நேற்று எங்கள் பள்ளி ஆசிரியர்கள் அறையில் அமைச்சர் ஜெயக்குமார் ஆடியோ தொடர்பாக ஒரு விவாதம் ஓடிற்று.

வில்லவன்

“அந்தப் பொண்ணு ஒரு ஐட்டமா இருக்கும்” என ஆரூடம் சொல்கிறார் ஒருவர்.

“அது எப்படி குழந்தை பிறக்கும் வரை ஒரு குடும்பம் விட்டு வைக்கும்?” என ஐயமெழுப்புகிறார் இன்னொருவர்.

“இதெல்லாம் பிளான் பண்ணி பிளாக்மெயில் பண்ற குடும்பம் போலருக்கு” என்கிறது இன்னொரு குரல்.

“கூப்பிட்டது அமைச்சர்ங்கறதால போயிருப்பா” என்றொரு கருத்தும் வந்தது.

அத்தனை பேரும் அந்த பெண்ணும் அவர் தாயாரும் அமைச்சரை வளைக்கும் நோக்கில் அங்கே போயிருப்பார்கள் என்றே தீர்மானமாக நம்புகிறார்கள். அதில் இருப்பது ஜெயக்குமார் குரலா என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை, அதில் அவர் தவறு என்ன இருக்கிறது எனும் சிந்தனையே அவர்களிடம் மேலோங்கி நின்றது.

அத்தனை பேரும் அந்த பெண்ணும் அவர் தாயாரும் அமைச்சரை வளைக்கும் நோக்கில் அங்கே போயிருப்பார்கள் என்றே தீர்மானமாக நம்புகிறார்கள். அதில் இருப்பது ஜெயக்குமார் குரலா என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை.

நேற்று  நடிகை அமலா பால் தன்னிடம் இயக்குனர் சுசி.கணேசன் அநாகரீகமாக நடந்துகொண்டார் என குற்றம் சாட்டுகிறார். உடனே முகநூலில் இப்படி ஒரு எதிர்வினை வருகிறது “உன் புருசனோட ஒழுங்கா வாழ வக்கில்லை! நீ பத்தினின்னு நிரூபிச்சுட்டு அடுத்தவன் மேல கம்ப்ளெயிண்ட் பண்ணு.” என்பது பெரும்பான்மை தரப்பின் பொது விதியாக இருக்கிறது.

இதே கண்ணோட்டம்தான் சின்மயி விவகாரத்திலும் காணக்கிடைக்கின்றது. பாண்டே அவரிடம் நடத்திய நேர்காணல் வார்த்தைகளால் நடத்தப்பட்ட வன்முறை, தாம்ப்ராஸ் நாராயணன் அய்யங்கார் தேவடியாள் என வர்ணித்ததைவிட கேவலமாக இருந்தது பாண்டேவின் கேள்விகள்.

பொதுவாக பாண்டேவை கழுவி ஊற்றுவதற்க்கு பேரார்வத்தோடு காத்திருக்கும் முகநூலில் இது விமர்சிக்கப்படவேயில்லை. சின்மயியின் முந்தைய நடவடிக்கைகள் வாயிலாக அவர் மீதான நம்பகத்தன்மை குறைந்துவிட்டது எனும் வாதம் அத்தனை நியாயமானது அல்ல. காரணம் வைரமுத்துவின் வரலாறும் மெச்சத்தக்கது இல்லை.

படிக்க :
நாடெங்கும் மீ டூ குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களின் பதவிகள் பறிப்பு – தமிழகத்தில் ?
♦ #MeToo : ஆண்களே ! இது பெண்கள் வளைக்கப்பட்ட கதையல்ல ! வதைக்கப்பட்ட கதை !

