2025-ஆம் ஆண்டு தொடக்கத்தில் டெல்லி யூனியன் பிரதேசத்தின் சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர் பட்டியலிலிருந்து அதிகளவிலான வாக்காளர்களின் பெயர்களை நீக்க பா.ஜ.க. திட்டமிட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
நேற்று (06/12/2024) செய்தியாளர்களை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால், ஹ்தாரா, ஜனக்புரி மற்றும் லக்ஷ்மி நகர் போன்ற தொகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் பெயர்களை நீக்க பா.ஜ.க. தலைவர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்துள்ளதை அம்பலப்படுத்தினார். குறிப்பாக, ஷாதாரா தொகுதியிலிருந்து மட்டும் 11,018 வாக்காளர் பெயர்களை நீக்க பா.ஜ.க. விண்ணப்பித்துள்ளதாகவும், இந்த வாக்காளர்களில் 500 பேரை சோதித்தபோது அதில் 75 சதவிகித மக்கள் இன்னும் பட்டியலிடப்பட்ட முகவரிகளிலேயே வசிப்பதைக் கண்டறிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
11,000 வாக்காளர்களை நீக்குவது, தொகுதியில் உள்ள மொத்த வாக்காளர்களில் சுமார் ஆறு சதவிகிதம் என்றும் இது தேர்தல் முடிவை கணிசமாக பாதிக்கும் என்றும் அரவிந்த் தெரிவித்துள்ளார். 2020 சட்டமன்றத் தேர்தலின் போது இத்தொகுதியில் வெறும் 5,294 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க-வை ஆம் ஆத்மி தோற்கடித்தது இங்கு கவனிக்கத்தக்கது.
மேலும், வாக்காளர்களை நீக்குவது குடிமக்களின் வாக்குரிமையை பறிக்கும் சதி என்று கூறியுள்ள கெஜ்ரிவால், “பா.ஜ.க-விற்கு இத்தேர்தலில் தோல்வி அடைவது நன்கு தெரியும், அதனால்தான் இதுபோன்ற நியாயமற்ற தந்திரங்களை மேற்கொள்கிறது” என்றார். முறைகேடுகளில் ஈடுபடும் அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் மட்டுமின்றி அண்மையில் நடந்துமுடிந்த மகாராஷ்டிரா தேர்தலிலும் வாக்காளர்களின் பெயரை நீக்கி, இணைத்து பா.ஜ.க. அதன் வெற்றியை உறுதி செய்துகொண்டது. அதாவது மகாராஷ்டிராவில் நாடாளுமன்றத் தேர்தலுக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கும் இடைப்பட்ட ஜூலை 2024 முதல் நவம்பர் 2024 வரையிலான காலத்தில் 47 லட்சம் வாக்காளர்கள் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்; சராசரியாக 50,000 வாக்காளர்கள் அதிகரித்த 50 சட்டமன்றத் தொகுதிகளில் 47 தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. அதேபோல் இந்தியா கூட்டணி கட்சிகளின் வாக்காளர்கள் பத்து லட்சம் பேரும் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். தற்போது அதே வழிமுறையைதான் டெல்லியிலும் அமல்படுத்துகிறது, பாசிசக் கும்பல்.
ஆனால், மறந்தும் எதிர்க்கட்சிகளை ஜனநாயகமாக அணுக விரும்பாத காவி கும்பல் ஆம் ஆத்மி கட்சி மோசடி வாக்காளர்களை பாதுகாப்பதாக அவதூறு செய்துள்ளது. மேலும், “(வாக்காளர்களில்) ரோஹிங்கியாக்கள் மற்றும் பங்களாதேஷிகள் பிடிபடுவதால் கெஜ்ரிவால் பீதியடைந்துள்ளார். ஏனெனில் அவர் வெளிநாட்டு மூலங்களிலிருந்து பெற்றதாகக் கூறப்படும் பணத்தால் நிதியளிக்கப்பட்ட இந்த வாக்கு வங்கி தற்போது அம்பலப்படுத்தப்படுகிறது” என்று டெல்லி பா.ஜ.க. தலைவர் வீரேந்திர சச்தேவா ஆம் ஆத்மி மீது அப்பட்டமான வெறுப்பை கக்கியுள்ளார்.
இந்நிலையில், பா.ஜ.க-வின் தேர்தல் மோசடிகளை தடுத்துநிறுத்த ஆம் ஆத்மி கட்சி தேர்தல் ஆணையத்தை அணுகியுள்ளது. அதில் வாக்காளர்களை நீக்கும் அனைத்து விண்ணப்பங்களும் இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும் என்றும் அக்டோபர் 18-க்குப் பிறகு தொடங்கப்பட்ட நீக்குதல்களை நிறுத்துமாறும் கேட்டுகொண்டுள்ளது. ஆம் ஆத்மியின் குற்றச்சாட்டுகளுக்கு டெல்லி தலைமை தேர்தல் அதிகாரி இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.
ஆனால், தேர்தல் ஆணையத்தை அணுகுவதன் மூலம் பா.ஜ.க-வின் தேர்தல் மோசடிகளை முறியடிக்க முடியாது என்பதும் தேர்தல் ஆணையத்தின் பக்கபலத்துடன்தான் இம்மோசடிகள் நடந்தேறுகிறது என்பதும்தான் கடைசியாக நடந்த மகாராஷ்டிரா தேர்தலிலும் கிடைத்த அனுபவம். எனவே, பா.ஜ.க-தேர்தல் ஆணையம் கூட்டால் நீக்கப்படும் வாக்காளர்களை இணைத்துக்கொண்டு ஆம் ஆத்மி கட்சி தற்போதே போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும், அதுவே, பா.ஜ.க-வின் தேர்தல் மோசடிகளை முறியடிப்பதற்கான ஒரே வழி.
சோபியா
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram