ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க தலைமையிலான சங்பரிவார் பாசிச கும்பல் தமிழ்நாட்டில் தங்களுக்கான அடித்தளத்தை உருவாக்க ஒன்றிய அரசின் துணைகொண்டும், தங்களுக்கேயுரிய கிரிமனல் வழிகளிலும் வெறித்தனத்தோடு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் அக்கும்பலின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் தமிழ்நாடு ஏதோவொரு வகையில் எதிர்வினையாற்றிக் கொண்டே இருக்கிறது.

தமிழ்நாட்டின் இத்தகைய எதிர்ப்புப் போக்கை புரிந்து கொண்டு காவிக்கும்பல் அதற்கேற்றாற்போல் படிப்படியாக காய்நகர்த்திக் கொண்டு வருகிறது என்பது நாம் அறிந்ததே.

குறிப்பாக ஒன்றிய அரசின் கங்காணியான ஆளுநர் ஆர்.என்.ரவி மூலமாக தங்களது தாக்குதலை பாசிஸ்டுகள் தொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். வள்ளுவரை காவிமயமாக்குவது, காசி தமிழ்ச்சங்கமம், தமிழ்நாடு என்று அழைக்க மறுப்பது, அரசுத் துறை செயலாளர்களை மாநில அரசுக்கெதிராக செயல்பட ஊக்குவிப்பது என்று பல்வேறு வழிகளில் தமிழ்நாட்டின் உரிமைகளை எல்லாம் காலில் போட்டு மிதித்து விட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி திமிரோடு செயல்பட்டு வருவதையும் பார்த்து வருகிறோம்.

சட்டமன்றத்தில் ஆளுநர் ரவியின் இழிவான நடவடிக்கையையும், அதற்கான எதிர்வினையையும் நாம் அறிவோம். தமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்றி விட வேண்டும் என்பதற்காக துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி பாசிச கும்பலின் இழிவான, சதித்தனமான செயல்பாடுகளை தமிழ்நாட்டு மக்கள் ஏற்கத் தயாரில்லை என்பதும் கடந்த காலங்களில் பல்வேறு விசயங்களில் நாம் பார்த்த நடைமுறை உண்மை.


படிக்க: இங்கேயும் சில நட்சத்திரங்கள் நகர்கின்றன!


அதே சமயம் இதில் நாம் திருப்தி அடைந்து விட முடியாது. குறிப்பாக, மேற்கண்ட அரசியல் பிரச்சினைகள் குறித்து பொதுவெளியில் வெளிப்பட்ட இரண்டு வகையான போக்குகளைப் பற்றி அம்பலப்படுத்துவதன் ஊடாக நாம் எதை நோக்கி நகரவேண்டும் என்பதை உணர்த்துவதே இக்கட்டுரையின் நோக்கம்.

முதலாவது போக்கு, பாசிச எதிர்ப்பு என்பதே, திமுக-வை ஆதரிப்பதுதான் என்ற கோணத்தில் ”எப்புட்றா” வகை வாதப் பிரதிவாதங்களை சமூக ஊடகங்களில் நடத்தி திமுக-வை எப்பாடுபட்டாவது காப்பாற்றத் துணியும் கேடுகெட்ட சந்தர்ப்பவாதப் போக்கைப் பற்றியது. இத்தகைய நபர்கள் முற்போக்கு பேசுவதைப் பற்றி நமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் இவர்கள் காவி – கார்ப்பரேட் பாசிசத்தை எதிர்த்து போராடும் புரட்சிகர, ஜனநாயக இயக்கங்களை கொச்சைப்படுத்துகிறார்கள் என்பதுதான் பிரச்சினை.

சமீபத்தில் அப்படியொரு ‘முற்போக்கு’ யூடியூப்பர் ஒரு சமூக ஊடகத்திற்கான பேட்டியில் பேசியிருந்தார். அதில் “ஆளுநரை எதிர்த்து ஜனநாயக இயக்கங்களும், புரட்சிகர இயக்கங்கள் என்று சொல்லிக் கொள்பவர்களும் அடையாளப் போராட்டங்கள் நடத்துகிறார்கள். ஆளுநர் செல்லுகின்ற இடங்களில் எல்லாம் கருப்புக் கொடி காட்ட வேண்டியது தானே? ஏன் தயங்குகிறார்கள், வழக்கு வந்தால் வரட்டுமே… தொடர்ச்சியாக இதைச் செய்தால் மக்கள் உணர்வு பெற்று தானாக களத்தில் சேர்ந்து கொள்வார்கள்… எழுச்சி தொடங்கும்… ஆளுநர் வெளியேற்றப்படுவார்… ஏன் இதைச் செய்யாமல் இருக்கின்றார்கள் என்றுதான் எனக்குப் புரியவில்லை” என்று ’புதியதொரு’ கோணத்தில் பேசியிருந்தார்.

