புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து இந்திய ஊடகங்களாலும் ஆளும் பாஜக, சங்க பரிவார் குண்டர்களாலும் கொளுத்திப் போடப்பட்ட போர்வெறி, சமூக வலைத்தளங்களிலும் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கொழுந்து விட்டு எரிகிறது. #PulwamaRevenge என்று போர் வெறியை தூண்டி விட்டு வருகின்றன ஊடகங்கள். 

கருப்புப் பணத்தில் குளிக்கும் தேசபக்த சினிமா நடிகர்களும், ஊடகவியலாளர்களும், கிரிக்கெட் வீரர்களும் போர், போர் என்று அலறிக் கொண்டிருக்கின்றனர். இன்று (26-02-2019) அதிகாலையில் இந்திய விமானப்படை, பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து அங்கிருக்கும் ஜெய்ஷ்-ஈ முகமது அமைப்பின் பயிற்சி மையத்தின் மீது தாக்குதல் தொடுத்திருக்கிறது.  இப்போது #Surgicalstrike2 #IndiaStrikeBack ஆகிய ஹேஷ்டேகுகளில் ’தேசபக்தர்கள்’ கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். வான்வெளியில் எல்லை தாண்டி தீவிரவாதிகளின் தளங்களைத் தாக்கியிருப்பது குறித்துப் புளகாங்கிதம் அடைவோர் யாருக்கும், 300 கிலோ வெடிமருந்தோடு இந்தியாவிற்குள் தரை வழியே ஒரு தீவிரவாதத் தாக்குதலை அனுமதித்து அதில் 40க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களைப் பலி கொடுத்து தேசப் பாதுகாப்பில் ஓட்டை விட்ட மோடியின் தோல்வி  தெரிவதில்லை. இவர்களின் போர் ஓலங்களின் இரைச்சலுக்கு மத்தியில் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளிலிருந்தும் அமைதிக்கான கோரிக்கைகளும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன.  

போர் வெறி தூண்டும் சமூக வலைத்தள பதிவுகளுக்கு மத்தியில், பாகிஸ்தானைச் சேர்ந்த செஹிர் மிர்சா என்ற பத்திரிகையாளர், இந்த ஒட்டுமொத்த செயற்கைக் கொதிப்பை மட்டுப்படுத்த ஒரு சிறு முயற்சியை எடுத்துள்ளார்.

கடந்த வாரம் செவ்வாய் கிழமை (19-02-2019) மாலை, “ நான் ஒரு பாகிஸ்தானி. புல்வாமா தீவிரவாத தாக்குதலை கண்டிக்கிறேன். #AntiHateChallenge, #NoToWar” என்று எழுதப்பட்ட பதாகையைக் கையில் வைத்து புகைப்படம் எடுத்து தனது முகநூல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். அதோடு சக பாகிஸ்தானிகளிடமும் தன்னோடு இணையுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தனது நீண்ட முகநூல் பதிவில், “காஷ்மீரில் அப்பாவி உயிர்களைப் பலி கொண்ட மோசமான தாக்குதலால் நாங்கள் தடுமாறிப் போனோம். இத்தகைய சோதனையான சமயங்களில், போருக்கு எதிராகவும் தீவிரவாதத்திற்கு எதிராகவும், விவேகமான குரல்கள் அதிகம் தேவைப்படுகின்றன.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிரபல பாடலாசிரியர் சாஹிர் லுதியன்வியின் கவிதையிலிருந்து “இரத்தம் நம்முடையதாயிருந்தாலும், அவர்களுடையதாயிருந்தாலும், அது மனித இனத்தின் இரத்தம்” என்ற வரியையும் பதிவிட்டுள்ளார். அக்கவிதை மிர்சாவின் அமைதிக்கான வேண்டுகோளைப் போலவே, “போர் என்பதே தன்னளவில் ஒரு பிரச்சினைதான், அது எப்படி பிரச்சினைகளைத் தீர்க்கும்” என்ற வினாவுடன் அக்கவிதை முடியும்.

அதன் பின்னர், இந்தியா மற்றும் பாகிஸ்தானிலிருந்து பலரும் #Antihatechallenge #Notowar ஆகிய ஹேஷ்டேகுகளில் பதிவிட ஆரம்பித்தனர். காஷ்மீரிகளுக்கும், பாகிஸ்தானியர்களுக்கும் எதிரான வெறுப்புப் பதிவுகளைப் போலல்லாமல், அவரது முகநூல் பதிவிற்கான பின்னூட்டங்கள் அனைத்தும் அன்பு, அமைதி, மனிதநேயத்தை ஊக்குவிப்பனவாக இருக்கின்றன.

