இந்தியப் புரட்சியின் இடிமுழக்கமாக எழுந்த
நக்சல்பாரி எழுச்சியின் 54-வது ஆண்டு நிறைவு :

உண்மையான பொதுவுடைமைக் கட்சியின் தோற்றத்துக்கு வித்திட்ட
நக்சல்பாரி எழுச்சியை நினைவுகூர்வோம்!

எல்லா வண்ணத் திரிபுவாதங்களையும் திரைகிழித்து
புரட்சிப் பாதையில் தொடர்ந்து முன்னேறுவோம்!

1967-ஆம் ஆண்டு மே மாதத்தில், இந்தியப் புரட்சிக்கான வசந்தத்தின் இடிமுழக்கமாக எழுந்த நக்சல்பாரி எழுச்சி, இன்று 54 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

“உழுபவனுக்கே நிலம், உழைப்பவனுக்கே அதிகாரம்” என்கிற முழக்கத்தை முன்வைத்து, 1967-ஆம் ஆண்டு மே மாதம் ஆயுதந்தாங்கிய பேரெழுச்சியை நடத்தி, அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி, நக்சல்பாரி விவசாயிகள் இந்தியப் புரட்சிக்கான போர்ப் பிரகடனத்தைச் செய்தார்கள்.

படிக்க :
♦ நக்சல்பாரி இயக்கத்தின் வரலாறு !
♦ நக்சல்பாரி – புரட்சியின் இடிமுழக்கம் : நூல் அறிமுகம்

தோழர் மாசேதுங்-ஆல் துவக்கி வைக்கப்பட்ட கலாச்சாரப் புரட்சியால் உந்தப்பட்டு, ரசிய குருஷ்சேவ் திரிபுவாதத்தாலும், இந்திய திரிபுவாத, நவீன திரிபுவாதத் தலைமைகளின் நாடாளுமன்றப் பாதையாலும் புழுங்கிக் கொண்டிருந்த புரட்சியாளர்கள் பொங்கியெழுந்து மார்க்சிய-லெனினிய-மாசேதுங் சிந்தனையின் ஒளியில் தட்டியெழுப்பியதுதான் நக்சல்பாரி எழுச்சி. அது, திரிபுவாதத்தையும் நவீன திரிபுவாதத்தையும் திரைகிழித்து மார்க்சிய – லெனினிய – மாசேதுங் சிந்தனையை உயர்த்திப் பிடித்து, இந்தியாவில் ஒரு உண்மையான புரட்சிகரப் பொதுவுடைமைக் கட்சி உதயமாவதற்கு வித்திட்டது; இருள் கவ்விய இந்திய சமுதாயத்தில் உழைக்கும் மக்களுக்குப் புதிய விடியலுக்கான நம்பிக்கையின் ஒளிக்கீற்றாகத் திகழ்ந்தது.

நக்சல்பாரி எழுச்சி எதிரிகளால் ஒடுக்கப்பட்டபோதிலும், பயங்கரவாத ஒடுக்குமுறைகளை ஏவியபோதிலும், நக்சல்பாரி இயக்கத்தின் அரசியலால் ஈர்க்கப்படும் மக்களின் எழுச்சியையோ, தேர்தல் பாதையை நிராகரித்த அதன் ஆயுதப் போராட்டப் பாதையையோ ஒருபோதும் அடக்கி விடமுடியாது என்பதைக் கடந்த ஐம்பதாண்டுகால இந்திய அரசியல் வரலாறு நிரூபித்துக் காட்டுகிறது.

“நக்சலைட்டுகள்”, “நக்சல்பாரிகள்”, “தீவிரவாதிகள்”, “பயங்கரவாதிகள்” “குறுங்குழுவாதிகள்”, “சி.ஐ.ஏ. உளவாளிகள்” – இப்படிப் பலவாறாக எதிரிகளால் அவதூறு செய்யப்பட்டு கொச்சைப் படுத்தப்பட்டாலும், கம்யூனிசப் புரட்சியாளர்கள் எவரும் இவற்றுக்கெல்லாம் வருந்துவதோ, அஞ்சி ஒதுங்குவதோ கிடையாது.

இத்தகைய அவதூறுகளால் நக்சல்பாரிகளை மக்களிடமிருந்து தனிமைப் படுத்தவும் முடியாது. ஏனென்றால், நக்சல்பாரி – அது குமுறிக் கொண்டிருக்கும் கோடானுகோடி உழைக்கும் மக்களின் விடிவெள்ளி; கூலி, ஏழை விவசாயிகள், தொழிலாளர்களின் வர்க்கக் கோபத்தின் வடிவம். தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களின் உரிமைக் குரல்.

நக்சல்பாரி என்ற சொல்லைக் கேட்ட மாத்திரத்தில், தரகு அதிகாரவர்க்க முதலாளிகளும் ஏகாதிபத்தியவாதிகளும் அஞ்சுகிறார்கள். பண்ணை நிலப்பிரபுக்களும், கந்து வட்டி லேவாதேவிக்காரர்களும், ஓட்டுக்கட்சி கிரிமினல் அரசியல் பேர்வழிகளும், சட்டபூர்வக் கொள்ளையர்களும், சாதி-மதவெறியர்களும் குலைநடுங்குகிறார்கள்.

காரணம், நக்சல்பாரிகள் என்போர் சமரசமற்ற, போர்க்குணம் ததும்பும் உண்மையான கம்யூனிஸ்டுகள்; உழைக்கும் மக்களின் விடுதலைக்காக தமது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர்கள்; சிறை – சித்திரவதை என எத்தகைய அடக்குமுறையிலும் லட்சியத்தை விட்டுக் கொடுக்காத எஃகுறுதி மிக்கவர்கள்.

படிக்க :
♦ நாட்டுப் பற்றாளர்களே கேளுங்கள்., நக்சல்பாரியே ஒரே மாற்று!
♦ பாடத்தில் குஜராத் படுகொலை – சாதியம் – நக்சல்பாரி : டில்லி பல்கலையில் ஏபிவிபி குண்டர்கள் ரகளை !

இம்மகத்தான பெருமிதத்தை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, நக்சல்பாரிகளாகிய மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட் கட்சிக்கும் அதன் ஊழியர்களுக்கும் வழங்கிய பெருமை, நக்சல்பாரி எழுச்சியையும், அது தோற்றுவித்த புரட்சிகர பாரம்பரியத்தையுமே சாரும்.

இந்தியாவில், உண்மையான பொதுவுடைமைக் கட்சியின் தோற்றத்துக்கு வித்திட்ட நக்சல்பாரி எழுச்சியை நினைவுகூர்வோம் ! எல்லா வண்ணத் திரிபுவாதங்களையும் திரைகிழித்து ஆயிரமாயிரம் தியாகிகளின் உதிரத்தால் சிவந்த புரட்சிப் பாதையில் தொடர்ந்து முன்னேற நக்சல்பாரி எழுச்சி நாளில் சூளுரைப்போம் !

தங்கம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க