ந்தியா போலி சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இதைப் பவள விழாவாக கடைப்பிடிக்கும் வகையில், ‘சுதந்திர நாள் அமுதப் பெருவிழா’ என்ற பெயரில் கடந்த ஆண்டிலிருந்து மோடி அரசு நாடெங்கும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், போட்டிகளை நடத்தி வந்தது. இதன் தொடர்ச்சியாகவே “ஹர் கர் திரங்கா” (மூவர்ணக் கொடியைப் போற்றுவோம்) என்ற திட்டத்தை அறிவித்தார் மோடி. 20 கோடி வீடுகளில் தேசியக் கொடியேற்றுவது இத்திட்டத்தின் இலக்காக அறிவிக்கப்பட்டது.

நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் ஆகஸ்டு 13 முதல் 15 வரையிலான மூன்று நாட்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடி ஏற்ற வேண்டும்; தேசியக் கொடியுடன் தற்படங்களை (செல்ஃபி) எடுத்து இணையத்தில் பதிவேற்ற வேண்டும்; தமது சமூக ஊடகப் பக்கங்களின் முகப்புக்களில் தேசியக் கொடி படத்தை வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார் மோடி.

தனது உரையில், மூவர்ணக் கொடியுடனான நமது உறவை இந்நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.

நாடு முழுவதும் கொடி ஏற்றுவதற்கேற்ப, தனிநபர் இல்லங்களிலும், வணிக நிறுவனங்களிலும் கொடியேற்றலாம், பகல்-இரவு என அனைத்து நேரங்களிலும் கொடி பறக்கலாம் என கொடிச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டன.

படிக்க :  விழிஞ்சம் துறைமுகத் திட்டம்: அதானிக்கு சேவகம் செய்யும் கேரள அரசு!

குடிமக்களின் உள்ளங்களில் நாட்டுப்பற்றை வரவழைப்பதும் தேசியக் கொடி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுமே இல்லந்தோறும் கொடியேற்றும் திட்டத்தின் நோக்கம் என்பது மத்திய பண்பாட்டுத்துறை அமைச்சகம்.

மூட்டிவிடப்பட்ட ‘தேசபக்த ஜோதி’

அமிதாப் பச்சன், ஷாருக்கான், ரஜினிகாந்த், விஜய் தேவரகொண்டா, மம்முட்டி, மோகன்லால், டெண்டுல்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் தாங்கள் கொடியேற்றிய பாடல்களை (செல்ஃபி) விளம்பரப்படுத்தினர். தற்படங்களைப் பதிவேற்றம் செய்வதற்காகவே தொடங்கப்பட்ட ஹர் கர் திரங்கா.காம் இணையதளத்தில் சுமார் 6 கோடி தற்படங்கள் பதிவேற்றப்பட்டன.

இல்லங்களில் கொடியேற்றுவதை வலியுறுத்தி நாடு முழுவதும் பாஜகவினர் பிரச்சார பேரணிகளையும் நடத்தினர். இத்திட்டம் யோகியின் உத்தரப் பிரதேசத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டுள்ளது. உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் பள்ளிக் குழந்தைகளுடன் தேசியக் கொடி பேரணியில் கலந்து கொண்டு, இருசக்கர வாகனப் பேரணியையும் நடத்தினார்.

குஜராத், ஹிமாச்சலப் பிரதேசம், ஹரியானா என மற்ற பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்களும் அவரவர் மாநிலங்களில் தேசியக் கொடி பேரணிகளை நடத்தியுள்ளனர். ஸ்மிருதி ராணி, பியூஷ் கோயல் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் டெல்லியில் பிரச்சாரப் பேரணிகளை நடத்தியுள்ளனர். ஆர்.எஸ்.எஸ் தலைமை அலுவலகமான நாக்பூரில் 52 ஆண்டுகளுக்குப் பிறகு தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.

பாஜக மட்டுமல்லாது காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் தேசியக் கொடி பேரணிகளை நடத்தியுள்ளன.

இவ்வாறு ஆர்.எஸ்.எஸ்-பாஜகவாலும் நாடறிந்த பிரபலங்கள் மற்றும் ஆளும் வர்க்க ஊடகங்களாலும் நிகழ்த்தப்பட்ட தொடர் பிரச்சாரங்கள் காரணமாக மக்கள் ‘தேச பக்தி’ வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டனர்.

