சிலர் விசைப் பலகையை அழுத்தி தங்களுடைய ஒடுக்குமுறை கதைகளை சொல்லி விடுகின்றனர். சிலர் அதை சொல்ல 10 ஆயிரம் கி.மீ. பயணிக்க வேண்டியிருக்கிறது. இந்தியாவின் மீ டூ இயக்கத்தில் விடுபட்ட இந்தப் பெண்களின் கதைகள் நம்மை துயரமடைய செய்யக்கூடியவை.

பேருந்து அன்றைய நாளுக்கான கடைசி இலக்கை அடைந்துவிட்ட களைப்பில் இரைச்சலோடு ஓய்கிறது.  கடந்த சில நாட்களாக மத்திய பிரதேசத்தின் பெரும்பகுதியை கடந்து வந்த பிறகு, அது ராஜஸ்தானின் கிழக்கு முனையில் நுழைந்துள்ளது. தாஹோட் மாவட்டத்தின் தேவ்கத் பாரியா தாலுகாவின் அடிவாரத்தில் உள்ள பழங்குடிகளின் குடியிருப்பில் வாகனம் நிறுத்தப்பட்டு, பயணிகள் இறங்கி திறந்தவெளிக்கு வருகின்றனர். இவர்களில் பலர் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்கள், சிறு அளவிலான பாதிப்புகளிலிருந்து மீண்டவர்கள், அவர்களுடைய பெற்றோர். அனைவரும் ஊரக தலித் மற்றும் பழங்குடியின சமூகங்களைச் சேர்ந்தவர்கள்.

சுற்றியுள்ள சிறு வெளிச்சத்தின் ஊடே, அந்த நாளுக்காக கடைசி உணவை, ரொட்டி, பருப்பு மற்றும் வெங்காயத்தை அவர்களுக்கு பரிமாறுகிறார் உள்ளூர் பெண். மண்டபத்தில் உள்ள ஒரு அறையில் அவர்கள் அனைவரும் உறங்க பாய்கள் இடைவெளியில்லாமல் விரிக்கப்பட்டிருக்கின்றன.

34 வயதான அவருக்கு இது ஒரு நீண்ட நாள். இதுபோன்ற நாட்களை முன்பும் கடந்து வந்திருக்கிறார். பல ஆண்களால் துன்புறுத்தப்பட்டு, அதன் பின் விளைவுகளையும் நினைவு கூர்ந்தார் அவர். டைபாய்டால் கடுமையாக பாதிக்கபட்டு மீண்ட அவர், மத்திய பிரதேசத்தில் உள்ள கிராமத்தை விட்டு மாநிலங்களை கடந்த இந்த யாத்திரையில் கலந்துகொண்டிருக்கிறார். 2018, டிசம்பர் 20-ம் தேதி மும்பையில் இந்த யாத்திரை தொடங்கப்பட்டது.

நாள் முழுவதும் முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருந்த அவருடைய தொண்டை, இரவில் பேசக்கூட முடியாத நிலைக்கு போய்விடுகிறது. ஆனால், அனைத்துக்கும் மேலாக, இவர் தன்னுடைய குரலை மீட்டதாக தெரிவிக்கிறார். “முன்பு அது பற்றி நான் பேசவே மாட்டேன். ஆனால், நாங்கள் எந்த தவறையும் செய்யவில்லை. குற்றமிழைத்தவர்கள்தான் தவறு செய்தவர்கள், இந்த சமூகம் தவறானது. நாங்கள் இவர்களுடைய மனங்களை மாற்ற இந்த யாத்திரையை தொடங்கியிருக்கிறோம்”.

பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டவர்களின் சார்பில் மும்பை முதல் டெல்லி வரையிலான பயணத்தின் ஒரு பகுதி.

