புல்வாமா தாக்குதலை தொடர்ந்து இந்திய அரசின் செயல்பாடுகள் அனைத்தும் சந்தேகத்திற்குரிய வகையில் மிகவும் அவசரகதியில் நடந்து வருகிறது. இந்த தாக்குதல் பாகிஸ்தானை புகலிடமாக கொண்ட அமைப்புதான் நடத்தியது என்பதும், இதனால் பாகிஸ்தான் அரசும் பொறுப்பு ஏற்க வேண்டும் என்பதிலும் இது மிகவும் கண்டத்துக்குரிய ஒன்று என்பதிலும் மாற்று கருத்து கிடையாது.

பொக்ரானில், இந்திய விமான படை நடத்திய போர் ஒத்திகை.

புல்வாமா தாக்குதலை நடத்தியதில் எப்படி பாகிஸ்தானுக்கு பங்கிருக்கிறதோ அதே போன்று தாக்குதலை தடுத்து நிறுத்த தவறியதில் இந்திய அரசுக்கும் பங்கிருக்கிறது. இதில் தன்னுடைய தவறை யாரும் சுட்டிக்காட்டி விடக்கூடாது என்பதில் இந்திய அரசு மிகவும் கவனமாக உள்ளது. மக்களின் கோவம் முழுவதும் பாகிஸ்தான் மீதே இருக்கும் வண்ணமும் அடுத்து போர்தான் தீர்வு என்பது போன்ற பிம்பத்தையும் கட்டமைக்க முயற்சி செய்து வருகிறது.

ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிப்பதாக மோடி அறிவித்துள்ளார். ராணுவம் இது வரை எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையிலும் ஊடகங்கள் தொடர்ந்து போர் மேகம் சூழ்கிறது ஒத்திகைகள் நடக்கிறது என்று பொய்யுரைத்து வருகின்றன. நேற்று பொக்ரான் என்னும் இடத்தில் இந்திய விமான படை போர் நடத்திய ஒத்திகை, இந்த தாக்குதலுக்கு எதிர்வினை ஆற்றவே நடைபெற்றது போல ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. ஆனால் உண்மை வேறு.

மூன்று ஆண்டுக்கு ஒருமுறை இந்த நிகழ்வு இந்திய விமானப்படையால் நடத்தப்பட்டு வரும் ஒன்றாகும். 2013-ம் ஆண்டு வாயு சக்தி என்ற பெயரிலும், 2016-ல் இரும்புக்கரம் என்ற பெயரிலும், இந்த ஆண்டு மீண்டும் வாயு சக்தி என்ற பெயரிலும் நடந்தேறியது.

கார்கில் போர். (கோப்புப் படம்)

தொடர்ந்து போர் வேண்டும், பழி வாங்க வேண்டும் என்ற வகையில் பேசி வரும் பெரும்பாலோனோருக்கு உண்மையில் போர் வந்தால் என்ன விளைவுகள் வரும் என்பதை பற்றிய சிறு புரிதல் கூட இருக்க வாய்ப்பு இல்லை. இதற்கு முன்பு 1999-ல் நடந்த கார்கில் போர் பற்றி இவர்களுக்கு தெரிந்திருக்காது. அப்படியே தெரிந்திருந்தாலும், அதில் இந்தியா வெற்றி பெற்றது, மலை உச்சியில் நான்கு வீரர்கள் தேசிய கொடியுடன் இருக்கும் படம் தவிர வேறு ஒன்றும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.

இந்த போரில் பாகிஸ்தானில் 700-க்கும் அதிகமான உயிரிழப்புகளும், இந்திய ராணுவத்தில் 453 வீரர்களும் இறந்தனர். பாகிஸ்தானில் எத்தனை பேர் இறந்தார்கள் என்று நமது தேசபக்தர்கள் கவலை பட மாட்டார்கள். இப்போதைய போர் வேண்டாம் என்பவர்களின் கவலை இந்த 453 உயிர்கள் மற்றும் இனி போர் வந்தால் போகப்போகும் உயிர்களின் மீதானது. ஆனால், போர் வேண்டும் என்பவர்களின் கணக்கு வேறு, நம் பக்கம் 453 தான், எதிரி தரப்பில் 700, நமக்குத்தான் வெற்றி என்பார்கள். நாட்டின் அமைதிக்கு நாம் குறிப்பிட்ட விலையை கொடுக்க வேண்டும் என்கிறார்கள்.

