டெல்லி தண்ணீர் தட்டுப்பாடு யார் காரணம்?

டெல்லி ஜல் போர்டில் புரையோடிப் போயுள்ள ஊழல்களும் கார்ப்பரேட்மயக் கொள்கைகளை அமல்படுத்தப்படுவதாலேயே நடக்கின்றன. இதன்விளைவாக டெல்லி மக்களுக்கு தண்ணீரை விநியோகம் செய்யும் கட்டமைப்புகள் பராமரிப்புகளின்றி படிப்படியாக சிதைக்கப்பட்டு வருகின்றன

பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

டந்த ஜூன் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.

000

கேள்வி: இந்திய நாட்டின் தலைநகரான டெல்லி, கடந்த இரண்டு மாதங்களாக மிகக் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையில் சிக்கித் தவித்து வருகிறது. பா.ஜ.க. ஆளும் ஹாரியானா மாநிலம் தண்ணீர் வழங்காததுதான் தண்ணீர் பற்றாக்குறைக்கு காரணம் என்று ஆளும் ஆம் ஆத்மி அரசும், ஆம் ஆத்மி அரசின் ஊழல், அலட்சியமே காரணம் என அம்மாநில பா.ஜ.க-வும் காங்கிரசும் மாறி மாறிக் குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்கின்றன. உண்மையில் டெல்லி தண்ணீர் பற்றாக்குறைக்கு என்ன காரணம்?

டெல்லி நகரத்தின் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. ஏற்கெனவே காலநிலை மாற்றத்தால் டெல்லி நகரத்தின் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸ்க்கும் மேலாக அதிகரித்ததால் அச்சூழலை எதிர்கொள்ள முடியாமல் தவித்து வந்த மக்களின் வாழ்நிலையை தண்ணீர் தட்டுப்பாடு மேலும் மோசமாக்கியுள்ளது.

அன்றாடம் தங்களின் அத்தியாவசிய தேவைக்குரிய அளவை விட குறைவான அளவு தண்ணீரை பெறுவதற்குக் கூட, பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருப்பது, தண்ணீர் லாரிகளில் முந்தியடித்துக் கொண்டு தண்ணீரை தங்களுடைய குடங்களில் நிரப்ப முயல்வது போன்ற அவலநிலைக்கு டெல்லி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். மேலும், டெல்லி நகரத்தின் பல பகுதிகளில் அரசாங்கத்தால் ஒரு வேளை மட்டுமே தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதால் இந்நிலைமை மேலும் மோசமாகியுள்ளது.

டெல்லியை பொறுத்தவரை, தன்னுடைய தண்ணீர் தேவையில் 90 சதவிகிதத்தை பூர்த்தி செய்ய அண்டை மாநிலங்களான இமாச்சலப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசத்தையே சார்ந்துள்ளது. அதில் யமுனா நதியிலிருந்து 40 சதவிகிதமும், கங்கையிலிருந்து 25 சதவிகிதமும், பக்ரா நங்கல் அணையிலிருந்து 22 சதவிகிதமும் 13 சதவிகிதம் ஆழ்துளை கிணறுகள் மூலம் பெறப்படுகிறது. இந்த தண்ணீர் ஒன்பது சுத்திகரிப்பு நிலையங்களில் சுத்திகரிக்கப்பட்டு 15,473 கி.மீ நீளமுள்ள பைப்லைன் வலையமைப்புகள் மற்றும் நிலத்தடி நீர் தேக்கங்கள் மூலம் நகரம் முழுவதும் விநியோகிக்கப்படுகிறது.

டெல்லியின் நீர் தேவையை பூர்த்தி செய்ய முக்கிய பங்காற்றும் யமுனை நதியிலிருந்து விடுவிக்க வேண்டிய நீரை திட்டமிட்டு ஹரியானா பா.ஜ.க அரசு குறைத்து விடுவிப்பதே தண்ணீர் தட்டுப்பாட்டிற்கு காரணம் என்று டெல்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி மர்லேனா குற்றம் சாட்டுகிறார். இதன்மூலம் தண்ணீர் பற்றாக்குறைக்கு பா.ஜ.க.வின் சதி நடவடிக்கையே காரணம் என்று ஆளும் ஆத்மி அரசு குற்றஞ்சாட்டி வருகிறது.

ஆம் ஆத்மி அரசு கூறுவதைப் போல ஹரியானா மாநில பா.ஜ.க. அரசு டெல்லி நகரத்திற்கு தர வேண்டிய உரிய பங்கீட்டு நீரை திட்டமிட்டு குறைத்தே வழங்கி வருகிறது. ஹரியானா அரசு டெல்லி நகரத்திற்கு உரிய பங்கீட்டு நீரை வழங்க மறுப்பது 30 ஆண்டுகளாக உள்ள பிரச்சினையாகும். இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி இருந்த போதிலும், டெல்லிக்கு உரிய நீரை வழங்குவதற்காக யமுனாக் கால்வாய் கட்டப்பட்ட பிறகும் இந்த பிரச்சினை நீடித்தே வருகிறது.