சிலர் விசைப் பலகையை அழுத்தி ஒரு இயக்கத்தை உருவாக்கிவிடுகிறார்கள். சிலர் அவர்களது கதைகள் கேட்கப்பட வேண்டும் என விடாமுயற்சியுடன் நாடு தழுவிய அளவில் 10,000 கி.மீ. நடக்கிறார்கள்.  கும்பல் பாலியல் வன்முறையாலும், கடத்தலாலும், ஏலம் விடப்பட்டும், தலைமுறைகள் தலைமுறைகளாக பெண் குழந்தைகள் சாதி ஒடுக்குமுறை காரணமாக பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டும், உயர் சாதி ஆண்களால் வன்முறைக்கு ஆட்பட்டும், வன்முறையால் குரல்களை நசுக்கிவிடுவேன் என மிரட்டப்பட்டும், சூனியக்காரிகள் என முத்திரை குத்தப்பட்டும், நிர்வாணமாக்கி பொதுவெளியில் நடக்கவிடப்பட்டும்… என, இப்படியான பல கொடுமைகளிலிருந்து  அவர்கள் உயிர் பிழைத்திருக்கிறார்கள்.

இப்படியான கொடுமைகளிலிருந்து உயிர்பிழைத்த நூற்றுக்கணக்கான பெண்கள் மௌனத்தை நொறுக்கவும், இந்த இழிவுக்கு முடிவு கட்டவும், ‘கண்ணியத்துக்கான பேரணி’யில் 65 -வது நாளில் ஒன்றிணைந்திருக்கிறார்கள்.  கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களைச் சேர்ந்த அவர்கள் அனைவரும் பட்டியலின மக்களும் பழங்குடிகளும் ஆவர். அவர்களுடைய கதைகள் இந்தியாவின் மீ டூ இயக்கத்தில் கேட்கப்படாதவை.

படிக்க:
#MeToo : ஆண்களே ! இது பெண்கள் வளைக்கப்பட்ட கதையல்ல ! வதைக்கப்பட்ட கதை !
♦ #MeToo : உழைக்கும் வர்க்கப் பெண்களின் பகிர்வுகள் !

கண்ணியத்துக்கான பேரணி சில நேரங்களில் நடை பயணமாகவும் சில நேரங்களில் வாகன பயணமாகவும் அமைந்திருக்கிறது. சாதிய மற்றும் பாலின ஒடுக்குமுறைகளுக்கு எதிராக பணி செய்துகொண்டிருக்கும் ‘ராஷ்டிரிய கரிமா அபியான்’ என்ற அமைப்பு இந்த பேரணியை ஒருங்கிணைக்கிறது.

இந்தப் பயணத்தின் ஒவ்வொரு நிறுத்ததிலும், இவர்களின் கதைகளைக் கேட்டு தூண்டுதல் பெற்ற  உள்ளூர் மக்களும் நூற்றுக்கணக்கில் இணைந்து கொண்டனர்; தங்களுடைய கதைகளையும் அவர்கள் பகிர்ந்துகொண்டனர். 24 மாநிலங்களில் 200 மாவட்டங்களைக் கடந்திருக்கும் இந்தப் பேரணி பிப்ரவரி 22, 2019 டெல்லியில் முடிகிறது. இந்தப் பயணத்தின் பகுதியாக உள்ள 5,000 பாதிக்கப்பட்டவர்களும் அவர்களுடைய குடும்பங்களும் ராம்லீலா மைதானத்தில் கூட உள்ளனர்.