அறிவிக்கப்பட்ட இலக்கான 20 கோடியையும் தாண்டி அதிக அளவில் மக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடி ஏற்றியதாக செய்திகள் வெளியாகின. இத்திட்டம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பதில், பெரு மகிழ்ச்சியடைவதாகவும் பெருமைப்படுவதாகவும் கூறியிருக்கிறார் மோடி.

ஆனால் அதே பெருமகிழ்ச்சியோடு இந்நாட்டின் அடிப்படை உழைக்கும் மக்களால் இந்நாளைக் கொண்டாட முடிந்ததா, ஆளும் வர்க்க ஊடகங்கள் ஊதிப்பெருக்கிக் காட்டுவது மட்டுமே உண்மையா? சுதந்திர நாள் கொண்டாடும் அளவிற்கு நம் நாட்டில் சுதந்திரம் கொடிகட்டிப் பறக்கிறதா? என்ற கேள்விகளைக் கேட்க வேண்டியிருக்கிறது. அதற்கான பதிலை இக்கொண்டாட்ட நாளை ஒட்டியே தேடுவோம்.

எங்கே வாழ்கிறது சுதந்திரமும் சுதேசியமும்?

வீடுகளில் தேசியக் கொடி ஏற்றும் திட்டம் அறிவிக்கப்படுவதற்கு முன்பு கொடி சட்டம் திருத்தப்பட்டது. அதில், கதர் துணியால் மட்டுமே தேசியக் கொடி தயாரிக்க வேண்டும் என்று இதுவரையில் இருந்த விதியை நீக்கி பாலிஸ்டரால் தயாரிக்கப்பட்ட கொடியையும் பயன்படுத்தலாம்.

இத்திருத்தத்தின் மூலம் நம் நாட்டு நெசவாளர்களின் வயிற்றில் அடித்துள்ளது மோடி அரசு; கொடி தயாரிப்பதற்கான டெண்டர்களை கைத்தறி நிறுவனங்களுக்கு கொடுக்காமல் குஜராத்தில் உள்ள பெரும் விசைத்தறி நிறுவனங்களுக்கும், சீன நிறுவனங்களுக்கும் கொடுத்துள்ளது.

‘சுதந்திர தின’ பெருவிழாவை ஒட்டி விற்பனையான கொடிகளில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கொடிகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே 3,000 கோடிக்கு பட்டேல் சிலை.. தற்போது தேசியக் கொடியையும் சீனா தயாரித்துவிட்டார் மோடி. “உள்நாட்டுப் பொருட்களை வாங்குங்கள்” என்று அடிக்கடி தனது உரையில் வாயளந்து கொண்டிருக்கும் மோடி அரசின் ‘சுதேசியம்’ என்னவென்று இதன் மூலம் அம்பலப்பட்டுப்போயுள்ளது.

போலி சுதந்திர தினத்தை ஒட்டி, நாட்டின் தலைநகரில் மட்டும் விற்பனையான கொடிகளின் சந்தை மதிப்பு 4 முதல் 5 கோடிகளாகும். நாடுமுழுவதும், கடந்த ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை 2.36 கோடி தேசியக் கொடிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவற்றின் சந்தை மதிப்பு ரூ.60 கோடியாகும்.

இதனால் கைத்தறி நெசவாளர்களுக்கு துளியும் பலனில்லை. முந்தைய ஆண்டுகளில் கிடைத்த ஆர்டர்கள் கூட கிடக்கவில்லை.

அரச ஒன்றியத்திற்கு கதர் துணியால் தேசியக் கொடி தயாரித்து கொடுத்த கர்நாடக காதி கிராமோத்யோகா சம்யுக்த சங்கம் மோடியின் சட்டத் திருத்தத்தால் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளது. நிறுவனம்தான் அரசு நிகழ்வுகளுக்கான தேசிய கொடியைத் தயாரித்துக் கொடுக்கிற ஐ.எஸ்.ஓ சான்றிதழ் பெற்ற நிறுவனமாகும். நிறுவனத்தில் பெரும்பாலான தொழிலாளிகள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

“ஒவ்வோர் ஆண்டும் ஜூலை இறுதிக்குள் 2.5 கோடி கொடிகளை சம்யுக்த சங்கம் அனுப்பியிருக்கும். ஆனால், இச்சட்டத் திருத்தத்தால் ஏற்கனவே கிடைத்த ஆர்டர்களில் பாதிகூட கிடைக்கவில்லை. இதுவரை 1 கோடி கொடிக்கான ஆர்டர்கள்தான் கிடைத்துள்ளன. ஆனால் சங்கத்திடம் 5 கோடி மதிப்புள்ள கொடிகளை வழங்குவதற்கான மூலப்பொருட்கள் இருப்பு உள்ளது” – என்று இந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார் சம்யுக்த சங்கத்தைச் சேர்ந்த சிவானந்த் மதபதி.

