பஞ்சாப் மாநில விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த தானியங்களைக் கொள்முதல் செய்ய மறுக்கும் ஆளும் ஆம் ஆத்மி அரசிற்கு எதிராகவும் பாசிச மோடி அரசிற்கு எதிராகவும் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
தொடர்ச்சியான போராட்டத்தின் ஒரு பகுதியாக சம்யுக்தா கிசான் மோர்சா தலைவர் பல்பீர் சிங் ராஜேவால் தலைமையிலான குழு நெல்லை கொள்முதல் செய்யும்படி கடந்த 18 ஆம் தேதி முதல்வர் பகவந்த மான் வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இரண்டு நாட்களில் தானியங்களைக் கொள்முதல் செய்வதற்கான பணிகள் தொடங்கும் என்று உறுதியளிக்கப்பட்டதையடுத்து தர்ணா போராட்டத்தை நிறுத்துவதாக விவசாயிகள் அறிவித்தனர்.
ஆனால் உறுதியளித்த படி தானியங்களைக் கொள்முதல் செய்வதற்கான எந்த நடவடிக்கையும் ஆம் ஆத்மி அரசு எடுக்காததால் அக்டோபர் 21 ஆம் தேதியன்று பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் தமணி நெடுஞ்சாலையை முற்றுகையிட்டு காலவரையறையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மறுநாளான 22 ஆம் தேதி ஜலந்தர், ஹோஷியார்பூர், கபுர்தலா, ஷாஹீத் பகத்சிங் நகர் மற்றும் லூதியானா மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் மாநிலத்தின் பக்வாரா நகரில் உள்ள கிராண்ட் டிரங்க் சாலையின் ஒரு பகுதியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாயிகளின் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் விதமாகக் குறைந்தபட்ச ஆதார விலைக்கான போராட்டத்தை நடத்திய பாரதிய கிசான் யூனியன் (BKU), கிசான் மஸ்த்தூர் மோர்ச்சா (KMM), கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி (KSMC), சம்யுக்தா கிசான் மோர்சா (SKM) ஆகிய சங்கங்கள் விவசாயிகளின் முற்றுகைப் போராட்டத்தை ஆதரித்து அவர்களும் விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
படிக்க: டோல் கேட்டை கைப்பற்றிய விவசாயிகள் | விவசாயிகளின் போர் குணத்தை வரித்துக்கொள்வோம்! | தோழர் ரவி
விவசாயிகள் கூறுகையில் ஆம் ஆத்மி அரசானது இந்திய உணவு கழகத்தின் (Food Corporation of India – FCI) குடோன்களில் தானியங்களைச் சேமிப்பதற்கான இடம் இல்லை என்றும், அதனால் கொள்முதல் செய்யமுடியவில்லை என்றும் தெரிவித்து கொள்முதலைத் தாமதப்படுத்தி வருகிறது. நெல்லை விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்துத்தான் நவம்பர் முதல் வாரத்தில் கோதுமை பயிரை விதைக்க முடியும். கொள்முதலைத் தாமதப்படுத்துவதால் கோதுமை விதைப்பதற்கும் தாமதம் ஏற்பட்டு வருவதாக விவசாயிகள் கவலையுடன் தெரிவித்து வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாரதிய கிசான் யூனியன் தலைவர் மண்ஜித் சிங் ராய் சாலையினை முற்றுகையிடுவது பயணிகளுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று எங்களுக்குத் தெரியும் ஆனால் மத்திய, மாநில அரசுகளை எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வைப்பதற்கு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்தார்.
செவ்வாய் (அக்டோபர் 22) நிலவரப்படி நெல் கொள்முதல் தொடங்கி 22 நாள் ஆகின்ற நிலையில் அரசானது இன்னும் கொள்முதலை தொடங்காததால் டன் கணக்கிலான தானியங்கள் விவசாயிகளின் வீடுகளிலும், தானிய சந்தைகளிலும் கொட்டி கிடப்பதாகக் கூறினார்.