கார்கில் போராகட்டும் அல்லது தீவிரவாத தாக்குதலில் இறந்த அல்லது காயம் பட்டு உடல் ஊனமுற்ற வீரர்களின் நிலையோ மற்றும் அவர்களின் குடும்பச் சூழ்நிலையோ மிகவும் மோசமான நிலையில்தான் உள்ளது. நமது தேசபக்தர்களின் வேலை என்பது இறந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி, மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் செல்வதோடு நின்று விடுகிறது. அது மட்டுமல்லாது சில பக்தர்கள் யாரெல்லாம் தேசத்துரோகி என்பதைக் கண்டறியும் வேலைகளையும் சேர்த்துச் செய்து வருகிறார்கள். போர் வேண்டும், பழி தீர்த்தே ஆக வேண்டும் என்று முழங்கும் தேச பக்தர்களும், பாஜக-வும் இந்தப் போருக்கு பின்னான விளைவுகளைக் குறித்துச் சிறிதும் கண்டு கொள்வதில்லை.

மேஜர் தேவேந்திர பால் சிங்.

இந்தத் தாக்குதலுக்குப் பிறகு Zee தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஓய்வு பெற்ற மேஜர் தேவேந்திர பால் சிங் கூறிய சில தகவல்கள்: (இவர் 1999-ல் நடந்த கார்கில் போரில் தன் ஒரு காலை இழந்தவர். பின்னர் இழந்த காலுக்குப் பதிலாக செயற்கை கால் பொருத்தி ஓட்டப்பந்தயங்களில் கலந்து வருகிறார்).

• லான்ஸ் நாயக் நஷீர் வாணி (தீவிரவாதியாக இருந்து ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காக உயிர் துறந்தவர்) போலப் பல காஷ்மீர் இளைஞர்கள் ராணுவத்தில் சேர்ந்து பணிபுரியும் வகையில் அவர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். வெளியில் இருந்து ஒருவன் என் வீட்டுக்குள் நுழைந்து என்னுடைய இளைஞர்களைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்கிறான் என்றால், நான் அதைத் தடுக்கத் தவறி விட்டேன் என்று தான் அர்த்தம்.

• 40 குடும்பங்கள் இப்போது அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இனியும் சரியான தீர்வை நோக்கி சிந்திக்காமல் பழி தீர்த்தலை பற்றியே பேசிக்கொண்டு இருந்தால் இன்னும் பல குடும்பங்கள் அவலநிலைக்குத் தள்ளப்படும். பழி தீர்க்க வேண்டும் என்று முழங்கும் முன்பு ராணுவ வீரர்களின் குடும்பங்களைக் கேளுங்கள், உங்கள் வீட்டின் நாயகனை இழக்க விரும்புகிறீர்களா என்று.

• அடுத்தத் தலைமுறை சரியான திசையை நோக்கி சிந்திக்கத் தவறினால், தாக்குதல், பழி தீர்த்தல், அதற்கு எதிரியின் பழி தீர்த்தல், மீண்டும் நம்முடைய பழி தீர்த்தல் என்று சுழற்சியாகவே சென்று கொண்டு இருக்க வேண்டியதுதான்.

• நமக்காக நமது வீரர்கள் தியாகம் செய்ய வேண்டும் என்று எண்ணுகிறோம். ஆனால், இறந்த வீரரின் விதவை மனைவி தனக்குக் கிடைக்கவேண்டிய நிவாரணத் தொகைக்காக நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டும் படி விட்டு விடுகிறோம். ஒரு சில வீரர்களின் உடல் கிடைக்காமல் போனதால் தனது கணவன் நாட்டுக்காக உயிர் விட்டவர் என்பதை நிரூபிக்க இறந்த உடலை கொண்டு வரும்படி நீதிமன்றம் கூறிய சம்பவங்களும் நடந்திருக்கின்றன.

• நானே இதற்கு ஒரு சாட்சி. நான் கார்கில் போரில் காயம் பட்டுக் கால்களை இழந்தவன் என்று 7 வருடங்கள் போராடி ஆயுதப்படை தீர்ப்பாயத்தில் நிரூபித்து, எனக்குச் சட்டப்படி கிடைக்கவேண்டிய ஓய்வூதியத்தைப் பெற வேண்டி இருந்தது.