இச்சங்கத்தின் சார்பில் ஜூலை இறுதியில் கொடிச் சட்டத் திருத்தத்தைக் கண்டித்துப் போராட்டமும் நடைபெற்றது.

“முந்தைய தேசியக் கொடியில் சுதேசி சின்னமும், அசோக சக்கரமும் கைத்தறி நெசவாளர்களைக் குறிப்பதாக இருந்தது. இன்று நாம் சுதந்திர தின அமிர்த பெருவிழாவைக் கொண்டாடுகிறோம், ஆனால் ஏன் நெசவாளர்களை மறந்தோம், சுதேசி இயக்கத்திற்கான காரணத்தை நாம் ஏன் மறந்தோம்? சுதந்திரப் போராட்டத்தில் சுதேசி இயக்கமும் முக்கியமான பகுதிதானே” என்று கேள்வி எழுப்புகிறார் ஆந்திர கைத்தறி நெசவாளர் சங்கத் துணைத்தலைவர் பில்லமாரி நாகேஸ்வர ராவ்.

***

ஹரியானா மாநிலத்தில் ரேஷன் பொருட்கள் வாங்க வந்த மக்களிடம் 20 ரூபாய் கொடுத்து கொட்டி வாங்கினால் மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று மிரட்டி கொடியை விற்றுள்ளனர். அவ்வாறு கொடி விற்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது.

உத்தரகாண்ட் மாநில பா.ஜ.க தலைவரோ, தேசியக் கொடி ஏற்றாத வீடுகளைப் புகைப்படம் எடுத்து அனுப்பச் சொல்லி மிரட்டியிருக்கிறார். சில மாநிலங்களில் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் பள்ளிக் குழந்தைகளிடம் கட்டாயம் தேசியக் கொடி ஏற்ற வலியுறுத்தியுள்ளனர். சில தனியார் பள்ளிகள் குழந்தைகளிடம் கொட்டி விற்பனை செய்து அதிலும் கொள்ளை லாபம் பார்த்ததாக பெற்றோர்கள் கொந்தளித்தனர்.

மகாராஷ்டிரத்தில் பாஜகவைச் சேர்ந்த மாநில பண்பாட்டுத்துறை அமைச்சரான சுதிர் முங்கந்திவார், அரசு அதிகாரிகள் தங்களது அழைப்புகளை ஏற்கும்போது, ​​“ஹலோ” என்பதற்குப் பதிலாக “வந்தே மாதரம்” என்று கூறவேண்டுமென அடுத்த ஆண்டு ஜனவரி 26 வரை இதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

ஒவ்வொரு ரயில்வே ஊழியரின் சம்பளத்திலிருந்து ஹர் கர் திரங்கா பிரச்சாரத்திற்காக 38 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. வீடுகளில் கொடியேற்றி அதைப் புகைப்படமெடுத்து வாட்சப்பில் அனுப்ப வேண்டும் என்று அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

எந்த அசம்பாவிதங்களும் இல்லாமல் இந்தமுறை காஷ்மீரில் தேசியக் கொடியை ஏற்றியிருக்கிறோம்; தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாக கைதுசெய்யப்பட்டுள்ள நபர்களின் வீடுகளிலும் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டுள்ளது என்று பாஜகவினரும் ஊடகங்களும் சிலிர்த்துக் கொண்டனர். ஆனால் வீடுகளில் கொட்டி ஏற்றுவதற்காக மக்கள் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் காஷ்மீர் முழுக்க அடக்குமுறையை ஏவித்தான் இக்கொண்டாட்டங்கள் அரங்கேற்றப்பட்டதாகவும் உண்மையை உடைத்துப் பேசினார் மெகபூபா முப்தி.