*****

டுத்த நாள் காலையில் தன்னுடைய தொண்டைக்கு இதமாக டீயை உறிஞ்சியபடி, 34 வயதான அந்த மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பெண், இந்தப்  பயணம் தன் மீது சுமத்தப்பட்ட களங்கத்தை, குற்றம் புரிந்தவரை அடையச் செய்யும் என்கிறார். தன் கணவரின் பழங்குடி கிராமத்திலிருந்து தன்னை இருவர் கடத்தி பல நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், கடந்த நான்கு வருடங்களாக இந்த களங்கத்தை தான் சுமக்க மறுத்து வருவதாக அவர் கூறுகிறார். பின்னர் இவர் ஒரு நிலக்கிழாரிடம் விற்கப்பட்டு, அவரால் ஆறு மாதங்கள் கடுமையான வன்முறைக்கு ஆட்படுகிறார்.  அங்கிருந்து தப்பி காவல் நிலையம் சென்றபோது, காவலர்கள் புகாரை பதிய மறுக்கின்றனர். புகார் பதிய ஒப்புக்கொண்டபோது, தடை செய்யப்பட்ட இரு விரல் சோதனையை அவரிடம் செய்கின்றனர்.

“மருத்துவ பரிசோதனை காலதாமதமாவது என்னுடைய வழக்கில் உதவவில்லை. நீதிபதி என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை என சொன்னபோது, நான் வேண்டுமானால் உடையை களைந்து காட்டுகிறேன். எங்கேயெல்லாம் காயம் ஆகியிருக்கிறது என்பதை நீங்களே பாருங்கள் என அவரிடம் சொன்னேன்” என நடந்ததை விவரிக்கிற அவர், வீட்டிற்கு திரும்பியபோது அவருடைய கணவரும் கணவரின் குடும்பத்தினரும் தான் வீட்டை விட்டு ஓடிப்போய்விட்டதாகக் கூறி, தன்னை ரத்தம் வரும்வரை அடித்ததாக கூறுகிறார். அவருடைய பிறந்த வீட்டிலும் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. “எங்கும் போக வழியில்லாமல், எட்டு நாட்கள் ரயில் நிலையத்தில் படுத்து கிடந்தேன். ஒரு சமூக சேவகர் என்னை கண்டுபிடித்து, நான் வாழ ஒரு இடத்தை கண்டுபிடிக்க உதவினார்”.

இவர் தற்போது பலமுனை போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கிறார். தனக்கு குற்றமிழைத்தவர்களுக்கு எதிராகவும் தனது 10 வயது மகன் மற்றும் 13 வயது மகளுக்காக தனது கணவருக்கு எதிராகவும் போராடுகிறார்.  இந்த யாத்திரையின் போது, முதல் முறையாக தனது கதையை சொன்னபோது, மற்ற பெண்களைப் போல தானும் உடைந்துபோய் அழுதுவிட்டதாக சொல்கிறார். நாட்கள் கடந்த பிறகு, தனது துயரத்தை பேசுவதாலும் தன்னை போன்ற மற்றவர்கள் பேசுவதைக் கேட்பதாலும் தன்னுடைய மன உறுதி அதிகமாகியுள்ளதை குறிப்பிடுகிறார்.

ராஷ்டிரிய கரிமா அபியான் அமைப்பைச் சேர்ந்த கிராந்தி என்ற தன்னார்வலர், பல்வேறு மாநிலங்களில் சமூக குழுக்கள் மற்றும் பெண்கள் சுய உதவிக்குழுக்கள் ஒவ்வொரு கிராமத்திலும் நகரத்திலும் பெருந்திரளான ஆதரவை தந்ததாக குறிப்பிடுகிறார். அவர்களே உணவும் தங்குமிடமும் தந்ததாகவும் சொல்கிறார். “இந்தப் பயணத்தில் பங்கேற்றவர்கள் நீதிமன்றங்களிலும் காவல் நிலையங்களிலும் கடுமையான அனுபவத்தைப் பெற்றவர்கள். தங்களுடைய குடும்பம் மற்றும் சமூகத்திலிருந்து வருகிற அழுத்தங்களையும் கடந்து இப்படி வருவது பேசுவதும் மிகக் கடினமானது” என்கிறார் கிராந்தி.

