privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபுதிய ஜனநாயகம்கம்யூனிசக் கல்விநக்சல்பாரி - புரட்சியின் இடிமுழக்கம் : நூல் அறிமுகம்

நக்சல்பாரி – புரட்சியின் இடிமுழக்கம் : நூல் அறிமுகம்

-

க்சல்பாரி எழுச்சியின் முப்பதாம் ஆண்டை ஒட்டி 1997-ம் ஆண்டு வெளியான இந்நூலின் இரண்டாம் பதிப்பை கீழைக்காற்று வெளியீட்டகம் கொண்டு வந்திருக்கிறது.

naxalbari-front naxalbari-back

நக்சலைட்டுகள் என்றாலும், நக்சல்பாரிகள் என்றாலும் ஏதோ விரக்தி அடைந்த இளைஞர்கள் செய்யும் கலக நடவடிக்கையாக ஊடகங்களும் அரசும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றன. அதே நேரத்தில் சிபிஎம் சிபிஐ போன்ற போலி கம்யூனிஸ்டுகளோ அவர்களை சிஐஏ ஏஜெண்டுகள் என்றெல்லாம் கூட அவதூறு செய்கிறார்கள்.

உண்மையில், 1967 மார்ச் 18 அன்று மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள டார்ஜிலிங் மாவட்டத்தில் அமைந்திருக்கும் சிலிகுரி வட்டத்தை சேர்ந்த நக்சல்பாரி கிராம் எப்படி நாடாளுமன்ற போலி ஜனநாயகம் மூலம் குத்தகை விவசாயிகளுக்கு விடிவு இல்லை என்பதைக் காட்ட வட்டார மாநாட்டில் எடுத்த புரட்சிகர முடிவின்படி செயல்படத் துவங்கியது என்பதை இந்நூலின் பக்கங்கள் விரிவாக எடுத்துச் சொல்கின்றன. ஜோதிதார் போன்ற பண்ணையார்கள், தேயிலை தோட்ட முதலாளிகளின் மோசடிகளை தோலுரித்துக் காட்டுகிறது.

நிலப்பிரபுக்களுக்கு துணையாக நிற்கும் போலி கம்யூனிஸ்டு மாநில கூட்டணி அரசை எதிர்த்து அக்கட்சியின் வட்டார விவசாயிகள் மாநாடு நடைபெறும் போதே  ஹரி கிருஷ்ண கோனார் போன்ற கட்சியின் பிற அமைச்சர்கள் கீழிருந்துதான் முன்முயற்சி வர வேண்டும் என ஒரு பேச்சுக்கு சொல்லி வைத்தனர். கனு சன்யால், ஜங்கல் சந்தால் போன்ற வட்டார தலைவர்கள் இந்த போலித்தனத்திற்கு மாறாக உண்மையிலேயே இப்புரட்சியை துவக்கினர்.

அப்பகுதியில் இருந்து 15 ஆயிரம் விவசாயிகள் முழுநேர ஊழியராக மாறி விட்டனர். கொல்கத்தா நகரத்தில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் இப்புரட்சி பற்றிப் படர்ந்த்து. பல்வேறு மாநிலங்களில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியில் இருந்து ஆயிரக்கணக்கான தோழர்கள் வெளியேறினர்.

நக்சல்பாரி புரட்சியில் விவசாயிகளும், தேயிலைத் தோட்ட தொழிலாளர்களும் இணைந்து நடத்திய தொடர் போராட்டங்களின் விளைவாகத்தான் இம்மாநாடு அப்பகுதி மக்களையும், நாட்டின் பிற பகுதிகளில் இருந்த புரட்சியாளர்களையும் கிராமங்களை நோக்கி திருப்பியது. மாணவர்கள் ஒரு பையில் வேட்டி சட்டையுடன் நகரங்களில் இருந்து கல்வியை துறந்து கிராமங்களை நோக்கிக் கிளம்பினர். பட்டாக்கள், கடன் பத்திரங்கள் பறிக்கப்பட்டதோடு, பண்ணையார்களின் நூற்றுக்கணக்கான தலைகளும் கீழே உருண்டன. அரசின் அடக்குமுறை துப்பாக்கிச் சூட்டு மோதல் என்ற பெயரில் அப்பாவி இளைஞர்களையும் விட்டு வைக்கவில்லை.