நாம் எல்லா சமயங்களிலும் நம் வெறுப்பை ஒரே அளவில் வெளிப்படுத்துவதில்லை. இந்துத்துவ பொறுக்கிகள் வைரமுத்துவை இலக்கு வைத்து தாக்கியபோது நாம் அவரது வரலாற்றை ஆராயவில்லை. இன்னும் பெரிய உதாரணம் வேண்டுமானால், சசிகலா தினகரன் மீதான தமிழக மக்களின் வெறுப்பு எத்தகையது? ஆனாலும் அவர்களை பாஜக ஒழிக்க முனைந்த போது இந்த கும்பல் (சசிகலா) இப்படியாவது நாசமாகட்டும் என அனேகர் கருதவில்லை. மாறாக அதிலும் பாஜகவின் மீதான எதிர் நிலைப்பாடே வலுவாக இருந்தது. ஆக இங்கே நம்மை (அதாவது பெரும்பான்மை சமூக ஊடக கருத்தாளர்கள்) சின்மயிக்கு எதிராக நிறுத்தி வைரமுத்துவுக்கு மவுன ஆதரவை வழங்க வைக்கும் காரணி எது?

ஒரு உண்மையை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும். நமது பெரும்பாலான நடத்தைகளும் நடவடிக்கைகளும் தானியங்கி செயல்பாடுகள் (ஆட்டோமேட்டிக்). அதில் நமது சமூக கற்றல் பெருமளவு தாக்கம் செலுத்தும். கம்யூனிசம் மற்றும் பெரியாரிசத்தை ஏற்றுக்கொண்டவர்களிடத்திலும் பகுதியளவுக்கான ஆணாதிக்க மனோபாவம் இருக்கும். அதனை ஒப்புக்கொள்ளவும் பிறகு சீர்திருத்திக்கொள்ளவும் தயாராய் இருக்கிறோமா என்பதை வைத்தே ஒரு கம்யூனிஸ்ட்டையும் பெரியாரிஸ்ட்டையும் மதிப்பிட வேண்டும்.

சின்மயி விவகாரத்தில் பாண்டே அவரிடம் நடத்திய நேர்காணல் வார்த்தைகளால் நடத்தப்பட்ட வன்முறை.

ஆகவே மீ டூ விவகாரத்தில், குறிப்பாக சின்மயி தொடர்பான நமது (சமூக வலைதளங்களில் இயங்கும் இடதுசாரி மற்றும் திராவிட சார்புடையவர்கள்) எதிர்வினைகளை இந்த கோணத்தில் சுயபரிசோதனை செய்துகொள்வது நல்லது.

சின்மயி, கவிஞர் வைரமுத்துவோடு பணியாற்றிய தருணங்களில் நிகழ்ந்த பாலியல் தாக்குதல் குறித்து ஒரு ட்வீட் போடுகிறார். வழக்கமாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தால் அது நிகழ்ந்திருக்க சாத்தியம் இருக்கிறதா என ஆராய்வோம்.

பல ஆண்டுகளுக்கு முன்னால் மும்பை குழு நடனப் பெண் ஒருவர் அபிஷேக் பச்சன் தன்னை மணந்துகொண்டதாக குற்றம் சாட்டினார். அவர் விவரித்த சம்பவம் யதார்த்தத்துக்கு முற்றிலும் பொருந்தாததாக இருந்தது (பார்ட்டியில் சந்தித்தார், எனக்கு பொட்டு வைத்து மனைவியாக ஏற்றுக்கொண்டார் என சொன்னதாக நினைவு). அப்படியான ஒரு பிறழ் நடவடிக்கையாக சின்மயியின் குற்றச்சாட்டு இல்லை.

இது நிகழ்ந்திருப்பதற்கான சாத்தியங்களை மறுக்க முடியாது. மேலும் சினிமாத்துறை மீதான பொதுவான அபிப்ராயம், இதெல்லாம் அங்கு சாதாரண நிகழ்வு என்பதுதான்.