தேசிய குற்ற ஆவண மையத்தின் (National Crime Record Bureau) 2016-ம் ஆண்டிற்கான அறிக்கையில் எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதியப்பட்ட பெரும்பாலான வழக்குகளில் பழங்குடியின மற்றும் பட்டியலின பெண்கள் மீது நடத்தப்பட்ட வன்கொடுமை வழக்குகளே அதிகம். பெரும்பாலான வழக்குகளின் நிலைமை வெறும் வழக்குகளாகவே உள்ளன. பட்டியலின பெண்களுக்கு எதிரான 8,259 வன்கொடுமை வழக்குகளில் 3.7 % வழக்குகள் மட்டுமே விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதுபோல, பழங்குடியின பெண்களுக்கு எதிரான 3,563 வன்முறை வழக்குகளில் 2.8 % வழக்குகளில் மட்டுமே தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. சமூக சூழல் காரணமாகவும் மிரட்டல் காரணமாகவும் வழக்குகளாக பதியப்படாதவை எதுவும் இந்த கணக்குகளின் கீழ் வராது என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

*****

ராஜஸ்தானைச் சேர்ந்த பன்வாரி தேவி, குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்திய காரணத்தால் உயர்சாதிக்காரர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானவர். இவருடைய போராட்டம் காரணமாக முக்கியத்துவம் வாய்ந்த பணியிடங்களில் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான ‘விசாகா வழிகாட்டுதல்’களை ஏற்படுத்த உதவியது. ஆனால், 25 ஆண்டுகள் ஆன பின்னும் குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை கிடைக்கவில்லை என்கிற பன்வாரி தேவி, இந்தப் பேரணி தனக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்கிறார்.

“என்னுடைய போராட்டத்தை சிறிய அளவில் முன்னேடுத்தேன், இப்போது மீ டூ என்ற பெயரில் பெரிய இயக்கமாக வளர்ந்துள்ளது. ஆனால், கிராமங்களிலிருந்து ஒலிக்கும் பெண்களின் குரல்களுக்கு நீதி கிடைப்பதே இல்லை. இப்படி பெரிய எண்ணிக்கையில் தெருவில் இறங்கி போராடுவது, அரசின் கவனத்தை ஈர்க்கும்” என்கிறார் பன்வாரி தேவி.

படிக்க:
போர் ஆயுதத் தரகர்களுக்கானது ! புல்வாமா தீவிரவாத தாக்குதலை கண்டிக்கும் பாகிஸ்தான் இளைஞர்கள் !
♦ #Metoo : இந்தியாவில் மீ டூ இயக்கத்தின் விளைவு என்ன ? ஒரு முழுமையான அறிக்கை !

பேரணியை ஒருங்கிணைக்கும் அமைப்பைச் சேர்ந்த ஆசிஃப் ஷேக், பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த பின், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரின் முதலமைச்சர்கள் கமல் நாத்தும் பூபேஷ் பாகலும் இந்தப் பெண்களுக்கு உதவுவதாக சொல்லியிருப்பதாக தெரிவிக்கிறார். பாலியல் வன்முறைகளை தடுக்க சிறப்பு போலீசு குழுவையும் அத்தகைய வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்களையும் அமைக்க உள்ளதாக அவர்கள் தெரிவித்திருக்கின்றனர். மேலும் அத்துமீறலுக்குரிய இரு விரல் சோதனை முறையையும் தடுக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

குஜராத்தை அடையும் முன் மத்திய பிரதேசத்தின் ரட்லாம் பகுதியில் ‘கண்ணியத்துக்கான பேரணி’யினர் தங்கியிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் உள்ள பாக்சத்தா என்ற பழங்குடியின பெண்கள் தங்களுடைய வன்முறைகளை பகிர்ந்துகொண்டனர். இந்த பழங்குடியினத்தைச் சேர்ந்த சிறுமிகள் நெடுஞ்சாலைகளில் பாலியல் தொழிலுக்கு தள்ளப்படும் அவலமும் நடந்துவருகிறது.

