இணையவெளியில் மக்களிடையே பேசுபொருளாக இருக்கும் ஒன்று, டிவிட்டரில் பிரபலமாவதை (trending) நாம் பார்த்திருப்போம், இன்று டிவிட்டரே மக்களிடையே பிரபலமான விவாதப் பொருளாக மாறியுள்ளது; உலகப் பெரும்பணக்காரரான எலான் மஸ்க், டிவிட்டரின் தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்றதிலிருந்து, ‘டிவிட்டர் 2.0’ என்ற பெயரில் மேற்கொண்டுவரும் மறுஒழுங்கமைப்பு நடவடிக்கைகளே அதற்கு காரணமாகும்.
44 பில்லியன் (4,400 கோடி) டாலர் கொடுத்து டிவிட்டரின் அதிகப் பங்குகளை வாங்கியதன் மூலம் கடந்த அக்டோபர் இறுதியில், டிவிட்டரை முழுமையாக தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார் எலான் மஸ்க். ஒரு கார்ப்பரேட் முதலாளி குறிப்பிட்ட நிறுவனத்தைக் கைப்பற்றுவது அவ்வளவு முக்கியத்துவமிக்க நிகழ்வாக இதுவரை விவாதிக்கப்பட்டதில்லை. ஆனால் எலான் மஸ்க் டிவிட்டரை கைப்பற்றிய நிகழ்வு சர்வதேச அளவில் எளிதாக கடந்து செல்லப்படவில்லை.
டிவிட்டரை கைப்பற்றிய உடன், ‘பறவை விடுவிக்கப்பட்டது’ (The bird is freed) என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார் மஸ்க். மேலும், தாம் எதிர்கால சந்ததிக்கு ஒரு பொதுவான டிஜிட்டல் தளத்தை ஏற்படுத்தித் தர விரும்புவதாகவும், பணம் சம்பாதிக்கும் நோக்கத்திற்காக அல்லாமல், மனித குலத்திற்கு உதவுவதற்காகவே டிவிட்டரை வாங்கியுள்ளதாகவும் பிரகடனப்படுத்தினார்.
படிக்க : கருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டு ! சங்கிகளைக் கதறவிட்ட தமிழக டிவிட்டர் டிரண்டிங் !!
ஆனால், எலான் மஸ்க் அடிப்படையிலேயே தீவிர வலதுசாரியாக அறியப்படுபவர்; சீர்திருத்தக் கொள்கைகளை முன்வைக்கும் கட்சிகளைக்கூட ‘இடதுசாரி அபாயம்’ என்ற அளவில் கடுமையாக விமர்சிக்கும் ஜனநாயக விரோதி; வெள்ளை நிறவெறியன்; குடியரசுக் கட்சி மற்றும் பாசிஸ்ட் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளர். இக்காரணங்களால் அவர் டிவிட்டரை கைப்பற்றியிருப்பது, தொழில் விரிவாக்க நடவடிக்கை என்பதைத் தாண்டி அரசியல் நடவடிக்கையாகவே அறியப்படுகிறது; மேலும் உலகெங்கும் உள்ள லிபரல் ஜனநாயகவாதிகளே, இந்நிகழ்வை அபாயகரமானதாகவும் கருத்து சுதந்திரத்துக்கு ஆபத்தானதாகவும் பார்க்கின்றனர்.
டிவிட்டர் மறுஒழுங்கமைப்பின் பின்னணி
எலான் மஸ்க் டிவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்ற பிறகு, அந்நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் பணியாற்றியவர்கள் உள்ளிட்டு ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டார்கள். வாரநாட்கள் முழுமையும் (7 நாட்கள்) வேலைநாட்களாகவும் வேலைநேரம் 12 நேரமாகவும் மாற்றப்பட்டது. சம்பளம், கூடுதல் வேலைநேரம், வேலை உத்தரவாதம் ஆகியவை குறித்து எந்தக் கேள்வியும் கேட்கக்கூடாது எனவும் புதிய விதிகளுக்கு கட்டுப்பட விரும்பாதவர்கள் 36 மணிநேரத்தில் தங்கள் வேலையைத் துறந்துவிட்டு வெளியேறலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நடவடிக்கைகள் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த அறிவிப்புக்கு பிறகு, இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிவிட்டர் ஊழியர்கள் பணியைத் துறந்து வெளியேறியுள்ளனர்.
