‘சோசலிச’, ‘ஜனநாயக’ முகமூடிகளின் துரோகத்தில் செழித்துவளரும் பாசிச சக்திகள்!

கார்ப்பரேட் நலன் சார்ந்த கொள்கைகள்தான் மக்களது வாழ்வாதார பறிப்புக்கு காரணம் என்பதை மறைத்து இன, தேச, மத, நிறவெறிகளைத் தூண்டி மீண்டும் மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு வரத் துடிக்கின்றனர் பாசிஸ்டுகள்.

சுமார் ஒன்றிரண்டு மாத கால அளவிற்குள் அமெரிக்கா, இத்தாலி, இஸ்ரேல், பிரான்ஸ், ஸ்வீடன், பிரேசில் ஆகிய நாடுகளில் நடைபெற்ற தேர்தல்களில், பாசிச சக்திகள் வலுவடைந்து வருகின்ற நிகழ்வுப் போக்கை காணமுடிகிறது. இது அந்நாடுகளின் உழைக்கும் வர்க்கத்திற்கு மட்டுமல்ல, சர்வதேச அளவிலும் தாக்கத்தைச் செலுத்தக்கூடிய அச்சமூட்டும் போக்காகும்.

ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் நெருக்கடியின் விளைவாகவே, உலகெங்கிலும் புற்றீசல் போல பாசிச சக்திகள் வளர்ந்துவருகிறார்கள் என்பதை நாம் அறிவோம். அதேநேரம், அவர்கள் மக்கள் ஆதரவைப் பெற்று ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதை நோக்கி முன்னேறுவதற்கு, இதுநாள் வரை அந்நாட்டை ஆண்ட ‘ஜனநாயக’, ‘சோசலிச’ முகமூடி அணிந்த ஆளும் வர்க்க கட்சிகளே காரணமாக இருக்கின்றன. மேற்சொன்ன ஒவ்வொரு நாடுகளிலும் இதை நாம் பார்க்க முடிகிறது!

இத்தாலி: ஆட்சி அதிகாரத்தில் முசோலினியின் வாரிசுகள்!

1922 அக்டோபரில் பாசிஸ்ட் முசோலினி இத்தாலியில் அதிகாரத்திற்கு வந்தான். சரியாக நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, அவனது வாரிசுகள் மீண்டும் அதிகாரத்திற்கு வந்துள்ளனர். இத்தாலியில் சென்ற மாதம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ‘இத்தாலியின் சகோதரர்கள்’ கட்சி (இ.ச.க.) தலைமையிலான கூட்டணி 46 சதவிகித வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது. இ.ச.க.வின் தலைவரான ஜியார்ஜியா மெலோனியை பிரதமராக தேர்ந்தெடுத்துள்ளனர்.

படிக்க : பாசிஸ்டுகளின் பிரச்சார பீரங்கியாகும் ‘டிவிட்டர் 2.0’!

2018-இல் நான்கு சதவிகித வாக்குகளை மட்டும் பெற்ற இ.ச.க.வானது, தற்போது 26 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது. அரசு இயந்திரம் மற்றும் சமூகத்தில் ஊடுருவியுள்ள நவ-நாஜி பாசிசக் குழுக்களின் ஆதரவே இவ்வசுர வளர்ச்சிக்கு காரணமாகும். மேலும், மெலோனி முசோலினியின் பாசிசக் கட்சியின் நேரடி வழித்தோன்றலான ‘இத்தாலிய சமூக இயக்கம்’ (Movimento Sociale Italiano) என்ற அமைப்பின் இளைஞர் பிரிவிலிருந்து வந்தவராவார்.

மேலும், இக்கட்சி முழுவதும் வெறிபிடித்த வன்முறை எண்ணம் கொண்ட பாசிஸ்டுகளால் நிரம்பி வழிகிறது. காசாபவுண்ட் (Casapound) போன்ற வெறிபிடித்த நவ-நாஜி குழுக்களுடன் இக்கட்சி நெருங்கிய உறவுகளைப் பேணுகிறது.