“அக்டோபர் மாதமே முடிவடையவுள்ளது; பஞ்சாபின் தோபா மஜா மற்றும் மால்வா பிராந்தியப் பகுதிகளில் முன்பே நெல் கொள்முதல் தொடங்கப்படாததால் பாஸ்மதி நெல் அறுவடை செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இரண்டு நாட்களில் தானியங்களைக் கொள்முதல் செய்யவில்லை என்றால் பஞ்சாப் முழுவதும் உள்ள சாலைகளைத் தடுப்போம் என்று மத்திய மாநில அரசுகளை எச்சரிக்கிறோம்.
பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசானது பஞ்சாப் மாநிலத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையில் வஞ்சித்து வருகிறது. எங்களின் தானியங்கள் கொள்முதல் செய்யப்பட்டு எங்களுக்கான நிலுவைத் தொகை கிடைக்கும் வரை எங்களின் போராட்டம் தொடரும்” என்று மண்ஜித் சிங் ராய் மேலும் கூறினார்.
படிக்க: மோடி அரசின் உயிரி செறிவூட்டப்பட்ட விதைகள் விவசாயிகளுக்கு நன்மை அளிக்குமா?
பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசுடனும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புடனும் அரவிந்த் கெஜ்ரிவால் கைகோர்த்து இருப்பதாகப் பல விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
ஹர்ஜிந்தர் என்கிற மற்றொரு விவசாயி “அறுவடைக் காலம் தொடங்குவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே ஆலைகள் தானியங்களைக் கொள்முதல் செய்வதற்கு முன்வந்தாலும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்கள் எம்.பி-க்கள் நேரடியாகச் சென்று ஆலை நிர்வாகிகளிடம் பேசுவதில்லை மற்றும் பங்குதாரர்களுடன் விவசாயிகளுக்கு ஏற்படும் நெருக்கடியைச் சரி செய்வதற்கும் முயற்சி செய்வதில்லை” என்று கூறினார்.
இந்நிலையில் “நெல் கொள்முதல் காலம் முடியப் போகின்ற நிலையில் தானிய சந்தையிலிருந்து 20 சதவிகிதம் தானியங்கள் மட்டும் கொள்முதல் செய்யப்பட்டுள்ள நிலையில் முதலமைச்சர் தீவிரமாக விளம்பரப்படுத்திய பி.ஆர் 126 வகை தானியங்களையும் அரசு அதிகாரிகள் ஏன் கொள்முதல் செய்யவில்லை என்ற கேள்விக்கு முதல்வர் பதிலளிக்க வேண்டும்” என்று மேலும் தெரிவித்துள்ளார்.
நவ்தீப் சிங் என்கிற மற்றொரு விவசாயி கூறுகையில் “அரசு நெல்லை கொள்முதல் செய்யாத காரணத்தினால் பயிர்களின் ஈரப்பதம் குறைந்து ஒரு குவிண்டாலுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள 2,320 ரூபாயிலிருந்து 100 ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளோம். இதனால் ஏற்பட்ட இழப்பை யார் ஈடுகட்டுவது” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
முக்கியமாக சந்தையில் என்ன மாதிரியான விதைகள் விற்கப்படுகின்றன என்பதைப் பற்றி ஆம் ஆத்மி அரசு கண்காணிப்பதில்லை. பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகத்தினால் சான்றளிக்கப்பட்ட நெல் விதைகள் தனியார் நிறுவனங்களால் கிலோ ஒன்று 58 ரூபாய்க்கும் கலப்பின விதைகள் 300 ரூபாய் முதல் 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவது பற்றி ஆம் ஆத்மி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கார்ப்பரேட் ஆதரவு அரசாகச் செயல்பட்டு வருகிறது.
படிக்க: இந்திய விவசாயிகளின் நெருக்கடி வாழ்வு: மேலும் துயரத்தை நோக்கி!