படிக்க: மழைவெள்ளத்திற்குக் காரணம் காலநிலை மாற்றமா? தொழில்நுட்ப பிரச்சினையா?


2014-இல் ஒன்றியத்திலும் ஹரியானாவிலும் பா.ஜ.க. ஆட்சி அமைந்த பிறகும், டெல்லியின் தண்ணீர் பிரச்சினை தீவிரமாகியுள்ளது. ஹரியானா அரசு டெல்லிக்கு வழங்க வேண்டிய நீரை திட்டமிட்டு குறைந்து வந்துள்ளது. இந்த பிரச்சினை தொடர்பாக ஆம் ஆத்மி அரசு 2018 ஆம் ஆண்டிலிருந்து உச்ச நீதிமன்றத்தில் பல முறை மனுதாக்கல் செய்தது. அதில் 2021-ஆம் ஆண்டு டெல்லிக்கு வழங்க வேண்டிய நீரை 120 மில்லியன் கேலன்கள் வரை குறைத்து வழங்கியுள்ளதாக குற்றம் சாட்டியது. மேலும் பல பத்திரிகையாளர்களும் ஹரியானா அரசு யமுனை நதியின் நீரை தொழிற்துறை நோக்கங்களுக்காக திறந்துவிடுவதை அம்பலப்படுத்தியுள்ளனர்.

ஆனால், டெல்லியில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறைக்கு ஆம் ஆத்மி அரசு கூறுவதைப் போல, ஹரியானா அரசு டெல்லிக்கு உரிய தண்ணீரை விடுவிக்காதது மட்டுமே காரணமல்ல. சட்டவிரோதமாக செயல்படும் டேங்கர் மாஃபியா கும்பல்களின் செயல்பாடுகள், கார்ப்பரேட் நிறுவனங்களின் சுரண்டல், யமுனை நதியின் மாசுபாடு உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன.

டெல்லியில் டேங்கர் மாஃபியா கும்பல்கள் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. இக்கும்பல்கள் தங்களின் இலாப நோக்கத்திற்காக சட்டத்திற்கு புறம்பாக ஆழ்துளை கிணறுகளை துளையிட்டு வரைமுறையின்றி தண்ணீரை சூறையாடி வருகின்றன. இக்கும்பல்கள் சட்டவிரோதமாக செயல்படுவதாகக் கூறினாலும் போலீசு மற்றும் அரசு அதிகாரிகளின் துணையோடு தான் செயல்பட்டு வருகின்றன. இக்கும்பல்களின் கீழ் டெல்லியில் 20,552 சட்டவிரோத ஆழ்துளைக் கிணறுகள் செயல்பட்டு வருவதாக “டெல்லி ஜல் போர்டு” (Delhi Jal Board) கூறுகிறது. ஆனால், களநிலவரம் அரசு கூறும் எண்ணிக்கையை விட அதிகமாகவே இருக்கும்.

தனியார்-கார்ப்பரேட் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், உல்லாச விடுதிகள், மால்கள், நட்சத்திர ஹோட்டல்கள், ஆடம்பர பங்களாக்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் போன்றவைகளின் தண்ணீர் தேவைக்காகத்தான் இக்கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன. டெல்லியில் வசிக்கும் நடுத்தர வர்க்கத்தினரும் தண்ணீர் தட்டுப்பாட்டின் போது வேறுவழியின்றி இக்கும்பல்களை அணுகுகின்றனர். ஆனால் இக்கும்பல்களால் அவர்களுக்கு விற்பனை செய்யப்படும் தண்ணீரின் அளவு, தனியார்-கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படும் தண்ணீரின் அளவை விட மிகச் சொற்பமே ஆகும்.

மேலும், இக்கும்பல்கள் தங்களின் கீழ் உள்ள ஆழ்துளை கிணறுகள் வற்றிய பிறகு அடுத்தடுத்த ஆழ்துளைக் கிணறுகளை புதியதாக துளையிட்டு வருகின்றன. இதன்விளைவாக, டெல்லியில் நிலத்தடி நீரின் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.

அடுத்து, டெல்லியின் நீர் தேவைக்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் யமுனை நதியில் ஏற்பட்டுள்ள மாசுபாட்டால் தண்ணீரில் அம்மோனியா அளவானது 0.5 பி.பி.எம். அளவை தாண்டி விடுவதால் வசிராபாத் மற்றும் சந்திரவால் நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் உற்பத்தி சுமார் 50 சதவிகிதம் வரை குறைகிறது. மேலும் அசுத்தமான தண்ணீரும் மக்களுக்கு விநியோகிக்கப்படுவதற்கு காரணமாகிறது.

