டந்த ஒரு மாத காலமாக இந்தியாவில் கிரிக்கெட் உலகக் கோப்பை நடைபெற்று வருகின்றது. லீக் ஆட்டங்களில் இந்தியா தொடர்ந்து பத்து ஆட்டங்கள் வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு சென்றது. அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியுடன் வெற்றி பெற்று உலகக் கோப்பை இறுதி சுற்றுக்கு முன்னேறியது. உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டி இந்தியா VS ஆஸ்திரேலியா அணிகளுக்கு மத்தியில் இன்று(19.11.23) அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் பெரும் ஆரவாரத்துடன் நடைபெற்றது.

இறுதிப் போட்டியை காண்பதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலியா துணை பிரதமர் ரிச்சர்ட் மார்லஸ், அசாம், மேகாலயா உள்ளிட்ட 8 மாநில முதலமைச்சர்கள், உச்ச நீதிமன்ற மற்றும் குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் பல கார்ப்பரேட் முதலாளிகள் உள்ளிட்டோர் போட்டியை காண்பதற்காக வருகைப் புரிந்தனர். இது ஏதோ தேசபக்திக்காக நடக்கும் போர் போன்று ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி பாசிசக் கும்பல் தேச வெறியை ஊட்ட முயல்கிறது.

படிக்க : உலகக் கோப்பை கிரிக்கெட் 2023: பி.ஜே.பி – ஆர். எஸ். எஸ் சங்கி கும்பலுக்கான மற்றுமொரு களம்

எனினும் இந்த தேசபக்தி வியாபரத்தில் முதலில் பலிகடாவாகபோவது இந்திய ரசிகர்கள்தான். அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் உள்ள மொத்த இருக்கைகள் ஒரு லட்சத்து 30 ஆயிரம். அதில், அதிகபட்ச டிக்கெட்டின் விலை ரூ.1.87 லட்சம். குறைந்தபட்ச டிக்கெட்டின் விலை ரூ.32,000. இவ்வளவு செலவு செய்துதான் தேச வெறியூட்டும் இப்போட்டியை காண செல்கின்றனர் ரசிகர்கள்.

இதுவன்றி ஹாட் ஸ்டார் நேரலையில் 5.5 கோடி பேர் இறுதி போட்டியை பார்க்கின்றனர். மேலும், BCCI முன்னெடுப்பின் மூலம் இந்தியா முழுவதிலும் உள்ள பெரு நகரங்கள் மற்றும் அதைச் சுற்றி உள்ள நகர மைய இடங்களில் பெரிய திரையிட்டு உலகக்கோப்பை இறுதிப் போட்டியை திரையிட்டனர். இன்று காலை முதலே அகமதாபாத் முழுவதும் நீல கடலின் நாள் சூழ்ந்துள்ளது என நெட்டிசன்கள் புகழாரம் சூட்டுகின்றன. மைதானம் முழுவதும் இந்தியா.. இந்தியா.. இந்தியா… என வெறிக் கூச்சலை இடுகின்றன.

மைதானத்திற்குள் 127 டெசிபெல்(Decibel) அளவு ஒலி வேகத்துற்கு வெறி கூச்சல் ஒலிக்கின்றன. நேரலையிலும் திரையிடல் மூலமாகவும் கோடிக்கணக்கான பேர் காண்கின்றனர். பணி (dew factor) காரணமாகவோ அல்லது மழை காரணமாகவோ போட்டி தடைப்பட்டால் அத்தனை கோடி பேர் மனதிலும் மழை எப்பொழுது முடியும் என்று என்ன ஓட்டங்கள் ஓட தொடங்கும். ”இந்த நேரத்துல தானா மழை சனியன் வந்து தொலையனும்” என்ற வசைச் சொற்களும் ஒலிக்கும்.

சற்று இந்தப் ‘தேசபக்தி’ ஒளியை ஒதுக்கி வைத்துவிட்டு எதார்த்தத்தை பார்த்தோமானால் காசா மீது யூத இனவெறி பிடித்த இஸ்ரேல், குண்டு மழை பொழிகின்றது. பிள்ளைக்கரி தேடி இன்றுவரை சுற்றி திரிந்து கொண்டிருக்கின்றது. கடந்த மே மாதம் பற்றி எரிய தொடங்கிய மணிபூர் இன்று வரை எரிந்து கொண்டு இருக்கின்றது. பிஜேபி பாலியல் பொறுக்கி பிரிஜ் பூஷனால் பாதிக்கப்பட்ட மல்யுத்த வீரர்களுக்கு இன்றுவரை நியாயம் கிடைக்கவில்லை. காஷ்மீர் இன்றுவரை திறந்தவெளி சிறைச்சாலையாக உள்ளது. மேலும், இந்தியாவின் மூளை முடுக்கெங்கும் இந்திய உழைக்கும் மக்கள் சொல்லோனா துயரத்துக்கு ஆட்பட்டு வருகின்றனர்.

படிக்க : உலகக்கோப்பை கால்பந்து: “அர்ஜென்டினா வென்றால் நாட்டின் அவலம் மறைக்கப்படும்!” – மெஸ்ஸி-ன் மருத்துவர்!