22 ஆம் தேதி எஸ்.கே.எம் வெளியிட்ட அறிக்கையில் “2022-2023 ஆம் நிதியாண்டிற்கான செலவினத்தில் உணவிற்கான மானியம் 2,72,802 கோடியாக இருந்த நிலையில் 2023-2024 ஆண்டிற்கான திருத்தப்பட்ட பட்ஜெட்டில் 2,12,332 கோடி மட்டுமே மானியத்திற்காகச் செல்லவிடப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டைவிட 60,470 கோடி குறைத்துள்ள நிலையில் 2024-25 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் உணவு மானியம் 2,05,250 கோடியாக நிர்ணயித்து மேலும் 7,082 கோடியாகக் குறைத்துள்ளது.
இதேபோன்று 2022-23 ஆம் ஆண்டிற்கான உரம் மானியத்திற்கான நிதியினை 2,51,339 கோடியாகவும், 2023-24 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் 62,444 கோடி ரூபாய் குறைத்து 1,88,894 கோடியாகவும் ஒதுக்கியுள்ளது. 2024-25 ஆண்டு பட்ஜெட்டில் மேலும் 24,894 கோடி ரூபாயினை குறைத்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் விவசாயத்தை தனியார்மயமாக்கும் நடவடிக்கையில் தொடர்ந்து பாசிச மோடி அரசு ஈடுபட்டு வருவது அம்பலமாகிறது.
இந்திய உணவுக் கழகம் தனது தானிய சேமிப்பு இடங்களை அதானி அம்பானிகளின் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வாடகைக்கு விட்டுள்ளதாக எஸ்.கே.எம் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகளுடன் போராட்டத்தில் ஒன்றுபடுவதற்கு அழைப்பு விடுப்பதாக தன்னுடைய அறிக்கையில் எஸ்.கே.எம் தெரிவித்துள்ளது.
பிப்ரவரி மாத இறுதி முதல் தாங்கள் உற்பத்தி செய்யும் தானியங்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும் என்ற முதன்மையான கோரிக்கையோடு உலக வர்த்தக கழகத்திலிருந்து வெளியேற வேண்டும் போன்ற விவசாய கார்ப்பரேட் திட்டங்களுக்கு எதிரான கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் போராட்டத்தை விவசாயிகள் தற்போது வரை நடத்திவருகின்றனர்.
படிக்க: வெல்லட்டும் விவசாயி போராட்டம் | ம.க.இ.க ”சிவப்பு அலை” கலைக்குழு | புதிய பாடல்
நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசா பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையினை அனைத்து மாநிலங்களிலும் அமலப்படுத்துவோம் என்று பிரச்சாரம் செய்த எதிர்க் கட்சிகளின் கூட்டணியிலிருந்தது ஆம் ஆத்மி. பஞ்சாபில் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை அமல்படுத்துவோம் என்று கூறியிருந்த ஆம் ஆத்மி அரசுதான் தற்போது மாநிலத்தில் உள்ள விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்யாமல் தனியார் நிறுவனங்களுக்குக் குத்தகைக்குக் கொடுக்கிறது.
2020-21 ஆம் ஆண்டில் விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும் எதிரான மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் பஞ்சாப் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டதன் விளைவாக மூன்று வேளாண் சட்டம் திரும்பப் பெறப்பட்ட நிலையில் அதற்குப் பழிவாங்கும் விதமாகப் பஞ்சாப் விவசாயிகள் உற்பத்தி செய்த தானியங்களைக் கொள்முதல் செய்ய மறுத்து வஞ்சித்து வருகிறது பாசிச மோடி அரசு.
பா.ஜ.க-வுக்கு மாற்று என்று கூறிக்கொள்ளும் ஆம் ஆத்மி போராடும் விவசாயிகளுக்குத் துணைநின்றிருக்க வேண்டும். ஆனால், அமைதியாக இருப்பதன் மூலம் பல மாதங்கள் போராட்டத்திற்குப் பிறகு ரத்து செய்யப்பட்ட கார்ப்பரேட் நலனுக்கான மூன்று வேளாண் சட்டங்களை மறைமுகமாக விவசாயிகள் மீது திணிப்பதற்கு ஆம் ஆத்மி அரசு துணைபுரிவதை விவசாயிகள் அம்பலப்படுத்தியுள்ளனர்.
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram