இந்த கட்டுரை கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் தி வயர் இணையதளம் தொடங்கப்பட்ட போது வெளியிடப்பட்ட கட்டுரை. மக்களின் வாழ்க்கை பண்பாடு, மொழி ஆகியவற்றுக்கு அளிக்கப்பட வேண்டிய முக்கியத்துவம் குறித்து உணர்த்தும் ஒரு கட்டுரை இது. கடந்த 2019, மே 11 அன்று தி வயர் இணையதளம் இக்கட்டுரையை மீள்பிரசுரித்தது.
மக்களின் மொழியில் நக்சல்கள் பேசும் போது
இது டிசம்பர் மாத துவக்கம். கும்மிருட்டும், கடுங்குளிரும் பீஜபுர் காடுகளை ஒவ்வொரு நாளும் அலங்கரிக்கும். அப்படி ஒர் இரவில் மராட்டிய எல்லைக்கு அடுத்து இந்திராவதி ஆற்றின் கரையோரத்திலிருக்கும் பீட்ரே கிராமத்தில் உள்ளூர்வாசிகள் சிலர் சடசடவென்று எரிந்து கொண்டிருக்கும் நெருப்புக்கருகில் கூடியிருக்கின்றனர்.
அங்கு பெரும்பாலான குடும்பங்களில் தொலைக்காட்சி கிடையாது. மாலைப் பொழுதுகளில் நெருப்பருகே கூடியிருப்பதுதான் அவர்களுக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு. அதுதான் தக்க தருணமென்று ஒரு பாடலை போடுவதற்காக தன்னுடைய செல்பேசியை ஒரு அரசாங்க ஊழியர் எடுக்கிறார்.
நான் ஒரு மடத்தனமான பாலிவுட் பாடலைதான் எதிர்பார்த்திருந்தேன். சத்திஸ்கரை சுற்றிலும் பேருந்துகளில் இப்பாடல்களை நான் கேட்டிருக்கிறேன். உறுதியான நக்சல்கள் பிரச்சினையால் குண்டும்குழியுமான இந்த நீண்ட கரடுமுரடான சாலைகளில் பயணிக்கையில் இவைதான் மக்களுக்கு பிடித்தவையாக இருக்கின்றன.
ஆனால் ஒரு பெண்ணின் பூரிப்பான மற்றும் கம்பீரமான குரல் கோரஸுடன் அந்த போனிலிருந்து வெளிப்பட்டது.
அவள் தன்னுடைய காதாநாயகன் மீதுள்ள அன்பினால் பாடுகிறாள். அவளது நிலத்தினை பாதுகாக்க உயிர்துறந்த தியாகி அவளது கதாநாயகன். “நீ போராடி பாதுகாத்த இந்த கானகத்தின் அழகு உன்னை இழந்து வாடுகிறது. நீ எங்கே இருக்கிறாய்? உன்னுடைய குரல் எங்கே? எங்களால் அதை கேட்க முடியவில்லை”. இப்பாடலின் தோற்றுவாய் மற்றும் உண்மைத்தன்மையில் சற்றே சந்தேகம் இருக்கலாம்.
இது நக்சல்களை ஆதரிக்கும் பாடல். ஆனால் இக்கூட்டம் நக்சல்களின் கூட்டமல்ல. சாதாரண மக்களின் கூட்டம். அவர்கள் எதற்காக வெளிநபரின் முன் வெளிப்படையாக போராளிகளின் பாடலைப் பாடுகின்றனர்?
வானொலியில் போராளிகள் :
நக்சலின் பாடல்கள் எந்த அளவிற்கு எதிரானவர்களிடம் கூட தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை இது காட்டுகிறது. பழங்குடி மக்களின் கோண்டி மற்றும் ஹல்பி மொழிகளில் அவர்களது பாடல்கள் இருப்பதுதான் மக்களுடனான நக்சல்களின் ஐக்கியத்திற்கு காரணம்.
“எங்களது நேரத்தைப் போக்க எப்போதுமே இப்பாடல்களை நாங்கள் கேட்கிறோம். உள்ளூர் போலீஸ்காரர்கள் சிலர் கூட இந்தப் பாடல்களை வைத்திருக்கிறார்கள்” என்று ஒரு கிராமவாசி கூறினார். இப்பாடல்களை நகரிலுள்ள கடைகளில் வாங்கி தங்களது கைப்பேசியில் மக்கள் சேமித்து கொள்கிறார்கள்.