• இது போல ஆயிரக்கணக்கில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒரு முக்கியக் காரணி. இந்த நிலை இன்று வரை நீடிக்கிறது.

• நமக்காக நமது வீரர்கள் தியாகம் செய்ய வேண்டும் என்று எண்ணுகிறோம். ஆனால், போரில் இறந்த, காயம் அடைந்த மற்றும் உடல் ஊனமுற்ற வீரர்களின் குழந்தைகளுக்குக் கொடுக்கப்பட்டு வந்த கல்வி சலுகைகள் குறைக்கப்படுவதைக் கண்டு கொள்ள மாட்டோம். (இந்திய பட்ஜெட்டில் இதற்கான செலவு வெறும் 3 கோடி மட்டுமே). தொடர் போராட்டங்களுக்குப் பிறகு இந்தச் சலுகைகள் மீண்டும் கிடைக்கப் பெற்றது.

இங்கு குறிப்பிட்ட அனைத்தும் முன்னாள் ராணுவ வீரரின் வார்த்தைகள். இன்றைய தேசபக்தர்கள் வருடம் தோறும் கொண்டாடும் விஜய் திவாஸ்க்காகத் தனது கால்களை இழந்தவர்.

படிக்க:
சித்துவின் கேள்வி : மசூத் அன்சாரை பாகிஸ்தானிடம் ஒப்படைத்த ‘தேச பக்தர்கள்’ யார் ?
காஷ்மீரி மருத்துவரை பாகிஸ்தானுக்கு போகச் சொல்லும் காவிகள் !

1999-ல் கார்கில் போர் நடக்கும் போது வாஜ்பாய் அவர்களின் ஆட்சி. 2004 வரை அவருடைய ஆட்சிதான். ஆனால், போரில் காயம் பட்ட வீரர் ஏழு வருடங்கள் நிவாரணத் தொகைக்காக அலைய வேண்டி உள்ளது. 1971 -ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டப்படி போரில் இறந்த மற்றும் உடல் ஊனமுற்ற வீரர்களின் குழந்தைகள் முதல் பட்டம் பெறும் வரை முழுக் கல்வி செலவையும் அரசு ஏற்கும். 2010-ல் இதில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, கல்லூரி மற்றும் விடுதி செலவை மட்டும் அரசு ஏற்கும் மற்ற செலவுகளை ஏற்காது என்ற நிலை உருவானது. 2017 ஜூலை மாதம் நிர்மலா சீதாராமன் அவர்கள் மற்றொரு திருத்தத்தைக் கொண்டு வருகிறார். அதாவது முழுக் கல்வி செலவையும் அரசால் ஏற்க முடியாது, மாதம் ரூ.10,000 வரை மட்டுமே அரசு ஏற்கும் என்று. அதன் பிறகு ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், பணியில் உள்ள வீரர்களின் பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு 2018 மே மாதம் இந்தத் திட்டம் திரும்பப் பெறப்பட்டது. இந்த திட்டத்திற்கு வருடத்திற்கு கிட்டத்தட்ட 36 கோடி வரை மட்டுமே தேவைப்படும். படேல் சிலைக்கு 3,௦௦௦ கோடி, கங்கைக்கு 600 கோடி, அரசின் விளம்பரத்திற்கு 3000 கோடி என செலவு செய்யும் அரசு இந்த கல்வி சலுகையில் கை வைத்து 36 கோடி பணத்தை சேமிக்க எண்ணுகிறது.

ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து கேள்வி எழுப்பிய எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த தேஜ் பகதூர் யாதவ்.

