ஐ.பி.எல் 2023: கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்திற்கு!

2021-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரின்போது இனவெறிக்கு எதிராக ‘பிளாக் லிவ்ஸ் மேட்டர்’ என்று மண்டியிட்டு முழங்கிய இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், இந்தியாவில் நடக்கும் சாதிவெறி குற்றங்களுக்கு எதிராக வாயைத் திறந்ததே இல்லை.

0

மே 28, 2023 அன்று நாடே விழாக்கோலம் பூண்டதாக ஒரு பிம்பம் ஏற்படுத்தப்பட்டது. ஒருபுறம், ‘தேச பக்தர்’களும் சங்கிகளும் ‘வீர’ சாவர்க்கர் பிறந்தநாளை முன்னிட்டு புதிய பாராளுமன்ற கட்டிடம் திறக்கப்பட இருந்ததால் ஆரவாரமாகவும் உற்சாகமாகவும் இருந்தனர். இன்னொருபுறம், கிரிக்கெட் ரசிகர்கள் ஐ.பி.எல் ஜுரத்தால் பாதிக்கப்பட்டிருந்தனர்; இறுதிப் போட்டிக்காகப் பேரார்வத்துடனும் உற்சாகத்துடனும் காத்திருந்தனர்.

அதே நாளில், டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழா நடைபெறும் இடத்தை நோக்கி நீதி கேட்டு மல்யுத்த வீரர்கள் அமைதிப் பேரணி செல்வதாக அறிவித்திருந்தனர். பாலியல் துன்புறுத்தல் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்த இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மல்யுத்த வீரர்கள் பேரணி நடத்த இருந்தனர். பேரணியைத் துவங்க முயன்றபோது தரதரவென இழுத்துச் செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

செங்கோல் ஏந்தி முடி சூட்டிக்கொண்ட கொடுங்கோல் ’மன்னர்’ மோடியின் இந்த பாசிச நடவடிக்கை சங்கிகளின் உற்சாகத்தை மேலும் அதிகரித்திருக்கும். தங்களது மன்னரின் அதிகாரத் திமிரை எண்ணி களியுவகை கொண்டிருப்பார்கள். பாசிச சங்கிகளின் மனநிலை அப்படித்தானே இருக்கும்.

ஆனால் நமக்கு வேதனை அளிப்பது என்னவென்றால், ஐ.பி.எல் உற்சாக பெருவெள்ளத்தில் மூழ்கியிருந்த நமது இளைஞர்களுக்கும் கிரிக்கெட் ரசிகர்களின் கண்களுக்கும் மல்யுத்த வீரர்கள் மீதான பாசிச மோடி அரசின் அடக்குமுறை புலப்படவில்லை என்பதே.


படிக்க: ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐயர் ஆத்து அலப்பறைகள் !


போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டும் கைது செய்யப்படாமல் சுதந்திரமாக புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு உள்ளிட்ட அரசு விழாக்களில் பங்கேற்று வருகிறார் பிரிஜ் பூஷண் சரண் சிங். ஆனால், பாசிஸ்டுகளை எதிர்த்து நீதி கேட்ட குற்றத்திற்காக மல்யுத்த வீரர்கள்மீது ஏழு பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. இதனைக் கண்டும் நம் இளைஞர்களுக்குக் கோபம் வரவில்லை.

ஆனால், மே 28 அன்று நமது இளைஞர்கள் கடுஞ்சினம் கொண்டனர். அவர்களுக்கு யார் மீது கோபம் வந்தது தெரியுமா? அகமதாபாத்தில் மே 28 அன்று மாலை முதல் இரவு வரை பொழிந்து வெப்பத்தைத் தணித்த மழை மீது கடுங்கோபம் ஏற்பட்டது; ஐ‌.பி.எல் இறுதிப்போட்டிக்குத் தடையை ஏற்படுத்தி விட்டதென்பதால்.

ஆனால், நாம் உண்மையில் எதைக்கொண்டு கோபம் கொள்ள வேண்டும்?

நாடாளுமன்றத்தில் விவாதங்களையே விரும்பாத, மாற்றுக்கருத்துகளை எட்டிக்காயாகப் பார்க்கும் பாசிஸ்டுகள், இந்து ராஷ்டிர முடியாட்சியை நிறுவும் பொருட்டு, பார்ப்பனிய சடங்குகளைப் பின்பற்றி சாவர்க்கர் பிறந்த நாளில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைத் திறக்கவிருந்ததைக் கண்டு கோபப்பட்டிருக்க வேண்டும்.