இந்தி அம்மக்களிடம் நெருக்கமாக இல்லாத சூழலில் பாடல்களையும் இன்னப்பிற பொழுதுபோக்கு அம்சங்களையும் பழங்குடி மக்களது தாய்மொழியில் கொண்டு சேர்ப்பது நக்சல்களின் உலகப்பார்வைக்கும் உள்ளூர் மக்களிடம் ஐக்கியமாவதற்கும் முதன்மையான காரணியாக இருக்கிறது. பழங்குடி மொழிகளை நக்சல்கள் பயன்படுத்தும் அதே நேரத்தில் உள்ளூர்மக்கள் மீது இந்தியை திணித்து அவர்களது மொழிகளை அரசாங்கம் புறக்கணிக்கிறது.
சத்திஸ்கரில் உள்ள பள்ளிகளில் இந்த திணிப்பை நாம் நன்கு அறியலாம். மாநில அரசு பழங்குடி மக்களின் மொழிகளை பாடநூல்களில் புறக்கணிக்கும் சூழலில் தாங்கள் நடத்தும் பள்ளிகளில் கோண்டி மொழிக்கு சிறப்பு கவனத்தை நக்சல்கள் கொடுக்கின்றனர். தண்டகாரன்யா வித்யா வைபக் (Dandakaranya Vidya Vibhag) மூலம் சில அரிய கணித மற்றும் அறிவியல் நூல்கள் இந்த ஆசிரியருக்கு கிடைத்தன.
தண்டகாரன்யா வித்யா வைபக் என்பது நக்சல்களது கல்விசார் அமைப்பு. இது பல்வேறு நூல்களை கோண்டி மொழியில் (பெரும்பாலும் சாதாரன கணிணி அச்சு பொறியில்தான் அச்சிடப்படுகிறது) வெளியிடுவது மட்டுமல்லாமல் கையாலும் எழுதப்பட்டு பகிரப்படுகிறது. இந்த குறிப்பிட்ட விசயத்தில் அரசாங்கத்தை விட நக்சல்களின் கை ஓங்கியுள்ளது.
கோண்டி மொழிக்கென புதிய எழுத்து முறையை நக்சல்கள் உருவாக்கியதாகவும் தற்போது அம்மொழி தேவனாகரி வடிவத்தில் எழுதப்படுவதாகவும் முன்னாள் நக்சல் போராளி ஒருவர் உறுதிப்படுத்தினார். இது பழங்குடி மக்களுக்கான தனி அடையாளத்தை உருவாக்கவும் அவர்களது மொழிக்கென சிறப்பான தகுதியை அளிப்பதற்கான ஓர் முயற்சி. கோண்டி எழுத்து சீர்திருத்த பரிந்துரைகளுடன் பல்வேறு அணிகள் 15 நாட்களுக்கு ஒருமுறை கூடினாலும் அம்முயற்சி முழுமையாக நடைமுறைபடுத்தப்படவில்லை.
படிக்க:
♦ சட்டீஸ்கர் : அதிர்ச்சி நிறைந்த கதைகளால் நிரப்பப்பட்ட பஸ்தார் சாலை !
♦ சத்தீஸ்கர் : பெண்களின் மார்பில் மின்சாரம் பாய்ச்சும் அரசு பயங்கரவாதம் !
2013 -ல் வடிவமைத்து கொண்டிருந்த கடைசி எழுத்து ‘T’ என்று நினைக்கிறேன். பின்னர் D.V.V -விடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அடுத்தடுத்த வடிவமைப்பிற்கான ஒருமித்த கருத்திற்கு எங்களால் வர முடியவில்லை என்று அவர் கூறினார். மறுபுறம் 25 இலட்ச கோண்டி மொழி பேசுபவர்கள் இருந்தாலும் எட்டாவது அட்டவணையின் கீழ் அதற்கு அங்கீகாரம் அளிக்காமல் அதை விட குறைவான எண்ணிக்கை கொண்ட மொழிக்கு மாநில அரசு அங்கீகாரம் கொடுக்கிறது.
மொழி மற்றும் கலாச்சார ரீதியில் மக்களை தொடர்பு கொள்ளும் அவர்களது மற்றுமொரு அமைப்பு சேட்னா நாட்யா மஞ்ச் (Chetna Natya Manch) எனும் நாட்டுப்புற நாடக மற்றும் நடனக் குழு. மின் தொழில்நுட்ப ரீதியிலான பொழுதுபோக்குகள் இல்லாத நிலையில் உள்ளுர் மொழியில் இம்மதிரியான நேரடியான நிகழ்ச்சிகளுக்கு வரவேற்பு அதிகம் கிடைக்கிறது.