இது மட்டுமா, 2017 ஜனவரி மாதம் எல்லை பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் அவர்களுக்குச் சரியான உணவு வழங்கப்படுவதில்லை என்று முகநூலில் ஒரு பதிவை மேற்கொள்கிறார். அடுத்த மூன்று மாதத்தில் அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார். அடுத்த ஒரு வருடம் கழித்து 2018 ஏப்ரல் மாதம் ராணுவ வீரர்களுக்கு வாங்கப்படும் உணவின் தரம் குறித்துச் சோதனை செய்து அறிக்கை தாக்கல் செய்ய DFRL (பாதுகாப்புத் துறை உணவு ஆராய்ச்சியகம்) பணிக்கப்படுகிறது. அந்த அறிக்கை சமர்பிக்கப்பட்டதா, அதில் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்ற விவரம் இல்லை. கடந்த 2019 ஜனவரி மாதம், உணவு குறித்துக் குற்றம் சுமத்திய வீரரின் மகன் பூட்டிய வீட்டுக்குள் தற்கொலை செய்து கொண்டார். ஏற்கனவே, இந்த வீரருக்கு மிரட்டல்கள் வருவதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2018 பட்ஜெட்டில் பாதுகாப்புத்துறைக்கான ஒதுக்கீட்டில் ஆயுத தளவாடங்களுக்கான தொகை எவ்வளவு, வீரர்களுக்கான தொகை எவ்வளவு என்று நமக்குத் தெரியவில்லை. ரஃபேல் ஊழல், மற்றும் ராணுவ வீரர்களின் கல்வித் தொகைப் பிரச்சினையை ஒப்பிட்டுப் பார்த்தால்  தளவாடங்களுக்கு அதிகம் ஒதுக்கியிருப்பார்கள் என்றே தோன்றுகிறது.

மேலும், ராணுவ வீரர்களுக்குத் தேவையான ஆயத்த ஆடைகள் மற்றும் தற்காப்பு உபகரணங்கள் கொள்முதலை நிறுத்தும் நிலைக்கு ராணுவம் தள்ளப்பட்டது. அதுமட்டுமல்லாது, 7-வது ஊதிய குழு பரிந்துரைத்த ஊதிய உயர்வையும் தர முடியாத நிலைக்கு ராணுவம் தள்ளப்பட்டது. அதன் பிறகு ராணுவ  உயரதிகாரிகள் தரப்பில் இருந்து எழுந்த அதிருப்தியின் காரணமாக நிதி ஒதுக்கீட்டில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு அந்த நிலை தவிர்க்கப்பட்டது.

பாதுகாப்புத் துறை வீரர்களின் தற்கொலைகள் மற்றுமொரு மிகப்பெரிய பிரச்சனை. அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட புள்ளிவிவரத்தின் படி மூன்று நாட்களுக்கு ஒரு வீரர் தற்கொலை செய்து கொள்கிறார். 2001 முதல் 2012 வரையில் 1362 பாதுகாப்புப் படை வீரர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2013 முதல் 2017 வரை 434 தற்கொலைகள் நடந்துள்ளது. 2018-ம் ஆண்டில் மட்டும் 104 . இதில் 80 % க்கும் மேல் தரைப்படை இராணுவ வீரர்கள் (மீதம் விமானப்படை மற்றும் கப்பற்படை).

இப்படி அரசின் தரப்பில் நிர்வாகக் குறைபாடுகளை அடுக்கி கொண்டே போகலாம். இந்த நிர்வாகக் குறைபாடுகளை மறைக்கும் பொருட்டே அரசும், அதன் கைக்கூலிகளான ஊடகங்களும் தொடர்ந்து போர் ஒன்றே தீர்வு என்று மக்களை நம்ப வைக்க முயற்சி செய்து கொண்டு இருக்கின்றன. இது நேரடியாகத் தனது அரசியல் நலனுக்காக ஆயிரக்கணக்கான உயிர்களைப் பணயம் வைக்கும் செயலே.

இது ஒரு பக்கம் இருக்க, சங்க பரிவாரங்கள் தங்கள் பங்குக்கு இசுலாமிய எதிர்ப்பினை வெளிப்படையாக மக்கள் மத்தியில் விதைக்கத் துவங்கி உள்ளனர். பாகிஸ்தானை பழி வாங்க வேண்டும் என்று கூவிக் கொண்டு காஷ்மீர் மக்கள் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். மற்ற மாநிலங்களில் வாழும் காஷ்மீர் மக்கள் குறிப்பாக இசுலாமியர்கள் தங்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர் எனபதுதான் எதார்த்தம். தங்கள் இசுலாமிய எதிர்ப்பினை காட்ட இந்த 42 வீரர்களின் தியாகத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இதைவிட இந்த வீரர்களின் தியாகத்தை யாரும் கொச்சைப்படுத்தி விட முடியாது.

