டே போபர்ஸ் பீரங்கி பேரம், ஜெர்மனி நீர்முழ்கிக் கப்பல் பேரம், பிரிட்டனின் எலிகாப்டர் பேரம் ஆகியவற்றில் கோடிகோடியாக இலஞ்ச – ஊழல் செய்து அம்பலப்பட்டுப் போனார்.

காங்கிரசுக்கு மாற்று என்று வந்த இரண்டாவது ஜனதாதள தேசிய முன்னணியும் சிறிது காலத்தில் வீழ்ந்தது. மீண்டும் ஆட்சியைப் பிடித்த காங்கிரசு, நரசிம்மராவின் தலைமையில் வரலாறு காணாத ஊழல் சேற்றில் மூழ்கிப் போனது. அதைவிட முக்கியமாக எதிலும் எங்கும் “தனியார்மயம், தாராளமயம், உலகமயம்” நாட்டை ஏகாதிபத்திய மேல்நிலை வல்லரசுகளுக்கு மறுஅடகு வைத்தது. அதனால் நாடு எண்ணிலடங்காத கேடுகளுக்கு இலக்கானாது.

பன்னாட்டு, தேசங்கடந்த தொழில் கழகங்களுக்கும், ஏகாதிபத்திய நிறுவனங்களான உலகவங்கி, சர்வதேச நிறுவனத்திற்கும் நேரடி ஆளுகையின்கீழ் இந்திய அரசு அமைப்புகள் கொண்டு வரப்பட்டன. அவற்றின் ஆணைகளை ஏற்று மின் உற்பத்தி, தொலைபேசித் துறை உட்பட அத்தியாவசியப் பணித்துறை, சேவைத் துறைகள் கூட அந்நியருக்குத் தாரைவார்க்கப்பட்டன. நல்ல இலாபமீட்டும் அரசுத்துறைத் தொழிற்சாலைகள்கூட தனியார் மயமாக்கப்பட்டன. இதனால் கோடிகோடியாக இலஞ்சம் பெற்றதோடு மக்கள் நலனும், நாட்டு நலனும் பறிபோனது. ஆலைகள் மூடப்பட்டு கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கின்றனர்.

கல்வித்துறை, மருத்துவத்துறை தனியார்மயமாக்கப்பட்டு, அவற்றுக்கான மானியங்களை வெட்டி, அவை வியாபார கொள்ளைக்கான களங்களாகி விட்டன.

பண்ணை நிலப்பிரபுக்களோ, தமது விவசாயத்தை நவீனமயப்படுத்திக் கொள்ளும் அதேசமயம், சாதி – மத வகைப்பட்ட ஆதிக்கங்களைத் தொடரவும் விவசாயிகளை ஈவிரக்கமின்றிச் சுரண்டவும், பரந்துபட்ட மக்களைப் பட்டினிச் சாவில் தள்ளவும் வழிசெய்யப்பட்டது. உரம் உணவு மானியங்களை குறைத்து, நியாய விலைக் கடை விநியோகங்களையும் வெட்டி ஏழை விவசாயிகளின் வயிற்றலடித்தனர்.

ஏகாதிபத்திய ஐந்து நட்சத்திர கலாச்சாரம் தலைவிரித்து ஆடுகிறது. ஆபாச வானொலி, திரைப்படங்கள், பாலியல் சுற்றுலா விடுதிகள் என அரசே விபச்சாரத்தையும், களிவெறியாட்டத்தையும் உரமிட்டு வளர்க்கிறது. தேசிய இன உரிமை, மொழிபண்பாட்டு உரிமைகள் நசுக்கப்படுகின்றன.

நாடாளுமன்ற போலி ஜனநாயகமே அழுகி நாறுகிறது. இன்று கொடிகளும் சின்னங்களும் மட்டுமே வேறுவேறு. “தனியார்மயம், தாராளமயம், உலகமயம்” என்கிற கொள்கையில் ஓட்டுப் பொறுக்கி அரசியல் கட்சிகளிடையே எந்த வேறுபாடும் கிடையாது. சாதி – மத வெறியைத் தூண்டி அரசியல் ஆதாயத்துக்காக மக்களைப் பலியிடுவது அதிகரித்துவிட்டது. சிற்றூர் – பேரூர்களில் எல்லாம் கிரிமினல் குற்றக் கும்பல்கள் தோன்றி அரசியல் கிரிமினல்மயமாகிவிட்டது.

அதேசமயம் அவர்களுள் யார், யார், எந்தப் பிரிவினர் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டு ஆதாயமடைவது என்பதில் நாய்ச்சண்டையில் ஈடுபட்டுள்ளனர். இலஞ்ச – ஊழல் அதிகார முறைகேடுகளாலும், சமூக விரோத கிரிமினல் குற்றங்களாலும் அரசியல் அமைப்பு முழுவதும் புழுத்து நாறுகிறது.

இந்த நிலையில் நாடாளுமன்ற போலி ஜனநாயகத்துக்கு வெளியே, மக்கள் அணி திரள்வதற்கும், தங்கள் அவலங்களுக்கும் துயரங்களுக்கும் தீர்வு காண்பதற்கான ஒரே மையமாக நக்சல்பாரி இயக்கமொன்றுதான் உள்ளது. அதுமட்டுமே நாடாளுமன்றப் பாதைக்கு வெளியே, அதற்குப் புறம்பாகவும் எதிராகவும், ஆக்கபூர்வமான அரசியல், பொருளாதாரத் தீர்வு காணவும் மக்களை வழிநடத்தும் துணிவும் தெளிவும் கொண்டது.

(நக்சல்பாரி எழுச்சிநாள் முப்பதாம் ஆண்டையொட்டி மக்கள் கலை இலக்கியக் கழகம், விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகளால் 1997, மே மாதம் வெளியிடப்பட்ட வெளியீடு.)

இரண்டாம் பதிப்பு 2011 டிசம்பர் மாதம் கீழைக்காற்று வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்டது.

கிடைக்குமிடம்
கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு,
எல்லீசு சாலை, சென்னை 600 002
044-2841 2367

விலை : ரூ 12

  1. நிறைய தட்டச்சு பிழைகள். தயவு செய்து திருத்தவும். onlineஇல் புத்தகத்தை வாங்கும் வசதி இருக்குங்களா ? Hard copy and Ebook வாங்கும் வசதி கொண்டு வாருங்கள். AMAZON KINDLE EPUBLISHING மூலம் புத்தகத்தை இலவசமாக பதிவேற்றம் செய்யலாம். உதவி வேண்டுமென்றால் தொடர்பு கொள்ளுங்கள். இரண்டு மின் புத்தகங்களை அனுப்புகிறேன்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க