இந்திய அரசாங்கத்தின் பழங்குடிகள் மற்றும் அவர்களது இயற்கை வளங்களுக்கு எதிரான சுரண்டல், முதலாளிகள் மற்றும் சாதிய ஒடுக்குமுறையாளர்களுக்கு இடையிலான கூட்டுச்சதி ஆகியவற்றை பற்றி அவர்களது நாடகம் மற்றும் பாடல்கள் பேசுகின்றன. இப்படி பழங்குடிகள் மையத்தில் சேட்னா நாட்யா மஞ்ச் வெற்றிகரமாக இயங்கி வரும் சூழலில் கடுமையாக பாதிக்கப்பட்ட சுக்மா மாவட்டத்தில் அரசுக்கு ஆதரவான பரப்புரை குழு ஒன்றை போலீசு இறக்கியுள்ளது.
பொதுவான மொழியை கண்டறிதல் :
விவசாயம் மற்றும் மருத்துவத்திற்கு உள்ளூர் மொழியைப் பயன்படுத்துவது மக்களுடன் நக்சல்களின் ஐக்கியத்திற்கு உதவுகிறது. விவசாயம் செய்வது குறித்தும் கால்நடை வளர்ப்பு குறித்தும் கோண்டி பாடநூல்களில் அறிவுரைகள் இருக்கின்றன. அதே போல ஆங்கில நூல்களிலிருந்து கோண்டி மொழிக்கு பெயர்க்கப்பட்ட மருத்துவ குறிப்புகளை மருத்துவ ஊழியர்கள் எங்கும் எடுத்து செல்கின்றனர். மனித உடற்கூறியல் குறித்த எடுப்பான படங்கள் கொண்ட நூல் ஒன்றை கட்டுரையாளரும் பெற்றிருக்கிறார்.
இது வெறுமனே கோண்டி மொழி குறித்த அறிவு என்று சுருக்கி விட முடியாது. உள்ளூர் தாவரங்கள் மற்றும் விலங்குகள் குறித்த பொறாமைப்படத்தக்க அறிவைத்தான் இது வெளிப்படுத்துகிறது. இதே எழுத்தாளாரின் வேறொரு நூலான “மாவா ஜங்கல், மாவா தவாய்”( Mava Jangal, Mava Dawai) – பாஸ்தாரிலுள்ள தாவரங்களைப் பற்றிய தகவல் களஞ்சியம் என்று பாராட்டப்பட்டது. சான்றாக, வயிற்றுப்போக்குக்கு யென் எனும் ஊள்ளூர் தாவரத்தின் வேரை பொடியாக்கி நாள்தோறும் சாப்பிட வேண்டும் என்று அது கூறுகிறது. மறுபுறமோ பழங்குடிகளது அறிவு வளத்தை பற்றி தெரிந்து கொள்ள அரசிற்கு அக்கறையில்லை. மாறாக மண்ணிற்கடியில் உள்ள வளத்தை பற்றிதான் அதிக அக்கறை கொள்கிறது.
உள்ளுர் மக்களது கோண்டி மற்றும் இதர மொழிகளை நக்சல்கள் ஆழமாக பயன்படுத்துவது என்பது அரசு ஒருபோதும் செய்யாத அல்லது செய்ய முடியாத ஒரு செயலாகும். நக்சல் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் கோண்டி மொழியில் குழந்தைகள் படிக்க சத்திஸ்கரிலுள்ள பள்ளிகளோ சமீபத்தில்தான் அதுவும் சில குறிப்பிட்ட தலைப்புகள் மட்டுமே கோண்டி மொழியில் படிக்க உரிமையளித்துள்ளன.
நக்சல்களது கோண்டி பாடல்கள் உள்ளூர் மக்களை பல்லாண்டுகளாக மகிழ்வித்துக் கொண்டிருக்க அரசாங்கமோ வானொலி சேவையில் கூட பழங்குடி மொழிகளுக்கு இடமளிக்கவில்லை. பழங்குடியல்லாத மூத்த நக்சல் தலைவர்கள் கூட முயற்சி செய்து கோண்டி மொழியை கற்கும் அதே வேளையில் பல்வேறு மூத்த அரசு அதிகாரிகள் பழங்குடி மொழிகளை கற்க வேண்டிய அவசியத்தை உணரவில்லை.
