இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி: “ஜெய் ஶ்ரீ ராம்” கோஷம் உணர்த்துவது என்ன?

இப்போது அகமதாபாத் அரங்கத்தில் நடைபெற்ற போட்டியின்‌ பொழுது மதவாத கோஷம் எழுப்பப்பட்டது கூட தன்னிச்சையான மந்தை மனநிலையில் இருந்து அல்ல. இந்த நிகழ்வு வெகுவாக நிறுவன ரீதியாக கட்டமைக்கப்பட்ட ஒன்று.

டந்த அக்டோபர் 14-ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில், பாகிஸ்தான் அணியின் வீரர்களை நோக்கி  “ஜெய் ஸ்ரீராம்” என்ற மதவாத கோஷம் எழுப்பட்டது. “இது இந்த விளையாட்டின் கண்ணியத்தை சிதைக்கிறது,  இது ஸ்போர்ட்பேர்சன்ஷிப் (Sportspersonship) என்ற விழுமியத்திற்கு எதிரானது” ,  ” சர்வதேச அளவில் நாட்டின் மாண்பை சிதைக்கிறது” என்று இதனை  கண்டித்த கருத்து தெரிவித்தனர்.  “ஜெய் ஶ்ரீ ராம்” கோஷம் எழுப்பப்பட்டதற்கு எதிராக ட்விட்டரில் #sorry pakistan என்ற ஹாஷ்டெக் டிரெண்ட் செய்யப்பட்டது. பெரும்பாலானோர் இந்த காட்டுமிராண்டி செயலைக் கண்டித்து வருகின்றனர்.

இந்நேரத்தில், ஒரு விளையாட்டு அரங்கத்தில் “ஜெய் ஶ்ரீ ராம்” என்ற மதவாத கோஷம் எழுப்பப்பட்ட பிண்ணனியை நாம் பரீசிலித்து பார்க்க வேண்டியுள்ளது. விளையாட்டு அரங்கத்தில் “மதவாத கோஷம்” எழுப்பப்பட்டது என்பது இந்த நாட்டில் மாதவாத பாசிசம் ஆட்சி செய்கிறது, அது நாட்டின் எல்லா நிறுவனங்களையும் விழுங்கிக்கொண்டு வருவதன் வெளிப்பாடு மட்டுமே. வெளிப்பாட்டு வடிவம் மட்டுமே பிரச்சினையின் முழுப்பரிமாணம் அல்ல. வைரஸ் தொற்று ஏற்பாட்டால் உயர்ந்த வெப்பநிலையில் காய்ச்சல் அடிப்பது ஒரு அறிகுறி மட்டுமே. ஆனால் வைரஸ் தொற்றின் பிரதான இயல்பு உடலின் முக்கிய உறுப்புகளை தாக்குவதுதான். அதுபோல்தான், விளையாட்டு அரங்கத்தில் மதவாத கோஷம் எழுப்பப்பட்டது வெறும் வெளிப்பாடுதான். உண்மையில், இந்த நிகழ்வு நமக்கு சொல்வது என்னவென்றால், ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. என்ற பாசிச கும்பல் இந்த நாட்டு மக்களின் அனைத்து ஜனநாயக வெளிகளையும் நெரித்து வருகிறது என்பதுதான்.

மதவாதம் நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களிலும், அனைத்து மக்கள் பிரிவினர்களிடமும் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. கும்பலால் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதற்காகவே அவர்கள் பல்வேறு நிறுவன கட்டமைப்புகளை உருவாக்கி வளர்த்துள்ளார்கள்.


படிக்க: ஐ.பி.எல் 2023: கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்திற்கு!


கும்பல் வன்கொலை, பசுக்குண்டர் படை, லவ் ஜிகாத் குண்டர் படை, சாதிய வன்கொலை போன்ற வெவ்வேறு வடிவங்களில் மாதவாதம் அரங்கேற்றப்படுகிறது. மேலும், இவையெல்லாம் குறிப்பிட்ட நோக்கத்தை சாதித்துக் கொள்ள நிறுவனமயப்படுத்தப்பட்ட வன்முறையாக (Organized Violence) நிகழ்த்தப்படுகிறது.

இரண்டு மதக் குழுவினருக்கு இடையில் நிகழும் சிறு தகராறுகளுக்கும், ஒரு மதவாத சித்தாந்தம் கொண்ட நிறுவனத்தால் மேலிருந்து ஒழுங்கமைக்கப்பட்டு நிகழ்த்தப்படும் கலவரங்களுக்கும் மிகப் பெரிய வேறுபாடு உண்டு. தெளிவாகச் சொன்னால், இந்தியா முழுவதும் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு இடங்களில் வழிபாட்டுத் தலங்கள் விசயத்தில் தகராறுகள் நடந்துள்ளது. ஆனால் அவை காலப்போக்கில் சுவடே தெரியாமல் மறைத்து போயிவிட்ட சிறு பிரச்சினைகள்.