சாத்தியமான மாற்றைப் பேசுவோருக்கு (அதாவது திமுக-வின் பின்னால் அணிதிரண்டு பாசிசத்தை வீழ்த்துவது) மிகவும் அலர்ஜியான விசயம் ஒன்று இருக்கிறது. அது மக்களை அமைப்பாக்குவதன் மூலம்தான் எதிரிகளை வெல்ல முடியும் என்பது.

கடந்த காலங்களில் நமது அனுபவம் என்ன? பார்ப்பன பயங்கரவாதத்தை எதிர்த்தும், மறுகாலனியாக்க சுரண்டலை எதிர்த்தும் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளோம். பார்ப்பன சாதித் தீண்டாமையை எதிர்த்த சீறீரங்கம் கருவறை நுழைவுப் போராட்டம், நெல்லை கங்கைகொண்டானில் கோக் எதிர்ப்புப் போராட்டம், தஞ்சை வினோதகன் மருத்துவமனையைக் கைப்பற்றும் போராட்டம், இறால் பண்ணை அழிப்புப் போராட்டம், திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளுக்கு எதிரான போராட்டம் இவையெல்லாம் ம.க.இ.க.வும் அதன் தோழமை அமைப்புகளும் முன்னின்று நடத்திய போராட்டங்கள். மாதக்கணக்கான இந்த இயக்கங்களில் லட்சக்கணக்கான துண்டறிக்கைகள், பல்லாயிரக்கணக்கான சுவரொட்டிகள், ஆயிரக்கணக்கான சுவரெழுத்துக்கள், நூற்றுக்கணக்கான பொதுக்கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள், போராட்டங்கள் என இடைவிடாமல் வேலை  செய்துள்ளோம்.


படிக்க: நூல் அறிமுகம் : அராஜகவாதமா ? சோசலிசமா ? | தோழர் ஸ்டாலின்


நமது பிரச்சாரங்களின் போது நம்மை தார்மீகரீதியாக ஆதரிக்கும் மக்கள் ஏன் இத்தகைய போராட்டங்களில் பெருந்திரளாக கலந்து கொள்ளவில்லை? ஏன் ஒரு எழுச்சியை நோக்கி தொடர்ச்சியாக இந்தப் போராட்டங்கள் நகரவில்லை? என்ற கேள்விதான் மிக முக்கியமானது.

பிரச்சார இயக்கங்களால் மக்களைத் திரட்ட முடியாது என்பதுதான் கசப்பான உண்மை. அதற்கு மக்கள் அமைப்பாக்கப்பட்டிருப்பதுதான் அடிப்படையான தேவை. அதுதான் நாம் பரிசீலிக்க வேண்டிய மிக முக்கியமான விசயம். இந்த உண்மையைப் பரிசீலிப்பது க்ரியா ஊக்கிகளுக்கு கசக்கத்தானே செய்யும்?

ஒரு எழுச்சியை உருவாக்குவது மட்டுமல்ல, அதைத் தக்கவைப்பதும், தொடர்ந்து எடுத்துச் செல்வதும்தான் முக்கியம். அதற்கு திரளான மக்கள் அமைப்பாக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதுதான் அரசியல் அரிச்சுவடி.

டெல்லி விவசாயிகள் போராட்டம் குறிப்பிட்ட அளவு எடுத்துச் செல்லப்பட்டதற்கான காரணம் குறிப்பிடத்தகுந்த அளவு விவசாயிகள் அமைப்பாக்கப்பட்டிருந்தார்கள் என்பதுதான் உண்மை. அதனால்தான் பஞ்சாப், ஹரியானாவைத் தவிர மற்ற இடங்களில் பெருந்திரளாக திரளவில்லை.

ஆனால், பொதுவில் பார்ப்பன எதிர்ப்பு, தமிழுணர்வு என்ற வகையில் தமிழ்நாட்டு மக்களிடம் குறிப்பிடத்தகுந்த அளவு உள்ள தார்மீக ஆதரவை மட்டும் வைத்துக் கொண்டு கனவுக்கோட்டை கட்டச் சொல்கிறார்கள் க்ரியா ஊக்கிகள். அதாவது திமுக-வுக்காக முற்போக்கு, ஜனநாயக இயக்கங்களும், புரட்சிகர இயக்கங்களும் தியாகம் செய்ய வேண்டும் என இவர்கள் கூறுகின்றனர். உழைக்கும் மக்கள் தங்களுக்கான சொந்த அடித்தளத்தை உருவாக்கத் தேவையில்லை, திமுக-வின் பின்னால் அணிதிரண்டால் பாசிசத்தை ஒழித்துவிட முடியும் என்று நம்பச் சொல்கின்றனர்.