இத்தாலியில் நீண்ட காலமாக நிலவும் பொருளாதார நெருக்கடிகள், ஆளுங்கட்சிகள் மீதான மக்களின் அதிருப்திகளைத் தமக்கு சாதமாகப் பயன்படுத்திக் கொண்டுதான் இந்த பாசிச கும்பல் ஆட்சிக்கு வந்துள்ளது; நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு கார்ப்பரேட் நலன்சார்ந்த பொருளாதாரத் திட்டங்கள்தான் காரணம் என்ற உண்மையை மறைத்து, புலம்பெயர்ந்தோர் – அகதிகளால்தான் இத்தாலியர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்ற பொய் பிம்பத்தை அவர்கள் பரப்பியுள்ளார்கள்; முசோலினியின் காலத்திய “கடவுள்-குடும்பம்-தாயகம்” என்ற தேசிய-இனவெறி முழக்கத்தை மீண்டும் அவர்கள் உயிர்ப்பித்துள்ளார்கள்.

இக்கும்பலின் நச்சுப் பிரச்சாரத்திற்கு இத்தாலிய தொழிலாளர் வர்க்கத்தின் ஒருபகுதியும் பலியாகியிருப்பதுதான் வேதனைக்குரிய விசயம். கம்யூனிஸ்ட் மறுமலர்ச்சிக் கட்சி (Rifondazione communista) போன்ற போலி கம்யூனிஸ்ட் கட்சிகள் தொழிலாளர் வர்க்கத்தினர் மத்தியில் வர்க்க அரசியலைப் பரப்பாமல், ஆளும் வர்க்கக் கட்சிகளோடு கூட்டணி வைத்துக்கொண்டு துரோகமிழைத்ததுதான் பாசிஸ்டுகளின் செல்வாக்கிற்கு அடிப்படையாகும்.

பிரான்ஸ், ஸ்வீடன்: வளர்ந்துவரும் நவ-பாசிஸ்டுகள்!

இத்தாலியைப் போல, பிரான்ஸ் மற்றும் ஸ்வீடனிலும் பாசிசக் கும்பல்கள் வேகமாக வளர்ந்து வருகின்றன; இந்நாடுகளில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் ஆட்சியைக் கைப்பற்றவில்லை என்றாலும், மக்கள் மத்தியில் தங்களுக்கான ஆதரவு தளத்தை விரிவுப்படுத்தியுள்ளன. தேர்தல் முடிவுகளிலும் இது பிரதிபலித்தது.

ஸ்வீடன் ஜனநாயகவாதிகள் கட்சி (Sweden Democrats) நவ-நாஜிகளால் நிறுவப்பட்டதாகும். இக்கட்சியினர் யூத இன எதிர்ப்பை தங்களுக்கான ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர். பிரான்ஸில் மரின் லு பென் தலைமையிலான தேசிய பேரணி கட்சி (National Rally) வளர்ந்துவருகிற பாசிசக் கட்சியாகும். 2015-ஆம் ஆண்டு பாரிஸில் நடத்தப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதத் தாக்குதலுக்கு பிறகு, பிரான்ஸ் மக்களிடம் வளர்ந்துவரும் முஸ்லிம் எதிர்ப்பு மனநிலையை இவர்கள் அறுவடை செய்துகொண்டனர்.

வளர்ந்துவரும் வேலையின்மைக்கு புலம்பெயர்ந்தோரைக் காரணமாகக் காட்டுவது உலகெங்கும் உள்ள நவ பாசிஸ்டுகள் கையாளும் பொதுவான உத்தியாகும். ஸ்வீடன் ஜனநாயகவாதிகள் கட்சியும் பிரான்ஸின் தேசிய பேரணியும் இதை தீவிரமாக கொண்டுசெல்கின்றன. பிரான்ஸில் கருப்பின நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், புலம்பெயர்ந்தோர் எதிர்கொள்ளும் ஆபத்துகளைப் பற்றி அவையில் பேசியபோது, இப்பாசிசக் கும்பலைச் சேர்ந்தவர்கள், “ஆப்பிரிக்காவுக்கு திரும்பிப் போ” என்று அவரை நோக்கி முழக்கமிட்டுள்ளனர். புலம்பெயர்ந்த அகதிகளுக்கு எதிரான இத்தகைய வெறிப்பேச்சுகள், அடுத்தகட்டமாக அவர்கள் மீதான தாக்குதலாக மாறவும் வாய்ப்புள்ளதை இப்பாசிசக் கும்பல்களின் நடவடிக்கைகள் உணர்த்துகின்றன.

இஸ்ரேல்: யூத இனவெறி பாசிசம்!