இது ஒட்டுமொத்த பிரச்சனையின் ஒருபக்கம் மட்டுமே. ராணுவத்தால் காஷ்மீரில் நடந்த வன்முறைகள் மற்றொரு பக்கம். வன்முறை என்றால் தீவிரவாதிகளை ஒடுக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகள் அல்ல. தனிநாடு கோரிக்கையை முன்னிறுத்தி போராடும் காஷ்மீர் மக்கள் மீது அரசால் ராணுவத்தின் உதவி கொண்டு நடத்தப்படும் வன்முறைகள். அரசானது பிரிவினை கோரும் காஷ்மீர் மக்களையும் தீவிரவாதிகளையும் ஒரே தட்டில் வைத்து மதிப்பிடுகிறது. அதாவது கையில் கல் கொண்டு எரிபவனையும், கையெறிக் குண்டால் அடிப்பவனையும் ஒரே ஆயுதத்தால் அடக்க நினைக்கிறது அரசு. தீவிரவாத குழுக்களால் ராணுவத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் பிரிவினை கோரும் மக்களின் சனநாயக வழி போராட்டங்களையும் சேர்த்து மதிப்பிழக்கச் செய்கிறது.

படிக்க:
தோழர் முகிலனை விடுதலை செய் என முழங்குவோம் ! பரப்புவோம் அவர் வெளியிட்ட காணொளியை !
கார்ப்பரேட் – காவி பாசிசம்.. எதிர்த்து நில் ! ஏன் இந்த மாநாடு ?

காஷ்மீரைப் பொறுத்தவரை நமது பார்வை மேலோட்டமானது. அங்குக் களநிலவரம் என்பது இன்னும் சிக்கலான ஒன்றாகத்தான் உள்ளது. காஷ்மீர் மக்கள் இந்தத் தீவிரவாத குழுக்களுக்கும் இந்திய ராணுவத்திற்கும் இடையில் இருமுனை போராட்டங்களை நிகழ்த்தி வருகிறார்கள். உச்சநீதிமன்றமே காஷ்மீரில் ராணுவத்தின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் வகையில் சில வழிமுறைகளை கொடுத்துள்ளது. ஆனால், இந்த வழிமுறைகள் நடைமுறையில் பின்பற்றப்படவில்லை என்பதும் உண்மை.  இங்குக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று என்னவென்றால், போர் வந்தாலும் இறுதியில் மிகப்பெரிய பாதிப்பிற்கு உள்ளாவது இந்தக் காஷ்மீர் மக்கள்தான். ஆனால், இதுவரை நடந்த போர்களோ அல்லது தீவிரவாத ஒழிப்பு செயல்களோ காஷ்மீர் மக்களின் வாழ்க்கைத்தரத்தை எந்த வகையிலும் உயர்த்திடவில்லை என்பதுதான் எதார்த்தம்.

அரசின் நிர்வாகத் திறமையின்மை, தவறான கொள்கைகள் ராணுவத்தையும் காஷ்மீரையும் மட்டும் பாதிக்கவில்லை. மற்ற மாநிலங்களும் மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளன. சமூக மற்றும் பொருளாதர ரீதியில் மக்கள் மிகவும் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தொடர்ந்து மக்களைப் பிளவுபடுத்தும் செயல்களை அரசும், ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகளும் செய்து வந்த வண்ணமே உள்ளனர்.

தவறான பொருளாதார கொள்கைகள் வேலைவாய்ப்பின்மையை அதிகப்படுத்தியுள்ளது. ஏராளமான சிறு குறு தொழில் நிறுவனங்கள் மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறது. உயர்கல்விக்கான நிதி ஒதுக்கீடு குறைப்பு, கல்வி கட்டணங்கள் உயர்வு, நீட் போன்ற புதிய நுழைவுத் தேர்வுகளின் அறிமுகம், மருத்துவத்துறையில் அரசின் செயல்பாடுகள் குறைக்கப்பட்டுத் தனியாரின் செயல்பாடுகளை அதிகரித்தல் என அரசின் பல கொள்கைகள் மக்களை அடிப்படை தேவைகளைக் கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளி கொண்டு இருக்கிறது. இவைகளில் இருந்து மக்களைத் திசை திருப்பும் நோக்கில்தான் அரசும் அதன் கைக்கூலி ஊடகங்களும் பொய்யான போர் மேகங்களை உருவாக்கி கொண்டு இருக்கின்றன.