ஏ.ஆர்.ரஹமானின் சகோதரி ரைஹானா வைரமுத்துவின் பாலியல் சீண்டல்கள் சினிமாத்துறையின் வெளிப்படையான ரகசியம் என்கிறார். வைரமுத்துவிடம் இதே வடிவத்திலான பாலியல் தாக்குதல்களை எதிர்கொண்டதாக ஒரு பெண் வெளிப்படையாக தன் பெயரைக் குறிப்பிட்டே குற்றம்சாட்டியிருக்கிறார்.

இந்த தொடர் கருத்துக்களை வைத்துப் பார்க்கையில் வைரமுத்து இதனை செய்திருக்க முகாந்திரம் இருக்கிறது என நாம் சந்தேகித்திருக்க வேண்டும். ஆனாலும் நாம் சின்மயி எனும் பாடகியிடம் குற்றம் கண்டுபிடிப்பது எனும் புள்ளியில் இருந்து நகரவில்லை.

எலைட் ஃபெமினிசம், பார்ப்பன பெண் ஆகிய காரணங்கள் மட்டுமே வைரமுத்துவை நிரபராதி என நம்ப போதுமானவையா? அல்லது நாம் வெறுக்கத்தக்க ஒரு வரலாற்றைக்கொண்ட பெண்மணிக்கு இப்படி ஒரு பாலியல் சீண்டல் நடந்திருந்தால்தான் என்ன எனும் பழியுணர்ச்சியா?

இதன் பலனாக நாம் இரண்டு வாய்ப்புக்களை இழந்திருக்கிறோம். ஒரு போலியான தெய்வீக இமேஜை உருவாக்கி வைத்துக்கொண்டு இந்த கர்னாடக சங்கீத கும்பல் ஆடும் ஆட்டம் கொஞ்சநஞ்சமல்ல. பார்ப்பனீயத்தை தாங்கிப்பிடிக்கும் தூண்களில் முக்கியமானது இந்த இந்த கர்னாடக சங்கீதம்.

பார்ப்பனரல்லாத சாதிப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு ஒரு பார்ப்பன குரு கிடைத்துவிட்டால் அடையும் மகிழ்ச்சி அளவில்லாதது. பார்ப்பனர்கள் தங்கள் தனிப்பட்ட அடையாளமாக கருதுவதும் கர்னாடக சங்கீதத்தைத்தான். ஆகவே இந்த “குரு”க்கள் தொடும் எல்லைக்குள் சிறார்களும் இளையோர்களும் ஏராளமாக இருக்கிறார்கள்.

மீ டூ நகர்வுகளில் சின்மயியின் பாத்திரம் இந்த தெய்வீக இமேஜை உடைப்பதற்கு கிடைத்த பெரும் சந்தர்ப்பம். சின்மயி மீதான வெறுப்பிலும் “நீ என்ன பத்தினியா” எனும் இந்தியாவின் பிரத்தியோக சிந்தனையின் விளைவாக நாம் அந்த வாய்ப்பை தவறவிட்டிருக்கிறோம். ஒரு குறைந்தபட்ச விளக்கம்கூட கொடுக்க அவசியமில்லாமல் அந்த பார்ப்பன கும்பல் தப்பித்திருக்கிறது.

படிக்க:
குன்றத்தூர் அபிராமி : கலாச்சார நீதிபதிகளின் தற்குறித் தீர்ப்புகள்
மியூசிக்கல்லி செயலி உருவாக்கும் ரசனை எத்தகையது ?

இந்த விவகாரத்தில் அம்பலமான கதைகளை பேசுபொருளாக்கியிருந்தால் இன்னும் அதிகமான பெண்கள் அம்பலத்துக்கு வராத பல “குரு”க்களின் உண்மை முகத்தை தோலுரித்திருக்கக்கூடும். அவர்களிடம் சிக்குண்டிருப்பது பெரும்பாலும் பார்ப்பன குழந்தைகள்தான், அவர்களைக் காக்க வேண்டியதும் நம் பொறுப்பு இல்லையா?