அண்மையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இஸ்ரேலின் முன்னாள் பிரதமரான பெஞ்சமின் நெதன்யாகு, யூத இனவெறி பாசிசக் கட்சியான மத சியோனிசக் கட்சியுடன் (Religious Zionism) கூட்டணி அமைத்ததன் மூலம் பிரதமர் பதவியை மீண்டும் கைப்பற்றியுள்ளார்; நெதன்யாகு இப்பாசிசக் கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பதானது, பாலஸ்தீனர்கள் மீதான யூத இனவெறி தாக்குதலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துள்ளது என்றே கூறவேண்டும்.

நெதன்யாகு ஒரு யூத இனவெறியாளர். தொடர்ச்சியாக 12 ஆண்டுகள் இந்த யூத இனவெறியைப் பயன்படுத்தித்தான் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டார். 2021-ஆம் ஆண்டில் ஆட்சியைக் கைப்பற்றிய பென்னட் மற்றும் லபீட் ஆகியோரும் யூத இனவெறியாளர்களே. தற்போது மீண்டும் நெதன்யாகு ஆட்சியைக் கைப்பற்றியுள்ளார்.

போலி கம்யூனிஸ்ட் கட்சி, அரபுக் கட்சி மற்றும் தீவிர வலதுசாரிக் கட்சி என பல வண்ணக் கட்சிகளுடன் கூட்டணி கட்டி, 2021-இல் ஆட்சியைக் கைப்பற்றிய பென்னட் கும்பல் தலைமையிலான ஆட்சி நீடிக்கவில்லை. தோல்வியைத் தழுவியிருந்த நெதன்யாகு, தீவிர யூத இனவெறிப் பிரச்சாரம் செய்தார். காஸாவைச் சேர்ந்த பாலஸ்தீனியர்களுக்கு பென்னட் அரசாங்கம் பணி ஒப்புதல் வழங்கிய நாடகத்தைக் காட்டி இனவெறி தூபம் போட்டார். அதன் விளைவாக, ஆளுங்கட்சியின் கொறடாவான இடிட் சலீம், “சித்தாந்த ரீதியாக இஸ்ரேல் அரசு சமரசம் செய்வதாக”க் கூறி அரசாங்கத்திலிருந்து வெளியேறினார்.

நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான மசோதா மீது நடைபெற்ற வாக்கெடுப்பில், அதை எதிர்த்து ஒருவர் கூட வாக்களிக்கவில்லை. ஆளும் கூட்டணி கட்சியினரே மக்கள் மத்தியில் இருந்து வந்த எதிர்ப்பை சமாளிக்க முடியாமல், ஆட்சியைக் கலைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதையே இந்நிகழ்வு பறைசாற்றியது.

இதுவரை இஸ்ரேலில் நடந்துள்ள ஆட்சி மாற்றங்கள் அனைத்தும் யூத இனவெறியர்களுக்கு இடையிலான நாய்ச்சண்டையின் வெளிப்பாடுகளே அன்றி வேறல்ல. ஆனால், பாலஸ்தீனியர்களுக்கு எதிரான யூத இனவெறியானது வீழ்ச்சியடைந்து வரும் வாழ்க்கைத் தரம் மற்றும் அதிகரித்து வரும் சமூக சமத்துவமின்மை ஆகியவற்றின் மீதான மக்களின் கோபத்தைத் திசைதிருப்பி, பாசிசத்தை நோக்கி நகர்ந்துக் கொண்டிருப்பது புதிய போக்காகும்.

தற்போது நெதன்யாகுடன் கைகோர்த்துள்ள பாசிஸ்டுகள், நீதித்துறையின் அதிகாரத்தைக் குறைப்பது மற்றும் சட்டமியற்றுவர்களின் கைகளில் அதிகாரத்தைக் குவிப்பது என நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பயன்படுத்தியே பாசிச எதேச்சதிகாரத்தைக் கொண்டுவர எத்தனிக்கிறார்கள்.

’கடவுள்-குடும்பம்-தாயகம்’ என்ற முசோலினியின் தேசிய இனவெறி முழக்கத்தை மீண்டும் கடைவிரிக்கும் மெலோனி

அமெரிக்கா: நீறுபூத்த நெருப்பாக பாசிச அபாயம்!