படிக்க:
காஷ்மீர் : தெருக்களே வகுப்பறை ! கற்களே பாடநூல்கள் !!
காஷ்மீர் : இந்தியாவின் பாலஸ்தீனம் !

காஷ்மீர் மக்களுக்கான தீர்வை அம்மக்களின் துணை கொண்டுதான் அடையமுடியும். அது தவிர்த்து போரின் மூலமோ பழி வாங்கும் செயலின் மூலமோ காஷ்மீர் மக்களுக்கான தீர்வையும் பெற முடியாது, தீவிரவாதத்தையும் ஒழிக்க முடியாது. இவற்றோடு சேர்த்து நாம் கேட்கவேண்டிய கேள்விகள் ஆயிரம் இருக்கின்றது. அதற்கான பதிலை கொடுக்க வேண்டிய இடத்தில் அரசு இருக்கிறது. இவர்களின் போர் முழக்கங்களில் நாம் கவனத்தைச் சிதற விடாமல் பதில் கிடைக்கும்வரை தொடர்ந்து கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருப்போம்.

சக்திவேல்
சமூக ஆர்வலர்.

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

13 மறுமொழிகள்

 1. இந்த மாதிரியான கேவலமான கட்டுரைகளுக்கு பதிலாக பேசாமல் வினவு கூட்டங்களின் உண்மை நோக்கமான காஷ்மீர் பிரிவினையை பற்றி பேசி, இந்தியாவை எப்படி சீனா பாகிஸ்தானுக்காக பலவீனப்படுத்தலாம் என்று கட்டுரை எழுதி இருக்கலாம்… அப்படியாவுது உங்களின் நேர்மை வெளிப்பட்டு இருக்கும்.

  காஷ்மீர் மக்களின் துன்பம் பற்றி பேசுவது உங்களின் வெளிவேஷம் உங்களின் உண்மை நோக்கம் காஷ்மீர் பிரிவினை தான்.

  காஷ்மீர் மக்களின் துன்பங்களுக்கான அடிப்படை இஸ்லாமிய மதவெறி, மாற்று மதத்தினரோடு ஒற்றுமையாக வாழமுடியாது தான் அவர்களின் பிரச்சனைகளுக்கு மூல காரணம்.

  மதசார்பின்மை இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிரானது, அது ஹிந்து கோட்பாடு என்று சொல்லும் இஸ்லாமியர்கள், அவர்கள் சிறுபான்மையாக இருக்கும் பகுதிகளில் மட்டும் மதசார்பின்மை வேண்டும் என்று சொல்லும் நோக்கம் என்ன ?

  ஹிந்து மதவாதம் பற்றி வாய் கிழிய பேசும் வினவு காஷ்மீரில் நடக்கும் இஸ்லாமிய மதவெறியை பற்றி இதுவரையில் ஒரு வார்த்தை பேசாதது ஏன் ?

  எதற்காக வெள்ளிக்கிழமை ஆனால் மசூதிக்கு சென்றபிறகு இந்தியா ராணுத்தின் மீது கல்லெறிகிறார்கள் என்ற உண்மையை பேசுங்களேன்.

  எப்படி பாக்கிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரில் ஒரு ஹிந்து கூட இல்லாமல் கொலை செய்தார்கள் என்பதை பற்றியும் பேசுங்களேன்.

  எப்படி காஷ்மீரில் ஹிந்து குடும்பங்களை கொலை செய்து எஞ்சியவர்களை வெளியேற்றினார்கள் என்பதை பற்றியும் பேசுங்களேன்.

  இஸ்லாமிய மதவெறி பற்றி பேசாமல் காஷ்மீர் பிரச்சனையை பற்றி பேச முடியாது.

 2. நான் சொல்லல கடைசியில் ராணுவ வீரர்களின் மரணத்திற்கு அரசு தான் காரணம் என்று சொல்வார்கள் என்று சொன்னேன், என் வார்த்தையை வினவு நிரூபித்து இருக்கிறது…

  ஒன்று மட்டும் நிச்சயம் வினவு போன்ற கம்யூனிஸ்ட் தேசவிரோதிகள் எவ்வுளவு தான் முயற்சி செய்தாலும் காஷ்மீரை இந்தியாவிடம் இருந்து பிரிக்க முடியாது.