பெரியாரது பெண்ணுரிமை செயல்பாடுகளின் முதல் பலனாளிகள் பார்ப்பன பெண்கள்தான். அதற்காக அவர் அச்செயலை நிறுத்திக்கொண்டாரா என்ன!

சின்மயியை மட்டும் இலக்கு வைக்கும் நமது பொது எதிர்வினையின் இன்னொரு கோணம்தான் என்னை பெரிதும் அச்சமூட்டுகிறது. சிறார்களுடன் பணியாற்றும் எந்த ஒரு ஆற்றுப்படுத்துனரிடமும் கேளுங்கள். அவர்களிடம் சில பாலியல் வன்முறை கதைகள் கிடைக்கும்.

மகளிடம் வல்லுறவு கொள்ளும் அப்பா அதனைக் கண்டும் கண்டிக்க முடியாத அம்மா, அப்பாவோடு தனியாக இருக்க பயமாக இருக்கிறது எனும் மாணவி தினசரி அதே அப்பாவோடு பள்ளிக்கு வருகிறார், பாலுறவு என்றால் என்னவென்று அறிய இயலாத வயதில் அதற்கு அறிமுகமாகி பிறகு அதனை இயல்பானதாக கருதி ரசிக்கும் சிறுமிகள், பாலியல் வன்முறையை தமது தவறாக கருதி குற்ற உணர்வில் தன்னைத்தானே சபித்துக்கொண்டிருக்கும் குழந்தைகள் என பட்டியலில் அடங்காத கேஸ் ஹிஸ்டரிகள் எங்கள் வட்டாரத்தில் கிடைக்கின்றன. பொது வெளியில் புழங்கும் முன்முடிவுகளும் எள்ளலும் இப்படியான குழந்தைகளிடம் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நாம் யோசிப்பதே இல்லை.

சின்மயிக்கும் நமக்கும் (சமூக ஊடக நண்பர்கள்) இருக்கும் தகராறு வெளியில் இருக்கும் பலருக்கும் தெரியாது. அப்படியான சூழலில் இத்தகைய விமர்சனங்களைக் படிக்கின்ற மற்றும் பாண்டே வகையறா (அந்த பிரஸ் மீட் நிருபர்களும்) ஆட்களின் வல்லுறவுக்கு நிகரான கேள்விகளும் இளையோர் மற்றும் மாணவர்களிடையே என்ன செய்தியை கொண்டுசெல்லும்?

இப்படி பாதிப்புக்கு ஆளாகும் பெண்கள் / மாணவர்கள் எண்ணிக்கை நாம் நினைத்துக்கொண்டிருப்பதைக் காட்டிலும் மிக அதிகம். இப்படியான சமூக எதிர்வினைகள் அவர்களை மேலும் மேலும் மனரீதியாக முடமாக்கலாம். அது பாலியல் குற்றவாளிகளை மேலும் மேலும் உற்சாகப்படுத்தும்.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகள் கருவுற்றிருப்பதை பிரசவம் வரை அறியாத பெற்றோர்கள் இருப்பதை சமீபத்தில் வந்த செய்தியொன்று சுட்டிக்காட்டுகின்றது. ஆசிரியர்கள் பேஸ்புக் பொதுக்கருத்தினையே வெளிப்படுத்துகிறார்கள். இதன் அபாயகரமான பின்விளைவுகளை யார் எதிர்கொள்வது?

வயாக்ரா புழக்கத்துக்குப் பிறகு வசதியான/ செல்வாக்கான கிழவர்கள் இப்படியான சீண்டல்களில் அதிகம் ஈடுபடுகிறார்கள் என்கிறார் உளவியலாளரான நண்பர் ஒருவர் (ஆளை மடக்கினால் போதும் எழுச்சிக்கு வயாக்ரா இருக்கிறது எனும் நம்பிக்கையில்).