அமெரிக்காவில் டிரம்ப் தலைமையிலான வெள்ளை நிறவெறி பாசிச கும்பல், மீண்டும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக இரத்த வெறிபிடித்த ஓநாயைப் போல காத்துக்கிடக்கிறது. அண்மையில் நடைபெற்ற செனட் சபை தேர்தலில் பைடன் தலைமையிலான ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றிருந்தாலும், டிரம்ப் தலைமையிலான குடியரசுக் கட்சி ஏற்கெனவே பெற்றிருந்த 21 இடங்களில் 20 இடங்களைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. பிரதிநிதிகள் சபை தேர்தலில் ஜனநாயகக் கட்சியை விட அதிகமான இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

இதன்விளைவாக, 2024-இல் நடக்க இருக்கும் அதிபர் தேர்தலிலும் போட்டியிடப்போவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். உட்கட்சித் தேர்தல் நடத்தி அதிபர் வேட்பாளரை அறிவிப்பதுதான் அமெரிக்காவில் பின்பற்றப்படும் ஜனநாயக மரபாகும்; ஆனால் உட்கட்சித் தேர்தல் நடத்துவதற்கு முன்னதாக, மக்கள் மத்தியில் தனக்கு உருவாகி உள்ள ஆதரவு மனநிலையை அறுவடை செய்து கொள்வதற்காக, தன்னை அதிபர் வேட்பாளராக அறிவித்துக் கொண்டுள்ளார் டிரம்ப். அதிபர் தேர்தலில் போட்டியிடும் தனது முடிவைப் பற்றி “அமெரிக்காவின் மறுபிரவேசம் இப்போதே தொடங்குகிறது” என தேசிய வெறியைத் தூண்டி பிரச்சாரம் செய்துவருகிறார்.

வெள்ளை நிறவெறி பாசிசக் குழுக்களான பிரவுட் பாய்ஸ் (Proud boys), கு க்ளக்ஸ் கிளான் (Ku  Klux Klan), நியோ-கான்ஃபெடரேட் (Neo-Confederate), நியோ-நாஜி (Neo-Nazi), ரேசிஸ்ட் ஸ்கின்ஹெட் (Racist Skinhead), கிறிஸ்டியன் ஐடண்டிட்டி (Christian Identity) போன்ற பல வண்ண வெள்ளை நிறவெறி பாசிசக் குழுக்கள் டிரம்ப்பை ஒருமனதாக ஆதரிக்கின்றன.

2021 ஜனவரி 06-ஆம் தேதி நடந்த அமெரிக்க நாடாளுமன்றத் தாக்குதல் மூலமாக ஆட்சிக் கவிழ்ப்பு சதி அரங்கேற்றத்திற்கு பிறகு டிரம்ப்பை ஆதரிக்கும் வெள்ளை நிறவெறி பாசிசக் குழுக்களின் சமூக வலைத்தளப் பிரச்சாரங்கள் முன்பைவிட அதிகரித்துள்ளன. 2022-ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம் வரை முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராமில், பாசிசக் கருத்துகளைப் பரப்பிய 750 சமூக ஊடகக் கணக்குகள், பக்கங்கள் மற்றும் குழுக்களைக் கண்டறிந்து நீக்கியுள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால், சமூக வலைத்தளங்களில் கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம், பாசிஸ்டுகளின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தி விட முடியாது என்பதே நடைமுறை எதார்த்தம்.

பிரேசில்: லூலாவின் வெற்றி தற்காலிகமானதே!

பிரேசிலில் அண்மையில் நடந்த அதிபர் தேர்தலில், பாசிஸ்ட் பொல்சனாரோ தோல்வியடைந்திருப்பதையும் லூலா வெற்றி பெற்றிருப்பதையும் உலகெங்கிலும் உள்ள போலி கம்யூனிஸ்டுகள் முக்கியத்துவமுள்ள வெற்றியாக கொண்டாடிவருகின்றனர்.

எனினும், ஏழு லட்சம் மக்களின் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்த கொரோனா நோய்த்தொற்று பரவலில் அலட்சியம் காட்டியது, அமேசான் காடுகளின் பெரும்பகுதியை எரித்து அங்கிருக்கும் பழங்குடியினரை வெளியேற்றியது, நல்வாழ்வுத் திட்டச் செலவினங்களைக் குறைத்தது போன்ற மக்கள் விரோத செயல்பாடுகளை அரங்கேற்றிய பின்னரும், பொல்சனாரோவுக்கு 49.1 சதவிகித வாக்குகள் கிடைத்துள்ளது.