  பாகிஸ்தானை (இஸ்லாமியர்களை) போல் இந்தியாவும் நடந்து கொண்டு இருந்தால் இன்று காஷ்மீரில் இஸ்லாமியர்களே இருந்து இருக்க மாட்டார்கள் காஷ்மீரில் பிரிவினை கோஷங்கள் இருந்து இருக்காது.

 3. வினவிற்கு ஒரு கேள்வி காஷ்மீரில் இஸ்லாமிய மதவாதத்தை ஆதரிக்கும் வினவு ஏன் இந்தியாவில் ஹிந்து மதவாதத்தை எதிர்க்கிறது ? காஷ்மீரில் இஸ்லாமியர்கள் செய்வது சரியென்றால் இந்தியாவில் ஹிந்து மதவாத இயக்கங்கள் செய்வதும்ம் சரி என்று தானே நீங்கள் ஏற்க வேண்டும்… ஏன் இந்த போலித்தனம் ?

  இப்படி மதத்தின் அடிப்படையில் கேட்கும் பிரிவினையை நீங்கள் ஆதரிக்கிறீர்கள் என்றால் பிறகு என்ன புரட்சி புடலங்காய் பேசாமல் நீங்கள் இஸ்லாமிய மதவாதிகளின் (பாக்கிஸ்தான்) கைக்கூலிகள் என்று ஒப்புக்கொள்ளுங்களேன்.

  இந்தியாவின் ஒற்றுமைக்காக இந்திய கம்யூனிஸ்ட்கள் ஒரு சின்ன துரும்பை கூட கிள்ளி போட்டது இல்லை கேட்டால் எங்களுக்கு தேசம் முக்கியம் இல்லை மக்கள் தான் முக்கியம் என்று பொய் பேசுவார்கள், அப்படி மக்கள் தான் முக்கியம் என்றால் சீனாவின் திபெத் மற்றும் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளிலும் பிரிவினை கேட்டு போராடுகிறார்களே அந்த மக்களை நீங்கள் ஆதரிப்பது இல்லை, உங்களுக்கு தான் தேசம் முக்கியம் இல்லையாச்சே மக்கள் தானே முக்கியம், அதனால் சீனாவில் பிரிவினை கேட்கும் மக்களை நீங்கள் ஆதரிக்க வேண்டியது தானே… ஏன் திபெத் மக்களை நீங்கள் ஆதரிக்கவில்லை ?

 4. வினவு கூட்டங்களுக்கு நேர்மை இருந்தால் ஏன் கேள்விகளுக்கு பதில் சொல்லட்டும்.

 5. போர் நடந்தால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என ஒருமுறை ஈழப்போர் பற்றி ஜெயலலிதா கூறியதாக ஞாபகம். போரில் சாதாரண பொதுமக்கள் சாவதே சாதாரணம் என்னும்போது ராணுவ வீரர்கள் சாவதைப் பற்றி என்ன சொல்ல முடியும். இலங்கையில் உச்சகட்ட போரில் முள்ளிவாய்க்கால் பகுதியில் பல ஆயிரம் சாதாரண பொதுமக்கள் கொலை செய்யப்பட்டனர். அதற்கெல்லாம் கொஞ்சமும் இரக்கப்படாதவர்கள் போரில் ஒரு தரப்பான ராணுவ வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டதற்கு மட்டும் ஏன் இவ்வளவு கொந்தளிப்பை தமிழகத்திலும் நாட்டின் மற்ற பகுதிகளிலும் தூண்டிவிடுகிறார்கள். தேர்தல் வருகிறது என்பதால் தானே. ஈழத்தில் சிறு குழந்தைகள் உட்பட பல ஆயிரம் சாதாரண பொதுமக்கள் கொலை செய்யப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது போரிலும் காதலிலும் எப்படி வேண்டுமானாலும் ஜெயிக்கலாம் என பாஜக சொம்புகள் அப்போது எகத்தாளமாக பதில் சொன்னார்கள். இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையே குஜராத்தின் கட்ச் பகுதி தொடங்கி ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், காஷ்மீர் என நீண்டு பல்லாயிரம் கிலோ மீட்டருக்கு இந்திய பாகிஸ்தான் எல்லை இருக்கிறது. ஆனால் எல்லை தகராறு என்பது காஷ்மீர் பகுதியில் மட்டும் சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து இருந்துவருகிறது. ஒரு அரசியல் பிரச்சனையை தீர்ப்பதற்கு சாமர்த்தியம் இல்லாமல் ராணுவ நடவடிக்கையே தீர்வு என நம்பினால் இப்படித்தான் ஏதாவது பின் விளைவு ஏற்படும். அடுத்தவர்களுக்கு தேச துரோகிகள் என்னும் பட்டம் கொடுப்பதால் உண்மை மறைந்துவிடாது.