கைகளில் குழந்தையை ஏந்திய ஒரு சிறுமி, அப்படியான வன்முறையால் பாதிக்கப்பட்டவள். முதல் முறையாக போலீசு அதிகாரியுடன் சமமாக மேடையை பகிர்ந்துகொண்டார். இந்த இனத்துக்கு இடஒதுக்கீடும் கல்வியும் வேலைவாய்ப்பும் கிடைத்தால் பாரம்பரியமாக பாலியல் தொழிலுக்கு தள்ளப்படும் கொடுமைக்கு தீர்வு கிடைக்கும் என்றார் அவர்.

குஜராத் எல்லையோரமாக உள்ள மத்திய பிரதேசத்தின் ஜபுவா மாவட்டத்தில் அதிகாரம் மிக்க சாதிகளைச் சேர்ந்த ஆண்களால், அவர்களிடம் விவசாய கூலிகளாக பணியாற்றும் பில் சாதியின பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதை தெரிவித்தனர்.  குஜராத்தின் தாஹுட் மாவட்டத்தில் கணவனை இழந்த பெண்களை சூனியக்காரிகள் என முத்திரையிட்டு அவர்களுக்கு சொத்து மறுப்பதும், அவர்களுடைய மகள்களை ஏலத்தில் விடுவது நடைமுறையில் உள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் இந்த யாத்திரையில் இணைந்துகொண்டனர்.

தேசிய குடும்ப நல ஆய்வறிக்கை 2015-16-ல் சாதி மற்றும் பாலினம் ஆகிய இரண்டுவிதமான ஒடுக்குமுறைக்கு ஆளாவதும் அவர்கள்  15 வயதிலிருந்து உடல்ரீதியிலான வன்முறைக்கு ஆளாகி வருவது தெரிந்தது. பட்டியலின பெண்கள் 35.7 சதவீதமும் பழங்குடியின பெண்கள் 31 சதவீதமும் மற்ற பெண்கள் 21 சதவீதமும் இத்தகைய இரட்டை ஒடுக்குமுறைக்கு ஆளாவதைச் சொன்னது அந்த ஆய்வறிக்கை.

ஒவ்வொரு நாள் பயணத்தின் போது, உள்ளூர் மக்களுடன் பேரணியில் பங்கேற்றவர்கள் பேசினர், முழக்கங்களை எழுப்பினர். அகமதாபாத்தின் சபர்மதி ஆசிரமத்தில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது பெண்ணின் பெற்றோர் உத்தரபிரதேசத்திலிருந்து வந்து தங்களுடைய வலியை பகிர்ந்துகொண்டனர்.

கட்டிடப் பணி செய்யும் அந்த தந்தை பேசினார். “இந்த சம்பவம் நடக்கும் முன், என் மகளை அந்த ஆள் பின் தொடர்ந்தபடியே இருந்ததோடு, நான்கு முறை அடித்தும் இருக்கிறார்.  ஆனால், நாங்கள் கொடுத்த எந்த புகாரையும் போலீசு தீவிரமாக எடுத்துக்கொள்ளவே இல்லை”.

தனது மகளின் படிப்பு முக்கியம் என கருதும் அவருடைய தாய், தினமும் பள்ளிக்கு போகும்போது கத்திரிக்கோலும் மிளகாய் பொடியை பாதுகாப்புக்கு தந்து அனுப்புவதாக சொல்கிறார். “போலீசிடமிருந்தோ நீதிமன்றத்திடமோ நாங்கள் எந்தவித மரியாதையும் பெறவில்லை. எங்களுடைய சொந்த மக்களே குற்றம் புரிந்தவனை நிராகரிப்பதற்கு பதிலாக எங்களை நிராகரித்துவிட்டார்கள்.  இந்த பேரணி நாங்கள் இழந்த மரியாதையும் நம்பிக்கையும் பெற்றுத்தரும் என நினைக்கிறோம்” என்கிறார் அவர்.

