உலகக் கோப்பை கிரிக்கெட் 2023: பி.ஜே.பி – ஆர். எஸ். எஸ் சங்கி கும்பலுக்கான மற்றுமொரு களம்

மற்ற நாடுகளுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடும் போதும் இயல்பாக பார்த்துவிட்டு கடந்து செல்லும் ரசிகர்களை இந்தியா – பாகிஸ்தான் போட்டியின்போது மட்டும் இயல்பாகக் கடந்து செல்ல விடாமல் கார்ப்பரேட் ஊடங்களும் பி.ஜே.பி – ஆர்.எஸ்.எஸ் கும்பலும் திட்டமிட்டே செயல்படுகின்றன.

பெரிய பெரிய கார்ப்பரேட் முதலாளிகள் லாபம் சாம்பாதித்து கொழுப்பதற்காக நடத்தப்படும் கிரிக்கெட் விளையாட்டு போட்டியை பாசிஸ்டுகள் தங்களின் மத வெறியை பரப்புவதற்கான ஒரு களமாக பயன்படுத்திக் கொள்கின்றனர்.

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஐ.சி.சி ஒரு நாள் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தொடர்ச்சியாக நடத்தி வருகிறது. சுழற்சிமுறையில் ஒவ்வொரு நாட்டின் தலைமையிலும் நடத்தப்படும் இந்த கிரிக்கெட் போட்டி உலகளவில் அதிகப்படியான ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ளது. சூதாட்டம், கார்ப்பரேட் கம்பெனிகளின் கலர்கலரான விளம்பரங்கள், நேரடி ஒளிபரப்பு, 30-க்கும் மேற்ப்பட்ட கேமராக்கள், ரசிகர்களை பரபரப்பாக வைத்துக் கொள்ள தொகுப்பாளர்கள், எல்லா டிவி விற்பனை கடைகளிலும் கிரிக்கெட் ஒளிபரப்பு, நாட்டின் கொடிகள் பொறித்த ஆடைகள், நாட்டுப் பற்று, தேச பெருமை, கிரிக்கெட் வீரர்களின் டிவி விளம்பரங்கள் என ஊதி பெருக்கப்பட்டு கோலாகலமாக கொண்டாடப்படும் இந்த ஒரு நாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி கார்ப்பரேட் முதலாளிகளின் லாப வெறிக்கு தீனி போடுவதற்காவே உருவாக்கப்பட்ட ஒன்று.

2023-ஆம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5 தொடங்கி நவம்பர் 19 வரை இந்தியாவில் 8 இடங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 10 அணிகள் பங்குபெறும் இந்த ஒரு நாள் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் மொத்தம் 48 ஆட்டங்கள் என ஒவ்வொரு அணியும் தலா 9 ஆட்டங்கள் விளையாட வேண்டும் அதிக புள்ளிகளை பெறும் அணி அரை இறுதிக்கு முன்னேறும். அந்த வகையில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் உலககோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 14 அன்று குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. வழக்கம் போல கார்ப்பரேட் லாபத்திற்காக தேசப் பெருமை என ஊதிபெருக்கப்பட்ட இந்த போட்டி, இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே தேச வெறியோடு பலத்த எதிர்பார்ப்பையும் தூண்டும் வகையில் அமைந்திருந்தது. இந்தியா – பாகிஸ்தான் போட்டி தொடங்கிய உடனேயே முதல் ஓவரிலேயே 1 கோடிற்கும் அதிகமான ரசிகர்கள் இணையவழியில் மட்டும் பார்க்க தொடங்கினர். பரபரப்பும் ஆர்வமும் கொண்ட வகையில் உருவாக்கப்பட்ட இந்த கிரிக்கெட் போட்டியில் தேச வெறியும் இணைந்திருந்தது.