ஆனால் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. என்ற பாசிச அமைப்பால் திட்டமிட்டு நடத்தப்பட்ட பாபர் மசூதி இடிப்பு என்பது அரசியல் ஆதாயத்திற்காக மேலிருந்து கட்டமைக்கப்பட்ட கலவரம். சமீபத்திய மணிப்பூர் கலவரமும் அதேபோல் கட்டமைக்கப்பட்ட கலவரம்தான். இந்த கலவரங்கள் எல்லாம் நிறுவன ரீதியான ஒழுங்கமைக்கப்பட்டவைகள். அதனால்தான் இதையெல்லாம் நிறுவனமயப்படுத்தப்பட்ட வன்முறை என்று சமூகவியலாளர்கள் சொல்கிறார்கள்.

இந்தியா போன்ற மிகப்பெரிய மக்கள்தொகை மற்றும் சந்தையை உடைய நாட்டின் அரசியல் அதிகாரத்தை இதுபோன்ற கலவரங்களால் கைப்பற்றவும் தக்கவைத்துக்கொள்ளவும் முடியும் என்றால் இங்கே நிறுவனமயப்படுத்தப்பட்ட கலவரங்களுக்கு எத்தகைய பரிமாணம் இருக்கிறது என்பதை நாம் பரிசீலித்து பார்க்க வேண்டும்.

நிறுவனமயப்படுத்தப்பட்ட வன்முறைகள் மூலம் முஸ்லிம்கள் போன்ற சிறுபான்மையினரை எப்போதும் அச்சத்திலே வைத்திருக்க முடியும். பெரும் கும்பல் ஒன்று சூழ்ந்து கொண்டு “ஜெய் ஸ்ரீராம்” என்று கோஷமிடுவது, பாகிஸ்தான் வீரர்களை மட்டுமல்ல இந்திய அணியில் உள்ள சக வீரர்களான முகமது சிராஜ், முகமது ஷமி போன்றவர்களுக்கு அச்சத்தை உண்டாக்கியிருக்கும்.


படிக்க: சங்கிகள் அருளிய கிரிக்கெட் தேச பக்தியில் கல்லா கட்டும் சீன நிறுவனம் !


இப்போது அகமதாபாத் அரங்கத்தில் நடைபெற்ற போட்டியின்‌ பொழுது மதவாத கோஷம் எழுப்பப்பட்டது கூட தன்னிச்சையான மந்தை மனநிலையில் இருந்து அல்ல. இந்த நிகழ்வு வெகுவாக நிறுவன ரீதியாக கட்டமைக்கப்பட்ட ஒன்று. உலகக்கோப்பை போட்டிகளுக்கான  அட்டவணை தயாரிக்கும் பொழுது இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை வலிந்து தேதி மாற்றம் செய்து அகமதாபாத் அரங்கத்தில் வைத்தது, தொடக்கப் போட்டிக்கு விழா நடத்தாமல்  இந்தியா-பாகிஸ்தான் அணிகள் ஆடும் 12-ஆவது லீக் போட்டியில் விழா ஏற்பாடு செய்தது, பாகிஸ்தான் பத்திரிகையாளர்களுக்கு கடைசி வரை விசா வழங்காமல் இழுத்தடித்தது, பாகிஸ்தான் ரசிகர்களுக்கு விசா கிடைக்காமல் செய்யப்பட்டது போன்ற ஏராளமான ஏற்பாடுகளை பாசிச பா.ஜ.க. அதன் நிறுவன பலத்தை பயன்படுத்திதான் செய்துள்ளது.

எனவே, இந்த பாசிச பேயாட்சிக்கு எதிராக குறைந்தபட்ச மாற்றுத் திட்டத்தின் அடிப்படையில் அமைந்த ஒரு கூட்டமைப்பில் நாம் அனைவரும் ஐக்கியப்பட வேண்டியுள்ளது. ஆர்.எஸ்.எஸ். -பா.ஜ.க. கும்பலின் பாசிச தாக்குதல்கள் அரசியல், சமூகம், கலாச்சாரம், குடும்பம் என அனைத்து அரங்கங்களிலும் அதிகரித்து வருகிறது. எல்லா மட்டங்களிலும் சீரழிவுகளும், அடக்குமுறைகளும் அதிகரித்து வருகிறது. அதனை முறியடிக்க நிறுவன அமைப்பு ரீதியாக திரள்வோம்.


சீனிச்சாமி



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க