இதே போன்று பாகிஸ்தானை சேர்ந்த பலரும் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தனர்.

படிக்க:
♦ ராஜஸ்தான் சிறையில் பாகிஸ்தானியர் அடித்துக் கொலை : மனித உரிமை ஆணையம் கண்டனம்
♦ புல்வாமா பதிலடி : இன்னும் எத்தனை வீரர்களை இவர்களின் அரசியலுக்காக இழப்பது ?

இந்தியாவைச் சேர்ந்த நடிகை ஸ்வர பாஸ்கரும் இந்த முன்முயற்சியை வாழ்த்தி வரவேற்றிருக்கிறார்.

வெறுப்புப் பிரச்சாரத்திற்கு எதிராக இது போன்றதொரு முயற்சியை சமூக வலைத்தளங்களில் மிர்சா மட்டும் எடுக்கவில்லை. பாகிஸ்தானைச் சேர்ந்த பலரும் இத்தகைய முயற்சிகளை எடுத்துள்ளனர்.

கடந்த வாரத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த நகைச்சுவை நடிகர், ஜுனைத் அக்ரம், யூ-டியூபில் “கள்ளி கரோ” (Khalli Karao ) என்ற தனது சேனலில், இந்தியர்களிடம் அவர்கள் ஏன் பாகிஸ்தானை சமூக வலைத்தளங்களில் அதிகமாக  மிரட்டுகிறார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இத்தகைய போரால் ஆதாயமடையப் போகிறவர்கள், ஆயுதத் தரகர்களும், அரசாங்கத்தைச் சேர்ந்த ஒரு சில பிரிவினரும்தான்.” என்று கூறியுள்ளார்.


தமிழாக்கம்        : நந்தன்
செய்தி ஆதாரம் : லைவ் வயர் 

4 மறுமொழிகள்

  1. உங்களின் பாக்கிஸ்தான் விசுவாசம் புல்லரிக்கிறது வினவு.

    இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட போது உங்களுக்கு மனது வலிக்கவில்லை ஆனால் பாக்கிஸ்தான் கைதி கொல்லப்பட்டது உங்களுக்கு வலிக்கிறது. இப்போது பாகிஸ்தானிகளை என்னமோ அமைதி விரும்பிகளை போல் காட்ட பொய்யான செய்தி….

    இந்தியாவை விட பாகிஸ்தானையும் சீனாவையும் நேசிக்கும் நீங்கள் பேசாமல் பாகிஸ்தானுக்கு சென்று விடுங்களேன், இந்திய விரோத செயல்களை செய்ய அது தான் சரியான இடம் உங்களுக்கு நிறைய கூட்டாளிகளும் அங்கே இருக்கிறார்கள் பேசாமல் பாக்கிஸ்தான் குடியுரிமை வாங்கி கொள்ளுங்கள்.

    • நீங்கள் முதலில் இந்திய மக்களை உண்மையாக உளப்பூர்வமாக நேசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். பின்னர், அவர்களில் இருந்து மற்ற மக்கள் வேறானவர்கள் அல்ல என்பது நெருடல் ஏதுமற்ற இயல்பான விசயமாகத் தோன்றும்.

  2. சாமானியக் குடும்பங்களில் பிறந்து பிழைப்புத்தேடிச் சென்ற
    அந்த 44 பூதவுடல்களின் மீது தேசபக்தப் போர்வையைப் போர்த்தி மகிமை ஏற்றி
    உண்மையை சவக்குழிக்கு அனுப்புவது உண்மையில் எந்தத் தேவையைப் பூர்த்திசெய்வதற்காக?

  3. ஆம், இங்கே அறிவுக்கு வேலை இல்லை, உணர்ச்சிகள் தூண்டப்பட்டு அறிவுகள் மழுங்கடிக்கப்படுகிறது, ( ஏற்கனவே மாட்டு மூத்திரம் குடித்ததால் அறிவு மழுங்கிவிட்டது என்பது வேறு விஷயம் ).

    1) 1 கிலோ RDX வெடித்தாலே உள் உறுப்புகள் வெளியே வந்துவிடும் என்கிறபோது 350 எப்படி கிலோ வெடித்தும் அடையாம காணமுடிந்தது?

    2) 350கிலோ RDS ஐ எப்படி இந்த எல்லைக்கும் கொண்டு வரமுடிந்தது?

    3) ஒரே நேரத்தில் 78 பஸ்ஸில் பயணம் செய்யும் அளவுக்குத்தான் நமது ராணுவத்தின் கட்டமைப்பு உள்ளதா?

    இதையெல்லாம் கேட்ட ஒரே பதில் ஆன்டி இந்தியன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க