உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா பாகிஸ்தான் போட்டியும் திட்டமிட்ட தேசவெறியும்

ஒருவேளை இந்தப் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருந்தால் அந்த மைதானத்திலேயே கலவரம் வெடித்திருக்கலாம். அதற்கும் சங்கி கும்பல் தயாராகவே இருந்திருக்கிறது என்பதுதான் பாகிஸ்தான் வீரர்களைப் பார்த்து சங்கிகள் ஜெய்ஸ்ரீராம் கோசமிட்டது நமக்கு உணர்த்துகிறது.

2023-கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. பொதுவாக கிரிக்கெட், கால்பந்து உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் மூலம் பன்னாட்டு கார்ப்பரேட் கம்பனிகள் கொள்ளை லாபம் ஈட்டுவதும், தேச வெறியைக் கிளப்பிவிட்டு அந்தந்த நாட்டு ஆளும் வர்க்கங்கள் தங்களை நோக்கி எழும் மக்களின் எதிர்ப்பை, குறிப்பாக இளைஞர்களின் எதிர்ப்பை மழுக்கடிக்கச் செய்வதும் வழக்கமான ஒன்று.

ஆனால் தற்போது இந்தியாவில் நடந்துவரும் உலக கோப்பை மூலம் மோடி கும்பல் கிளப்பிவரும் தேசவெறியும், மதவெறியும் புதிய வகை உச்சத்தை அடைந்துள்ளது. சரிந்துவரும் மோடியின் பிம்பத்தை தூக்கி நிறுத்த G20 மாநாடு, சந்திராயன் உள்ளிட்ட விஷயங்களில் தேச வெறியைக் கிளப்பிவந்த சங்கிகும்பல், இந்த உலகக்கோப்பைத் தொடரையும் அதற்காக பயன்படுத்தி வருகிறது.

மேலும், இதர கிரிக்கெட் விளையாடும் நாடுகளை விட இந்தியாவில்தான் கிரிக்கெட் மோகத்தினால் மக்களும் பெரும்பகுதி இளைஞர்களும் மூழ்கடிக்கப்பட்டுள்ளனர். கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபவெறிக்காக, சினிமா போதையை போல் கிரிக்கெட் போதையிலும் இளைஞர்கள் திட்டமிட்டே மூழ்கடிக்கப்படுகின்றனர். இளைஞர்கள் தங்களுக்கும் கோடானகோடி உழைக்கும் மக்களுக்கும் இந்த ஆளும் வர்க்கம் இழைக்கும் துயரங்களைக் காண முடியாதவாறு திரையிடப்படுகின்றனர்.


படிக்க: இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி: “ஜெய் ஶ்ரீ ராம்” கோஷம் உணர்த்துவது என்ன?


இன்று நம் நாட்டில் நடப்பதோ ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி சங்கி‌ கும்பலின் பாசிச ஆட்சி. மோடி கும்பலின் ஆட்சியின் கீழ் மக்கள் சொல்லொனாத் துயரங்களில் ஆழ்த்தப்பட்டுள்ளனர்.

விலைவாசி உயர்வு, பெட்ரோல் டீசல் மீதான வரிக்கொள்ளை, வேலையின்மை, GST வரிக்கொள்ளை என மோடி கும்பலால் உழைக்கும் மக்கள் மீது தொடுக்கப்பட்ட பல்வேறு பொருளாதார பயங்கரவாத தாக்குதல்களால் மக்கள் மத்தியில் இன்று பாசிச கும்பல் அம்பலப்பட்டுப் போயுள்ளது. மோடி ’வளர்ச்சியின் நாயகன்’ என்று கட்டமைக்கப்பட்ட பிம்பம் எல்லாம் உடைந்துவிட்டது.