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மற்றொரு பெண்ணின் தாய், ஒரு மூத்த போலீசு அதிகாரி பெண்கள் சமூகத்தை குறை சொன்னதை விரும்பவில்லை. “தங்கள் மகள்களுக்கு சமூக மதிப்புகளை கற்றுத்தர வேண்டும் என அவர் சொன்னார். ஏன் அப்பாக்கள் கற்றுத்தரக்கூடாதா? அதுவும் மகள்களுக்குத்தான் கற்றுத்தர வேண்டுமா? ஏன் மகன்களுக்கு கற்றுத்தரக்கூடாதா?” என கேட்கிறார் அவர்.

பெடூலிலிருந்து வந்திருந்த 25 வயதான பெண் இப்படிச் சொன்னார், “பாலியல் வல்லுறவுகள் பெண்கள் அநாகரிகமாக உடையணிவதால்தான் ஏற்படுகிறது என இவர்கள் நினைக்கிறார்கள். நான் புடவைதான் உடுத்தியிருக்கிறேன். ஆனால், அது வல்லுறவிலிருந்து என்னைக் காப்பாற்றவில்லை” என்கிறார். இவர் சார்ந்த பழங்குடியின கிராமத்திலிருந்து இவர் உள்ளிட்ட பலர் கடத்தப்பட்டு, ரூ. 25 ஆயிரத்துக்கு உயர்சாதி ஆண்களுக்கு விற்கப்பட்டார்கள். மேலும், இந்த இனத்தில் பெண் சிசுக்கொலையும் அதிகமாக உள்ளது.

இந்த யாத்திரை முடிந்த பின், இந்தப் பெண்கள் மத்திய பிரதேசத்தின் தேவாஸ் நகரத்துக்கு இடம்பெயரப்போவதாக சொல்கிறார்கள். மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயது பெண், தையல் கடை ஒன்றை வைக்கப்போவதாகக் கூறுகிறார். 25 வயது பெண், பியூட்டி பார்லர் வைக்கப்போவதாகக் கூறுகிறார். இவர்கள் இருவரும் பள்ளிக்குச் சென்றதில்லை. படிப்பதையும் எழுதுவதையும் கற்கப்போவதாக இவர்கள் சொல்கிறார்கள்.

ஒவ்வொரு நாளின் முடிவிலும் பேருந்து இரவு தங்கலுக்காக நிற்கும்போது ஒலிக்கும் கடைசி பாடல் தோழிகளின் ஒன்றிணைவை பாடுவதாக முடிகிறது. ஒவ்வொரு நாளும் தங்களுடைய கஷ்டங்களை மறந்து இந்தப் பெண்கள் உற்சாக தாளமிட்டு, இந்தப் பாடலைப் பாடுகிறார்கள்.

இந்துத்துவ சக்திகள் ஓங்கியிருக்கிற குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா, சத்தீஸ்கர், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்து சனாதனத்தின் முக்கிய கூறுகளான சாதியமும் பெண்ணடிமைத்தனமும் இன்னமும் உயிர்ப்போடு இருப்பதை அறிய முடிகிறது. அதிகாரத் திமிர் பிடித்த சாதி ஆண்களால் பட்டியலின-பழங்குடி பெண்கள் இரட்டை ஒடுக்குமுறைக்கு ஆளாவதும் பட்டவர்த்தனமாக தெரிகிறது. சாதியின் பெயரால் சிறுமிகளை பாலியல் தொழிலுக்கு தள்ளும் இழிவான இந்து மத ‘பாரம்பரியம்’ நடைமுறையில் இருப்பதையும் காண முடிகிறது. மத அடிப்படைவாதங்களில் மிகக் கேவலமானது இந்துமத அடிப்படைவாதமே என்பதும் தெளிவாகத் தெரிகிறது.

வினவு செய்திப் பிரிவு
கட்டுரை: ஷாலினி நாயர்
தமிழாக்கம்: கலைமதி

நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ் 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க