காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய ரிசர்வ் படை வாகனங்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் 42 வீரர்கள் உயிரிழந்தார்கள். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு இயக்கமான ஜெய்ஸ்-இ-முகமது பொறுப்பேற்றது.

ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் நடந்த இந்தத் தாக்குதலுக்கு பாதுகாப்பு குறைவின்மையே முக்கிய காரணம் என முன்னாள் உளவுத்துறை தலைவர் உள்ளிட்ட பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், தேர்தல் நேரத்தில் ‘தேசபக்தி’ போர்வையில் இந்த சம்பவத்தை தன்னுடைய கீழ்த்தரமான அரசியலுக்கு பயன்படுத்தி வருகிறது இந்துத்துவ கும்பல்.

இந்தியாவின் பல இடங்களில் இந்தத் தாக்குதல் சம்பவத்தை வைத்து, வழக்கான முசுலீம் வெறுப்பு அரசியலை அவிழ்த்து விட்டுள்ளது காவி கும்பல். டெல்லி சிறுபான்மையினர் ஆணையர் சஃபாருல் இஸ்லாம் கான், டெல்லி போலீசு கமிஷனருக்கு எழுதியுள்ள கடிதத்தில், புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் காஷ்மீரிகள் மீது, முசுலீம்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக எழுதியுள்ளார்.

டெல்லியில்கூட கலவரத்தைத் தூண்டும் முயற்சிகள் நடந்து வருவதாகவும் பிரச்சினைகள் ஏற்பட வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு போராட்டங்கள் நடைபெறுவதாகவும் அந்தக் கடிதத்தில் அவர் சுட்டிக் காட்டுகிறார்.

“முசுலீம்கள் வாழும் பகுதிகளிலும் அனைத்து சமூகத்தினருடன் கலந்து வாழும் பகுதிகளில் உள்ள முசுலீம் வீடுகளின் முன்பும், ஆத்திர மூட்டும் வகையிலான முழக்கங்களை இந்துத்துவ கும்பல் எழுப்புகிறது. எனவே, உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை எடுங்கள். இல்லாவிட்டால், ஜம்முவில் நடப்பதைப்போல இங்கேயும் கலவரங்கள் நடக்கும். எந்த விலை கொடுத்தாவது அமைதி, நல்லுறவு நீடித்திருக்க டெல்லியில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் அறிவுறுத்துங்கள்.” என சிறுபான்மையின ஆணையர் எழுதியுள்ளார்.

படிக்க:
♦ காஷ்மீர் : ஊரடங்கு மட்டுமல்ல உள்ளத்தையும் அடக்கும் இந்திய அரசு !
♦ கிட்னியை எடுத்துட்டு அனுப்புனாக் கூட கேக்க நாதியில்லை !

தாக்குதலில் கொல்லப்பட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் டெல்லியின் பி. கே. தத்தா காலனி பகுதியில் நடந்த அமைதி ஊர்வலத்தில், சில இந்துத்துவ பொறுக்கிகள், பாபர் மசூதி இடிப்பு சம்பவத்துக்கு நடத்தப்பட்ட பிரச்சாரங்களில் ஒலித்த ‘பாபரின் மகன்களே வெளியேறுங்கள்’ என்ற மத கலவரத்தைத் தூண்டும் முழக்கங்களை எழுப்பியதாக த வயர் குறிப்பிடுகிறது.

நாட்டின் சில இடங்களில் இந்துத்துவ கும்பல் தாக்குதலையும் நடத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை பீகார் மாநிலம் பாட்னா அருகே காஷ்மீரி பஜார் பகுதியில் வசிக்கும் காஷ்மீரிகளை இந்த கும்பல் அடித்துள்ளது.  இந்தப் பகுதியில் கடை வைத்திருக்கும் 40-க்கும் மேற்பட்ட காஷ்மீரிகள் கடையை காலிசெய்துவிட்டு, ஊர் திரும்ப முடிவெடுத்துள்ளனர்.

