பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

டந்த நவம்பர் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.

கேள்வி: இம்முறை உலக கோப்பை போட்டிக்கு வழக்கத்திற்கு மாறான எதிர்பார்ப்பு இருந்தது. “ஜெய் ஸ்ரீ ராம்” கோஷத்தில் தொடங்கி “ஃப்ரீ பாலஸ்தீன்” முழக்கம் வரையில் பல்வேறு விதமான விவாதங்களை சமூகத்தில் ஏற்படுத்தியிருந்தது. பா.ஜ.க. எதிர்பார்த்த எதுவும் இப்போட்டியில் நடக்கவில்லை. இந்த உலக கோப்பை போட்டியை நாம் எப்படி பார்ப்பது?

பொதுவாக கிரிக்கெட் என்பது கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிப்பதற்காக, போலி தேசவெறியை ஊட்டுவதற்காக பயன்படுத்தப்படுகிறது. சுருக்கமாக சொல்வதெனில், சுரண்டலுக்கான ஓர் வடிவமாகவே கிரிக்கெட் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், கோடிக்கணக்கான மக்களுக்கு கிரிக்கெட் ஒரு பொழுதுபோக்காக மாற்றப்பட்டுவிட்டது. கிரிக்கெட்டை தொடர்ச்சியாக உட்கார்ந்து பார்க்க வாய்ப்பில்லாதவர்கள் கூட ஸ்கோரை தெரிந்துகொள்ள முயல்கின்றனர். மக்கள் தங்களின் உணர்வுக்கான வடிகாலாக அதனை பார்க்கின்றனர். அதற்காக நாம் கிரிக்கெட்டை ஆதரிக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஆனால், கிரிக்கெட்டுடன் சேர்ந்து இருக்கக்கூடிய அரசியலையும், சுரண்டலையும் பொதுமக்களுக்கு அம்பலப்படுத்த வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உள்ளது.

இம்முறை கிரிக்கெட் உலகக் கோப்பை 2023, சரிந்துவரும் மோடி பிம்பத்தை தூக்கி நிறுத்துவதற்கான “பேட்ச் வொர்க்” வாய்ப்பாகத்தான் பா.ஜ.க. கும்பலால் பார்க்கப்பட்டது. இதனை, “நீட்டிக்கப்பட்ட தேர்தல் பிரச்சாரம்”, “கிரிக்கெட் ஜி20”, “ரோகித் ஷர்மா, கோலியின் உலக கோப்பை அல்ல, மோடியின் உலக கோப்பை” என தொடக்கத்திலேயே பலரும் விமர்சித்திருந்தனர்.

அக்டோபர் 14 அன்று நடந்த பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான போட்டியை திட்டமிட்டே குஜராத்திலுள்ள “நரேந்திர மோடி மைதானத்தில்” நடத்தி மதவெறியர்கள் மூலமாக “ஜெய் ஸ்ரீ ராம்” எனக் கூவ வைத்தது, பாசிச கும்பல். இதன் தொடர்ச்சியாக பார்ப்பன கடவுளான இராமன், மோடிக்கு உலக கோப்பையை தருவது போன்ற புகைப்படங்கள், மீம்களை சமூக வலைதளங்களில் பரப்பி மதவெறியை தூண்டிவிட்டது.

ஆனால், #SorryPakistan என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆனதும், பாகிஸ்தான் அணி தலைவருக்கு விராத் கோலி கையெழுத்திட்ட ஜெர்சியை தந்ததும், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் போது பாகிஸ்தான் அணிக்கு ஆதரவாக சென்னை ரசிகர்கள் குரலெழுப்பியதும் பாசிச கும்பலின் மதவெறிப் பிரச்சாரத்தை சுக்குநூறாக்கியது.


படிக்க: உலகக் கோப்பை: “வேண்டாம் பிஜேபி” என்று முழங்குவதே தேசபக்தி!


மேலும், இத்தனை நாட்கள் ஓரங்கட்டப்பட்டுவந்த, வேறுவழியின்றி விளையாட அனுமதித்த இஸ்லாமிய வீரரான முகமது ஷமி ஒரே போட்டியில் 7 விக்கெட் எடுத்ததும், பார்ப்பன உயர்சாதியை சாராத விராத் கோலி 3 சதம் அடித்ததும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது; சங்கிக் கூட்டத்தை பித்துக்கொள்ள வைத்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்திய அணி வெற்றி பெற்றால் அதனை மோடியின் வெற்றியாக சித்தரிப்பதற்கு ஏதுவாக கொல்கத்தா, டெல்லி, மும்பை போன்ற பிரபல மைதானங்களை தவிர்த்துவிட்டு, இறுதி போட்டியை சங்கிகள் புடைசூழ நரேந்திர மோடி மைதானத்தில் நடத்தியது, மோடி-ஜெய்ஷா கும்பல்.

