#மீ டூ இயக்கம் சமீபத்தில் துவங்கப்பட்டதாக இருக்கலாம், ஆனால் அது இந்தியாவுக்குப் புதிதல்ல.  இதற்கு முன்பே பன்வாரி தேவி பாலியல் வன்முறைக்கு எதிரான போராட்டத்தைத் துவங்கியிருந்தார்.

ராஜஸ்தானின் கிராமம் ஒன்றைச் சேர்ந்த பன்வாரிதேவி அங்கே “சாத்தின்” என்கிற மக்கள் நலப் பணியாளராக வேலை செய்து வந்தார். தனது பணியின் ஒரு அங்கமாக அக்கிராமத்தில் நடக்கவிருந்த குழந்தைத் திருமணம் ஒன்றைத் தடுத்து நிறுத்தியதால் ஆதிக்க சாதியினரால் கூட்டு வல்லுறவு செய்யப்பட்டார்.

பன்வாரி தேவியைப் போல் ஒவ்வொரு உழைக்கும் வர்க்கப் பெண்ணிடமும் நம்மிடம் பகிர்ந்து கொள்ள ஒரு #மீ டூ கதை புதைந்து கிடக்கின்றது. குடும்பமே நம்பிக் கொண்டிருக்கும் இப்பெண்களின் குறைந்த கூலி, பணிப் பாதுகாப்பின்மை, சமூகப் பாதுகாப்பின்மை போன்றவைகளோடு சாதி மற்றும் வர்க்க ஒடுக்குமுறைகளையும் இவர்கள் எதிர் கொள்கின்றனர். இவைதான் தங்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களை எதிர்த்துப் பேசாமல் இப்பெண்களை மௌனிக்க வைக்கின்றன.

படிக்க :
♦ #Metoo : இந்தியாவில் மீ டூ இயக்கத்தின் விளைவு என்ன ? ஒரு முழுமையான அறிக்கை !
♦ நாடெங்கும் மீ டூ குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களின் பதவிகள் பறிப்பு – தமிழகத்தில் ?

எந்தக் குறிப்பிட்ட பெண்ணாலும் #மீடூ இயக்கம் முன்னெடுக்கப்படவில்லை. தங்களிடம் அத்துமீறிய ஆண்களைக் குறித்த விவரங்களை அம்பலப்படுத்தும் ஒவ்வொரு பெண்ணும் அதைத் தங்கள் சொந்த இயக்கமாக ஏற்றுக் கொள்கின்றனர். பாலியல் அத்துமீறல்களுக்கு எதிராக போராடும் பெண்கள் ஒவ்வொருவரையும் இந்தப் போக்கு மிக இறுக்கமாக பிணைத்துள்ளது.

அதே போல் ‘அவள் ஆபாசமாக உடையணிந்தோ, ஆணைக் கவரும் விதமாக நடந்து கொண்டோ, பெண்ணின் குணக் கேட்டினாலோ, அவளே விரும்பியதாலோ’தான் பாலியல் அத்துமீறல் நடந்தது என பொதுவாக பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்து சொல்லப்படும் பொய்களையும் இந்த இயக்கம் தகர்த்துள்ளது.

பாலியல் அத்துமீறல் என்பது மிகச் சாதாரணமாக எல்லா இடங்களிலும் நடந்து கொண்டிருப்பதை இவ்வியக்கம் வெளிப்படுத்தியுள்ளது. அதேபோல் பாலியல் அத்துமீறலால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கவுரவமும், அவளுடைய குடும்ப கவுரவமும் பறிபோய் விடும் என்கிற கட்டுப்பெட்டித்தனமான கற்பனைகளையும் இவ்வியக்கம் கலைத்துள்ளது. தங்களுடைய தனிப்பட்ட பாதுகாப்பு, பணிப் பாதுகாப்பு மற்றும் மன நிம்மதி என அனைத்தையும் பணயம் வைத்து பாலியல் குற்றவாளிகளுக்கு எதிராக பெண்கள் எழுந்து நிற்கின்றனர்.