  • காரணம் காஷ்மீரில் மட்டுமே இஸ்லாமியர்கள் அதிகம் வாழ்கிறார்கள், மற்ற பகுதிகளில் ஹிந்துக்கள் அதிகம் வாழ்கிறார்கள். ஹிந்துக்கள் அதிகமாக வாழும் ஜம்முவில் அமைதி நிலவுகிறது ஆனால் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் காஷ்மீரில் குண்டு வெடிப்பு, இஸ்லாமிய மதவெறி, பயங்கரவாதம் எல்லாம் இருக்கிறது.

   • “காஷ்மீர் பகுதியில் மட்டும் சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து இருந்துவருகிறது. ஒரு அரசியல் பிரச்சனையை தீர்ப்பதற்கு சாமர்த்தியம் இல்லாமல் ராணுவ நடவடிக்கையே தீர்வு என நம்பினால் இப்படித்தான் ஏதாவது பின் விளைவு ஏற்படும். அடுத்தவர்களுக்கு தேச துரோகிகள் என்னும் பட்டம் கொடுப்பதால் உண்மை மறைந்துவிடாது”

    Well said Mr. Periyasamy.

 6. காங்கிரஸ் ஆட்சி நடந்த போது காஷ்மீரில் கல்லெறி சம்பவங்கள், கண்ணீர் புகை குண்டு வீச்சு, அவ்வப்போது துப்பாக்கி சூடு என குறைந்த தீவிரத்தில் இருந்த இப்பிரச்சனையை தற்கொலை குண்டு தாக்குதல் வரைக்கும் உயர்த்தியது பாஜகவின் சாதனை. சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் மாதிரியான பம்மாத்து வேலைகளை செய்து அரசியல் லாபம் தேட முயற்சி செய்ததன் பலனை ஒட்டுமொத்த நாடும் ராணுவத்தின் சாதாரண பின்னணி கொண்ட நம் வீரர்களும் அனுபவிக்கிறார்கள். இதற்கு யார் காரணம்.

 7. மணிகண்டன் மாமா,
  மக்கள் அதிகாரத்தின் “காவி கார்ப்பரேட் பாசிசம் – எதிர்த்து நில்” மாநாட்டுக்கு வர்றீங்கதானே…!

  • ஒருவனுக்கும் நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல துப்பில்லை

   • ஒருவேளை சூரியனை பார்த்து நாய் குலைககுதுனு இருந்துட்டாங்களோ என்னமோ… !

    • வினவு கூட்டங்களுக்கு மனசாட்சி உறுத்தல் அல்லது நேர்மையின்மையின் காரணமாக பதில் அளிக்க முடியாமல் இருக்கிறார்கள்…

     இஸ்லாமிய மதவெறியால் தான் காஷ்மீரில் பல ஆயிரம் உயிர்கள் பலியாகி இருக்கிறது ஆனால் வினவு கூட்டங்கள் மக்களுக்காக பேசுகிறோம் என்ற பெயரில் இத்தனை உயிர் பலிகளை வேடிக்கை பார்த்து கொண்டு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் பாகிஸ்தானுக்கு (இஸ்லாமிய மதவெறிக்கு) சார்பாக பேசி கொண்டு இருக்கிறார்கள்.

     கம்யூனிஸ்ட்கள் நேர்மையற்றவர்கள், மனித நேயம் சிறிதும் இல்லாதவர்கள்… அவர்களின் சித்தாந்தத்திற்காக பேசுகிறோம் என்று சொல்லி கொண்டு இந்திய மக்களுக்கு எதிராகவே இதுவரையில் நடந்து கொண்டு இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

 8. “இந்திய மக்களுக்கு எதிராகவே இதுவரையில் நடந்து கொண்டு இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை”

  You mean the 2% of the Indian population ?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க