‘தேசபக்தியின் பெயரால் மக்கள் மீது ஏவப்படும் வன்முறை’ என்று அழைக்காமல் இந்நடவடிக்கைகளை வேறு என்ன பெயரிட்டு அழைப்பது?

***

தேசபக்தி அரிதாரம் பூசிக்கொண்ட யோகி, போலி சுதந்திர தின விழாவில் பள்ளி மாணவர்களுடன் கலந்து கொண்ட நிகழ்ச்சி

2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் நாட்டிலுள்ள அனைவருக்கும் சொந்த வீடு கட்டித்தருவேன் என்று அறிவித்த மோடி, இன்று இருக்கும் குடிசைகளையும் காலி செய்துவருகிறார்.

ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் இந்நாட்டின் பெருநகரங்களைக் கட்டியெழுப்பிய அடித்தட்டு மக்கள் தமது வாழ்விடங்களை விட்டுத் துரத்தியடிக்கும் போக்கு அண்மைக் காலங்களில் தீவிரமடைந்துள்ளது.

டெல்லியில் அடித்தட்டு மக்கள் வாழ்கின்ற கயாஷ்பூர் மற்றும் கஸ்தூரிபா நகர் வீடுகளை இடிக்கப் போவதாக டெல்லி மேம்பாட்டு நிறுவனம் நோட்டீஸ் கொடுத்துள்ளது. தங்களது வீடுகள் இடிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஆகஸ்ட் 12 ஆம் தேதி அப்பகுதி மக்கள் போராட்டமும் நடத்தியுள்ளனர். “எங்கள் வீடுகளை இடித்தால் நாங்கள் எவ்வாறு கொடியேற்றுவது” என்று அவர்கள் நியாயமாகக் கேள்வியெழுப்பினார்கள்.

ஒருபக்கம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் அடித்தட்டு மக்களின் குடியிருப்புப் பகுதிகள் காலிசெய்யப்படுகின்றன. இன்னொரு பக்கம் ஆர்.எஸ்.எஸ்-பாஜகவின் பாசிச ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடும் முஸ்லீம்களின் வீடுகள் புல்டோசரால் தரைமட்டமாக்கப்படுகின்றன. இதுதான் சுதந்திர மணம் கமழும் இந்தியாவா?

***

ராஜஸ்தான் மாநிலம் சுரானா பகுதியில், தாகத்திற்காகப் பானையிலிருந்து தண்ணீர் எடுத்து குடித்த குற்றத்திற்காக, 9 வயது பள்ளிச் சிறுவனுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. ஆதிக்க சாதியினர் குடிப்பதற்காக வைத்திருந்த பானையிலிருந்து அந்த தலித் சிறுவன் தண்ணீர் குடித்ததால் சைல்சிங் என்ற ஆசிரியர் அச்சிறுவனை அடித்து குற்றுயிரும் குலையுயிருமாக ஆக்கியிருக்கிறார். உயிருக்குப் போராடிய அச்சிறுவன் ஆகஸ்டு 14ம் தேதி இறந்துபோகிறான்.

ஒருபக்கம் சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் மக்கள் மூழ்கடிக்கப்பட்டபோது, ​​ஒடுக்கப்பட்ட மக்களும் ஜனநாயக உணர்வாளர்களும் இச்சாதி வெறிக் கொடூரத்திற்குக் கண்டனம் தெரிவித்து சமூக வலைதளங்களில் கருத்துப் பதிவிட்டுக் கொண்டிருந்தனர்.

நாடு முழுவதும் சாதிவெறி ஆணவக் கொலைகளும், தாழ்த்தப்பட்டவர்கள் மீதான தாக்குதல்களும் காவி கும்பல்களின் ஆட்சியில் மென்மேலும் அதிகரித்து வருகின்றன. சாதியத் தாக்குதல்களும், கொலைகளும் அன்றாட நிகழ்வான சமூகத்தில் எங்கிருக்கிறது சுதந்திரம்? சாதி ஆதிக்கத்திலிருந்து விடுபடும் நாள் தானே ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சுதந்திர நாளாக இருக்க முடியுமா?