படிக்க: உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா பாகிஸ்தான் போட்டியும் திட்டமிட்ட தேசவெறியும்


பாகிஸ்தான் அணி விளையாடிக் கொண்டிருக்கும் போதே சங்கி கும்பல் பாகிஸ்தானுக்கு எதிராக ஜெய் ஸ்ரீராம் என முழக்கம் இடதொடங்கினர். அதற்கு ஏற்றவாறு ரசிகர்களைத் தூண்டும் வகையில் ஆதிபுருஷ் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள “ராம் சீதா ராம்” என்ற பாடல் மைதானத்தில் ஒலிக்கப்பட்டது. பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் வீரர் முகமது ரிஸ்வான் அவுட் ஆகிவிட்டு வெளியே செல்லும் போது அவரை நோக்கி ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஸ்ரீராம் என முழக்கம் இட்ட வண்ணமே தங்களின் தேச வெறியையும் இஸ்லாமிய வெறுப்பையும் காட்ட தொடங்கினர். தான் நினைத்தது எல்லம் நடந்துக் கொண்டிருக்கிறது என எல்லாவற்றையும் மைதானத்தின் மேல் அமர்ந்து கொண்டு ரசித்து பார்த்துக் கொண்டிருந்தார் அமிஷ்தா.

மற்ற நாடுகளுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடும் போதும் இயல்பாக பார்த்துவிட்டு கடந்து செல்லும் ரசிகர்களை இந்தியா – பாகிஸ்தான் போட்டியின்போது மட்டும் இயல்பாகக் கடந்து செல்ல விடாமல், இரண்டு நாட்டிற்கும் இடையே நடக்கும் போர் போல தேச வெறியைத் தூண்டிவிடும் வகையில் கார்ப்பரேட் ஊடங்களும் பி.ஜே.பி – ஆர்.எஸ்.எஸ் கும்பலும் திட்டமிட்டே செயல்படுகின்றன. இந்தியா – பாகிஸ்தான் போட்டி என்றால் இந்தியா என்ற தேசப்பற்றும் சென்னை – மும்பை ஐ.பி.எல் போட்டி என்றால் தமிழ் நாடு என்ற வெறியையும் உருவாக்கி கார்ப்பரேட் முதலாளிகளின் லாபத்திற்காக அதிகப்படியான மக்கள் கிரிக்கெட் பக்கம் இழுக்கப்படுகிறார்கள்.

இதுவரை இந்தியா பாகிஸ்தான் இடையே ஒருநாள் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி எட்டு முறை நடந்துள்ளது. அதில் எட்டு முறையும் இந்திய அணி பாகிஸ்தான் அணியைத் தோற்கடித்துள்ளது. ஆளும் வர்க்கம் இவற்றையெல்லாம் தேசப் பெருமை என்று கூறி, தேச வெறியை ஊட்டுவதன் மூலம் வேலையின்மை, பொருட்களின் விலைவாசி உயர்வு, கல்வி தனியார்மயம், நீட் தற்கொலைகள், மதக் கலவரங்கள், பெண்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறைகள் என எதைப் பற்றியும் மக்களைச் சிந்திக்க விடாமல் செய்து வருகிறது.

இஸ்லாமியர்களை இந்தியாவின் இரண்டாம்தர குடிமக்களாக மாற்றுவதற்கு லவ் ஜிகாத், லேண்ட் ஜிகாத், இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சு, மதக் கலவரங்கள் என இஸ்லாமிய மக்களுக்கு எதிரான வேலைகளை தொடர்ச்சியாக ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி சங்கி கும்பல் செய்துவருகிறது. அதன் ஒரு வெளிப்பாடாகத்தான் கிரிக்கெட் போட்டியில் தங்களின் மத வெறியை சங்கி கும்பல் காட்டியுள்ளனர். இப்படி தொடர்ச்சியாக சிறுபான்மையினர் உள்ளிட்ட இந்திய உழைக்கும் மக்களுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிச கும்பலைத் தடை செய்ய வேண்டும்.


கதிர்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க