விசாகா வழிகாட்டுதல்கள் மற்றும் பாலியல் குற்றத் தடுப்பு மற்றும் நிவாரணச் சட்டம் (2013) போன்றவைகள் இருந்தாலும், உழைக்கும் வர்க்கப் பெண்கள் பணியிடங்களில் சந்திக்கும் பாலியல் அத்துமீறல்களுக்காக நீதி வேண்டிப் போராடியே வருகின்றனர். நம் கண்ணுக்குத் தெரியாத பல பணிச் சூழல்களிலும், இறுக்கமான வர்க்க, சாதி மற்றும் ஆணாதிக்க கண்ணோட்டம் நிலவும் இடங்களிலும் சட்டம் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை.

வீட்டுப் பணியாளர்கள், தெருவோர வியாபாரிகள், துப்புரவுத் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளிகள் போன்ற இடங்களில் இவ்வாறான சூழலே நிலவுகின்றன. இந்த துறைகளில் எல்லாம் கீழ்மட்ட அளவில் புகார் தெரிவிக்க காகித அளவிலான கமிட்டிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இம்மாதிரியான சூழலில் உழைக்கும் வர்க்கப் பெண்கள் பாலியல் அத்துமீறல்களுக்கு எதிராக தொழிற்சங்கங்களின் மூலமே போராடுகின்றனர்.

கடந்த நவம்பர் 3ம் தேதி மாலை, அனைத்திந்திய முற்போக்குப் பெண்கள் சங்கம் (AIPWA),  பெங்களூர் மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளர் சங்கம், பின்னலாடைத் தொழிலாளர் சங்கம், வீட்டுப் பணியாளர் உரிமைச் சங்கம் மற்றும் போக்குவரத்துத் தொழிலாளர் சங்கங்களோடு இணைந்து “#மீடூ : உழைக்கும் வர்க்கப் பெண்களின் பகிர்வுகள்” எனும் நிகழ்ச்சி ஒன்றை பெங்களூரில் ஏற்பாடு செய்தது.

பல்வேறு பெண் தொழிலாளர்கள் கலந்து கொண்டு தங்களது பணிச் சூழலும் வேலையின் தன்மையும் பாலியல் அத்துமீறல்களுக்கு ஏதுவானதாக இருப்பதைக் குறித்துப் பேசினர். பாலியல் குற்றவாளிகளுக்கு எதிராக குரல் எழுப்பினால் வேலை இழப்பும், சம்பள இழப்புமே தங்களது பணிச் சூழலில் இயல்பாக எதிர்கொள்ள வேண்டிய எதார்த்தம் என்பதைக் குறிப்பிட்டனர்.

ரத்னா என்கிற துப்புரவுத் தொழிலாளி தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். “ஐந்து மாதங்களாக தரப்படாத எங்களது கூலியைக் கேட்டதற்கு சூப்பர்வைசர் தனது கால் சட்டையை பொது இடத்தில் அவிழ்த்துக் காட்டினார்” எனக் குறிப்பிட்டார் ரத்னா. தனது எஜமானரின் மகன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதை அவரிடம் சொன்னபோது தான் வேலையை விட்டு நீக்கப்பட்டதாகச் சொன்னார் தாஹிரா எனும் வீட்டுப் பணியாளர்.

ஓசூரைச் சேர்ந்த பின்னலாடை நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ராஜேஷ்வரி, தான் பணிபுரியும் ஆலையின் மேலாளர்கள் எப்படியெல்லாம் பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவார்கள் என்பதை விளக்கினார். ”நான் ஆலையில் பணிபுரியத் தகுதியில்லை என்றும் பணம் சம்பாதிக்க ரோட்டில் நிற்க வேண்டும் என்றும் என்னிடம் சொன்னார்கள். அதே போல் பின்னலாடை நிறுவனங்கள் நிறுவப்பட்டிருக்கும் விதத்தின் காரணமாகவே நாங்கள் உடல் ரீதியான தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்” என்றார் ராஜேஷ்வரி.

உழைக்கும் வர்க்கப் பெண்கள் தங்களுக்கு நிகழும் பாலியல் அத்துமீறல்களுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் மூலம் போரட ஆரம்பித்துள்ளனர்.

