புல்வாமா தாக்குதலுக்கு பிறகு, இந்துத்துவ காவி படை வன்முறை வெறியாட்டத்தில் இறங்கியிருக்கிறது. காஷ்மீரி மாணவர்களை தாக்குவது, காஷ்மீரிகளின் கடைகளை அடித்து நொறுக்குவது, காஷ்மீரிகளுக்கு உணவு இல்லை, தங்க இடம் இல்லை என அறிவிப்புப் பலகை வைப்பது என நாடெங்கிலும் வன்முறை வெறியாட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறது காவி கும்பல்.

கொல்லப்பட்ட சாகிருல்லா .

நீட்சியாக, சிறையில் இருக்கும் காவிகள் அல்லது காவி சிந்தனைகளால் பாதிக்கப்பட்டவர்களும் இப்போது களத்தில் இறங்கியுள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாகிஸ்தானியர் ஒருவர், இந்திய கைதிகளால் அடித்து கொல்லப்பட்டிருக்கிறார்.  புல்வாமா தாக்குதல் காரணமாகவே பாகிஸ்தானியர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக, பாகிஸ்தான் அரசு சொல்கிறது.

ஜெய்ப்பூர் சிறையில் அடித்துக் கொல்லப்பட்ட பாகிஸ்தானியரின் பெயர் சாகிருல்லா என்பதும் அவர் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது. சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரை, நான்கு இந்திய சிறை கைதிகள் அடித்து கொன்றுள்ளனர்.

இந்த செய்தி நாளிதழ்களில் வெளியானதைப் பார்த்து தாமாக முன்வந்து இந்த சம்பவம் குறித்து விளக்கமளிக்க ராஜஸ்தான் அரசுக்கும் சிறைத் துறைக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது தேசிய மனித உரிமைகள் ஆணையம்.

ஜெய்ப்பூர் மத்திய சிறை.

சட்டரீதியிலான கட்டுப்பாட்டில் உள்ள சிறை கைதிகளின் உரிமைகள் மீறப்படக்கூடாது என்றும் இப்படியான தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் மனித உரிமைகள் ஆணையம் நோட்டீசில் வலியுறுத்தியுள்ளது.

சக கைதியை அடித்துக்கொன்ற அஜித், மனோஜ், குல்வேந்திரா, பஜன் மினா ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலையானவர் உடலை நீதிமன்றத்தின் மேற்பார்வையில் உடல்கூராய்வு செய்து பாகிஸ்தான் தூதரகத்தில் ஒப்படைக்கப்படும் என்று போலீசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படிக்க:
புல்வாமா தாக்குதல் அதிர்ச்சிகளை ஏற்படுத்திய நேரத்தில் படப்பிடிப்பில் பிஸியாக இருந்த மோடி !
பிப்ரவரி 23 : கார்ப்பரேட் காவி பாசிசம் – எதிர்த்து நில் ! | மக்கள் அதிகாரம் மாநாடு | அனைவரும் வருக !

மோடி ஆட்சிக்கு வந்தபின், கும்பல் வன்முறை ஒரு தொற்று நோயாக நாட்டின் மூளை முடுக்கெல்லாம் பரவியுள்ளது. மோடி ஆட்சி தொடருமானால், காரணமே இல்லாமல்கூட மக்கள் அடித்து கொல்லப்படக்கூடும். சுயம் இழந்த, சிந்திக்க திராணியற்ற ஸோம்பி கூட்டங்களை உருவாக்கி வருகிறது இந்துத்துவ சித்தாந்தம். இது மனித குலத்துக்கே ஆபத்தானது.


அனிதா
நன்றி: ஸ்க்ரால்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க