***

குஜராத் கலவரத்தின் போது, ​​பில்கிஸ் பானு என்ற இஸ்லாமியப் பெண்ணைக் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கிய கொடூரர்களை, பாஜக தலைமையிலான குஜராத் அரசு சுதந்திர தினத்தை முன்னிட்டு நன்னடத்தை அடிப்படையில் விடுவித்துள்ளது.

பாலியல் வல்லுறவு கொடூரர்களுக்கும் பாசிச பயங்கரவாதிகளுக்கும் சுதந்திரம் வழங்கப்படுவது இந்நாட்டில் பெண்கள் வாழ்வதற்கே விடுக்கப்படும் சவால் அல்லவா? இந்த நாள் எப்படி நமக்கு கொண்டாட்ட நாளாக இருக்க முடியும்.

எதற்கு இந்த தேசபக்தி அரிதாரம்?

பாசிஸ்டுகளின் புகலிடம் தேசியம் என்பார்கள், அந்த வகையில் தமது மக்கள் விரோத செயல்பாடுகளை தேசபக்தி அரிதாரம் பூசி மறைத்துக் கொள்வதற்குப் போலி சுதந்திரத்தின் பவள விழா ஆர்.எஸ்.எஸ்-பாஜகவிற்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பாசிஸ்டுகள் மக்களிடம் பிரச்சாரம் செய்யும் தேசியம் எந்தவகையைச் சேர்ந்தது? நமது நாட்டையும் நம் நாட்டின் புரட்சிகர வரலாற்றையும் மக்கள் நேசிக்கிறார்கள், அவற்றைக் கொண்டாடுகிறார்கள். ஆகவே அதை இருக்கமாகப் பிடித்துக் கொள்ளும் பாசிஸ்டுகள், மக்களின் தேசப் பற்றுக்கு பாசிச உள்ளடக்கத்தை வழங்குகிறார்கள். கோடான கோடி உழைக்கும் மக்களின் நலனை தேசத்திற்கு முரணாக நிறுத்துகிறார்கள்.

படிக்க : பாட்டாளி வர்க்கத்தை அமைப்பதற்கு இதோ ஓர் ஆயுதம்! – நூல் அறிமுகம்

விலைவாசி உயர்வு, வேலையின்மை, கார்ப்பரேட் திட்டங்களால் வாழ்வாதாரப் பறிப்பு, சிறுபான்மையினர் மீதான பாசிஸ்டுகளின் தாக்குதல் ஆகியவை தேசியத் துயரமல்ல; அதையும் தாண்டி தேசியமும் தேசப் பெருமிதமும் இருக்கிறது என்பது பாசிஸ்டுகள் முன்வைக்கும் தேசியம். ஆர்.எஸ்.எஸ்-பாஜக முன்வைக்கும் ‘தேசம் முதலில்’ என்ற பிரச்சாரம் அந்தவகையைச் சேர்ந்ததுதான்.

தஞ்சை டெல்டாவின் பச்சை வயல் ஹைட்ரோகார்பனால் பற்றி எரிந்துகொண்டிருந்தபோது, ​​“தேசத்திற்காக ஒரு ஊரை பலிகொடுத்துதான் ஆகவேண்டும்” என்று இல.கணேசன் கூறியதை நினைவூட்டிக் கொண்டால் இந்த தத்துவம் மிக எடுப்பாகப் புரியவரும்.

மக்களிடம் தாம் மேற்கொள்ளும் பல்வேறு நடவடிக்கைகள் மூலமாக தாம்தான் தேசத்திற்கான கட்சி, தேசத்திற்கான வலிமையான தலைவர் என்ற கருத்தை மக்களுக்கு உருவாக்குவது; பின்னர் தேசத்துக்கான கட்சி, தேசத் தலைவர், அவர்கள் சொல்லும் தேச நலனைக் குறித்த கேள்விகளுக்கு அப்பாற்பட்டு ஏற்றுக்கொள்வது ஆகியவை அடங்கும்.

சுதந்திர தின அமுதப் பெருவிழா கொண்டாட்டங்கள், ஹர் கர் திரங்கா திட்டம் ஆகியவை அந்தவகையில் திட்டமிட்டு செய்யப்பட்டவையே; பாசிஸ்டுகளின் இத்தகைய எத்தனிப்புகளை உடனுக்குடன் அம்பலப்படுத்தி முறியடிப்பது புரட்சிகர-ஜனநாயக சக்திகளின் முக்கியக் கடமையாகும்.


அப்பு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க