இந்திய சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 41 பேரை பலிவாங்கிய புல்வாமா தாக்குதல் குறித்து தாம் வெளியிட்ட அறிக்கைக்காக, சமூக ஊடகங்களில் பாஜக-வினரால் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானவர் நவஜோத் சிங் சித்து. கடந்த 17.02.2019 அன்று ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய சித்து, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அன்சாரை 1999-ம் ஆண்டு பாஜக அரசு விடுதலை செய்ததைச் சுட்டிக்காட்டி பாஜக-வை கடுமையாகச் சாடினார்.
“என்னை தேச விரோதியாக சித்தரிப்பவர்கள், இந்திய சிறையில் இருந்த மசூத் அன்சாரை யார் பாகிஸ்தானிடம் ஒப்படைத்தனர் என்பதைப் பற்றியும் மக்களிடம் கூற வேண்டும். இவ்வளவு நாளும் மசூத் அன்சாரைப் பிடிக்க என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்பதையும் அவர்கள் கூற வேண்டும்” என்று கூறியிருக்கிறார்
மேலும் தனது அறிக்கை உள்நோக்கம் கொண்ட சிலரால் திரிக்கப்பட்டுள்ளதாகக் கூறியிருக்கிறார். “தேசியவாதம்தான் உயர்ந்த மதம். நான் எனது தேசத்தின் பக்கம்தான் இருக்கிறேன். நான் எனது தேசத்தின் மனசாட்சியை பிரதிபலிக்கிறேன். இந்தியாவின் குரல்தான் எனது குரல். நான் எனது கட்சியின் நிலைப்பாட்டில் உறுதியாக நிற்கிறேன்” என்றும் கூறினார்
தனது நிலைப்பாட்டை மீண்டும் ஒருமுறை கூறிய அவர், “ஏதும் அறியாத மக்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்டோர் சில உதிரிகளின் தவறான நடவடிக்கைக்காக தண்டிக்கப்படக்கூடாது. அது சீக்கிய குருக்களின் போதனைகளுக்கும் மனிதநேய சட்டங்களுக்கும் எதிரானது. அதே நேரத்தில் தாக்குதலைத் தொடுத்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்கு (பாஜக-வுக்கு) தைரியம் இருந்தால் தவறு செய்தவர்களைக் கொண்டுவந்து பொது இடத்தில் அவர்களைத் தூக்கிலிடுங்கள். இந்தியாவின் அமைதியும், வளர்ச்சியும் சில தீவிரவாதிகளால் பின்னடைவு அடையக் கூடாது.” என்றார்.
கடந்த வாரத்தில் சி.ஆர்.பி.எஃப் வீரர்களை ஏற்றிச் சென்ற வாகனத்தின் மீது (புல்வாமாவில் தீவிரவாதிகளால்) நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பின்னர், “ஒரு சில நபர்களை வைத்து ஒரு நாட்டையே குற்றம் சாட்ட முடியாது” என்று சித்து கூறியிருந்தார்.
படிக்க:
♦ காஷ்மீரி மருத்துவரை பாகிஸ்தானுக்கு போகச் சொல்லும் காவிகள் !
♦ இந்தியா முழுவதும் காஷ்மீரிகள் – முசுலீம்களை குறிவைக்கும் இந்துத்துவ குண்டர்கள் !
கடந்த 17.02.2019 அன்று ஹோசியார்பூருக்கு சித்து வருவதையொட்டி அங்கு பாஜக-வினர் நடத்தவிருந்த போராட்டத்தை குறித்து கூறுகையில், “இத்தகைய நடவடிக்கைகளின் மூலமாக என்னை முடக்கி விட முடியாது. இவை அனைத்தும் என்னை வருகின்ற பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திலிருந்து தடுப்பதற்கான மோசமான நடவடிக்கைகள். கடந்த காலத்திலும் இது போன்றவை நடந்திருக்கின்றன. ஆனால் ஒவ்வொரு முறையும் நான் முன்பை விட பலமாக வெளிவந்து இருக்கிறேன்” என்று கூறினார்
இதனிடையே சித்து பேசவிருந்த பொதுக்கூட்டம் நடக்கவிருக்கும் இடத்தில் பாஜக-வினர் நடத்தத் திட்டமிட்டிருந்த எதிர்ப்பு போராட்டத்தை பாஜக-வினரை அங்கிருந்து அப்புறப்படுத்தியதன் மூலம் போலீசு தவிர்த்தது. அந்த இடத்தில் பெரும் எண்ணிக்கையிலான காங்கிரஸ் தொண்டர்களும் பாஜக-வினரை எதிர்கொள்ள குவிந்திருந்தனர். சித்து அங்கிருந்து கிளம்பிய உடன் அப்புறப்படுத்தப்பட்ட பாஜக-வினரை விடுவித்தது, போலீசு.