இந்நிலையில் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு தனது சரிந்துப்போன பிம்பத்தை தூக்கி நிறுத்த மோடிக்கும்பல் முயற்சித்து வருகிறது. அதற்கு மோடி கும்பலிடம் இருக்கும் முக்கியமான ஆயுதங்களுள் ஒன்று தேசவெறியைக் கிளப்பிவிடுவதாகும்.

அதனால்தான், அக்டோபர் 14-ஆம் தேதியன்று இந்தியா-பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டி திட்டமிட்டே அகமதாபாத்தில் நரேந்திர மோடி மைதானத்தில் நடத்தப்பட்டுள்ளது. குஜராத் என்பது இந்து ராஷ்டிரத்தின் சோதனைச் சாலை என்பது அனைவரும் அறிந்ததே. அப்படிப்பட்ட இந்து மதவெறிக் கூடாரத்தில் இப்போட்டியை நடத்தி ஏற்கனவே அங்கே விதைக்கப்பட்டிருக்கும் பாகிஸ்தான் எதிர்ப்பு, இஸ்லாமிய எதிர்ப்பு மூலம் இந்து மதவெறியையும் தேச வெறியையும் சங்கி கும்பல் ஒருங்கே கிளப்பி விட்டுள்ளது.

ஒருவேளை இந்தப் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருந்தால் அந்த மைதானத்திலேயே கலவரம் வெடித்திருக்கலாம். அதற்கும் சங்கி கும்பல் தயாராகவே இருந்திருக்கிறது என்பதுதான் பாகிஸ்தான் வீரர்களைப் பார்த்து சங்கிகள் ஜெய்ஸ்ரீராம் கோசமிட்டது நமக்கு உணர்த்துகிறது. இந்த மதவெறி காட்டுமிராண்டித் தனத்தை பல்வேறு தரப்பினரும் கண்டித்துள்ளனர். சங்கிகளின் இந்த ஈத்தர செயலுக்கு எதிராக Sorry Pakistan என்கிற ஹாஷ்டேக் டிவிட்டரில் ட்ரெண்டானது.

2019-ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலைப் போல், 2024 தேர்தலுக்கு முன் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்தி சங்கி கும்பல் திட்டமிட்டு  தேச வெறியைக் கிளப்பி விட முயன்று வருகிறது. அதற்கு மக்களும் இளைஞர்களும் பலியாகாமல் தடுக்க வேண்டிய நிலையில் நாம் தற்போது உள்ளோம். இந்த இந்து மதவெறி பாசிஸ்ட்டுகளை அம்பலப்படுத்தி இவர்களுக்கான மக்கள் செல்வாக்கை ஒழித்துக் கட்டுவதன் மூலம் தான் இவர்களை வீழ்த்த முடியும். “வேண்டாம் பிஜேபி வேண்டும் ஜனநாயகம்” என்று தேசமெங்கும் முழங்குவோம்.


ஓவியன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube1 மறுமொழி

  1. அதேபோல், அக்டோபர் 20 அன்று ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது, பாகிஸ்தான் அணியின் ரசிகர் ஒருவர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக ”பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என்று முழக்கங்களை எழுப்பி வந்தார். இதனை பார்த்த போலீசு, ”மைதானத்தில் இந்தியாவுக்கு ஆதரவான முழக்கங்கள் மட்டும் தான் எழுப்ப வேண்டும், பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது” என்று கூறினார். இதில், அதிர்ச்சியடைந்த அந்த ரசிகர், ”பாகிஸ்தான் அணியும் ஆஸ்திரேலியா அணியும் மோதும் போது நான் பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பாமல் இந்தியாவுக்கு ஆதரவான முழக்கங்களையா எழுப்ப முடியும்?” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அந்த போலீசு, ”இந்தியாவுக்கு ஆதரவான எந்த முழக்கங்களை வேண்டுமானாலும் எழுப்பலாம். ஆனால், பாகிஸ்தானுக்கு ஆதரவான முழக்கங்களை எழுப்பக் கூடாது” என்று கூறினார்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க