டெராடூனில் உள்ள காஷ்மீரிகள் மீதும் தாக்குதல் நடத்தும் திட்டத்தோடு, இந்துத்துவ கும்பல் அலைவதாகவும் பாதுகாப்பின் பேரில் அவர்களை முசுலீம்கள் வசிக்கும் பகுதிக்குச் செல்ல போலீசு அறிவுறுத்தியதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஹரியாணா பல்கலைக்கழகத்தில் பயிலும் காஷ்மீரி மாணவர்கள், தங்குமிடங்களிலேயே கதவுகளை பூட்டிக்கொண்டு உள்ளேயே இருப்பதாக பத்திரிகையாளர் ஃபகத் ஷா தெரிவிக்கிறார்.

சத்தீஸ்கரில் காஷ்மீரி மாணவர்கள் தங்குமிடங்களில் இந்துத்துவ குண்டர்கள் நடத்திய தாக்குதல்…

ஜம்மு கடந்த மூன்று நாட்களாக பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இந்துத்துவ கும்பல் தெருக்களில் நிறுத்தப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட வாகனங்களை கொளுத்தியது, கட்டுப்படுத்த முடியாமல் வன்முறை சம்பவங்கள் நடந்துவருகின்ற நிலையில், அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தீவிரவாத தாக்குதலில் எந்தவித தொடர்பும் இல்லாத தங்கள் மீதும் எப்போதும் தாக்குதல் நடத்தப்படுவதாக காஷ்மீரைச் சேர்ந்த வாகன ஓட்டுநர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

வன்முறைகள், கலவரங்கள், படுகொலைகள் மூலம் அரியணை ஏறிய இந்துத்துவ அரசு, கிடைக்கும் அத்தனை வழிகளிலும் இவற்றை மீண்டும் நிகழ்த்திவிட துடிக்கிறது. அரசே வன்முறையை தூண்டினால், அந்நாட்டு மக்களுக்கு எங்கே பாதுகாப்பு இருக்கிறது?

வினவு செய்திப் பிரிவு
கலைமதி
நன்றி: த வயர் 

சந்தா செலுத்துங்கள்

ஊடகத் துறையில் நிறுவன விளம்பரங்கள் இன்றி மக்கள் நலனுக்காக போராடும் வினவு தளத்திற்கு தோள் கொடுங்கள்!

2 மறுமொழிகள்

  1. 40 வீரர்களை அநியாயமாக கொன்ற தீவிரவாதிகளை பற்றி உங்களுக்கு அக்கறையில்லை ஆனால் காஷ்மீரிகள் நலன் மீது மட்டும் உங்களுக்கு இவ்வுளவு அக்கறை. பாகிஸ்தானின் வார்த்தைகளை பேசும் நீங்கள் எல்லாம் பேசாமல் பாகிஸ்தானுக்கே போய்விடலாம்.

  2. இந்தியர்களே இந்தியாவை ஆட்சி புரியும் வரை இப்படியான அருவருக்கத்தக்க நிகழ்வுகள் நடந்தவண்ணமே இருக்கும் யாரோ ஒருவர் செய்த தவறுக்காக தனது அப்பாவி குடிமக்களையே திருப்பித் தாக்கி அவர்களது குடும்பங்களும் சொத்துக்களும் துவம்சம் செய்யப்படுவதும் கொலை செய்யப்படுவதும் கொள்ளையடிக்கப்படுவதும்; நமது இந்திய நாட்டினைத்தவிர வேறு எந்த நாட்டிலும் நடைபெறுவதாக எந்தக் குறிப்பும் எங்கும் இல்லை. அப்பாவிகளது குடும்பங்களும் மக்களும் அந்திய இராணுவத்தினராலும் இந்துத்துவவாதிகளாலும் நிர்மூலமாக்கப்படுவதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இத்தகைய கலவரங்கள் நாட்டில் தொடர்ச்சியாக குறிப்பாக ஒரு இனத்திற்கு மாத்திரம் குறிவைத்துத் தாக்கப்படுவது மக்களின் அறிவீனமா அல்லது அரசியல்வாதிகளின் கபடத்தனமா? எல்லாவற்றிறகும் இறை தீர்ப்பு என்று ஒன்று இருக்கின்றது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க