உடனடியாக இதனை அடக்காவிடில் மாநில ஆட்சி போய்விடும் என்பதால் போலி கம்யூனிஸ்டு அமைச்சர்கள்  தமது பதவியை காப்பாற்றும் பொருட்டு நக்சல்பாரிக்கு விரைந்து மூக்குடைபட்டதையும் புத்தகம் விளக்கிச் செல்கிறது.

மத்திய அரசு அதன் பிறகு சமூக ஏகாதிபத்தியமாக சீரழிந்து போன சோவியத் யூனியனுடன் இணைந்து பொதுத்துறையை துவக்கி அரசு மயமாக்குவது, மன்னர் மானிய ஒழிப்பு, போலியான நிலச் சீர்திருத்தம் எனக் கொண்டு வந்தது. முதலாளிகளுக்கு ஆதரவாக அடிக்கட்டமைப்பை உருவாக்குவதே இந்த பொதுத்துறையின் நோக்கம். இந்நிலையில் தனது ஆட்சிக்கு ஆபத்து என்றவுடன் இந்தியாவுக்கே ஆபத்து என அவசர நிலையை கொண்டு வருகிறார் இந்திரா. அதையும் போலி கம்யூனிஸ்டுகளின் ஒரு பிரிவினர் ஆதரித்தனர்.

60-களின் இடி முழக்கமாக பிறந்த நக்சல்பாரி எழுச்சி சில பின்னடைவுகளை அடைந்திருந்தாலும் இன்றும் இந்தியாவின் விடிவெள்ளியாக மார்க்சிய லெனினிய கட்சியே திகழ முடியும். சிதறுண்ட நக்சல்பாரி குழுக்களில் அடிப்படை நிலைப்பாடுகளில் ஊன்றி நின்று போராடும் கட்சிகளே இன்றும் ஊக்கமாக செயல்படுகின்றன. அரசு அடக்குமுறை காரணமாக முடக்கப்பட்ட நக்சல்பாரியின் குரல் மீண்டும் எழுந்து வரும்.

மேலும் ராஜீவ், அவரது தனியார்மய கொள்கை, பின்னர் வந்த நரசிம்மராவின் ஆட்சியில் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற கொள்கை எப்படி பிறப்பெடுத்து இன்று மீண்டும் பொதுத்துறை தாரை வார்க்கப்படுகிறது என்பது வரை சொல்கிறது இந்த புத்தகம். இன்றும் எப்படி நிலைமை மாறி விடவில்லை. மாறாக இன்னும் மோசமாகி உள்ளது என்பதை தெளிவாக சுட்டிக் காட்டுவதோடு, இதற்கு என்ன தீர்வு என்பதை ஆக்கப்பூர்வமாகவும் முன்வைத்துள்ளது, இப்புத்தகம்.

புத்தகத் திருவிழாவில் அவசியம் வாங்கிப் படிக்க வேண்டிய புத்தகங்களில் ஒன்று இது.

நக்சல்பாரி

புரட்சியின் இடிமுழக்கம்

வெளியீடு : கீழைக்காற்று வெளியீட்டகம்
விலை : ரூ 20
பக்கங்கள் : 24

புத்தகக் கண்காட்சியில் கிடைக்குமிடம்

எண்: 80-81 (முதல் நுழைவாயில்)

38-வது சென்னை புத்தகக்காட்சி சென்னை ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி, நந்தனம், சென்னை – 35

நாள் : சனவரி 9 – 21 (9 – 1 – 2015  முதல் 21 – 1 – 2015 வரை)

நேரம்:
வேலைநாட்கள் : மதியம் 2 – இரவு 9 – மணி வரை
விடுமுறைநாட்கள் : காலை 11 – இரவு 9 – மணி வரை

கீழைக்காற்று வெளியீட்டகம்
சென்னை – 600002
044-28412367