காசா மீதானே இனஅழிப்பு போரை கண்டித்த துனிஷ்ய டென்னிஸ் வீராங்கனை ஆன்ஸ் ஜபேர்(Ons Jabeur) கடைசியாக விளையாடியப் போட்டியில் வெற்றி பெற்ற மொத்த தொகையையும் பாலஸ்தீன மக்களுக்கு அளித்தார். அவர் கண்ணீர் மல்க அளித்த பேட்டியில், “நான் போட்டியில் வென்றது மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால், மகிழ்ச்சியாக இருப்பதற்கான தருணம் இதுவல்ல. உண்மையாகவே இந்த உலக சூழ்நிலை மகிழ்ச்சி அடையும் அளவுக்கு இல்லை. பாலஸ்தீன குழந்தைகள் தினந்தோறும் கொன்று குவிக்கப்படுகின்றனர். என் இதயமே நொறுங்குகிறது” என்று தனது வலியை பதிவு செய்தார்.

நடந்து முடிந்த கால்பந்து உலகக் கோப்பை, போட்டியில் அர்ஜென்டினா அணி தோற்க வேண்டும் என்று நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸி-இன் மருத்துவரான டியாகோ ஸ்வார்ஸ்டைய்ன் (Diego Schwarzstein) கூறியுள்ளார். “அர்ஜென்டினா உலக கோப்பையை வென்றால், இந்த இழிவான ஜனரஞ்சக அரசாங்கம் தனது தோல்விகளை மறைக்க அவ்வெற்றியைப் பயன்படுத்திக் கொள்ளும். அனைவரும் கால்பந்து போட்டியின் மீது கவனத்தை செலுத்திக் கொண்டிருக்கும்போது, நாணயத்தின் மதிப்பைக் கூட குறைத்து விடுவார்கள்”. மேலே குறிப்பிட்ட வீராங்கனை மற்றும் மருத்துவர் மனதில் உள்ள ஈரமோ நமது இந்திய விளையாட்டு வீரர்களுக்கு இல்லை.

“பாகிஸ்தான் மற்றும் முஸ்லீம்களை எதிரிகளாக சித்தரித்து, மோடியின் இந்து-தேசியவாத பாரதிய ஜனதா கட்சி (BJP) மூன்றாவது முறையாக பதவியேற்பதற்கு போட்டியை ஒரு தொடக்கப் பாதையாகப் பயன்படுத்துகிறது” என்று வரலாற்றாசிரியர், முகுல் கேசவன் கூறினார். மேலும் அவர், “உலகக் கோப்பை ஒரு கிரிக்கெட் G20 ஆகும்” என்றார்.

அரசியல் அரங்கில், ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி கும்பல் தோல்வி முகத்தில் சென்று கொண்டு இருக்கும் தருணத்தில், ஜி 20 மாநாடு தொடங்கி, சந்திராயன் – 3 ஏவுகணை நிலவின் தென் தூரத்தில் இறங்கியது, 33% பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா போன்ற வரிசையில் தற்போது உலகக்கோப்பை கிரிக்கேட்டில் இந்திய அணி வெற்றி பெற்றால் தேசவெறியூட்டி சரிந்துவரும் பிம்பத்தை தூக்கி நிறுத்துவதற்காக பாசிச கும்பலின் துருப்புச் சீட்டே ஆகும்.

படிக்க : உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா பாகிஸ்தான் போட்டியும் திட்டமிட்ட தேசவெறியும்

தேசம் என்பது அங்கு வாழும் மக்களை குறிப்பதாகும். தேசபக்தி என்பது அந்த மக்களது வாழ்க்கை நலனுக்காக செய்யும் நடவடிக்கைகளே. தேசபக்தியோடு தொடர்புடையவை. மணிப்பூர் மக்கள் மீது தொடுக்கப்படும் இன அழிப்பு, காஷ்மீரில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது, இந்தியா முழுவதும் முசுலீம் மக்கள் நரவேட்டை ஆடப்படுவது, தமிழக மீனவர்கள் கடலில் கொல்லப்படுவது, விவசாயிகள் தற்கொலை இவற்றிற்கெதிராக குரல்கொடுப்பதும் போராடுவதுமே தேசபக்தி.

இன்று அகமதாபாத் மைதானத்தில் போட்டி நடந்து கொண்டிருக்கும் போது ஆஸ்திரேலிய இளைஞன் ஜான் சுதந்திர பாலஸ்தீனம் “Free Palestine” என்ற வாசகம் பொறிக்கப்பட்ட ஆடை அணிந்து கிரிக்கெட் மைதானத்திற்குள் விராட் கோலியிடம் ஓடி சென்று கைகுலுக்கினார். அதே மைதானத்தில் கூடியிருந்த இந்திய ரசிகர்கள் 127 டெசிபெல்(Decibel) அளவு “Free Palestine” என்றோ இந்திய மக்கள் மீது ஏவப்படும் பாசிச தாக்குதலுக்கு எதிராக “NO BJP” என்றோ போர்க் குரல் உயர்த்தியிருந்தால் நாம் தேசபக்தி மிக்க இந்தியர்கள் என்று கூறலாம். அதை விட்டு, விராட் கோலி அடிக்கும் கவர் ட்ரைவ்-கும் (cover drive) பும்ரா போடும் யார்க்கர் பந்துக்கும் பாப்கான் (popcorn) தின்றுக் கொண்டே சிலாகித்தால் அது தேசபக்தியா? இல்லை இது தேசத்துரோகம்!

இருள்மதி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க