அரசிற்கு படிப்பினை :
நக்சல்கள் பழங்குடிகளல்ல “வெளியாட்கள்” என்று தொடர்ந்து அரசாங்கம் முத்திரை குத்துகிறது. ஆனால் யார் இங்கே உண்மையான வெளியாள் என்கிறார் இந்திய கம்யுனிஸ்டு கட்சியை சேர்ந்த பாஸ்தார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மனிஸ் குஞ்சம். “பழங்குடி மக்களது மொழியையும் கலாச்சாரத்தையும் நன்கு கற்றுக்கொண்ட நக்சல் தலைவர் வெளியாளா? அப்படியென்றால் பழங்குடிகளை பற்றி ஒன்றுமே தெரியாத அரசாங்க அதிகாரி எப்படி உள்ளூர்வாசியாக இருக்க முடியும்?” என்று கேட்கிறார்.
படிக்க:
♦ மராட்டியம் : மாவோயிஸ்டுகள் என்ற பெயரில் சிறார்களைக் கொன்ற போலீசு பெற்றோர்களை மிரட்டுகிறது !
♦ #MeToo – வில் விடுபட்ட பழங்குடியின – பட்டியலின பெண்களின் ‘கண்ணியத்துக்கான பேரணி’ !
“பழங்குடிகளுக்கான முழுமையான குடிமக்கள் என்ற அங்கீகாரத்திற்கு முதலில் அவர்களது மொழிகளுக்குத் தேவையான இடத்தை அரசு ஒதுக்க வேண்டும்”. ஆனால் எதார்த்தத்தில் அது நடப்பதில்லை என்று இந்திய மக்கள் மொழியியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் கணேஷ் தேவி கூறுகிறார். புறக்கணிக்கப்பட்ட மற்றும் அச்சுறுத்தப்பட்டதன் எதிர்வினைதான் வன்முறையாக வெடிக்கும் அவர்களது கோபம். ஒரு சரியான மொழி அங்கீகாரம், அந்த கோபத்தை சற்று ஆற்றுப்படுத்தும் என்று கூறினார்.
“இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு” எதிரான போரை வென்றெடுக்க அரசினுடைய திட்டத்தின் ஒரு அடித்தளமாக பழங்குடிகள் இருக்கிறார்கள் என்று பொதுவாக கூறப்படுகிறது. பாதுகாப்பை பராமரிப்பதற்கும், உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்குமான உறுதியான அணுகுமுறைகளுக்கு அப்பால், உள்ளூர் மொழிகளுக்கு மதிப்பை கொடுக்கும் மென்மையான அணுகுமுறைகளை அரசாங்கம் கையாள வேண்டும். இது வெறுமனே மொழியியல் சார்ந்து மட்டுமல்லாமல் அம்மொழிகள் மூலம் வெளிப்படும் பழங்குடிகளது வாழ்க்கை, கலாச்சாரம் மற்றும் அறிவு ஆகியவற்றையும் உள்ளடக்கி இருக்க வேண்டும்.
இதை அங்கீகரிப்பதிலும் அதன் மீது செயலாற்றுவதிலும் நக்சல்கள் சிறப்பாக செயற்பட்டிருக்கின்றனர். பழங்குடிகளது எதிர்காலத்திற்கு அவர்களது மொழிகளுக்கு சிறிய அளவே பங்கிருப்பதாகவே அரசாங்கம் பார்க்கிறது. தாண்டேவாடா ஆட்சியாளர் அலுவலகத்திலுள்ள ஒரு விளம்பர அட்டை எதிர்காலத்தை தெளிவாகக் காட்டுகிறது. சிப்பந்திகள் மற்றும் மெக்கானிக்குகளது புகைப்படங்களை ஏந்திக்கொண்டு உள்ளூர் தொழில்முறை பள்ளிக்கூடங்களுக்கு பழங்குடிகள் செல்வது போல அதில் காட்டப்பட்டிருக்கிறது. இக்கனவைதான் மண்ணின் மைந்தர்களுக்கு இந்த அரசாங்கம் விற்கிறது.
அதனால்தான் இதனை அவர்கள் மீதான அரசாங்கத்தின் மொழியியல் ரீதியான பராமுகம் என்கிறார் கோண்ட்வானா தர்ஷன் (Gondwana Darshan) எனும் பழங்குடி மாத இதழை நடத்தும் தாகூர் இரமேஸ் குஷ்ரோ. நேர்மைக்கு பதிலாக சம்பிரதாயமே அரசாங்கத்தின் செயல்பாடாக இருக்கிறது என்று மேலும் அவர் கூறினார்.
கட்டுரையாளர்: Debarshi Dasgupta
தமிழாக்கம்: சுகுமார்
நன்றி : தி வயர்