‘மதச்சார்பற்ற’ இந்தியாவின் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் பார்ப்பனர்கள் வளர்த்த ஹோமப் புகை, வெளியே போராடிக் கொண்டிருந்த மல்யுத்த வீரர்களை நம் மக்களின் கண்களில் இருந்து மறைத்து விட்டதே! அதைக் கண்டு நமது இளைஞர்கள் கோபப்பட்டிருக்க வேண்டும்.

வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறக் கோரி நமது விவசாயிகள் போராடிய போது, வெளிநாடுகளில் இருந்து பல ஜனநாயக சக்திகள் ஆதரவுக் குரல் எழுப்பினர். அப்போது மோடியின் பிம்பம் உடைபடுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாத இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்கள் பலர் “இது எங்கள் நாட்டுப் பிரச்சனை. இதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்று ஒருமித்த குரலில் முழங்கினர். சச்சின், ரவி சாஸ்திரி, கோஹ்லி, ரோகித் சர்மா, யுவராஜ் சிங், ரெய்னா, ஆர் பி சிங், கௌதம் கம்பீர் எனக் குரல் எழுப்பியவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. மோடியைக் காப்பாற்றக் குரல் கொடுத்த இந்த கிரிக்கெட் வீரர்கள், இந்திய அணிக்காகப் பதக்கம் பெற்றுத் தந்த மல்யுத்த வீரர்களுக்குக் குரல் கொடுக்கவில்லை. (இர்ஃபான் பதான், கபில் தேவ், ஹர்பஜன் சிங் உள்ளிட்ட சிலர் மட்டும் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்). இதைக் கண்டு நமது கிரிக்கெட் ரசிகர்களுக்குக் கோபம் வரவில்லை.


படிக்க: ஐ.பி.எல்: முதலாளிகளின் மங்காத்தா!


2021-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரின்போது இனவெறிக்கு எதிராக ‘பிளாக் லிவ்ஸ் மேட்டர்’ என்று மண்டியிட்டு முழங்கிய இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், இந்தியாவில் நடக்கும் சாதிவெறி குற்றங்களுக்கு எதிராக வாயைத் திறந்ததே இல்லை. இதனைக் கண்டும் நமது கிரிக்கெட் ரசிகர்களுக்குக் கோபம் வந்ததில்லை.

கிரிக்கெட் மோகம் பாசிச மோடி அரசின் அடக்குமுறைகள், மணிப்பூர் வன்முறை, மல்யுத்த வீரர்கள் போராட்டம் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளிலிருந்து பெரும்பான்மையினரின் கவனத்தை திசை திருப்பிவிட்டது. அதிலும் குறிப்பாக, வழக்கமான கிரிக்கெட் ரசிகர்களைக் கடந்து புதிதாகப் பலர் இவ்வாண்டில் ஐ.பி.எல் போதைக்கு அடிமையாகி உள்ளனர். பாசிசம் அரங்கேறிவரும் இந்த சூழலில், நமது இளைஞர்கள் கவனம் செலுத்த வேண்டியது ஐ.பி.எல் கிரிக்கெட்டில் அல்ல.

மாறாக நாம் காவி பயங்கரவாதம் மீது, பாசிஸ்ட் மோடி அரசின் கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகள் மீது கவனம் செலுத்த வேண்டும். நாம் கோபம் கொள்ள வேண்டியது அவற்றின் மீது தான்; ஐ.பி.எல் போட்டியின்போது குறுக்கீடு செய்த மழையின் மீதல்ல.

முக்கிய பிரச்சினைகளின் போது பாசிஸ்டுகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் கிரிக்கெட் வீரர்களையும், வாயைப் பொத்திக்கொண்டு நடுநிலை காக்கும் கிரிக்கெட் வீரர்களையும் ரசிகர்கள் நிராகரிக்க வேண்டும். இளைஞர்கள் தமது சமூகப் பொறுப்பை உணர்ந்து கொண்டு கிரிக்கெட் நட்சத்திரங்களுக்கும் அவர்களது பொறுப்பை உணர்த்த வேண்டும்.


பொம்மி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க