மேலும், லூலா அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும், ஆளுநர்கள் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் பொல்சனாரோ கட்சியே பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. அதனைப் பயன்படுத்தி லூலாவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற விடாமல் முட்டுக்கட்டை இடுவதன் மூலம், ஆளும் கூட்டணியின் மீது அதிருப்தியை ஏற்படுத்தி, பொல்சனாரோ கும்பல் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

சுவிசேஷ கிறிஸ்துவ வெறியைப் பரப்பும் பொல்சனாரோவுக்கு அம்மதப்பிரிவினர் மத்தியில் மிகப்பெரிய ஆதரவுதளம் உள்ளது. எனவே தேர்தல் பிரச்சாரங்களில் சுவிசேஷ கிறிஸ்துவர்களின் ஆதரவைப் பெறுவதற்காக, லூலா அம்மதக் கோட்பாடுகளை ஆதரித்துப் பேசினார். ‘இடதுசாரி’ என்று அழைக்கப்படும் லூலாவின் உண்மை முகம் இதுதான்.

பொல்சனாரோவை எதிர்க்க வேண்டும் என்பதற்காக இணைந்துள்ள ஆளும் கூட்டணிக் கட்சிகளும், கொள்கை ஏதுமற்ற பிழைப்புவாதக் கட்சிகளாகவே உள்ளன. இவையெல்லாம், எந்த நேரத்திலும் கூட்டணியை விட்டு வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இத்துடன், பொல்சனாரோ கும்பலின் தூண்டுதலில் சுவிசேஷ கிறிஸ்துவர்கள் வன்முறை கும்பல்கள் சிறுபான்மையினத்தவருக்கு எதிராக கலவரங்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. பிரேசிலின் இந்தத் தேர்தல் முடிவு வருவதற்கு முன்னதாக, சமூக ஊடகங்களில் இராணுவ சதி மற்றும் வன்முறை எழுச்சிக்கு சுவிசேஷ கிறிஸ்துவ வெறிக்கும்பல்கள் அழைப்பு விடுத்தன. “நாங்கள் குண்டர்கள் அல்ல; நாங்கள் உங்கள் சுதந்திரத்திற்காகப் போராடும் பிரேசிலியர்கள்”, “இராணுவத் தலையீடு அல்லது கம்யூனிசம்!”, “இராணுவ தலையீடு இல்லாமல் இந்த நாட்டில் எதுவும் மாறாது!” போன்ற கம்யூனிச எதிர்ப்பு, சர்வாதிகார ஆதரவுப் பிரச்சாரத்தை மேற்கொண்டன. எனவே, லூலாவின் வெற்றி நீர்க்குமிழியை ஒத்ததே!

முகமூடிகளை கிழித்தெறிவோம்!

உலகெங்கிலும் பல நாடுகளில், பாசிசக் கும்பல்கள் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிவருகின்றன. தீவிர வலதுசாரி பிற்போக்குக் கும்பல்களும் சரி, சோசலிஸ்டுகள், ஜனநாயகவாதிகள், கம்யூனிஸ்டுகள் என்ற போர்வையில் இருக்கும் ஆளும் வர்க்கத்தின் இன்னொரு பிரிவினரானாலும் சரி தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்ற மறுகாலனியாக்கத்தையே தங்களது கொள்கையாக வைத்துள்ளன.

படிக்க : சிறிதெனினும், சிவப்பு இவர்களை அச்சுறுத்துகிறது!

ஆனால், மறுகாலனியாக்கக் கொள்கைகளைத் தீவிரமாக அமல்படுத்தியதன் மூலம் மக்களின் வாழ்வாதாரங்கள் மென்மேலும் கீழ்நிலைக் கொண்டு செல்லப்படுகிறது. தீவிர வலதுசாரி பாசிசக் கும்பல்கள் கார்ப்பரேட் நலன் சார்ந்த இக்கொள்கைதான் மக்களது வாழ்வாதார பறிப்புக்கு காரணம் என்பதை மறைத்து இன, தேச, மத, நிறவெறிகளைத் தூண்டி மீண்டும் மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு வரத் துடிக்கின்றன.

ஜனநாயக முகமூடி தரித்த கும்பல்களோ, இந்த மறுகாலனியாக்க கொள்கைகளையே நடைமுறைப்படுத்திக் கொண்டு, அவற்றை எதிர்ப்பதாக நாடகமும் ஆடுகின்றன. மேலும், ஊழல் முறைகேடுகளில் சிக்கிச் சீரழிந்துள்ளன. இந்த சீரழிவும் துரோகமும்தான், பாசிச கும்பல்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு அடிப்படையாக அமைகின்றன. பாசிச சக்திகளை முறியடிக்கும் போராட்டம், இத்தகைய கட்சிகளின் முகமூடிகளைக் கிழித்தெறிவதில் இருந்தே தொடங்கப்பட முடியும்!

அமீர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க