யமுனை நதியின் மாசுபாட்டிற்கு அபாயகரமான தொழிற்சாலைக் கழிவுகள் எந்த சுத்திகரிப்பின்றியும் நதியில் திறந்துவிடுப்பதே முக்கிய காரணமாகும். அவற்றில் இருந்து கழிவுகள் கொட்டப்படுவதை தடுத்தாலே யமுனை நதியின் மாசுபாட்டை பெருமளவு குறைத்துவிட முடியும்.

ஆனால், டெல்லி மாநில அரசும் ஒன்றிய அரசும் யமுனை நதி மாசுபடுவதைப் பற்றி எந்த கவலையும் கொள்வதில்லை. மக்களை ஏமாற்றுவதற்காக யமுனை நதியை தூய்மைப்படுத்துவதற்காக பல திட்டங்களை செயல்படுத்துவதாகக் கூறிக்கொண்டு அவற்றை கிடப்பில் போட்டு வைத்துள்ளன. மறுபுறம், யமுனை நதியில் தொழிற்சாலைக் கழிவுகள் கொட்டப்படுவதை தெரிந்தே அனுமதிக்கின்றன.


படிக்க: ஜோஷிமத் நகர நிலச்சரிவு: வெறும் இயற்கை பேரிடரா?


அதேபோல், டெல்லி மக்களுக்கு தண்ணீரை உற்பத்தி மற்றும் விநியோகம் செய்துவரும் டெல்லி ஜல் போர்டில் (DJB) மறுகாலனியாக்கக் கொள்கைகளான தனியார்மய-தாராளமய-உலகமயக் கொள்கைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு, டி.ஜே.பி-இன் பணிகளைப் பல்வேறு வேலைகளாகப் பிரித்து, ஒவ்வொரு வேலையையும் தனித்தனி துறைகளாக்கி, அவற்றை அவுட்சோர்சிங் மூலம் நிறைவேற்றும் வகையில் டி.ஜே.பி-யானது கார்ப்பரேட் மயமாக்கப்பட்டுள்ளதே டெல்லியில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறைக்கு பிரதான காரணமாக உள்ளது.

டெல்லி ஜல் போர்டை கார்ப்பரேட்மயமாக்கியதில் ஆம் ஆத்மி கட்சிக்கு மட்டுமல்ல, கடந்த 30 ஆண்டுகளாக டெல்லியை ஆட்சி செய்த அனைத்து கட்சிகளுக்கும் பங்குண்டு. டெல்லியை காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்தபோதே டி.ஜே.பி-யை கார்ப்பரேட்மயப்படுத்தும் வேலைகள் தொடங்கப்பட்டன. 2005-ஆம் ஆண்டில் டெல்லி நகரத்தை 21 மண்டலங்களாகப் பிரித்து கார்ப்பரேட்மயப்படுத்தும் பணிகளைப் பற்றி பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளது. அதேபோல, 2020-ஆம் ஆண்டு ஆம் ஆத்மி அரசும் டெல்லியை ஏழு முதல் எட்டு மண்டலங்களாகப் பிரித்து கார்ப்பரேட்மயப்படுத்தும் “ஒரு மண்டலம் ஒரு ஆப்பரேட்டர்” கொள்கை பற்றி விவாதித்துள்ளது.

டெல்லி ஜல் போர்டை கார்ப்பரேட்மயப் படுத்துவதற்கான செய்திகள் வெளியான போதெல்லாம், சமூக செயற்பாட்டாளர்களிடம் இருந்தும் மக்களிடம் இருந்தும் எழுந்த எதிர்ப்பினால் டெல்லி ஆளும் கட்சிகள் டெல்லி நகரத்தின் தண்ணீர் விநியோகத்தை கார்ப்பரேட்மயப்படுத்த மாட்டோம் என்று பல முறை வாக்குறுதியளித்துள்ளன. ஆனால் மறைமுகமாக டெல்லி ஜல் போர்டைதனியார்மயப்படுத்தியே வந்துள்ளன.

டெல்லி ஜல் போர்டில் புரையோடிப் போயுள்ள ஊழல்களும் கார்ப்பரேட்மயக் கொள்கைகளை அமல்படுத்தப்படுவதாலேயே நடக்கின்றன. இதன்விளைவாக டெல்லி மக்களுக்கு தண்ணீரை விநியோகம் செய்யும் கட்டமைப்புகள் பராமரிப்புகளின்றி படிப்படியாக சிதைக்கப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகள்தான் ஒன்பது நீர் சுத்திரிப்பு நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் தண்ணீர் மக்களை சென்றடைவதற்குள் பாதிக்கும் குறைவான அளவில் வீணாவதற்கான காரணமாகும்.

எனவே, டேங்கர் மாஃபியா, யமுனை நதியின் மாசுபாடு, ஹரியானா உரிய நீரை வழங்காமல் இருக்கும் அரசின் செயல்பாடுகள் ஆகியவை அனைத்தும் தனியார்மய-தாராளமய-உலகமய என்ற மறுகாலானியாக்க கொள்கைகளை ஏற்றுக்கொண்டதன் விளைவே.


பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

(புதிய ஜனநாயகம் – ஜூலை 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க