ஊடகவியலாளர் சுகிதா தனக்கு தரப்பட வேண்டிய நீதிமன்ற ஆணையொன்றைப் பெற ஓராண்டு காத்திருந்ததாக சொல்கிறார். தொலைந்துபோன தமது ஆவணங்களைப் பற்றி புகார் கொடுத்து சி.எஸ்.ஆர் பெற ஒரு வாரம் அலைவதாக பதிவிடுகிறார். பிரபலமான ஒரு ஊடவியலாளரின் கதியே இப்படி இருக்கிறது. காதல் ஜோடிகளை அடாவடியாக பிரித்து பெண்ணை அப்பாவோடு கட்டாயப்படுத்தி அனுப்புகின்ற நீதிமன்றங்கள் இங்கிருக்கின்றன. இப்படி மிகக்கொடூரமான அமைப்புக்களை வைத்திருக்கும் நாம் சமூக ஊடகங்களையும் வழமையான போலீஸ் ஸ்டேஷன் போல மாற்றி எதை சாதிக்கப்போகிறோம்?

மீ டூ தவறாக பயன்படுத்தப்படலாமா என கேட்டால் அதற்கு வாய்ப்பு இருக்கின்றதுதான். அப்படியான வாய்ப்புக்கள் எல்லா குற்றங்களிலும் இருக்கின்றன. அதற்காக புகார் கொடுக்கும் எல்லோரையும் குற்றவாளிகள் போல நடத்த முடியாது.

பாலியல் சீண்டல் செய்யும் ஆட்கள் அடிப்படையில் கோழைகள். அதனால்தான் அவர்கள் தம்மிலும் மிக பலவீனமான ஆட்களை தெரிவு செய்கிறார்கள். இத்தகைய குற்றச்சாட்டுக்களை நேர்மையோடும் கரிசனத்தோடும் அனுகுவதன் வாயிலாக நாம் எதிர்காலத்தில் பல பாலியல் குற்றங்களை தடுக்க முடியும். ஒப்பீட்டளவில் அதன் எதிர்மறை விளைவுகள் குறைவாகவே இருக்கும்.

எனக்கும் சின்மயியை ஆதரிக்க வேண்டும் எனும் விருப்பம் இல்லை. ஆனால் சின்மயியை எதிர்க்கவேண்டும் எனும் அல்ப நோக்கத்திற்காக ஒரு பெரும் சமூக விரோத செயலை இலகுவாக கடந்துபோக இயலாது. மீ டூ போன்ற இயக்கங்களை இன்னும் செம்மைப்படுத்தவும் இன்னும் பரவலாக கொண்டு செல்லவும் நாம் முயற்சிக்கலாம்.

அதனை பகடி செய்யவோ அல்லது அவளுக்கு நல்லா வேணும் என சாபமிடவோ நான் தயாரில்லை. இவ்விவகாரத்தில் எப்படி எதிர்வினையாற்றுவது என குழப்பத்தில் இருக்கும் நண்பர்களுக்கும் நான் இதையே பரிந்துரைக்கிறேன்.

– வில்லவன்

அரசியல் விமர்சகர். வினவு தளத்தில் “வில்லவன் சொல்” எனும் தலைப்பில் பத்தி எழுதுகிறார்.

5 மறுமொழிகள்

  1. //பெரியாரது பெண்ணுரிமை செயல்பாடுகளின் முதல் பலனாளிகள் பார்ப்பன பெண்கள்தான். அதற்காக அவர் அச்செயலை நிறுத்திக்கொண்டாரா என்ன!// இதை சுப.வீ போன்ற திராவிட கருத்தாளர்கள் புரிந்து கொள்ள வேன்டும்.இவர்கள் வைரமுத்துவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு தருகிறார்கள்.என்ற போதிலும் சின்மயிக்கு கிடைத்த ஆதரவு கூட ஸ்ரீரெட்டிக்கு கிடைக்கவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

  2. “இதன் பலனாக நாம் இரண்டு வாய்ப்புக்களை இழந்திருக்கிறோம். ஒரு போலியான தெய்வீக இமேஜை உருவாக்கி வைத்துக்கொண்டு இந்த கர்னாடக சங்கீத கும்பல் ஆடும் ஆட்டம் கொஞ்சநஞ்சமல்ல. பார்ப்பனீயத்தை தாங்கிப்பிடிக்கும் தூண்களில் முக்கியமானது இந்த இந்த கர்னாடக சங்கீதம்.