இந்திய அணிக்கு உலக கோப்பை பெற்று தந்த தோனி மற்றும் கபில் தேவ் (மல்யுத்த வீராங்கணைகள் போராட்டத்திற்கு ஆதரவு அளித்ததும் முக்கியமான காரணம்) போன்ற முன்னாள் இந்திய அணி தலைவர்களைக் கூட சாதி ஏற்றத்தாழ்வு காரணமாக அழைக்காமல், மோடி, அமித்ஷா, ஜெய்ஷா, ஜக்கி வாசுதேவ், பா.ஜ.க. முதல்வர்கள், பா.ஜ.க. மாநிலத் தலைவர்கள் போன்ற காவி பாசிஸ்டுகளை அழைத்து பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டத்தை போல இறுதிப் போட்டியை நடத்தியது, பாசிச கும்பல்.

ஆனால், உலக கோப்பை போட்டியில் இந்தியாவின் வெற்றியை மோடியின் வெற்றியாக காட்டி, உலக கோப்பையை இந்தியா முழுவதும் ஊர்வலமாக கொண்டு சென்று, சரிந்துப் போன தனது பிம்பத்தை தூக்கி நிறுத்தலாம் எனக் கனவு கண்ட மோடிக் கும்பலின் வாயில் மண்ணை வாரிக் கொட்டியதாக அமைந்தது இறுதிப் போட்டியில் இந்திய அணியின் தோல்வி.

பத்து போட்டிகளிலும் தொடர்ந்து வெற்றிபெற்ற இந்திய அணி இறுதிப்போட்டியில் தோற்றதற்கு ஒரே காரணம் மோடிதான் என ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் வசைபாடினர். அதிர்ஷ்டமற்றவர் என்ற அர்த்தத்தை குறிக்கின்ற #PanautiModi (பனாட்டி மோடி) என்ற ஹேஷ்டாக் இணையத்தில் டிரென்ட் ஆகியது.

“இந்தியா தோற்றதுக்கு ஒரே காரணம் மோடி”, “மோடி மைதானத்தில் போட்டியை நடத்தியதால் தான் இந்தியா தோற்றுவிட்டது”, “ஊரில் எவ்வளவோ நல்ல மைதானங்கள் இருந்தும் வெத்து விளம்பரத்திற்காக ஒழுங்கான பிட்சே இல்லாத மோடி மைதானத்தில் போட்டியை நடத்தி மோசமான போட்டியை பார்க்க வைத்துவிட்டனர்”, “பத்து போட்டியின்போதும் மோடி எங்கு இருந்தாரோ அங்கேயே இறுதி போட்டியின்போதும் இருந்திருக்கலாம்”, “மோடி பார்த்தார், இந்தியா தோற்றுவிட்டது”, “உலகிலேயே நான் தான் பெரிய பீடை என்று நினைத்தேன், பார்த்தால் மைதானத்தில் மோடி உட்கார்ந்து இருக்கிறார்”, “மோடியைவிட ஒரு தரித்திரம் கிடையாது” என்றெல்லாம் மோடியை வறுத்தெடுத்தனர், கிரிக்கெட் ரசிகர்கள்.

முக்கியமாக, பாலஸ்தீன ஆதரவாளர் ஒருவர், “ஃப்ரீ பாலஸ்தீன்” முழக்கம் எழுப்பியவாறு மைதானத்திற்குள் நுழைந்து இந்திய அணி வீரர்களை கட்டியணைத்தது என்பது பெரியதொரு போராட்ட வடிவமாக இன்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அன்று கிரிக்கெட் பார்த்த கோடிக்கணக்கான மக்களுக்கு பாலஸ்தீனத்தை நினைவூட்டியது அந்த நடவடிக்கை. மொத்தத்தில் இந்த உலக கோப்பை பாசிச கும்பலை “டக் அவுட்” ஆக்கியிருக்கிறது.

(புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2023 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க