அதே நாளில், குருதாஸ்பூரில் உள்ள தினா நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சித்து, தனது கருத்தின் மீது எதிரணியினர் உருவாக்கிய சர்ச்சை முழுக்க முழுக்க அரசியல் காழ்புணர்ச்சியின் காரணமாகவே கட்டமைக்கப்பட்டது என்றார். மேலும் தாம் ஒருபோதும் தீவிரவாதத்திற்கு ஆதரவாக பேசவில்லை என்றார்.
40 சி.ஆர்.பி.எஃப் வீரர்களை பலிகொண்ட புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானின் கை இருக்குமா என்பது போன்ற கேள்விகளைத் தவிர்த்தார். மேலும் சோனி டிவி அவரை கபில் ஷர்மா நடத்தும் நிகழ்ச்சியில் இருந்து விலகிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டதாக பரவும் செய்திகளையும் அவர் கடுமையாகச் சாடினார். இது தொடர்பாக தமக்கு எவ்விதத்திலும் அந்நிறுவனம் தொடர்பு கொள்ளவில்லை என்றும் தாம் தற்போதும் அந்த நகைச்சுவை நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இருப்பதாகக் கூறினார்.
கடந்த பிப்ரவரி 12, 2019 அன்று நடந்த புல்வாமா தாக்குதலில் பலியான மனிந்தர் சிங் என்ற சி.ஆர்.பி.எஃப் வீரரின் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். “மனிந்தர் சிங்கும் அவருடன் பணிபுரிந்த வீரர்களும் தங்களது வாழ்வை இந்த நாட்டிற்காக தியாகம் செய்துள்ளனர்.” என்று கூறிய சித்து, இந்த மொத்த தேசமும் இத்தகைய பிரச்சனைக்குரிய காலகட்டத்தில் அவர்களின் குடும்பத்துடன் ஆதரவாக நிற்கும் என்றார்.
புல்வாமா தாக்குதல்கள் குறித்து சித்து தெரிவித்த யதார்த்தமான கருத்துக்களை கையில் எடுத்துக் கொண்டு சங்க பரிவாரக் கும்பல் அரசியல் செய்யும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் காங்கிரசு, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் சித்துவைக் கண்டித்திருக்கின்றன.
காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங், ”நவ்ஜோத் சிங் சித்து, உங்கள் நண்பர் இம்ரான் கானுக்கு புரிய வையுங்கள். அவரால்தான் நீங்கள் இங்கு சாடப்படுகிறீர்கள்” என்று தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”சித்துவுக்கு தேசத்தை விட அவரது நண்பர் (இம்ரான்கான்) தான் முக்கியம் போலத் தெரிகிறது” என்று கூறியிருக்கிறார்.
ரஃபேல் ஊழல் வேலை வாய்ப்பின்மை உள்ளிட்ட அனைத்தையும் ஊற்றிமூடும் விதமாக ஊடகங்களின் துணையுடன் பாஜக, சங்க பரிவாரக் கும்பல் தேசபக்த நாடகம் ஆடுகிறது.
காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் சங்க பரிவாரத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு அடிபணிந்து சரணடைகின்றன. நாற்பது பேரை பலிகொடுக்குமளவு இந்தியாவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தவறாக இருந்திருக்கின்றன என்ற அளவிற்கு கூட இவர்கள் கேட்பதற்கு தயாராக இல்லை. தேசபக்தி, இராணுவம் என்று வந்த பிறகு இவர்களுக்கும், இந்துத்துவ கும்பலுக்கும் நாட்டு மக்கள் நினைவுக்கு வருவதில்லை. பணமதிப்பழிப்பின் போது எல்லையிலே இராணுவ வீரன் கஷ்டப்படும் போது ஏடிஎம்மில் நிற்பதற்கு உனக்கு என்ன கேடு என்று கேட்டவர்களல்லவா சங்கிகள்?
– நந்தன்
நன்றி : இந்துஸ்தான் டைம்ஸ்