    பார்ப்பனரல்லாத சாதிப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு ஒரு பார்ப்பன குரு கிடைத்துவிட்டால் அடையும் மகிழ்ச்சி அளவில்லாதது. பார்ப்பனர்கள் தங்கள் தனிப்பட்ட அடையாளமாக கருதுவதும் கர்னாடக சங்கீதத்தைத்தான். ஆகவே இந்த “குரு”க்கள் தொடும் எல்லைக்குள் சிறார்களும் இளையோர்களும் ஏராளமாக இருக்கிறார்கள்.

    மீ டூ நகர்வுகளில் சின்மயியின் பாத்திரம் இந்த தெய்வீக இமேஜை உடைப்பதற்கு கிடைத்த பெரும் சந்தர்ப்பம். சின்மயி மீதான வெறுப்பிலும் “நீ என்ன பத்தினியா” எனும் இந்தியாவின் பிரத்தியோக சிந்தனையின் விளைவாக நாம் அந்த வாய்ப்பை தவறவிட்டிருக்கிறோம். ஒரு குறைந்தபட்ச விளக்கம்கூட கொடுக்க அவசியமில்லாமல் அந்த பார்ப்பன கும்பல் தப்பித்திருக்கிறது.”

    மேலும் சின்மயி அவர்கள் ” மீ டூ நகர்வுகளில் சின்மயியின் பாத்திரம் இந்த தெய்வீக இமேஜை உடைப்பதற்கு கிடைத்த பெரும் சந்தர்ப்பம்.” இந்த விவாகரத்தை முதலில் அம்பலப்படுத்தி இருந்தால் ஆதரவு கிடைத்திருக்கும்,அந்த ஆதரவுடன் இந்த பாடலாசிரியரையும் அம்பலப்படுத்தி இருக்கலாம் என்று எனக்கு மனதில்படுகிறது.

    ஆக இங்கே நம்மை (அதாவது பெரும்பான்மை சமூக ஊடக கருத்தாளர்கள்) சின்மயிக்கு எதிராக நிறுத்தி வைரமுத்துவுக்கு மவுன ஆதரவை வழங்க வைக்கும் காரணி எது?

    பார்ப்பனிய எதிர்ப்பு கருதுகோள்தான் என்று கருதுகிறேன்

    • இரு காரணங்கள்:
      1) 15 வருடம் கழித்து, அதுவும் இடையில் வைரமுத்துவிடம் காலில் விழுந்து வணங்கி விட்டு, இப்போது கிளப்புவது. இந்த மௌனத்திற்கு காரணம் “strategy” என்று கூறுகிறார்கள். அப்போ, இந்த விஷயத்தை இப்போ கிளப்புவதிற்கு காரணம் என்ன “strategy” என்று சந்தேகம் நிச்சயம் வரும்

      2) எப்ப ப.ஜ.க. சின்மயிக்கு ஆதரவாக வைரமுத்துவை திட்ட ஆரம்பித்ததோ, அப்பவே சின்மயி கேஸ் அவுட். ஆண்டாள் விவகாரத்தின் விளைவு என்று அவர்கள் சொல்ல ஆரம்பித்தவுடனே, திசை மாறி விட்டது
      3) ரகுமானின் சகோதரி வைரமுத்துவை குறை சொல்லும் அதே நேரத்தில் சின்மாயின் குடும்பம், தாயார் எதற்கும் துணிந்தவர்கள் என்று கூறுகிறார்.

      வைரமுத்து யோக்கியர் இல்லைதான், அதனாலேயே சினமயி சொல்லும் கூற்று உண்மையாகிவிடாது

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க