பேருந்தில் பயணிக்கும் பயணிகளிடையே மட்டும் பாலியல் அத்துமீறல்கள் நடப்பதில்லை, பயணிகளால் பெண் நடத்துநர்கள் அடையும் தொல்லைகள் மிக அதிகம் என்கிறார் பெங்களூரு மாநகராட்சி பேருந்துக் கழகத்தில் பணிபுரியும் பெண் மெக்கானிக் பர்வீன்.

“நாங்கள் சில வேளைகளில் குடிகாரர்களையும் கையாள வேண்டியுள்ளது. பேருந்துச் சீட்டு வழங்கியதில் வசூலான ஆயிரக்கணக்கான ரூபாய்கள் எங்கள் பையில் இருக்கும். அது போன்ற சமயங்களில் பாலியல் அத்துமீறல் செய்பவர்களோடு சண்டைக்குப் போனால், அந்த சச்சரவில் பணத்தை இழக்க வேண்டியிருக்கும். பின்னர் அந்தப் பணத்தையும் எங்கள் கையில் இருந்தே கட்ட வேண்டியிருக்கும் என்பதாலேதான் பெண் நடத்துநர்கள் பாலியல் தொந்திரவுகளை கண்டும் காணாமலும் கடந்து போகின்றனர்” எனக் குறிப்பிடுகிறார் பர்வீன்.

படிக்க :
♦ பெண்கள் மீதான வன்முறை: முதல் எதிரி அரசுதான் !
♦ மீ டூ : நாம் யார் பக்கம் நிற்பது ? வில்லவன்

இந்த நிகழ்வில் மூன்றாம் பாலினத்தவர், பாலியல் தொழில் செய்பவர்கள் மற்றும் மாணவர்களும் தங்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்திரவுகளைக் குறித்துப் பேசினர். “நான் ஒரு ஊடக நிறுவனத்தில் வேலை செய்து வந்த போது பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டேன். பின்னர் நான் அந்த சம்பவத்தைக் குறித்து பிரச்சினை செய்து விடுவேன் என்கிற அச்சத்தில் வேலையை விட்டே நீக்கி விட்டனர்.

எங்களைப் போன்றவர்கள் போலீசிடமும் புகார் அளிக்க முடியாது; ஏனெனில் அவர்களும் எங்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவார்கள். நாங்களெல்லாம் அத்துமீறுவதற்காகவே படைக்கப்பட்டவர்கள் என போலீசார் சொல்வார்கள். #மீடு இயக்கம் பாலியல் சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்களின் துயரங்களை கருத்தில் கொள்ளவில்லை” எனப் பேசினார் சானா என்கிற திருநங்கை.

பாலியல் தொழில் செய்பவர்கள் மேல் நிகழ்த்தப்படும் பாலியல் குற்றங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை என்கிறார் மது பூஷன் என்கிற சமூக செயல்பாட்டாளர்.

வீட்டுப் பணியாளர்களின் மீது நிகழ்த்தப்படும் பாலியல் அத்துமீறல்களைக் குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளிடம் புகாரளித்தால் அவர்கள் அதைக் கண்டு கொள்ள மறுப்பதாக குறிப்பிட்டார் பெண்கள் பாதுகாப்பு சங்கத்தைச் சேர்ந்த பாரிஜாதம். “அவர்களும் பாரபட்சமாகவே அணுகுகின்றனர்” என்கிறார் பாரிஜாதம்.

நவம்பர் 3-ம் தேதியன்று நடந்த நிகழ்வில் பகிர்ந்து கொள்ளப்பட்ட அனுபவங்களைத் தொகுத்து அறிக்கை ஒன்றைத் தயாரித்து கர்நாடக அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையிடமும், கர்நாடக மாநில பெண்கள் கமிஷன், பெங்களூரு மாநகராட்சியின் புகார் பிரிவு மற்றும் பெங்களூர் மாநகரப் பேருந்துக் கழகம் ஆகிய அமைப்புகளிடம் சமர்பிக்க திட்டமிட்டுள்ளது அனைத்திந்திய முற்போக்கு பெண்கள் சங்கம்.
தமிழாக்கம் :

நன்றி : தி வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க