பாசிசத்தை வீழ்த்துவதற்கு உழைக்கும் மக்களை அணிதிரட்டுவது, பாசிச எதிர்ப்பு நடவடிக்கைகள் பற்றிய எந்தப் புரிதலுமற்ற முதலாளித்துவ சந்தர்ப்பவாதக் கும்பல்களின் உளறல்களே இவை.


படிக்க: ‘சோசலிச’, ‘ஜனநாயக’ முகமூடிகளின் துரோகத்தில் செழித்துவளரும் பாசிச சக்திகள்!


கார்ப்பரேட் திமுக-வின் பாதந்தாங்கிகளாக இருந்து கொண்டு (இவர்கள் திமுக-வின் தொடர்ச்சியான கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கைகள் பற்றி மூச்சு கூட விடமாட்டார்கள்) போகிற போக்கில் ஜனநாயக இயக்கங்களையும், புரட்சிகர இயக்கங்களையும் அவதூறு செய்வது கடும் கண்டனத்துக்குரியதாகும்.

மார்க்சிய லெனினியத்தின் மீதும், புரட்சிகரக் கட்சியின் தலைமையில் மக்களைத் திரட்டுவதைப் பற்றியும் நம்பிக்கையிழந்த இவர்களால் வேறு எப்படிப் பேச முடியும்?

இன்னொரு பக்கம் ஆளுநரே வெளியேறு என்று போராடுவதைக் காட்டிலும், ஆளுநர் பதவியே வேண்டாம் என்று போராட வேண்டும் என சிலர் கூறுகின்றனர். ஏனெனில் அப்பதவியே பிரிட்டிஷ், பார்ப்பன, பனியா முதலாளிகளின் நலனுக்காக உருவாக்கப்பட்டது. எனவே அப்பதவியே வேண்டாம் எனப் போராட வேண்டும் எனக் கூறுகின்றனர்.

ஒரு குறிப்பிட்ட தருணத்தில், அச்சூழலுக்கேற்ப முழக்கங்களை முன்வைத்துப் போராடுவதற்கு அதற்கான திட்டமும், அரசியல் முன்முயற்சியும் இன்றியமையாதது. “ஆளுநரே வெளியேறு” என்பது குறிப்பிட்ட சூழலுக்கான முழக்கம் ஆகும்.

உதாரணத்திற்கு காவி – கார்ப்பரேட் பாசிசமானது தற்போதையை சூழலில் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி, அம்பானி – அதானி பாசிசமாக தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. இத்தகைய குறிப்பான சூழ்நிலைக்கேற்ப நமது அரசியல் முழக்கங்களை முன்வைத்து, மக்களிடம் கொண்டு செல்கிறோம்.

ஆனால், இப்படிப்பட்ட சிந்தனை முறையோ, நடைமுறையோ இல்லாததன் காரணமாகவே அராஜகவாதமான முறையில் தங்களது அரசியலை வெளிப்படுத்துகின்றனர். ஏனென்றால், இவர்கள் கூறுகின்ற விசயங்களை மக்களிடம் கொண்டு செல்லப்போவதில்லை. போகிற போக்கில் ஒரு அரசியல் பிரச்சினையில் அராஜகமான முறையில் தீர்வைப் பற்றிப் பேசுவது. அதற்கு பொறுப்பாக நடந்து கொள்ளவும் மாட்டார்கள். ஆனால் இன்னொரு பக்கம் நடைமுறையில் தங்கள் பகுதியில் ஒரு மருத்துவமனை தொடர்பான பிரச்சினையில் தலையிடும்போது குறிப்பிட்ட பிரச்சினைக்கேற்ப முழக்கம் வைக்கிறார்கள். இதன் காரணமாகத்தான் இவர்களை நவீன அராஜகவாத கும்பல் என்று கூறுகிறோம்.

உண்மையில் காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வேரடி மண்ணோடு வீழ்த்துவதற்கு, பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணிகளை கட்டியமைக்க வேண்டிய பெருந்தேவை நமக்கு முன்னே உள்ளது. இச்சூழலில் பெருவாரியான உழைக்கும் மக்களை அமைப்பாக்குவதைப் பற்றிய எந்தப் பார்வையும் இல்லாத, வாய்ச்சவடால் அடித்துக் கொண்டு கிளம்பியிருக்கின்ற இத்தகைய முதலாளித்துவ சந்தர்ப்பவாத, நவீன அராஜகவாதப் போக்குகளை புரிந்து கொண்டு தொடர்ச்சியாக அம்பலப்படுத்த வேண்டிய தேவை உள்ளது.

இனியன்

2 மறுமொழிகள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க