எலான் மஸ்க்கின் இத்தகைய நடவடிக்கைகள் முக்கியத்துவம் வாய்ந்த சமூக ஊடகமாக அறியப்படும் டிவிட்டரை நாசமாக்கிவிடும் என்று விமர்சிக்கப்படுகிறது. ‘டிவிட்டருக்கு இரங்கல்’ (#riptwitter) என்ற ஹேஷ்டேக் பயனர்களால் பிரபலமாக்கப்பட்டது.
பிரபலங்களின் அதிகாரப்பூர்வமான டிவிட்டர் கணக்குகளுக்கு இதுவரை வழங்கப்பட்டுக் கொண்டிருந்த ப்ளூ டிக் அடையாளத்திற்கு, இனி 8 டாலர் கட்டணம் செலுத்த வேண்டுமெனவும், அத்தொகையை செலுத்தும் அனைவருக்கும் ப்ளூ டிக் அங்கீகாரம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது, எலான் மஸ்க் மேற்கொண்ட மற்றொரு நடவடிக்கை. இந்த சந்தா சேவை அறிமுகமான உடனே டிவிட்டர் தளம் முழுவதும் போலி கணக்குகளால் நிரம்பி வழிய ஆரம்பித்தது. எனவே அச்சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
எலான் மஸ்க் மேற்கொண்டுவரும் இந்நடவடிக்கைகள், லாபநோக்கம் கருதி செய்யப்படும் முட்டாள்தனமான காரியங்கள் என்றே பொதுவாக அறியப்படுகிறது. இதை மறுப்பதற்கில்லை. எலான் மஸ்க்கிற்கு சொந்தமான நிறுவனங்களின் பணிச்சூழலைப் பற்றி தெரிந்துகொண்டால், மற்றொரு கோணத்தில், இந்நடவடிக்கை தனது அரசியல் நோக்கத்தை ஈடேற்றிக்கொள்ள எலான் மஸ்க் மேற்கொண்டு வரும் மறுஒழுங்கு நடவடிக்கையாகவும் உள்ளது என்பதை புரிந்துகொள்ள முடியும்.
எலான் மஸ்க் எவ்வாறு ஒரு வெள்ளை நிறவெறி கொண்டவனோ, அதைப் போலவே அவனது நிறுவனங்களில் உயர்பதவி வகிப்பவர்கள் பலரும் வெள்ளை நிறவெறியர்கள். மஸ்கின் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் கருப்பினத்தவர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டப்படுவது குறித்து பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். மஸ்கின் நிறுவனங்களில் பணியாற்றி இன, நிற பாகுபாடு காரணமாக வெளியேறியவர்கள் அப்பணியிடச் சூழலை அம்பலப்படுத்தி கட்டுரைகளும் எழுதியுள்ளனர். இதிலிருந்து நோக்கும்போது, எலான் மஸ்க் மேற்கொள்ளும் பணி நீக்க நடவடிக்கை டிவிட்டர் நிறுவனத்தை வெள்ளை நிறவெறியர்களின் ஆதிக்கத்திற்கு கொண்டுவருவதன் ஒருபகுதியாக இருக்கலாம் என்று கருதத் தோன்றுகிறது.
மஸ்க் வாதாடும் ‘பேச்சு சுதந்திரம்’ யாருக்கானது?
‘பேசுவதற்கான சுதந்திரமே ஒழிய, பிரபலத்திற்கான சுதந்திரமல்ல’ (freedom of speech but not freedom of reach) என்ற பெயரில், கடந்த 18-ஆம் தேதி புதிய கொள்கையொன்றை அறிவித்தார் மஸ்க். இக்கொள்கையின்படி, வெறுப்பைப் பரப்பும் கருத்துகள் டிவிட்டரிலிருந்து நீக்கப்படும் என்றும், அதுபோன்ற பதிவுகளின்மூலம் கிடைக்கும் வருவாயை டிவிட்டர் விரும்பவில்லை என்றும் அறிவித்தார்.
கேட்பதற்கு கவர்ச்சியாக இருந்தாலும், அடுத்தடுத்து மஸ்க் மேற்கொண்ட நடவடிக்கைகள் அவர் அறிவித்த கொள்கையைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் இருந்ததோடு, மஸ்க் வாதாடும் பேச்சு சுதந்திரம் யாருக்கானது என்பதையும் அம்பலப்படுத்திவிட்டது. தடைசெய்யப்பட்டிருந்த டொனால்ட் டிரம்ப்பின் டிவிட்டர் கணக்கை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவந்தது அதில் முக்கியமானதாகும்.
2021 அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்களால் வெள்ளை மாளிகை தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது. தமது பதிவுகளின் மூலம், ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு அறைகூவல் விட்டார் என்பதால், அப்போதைய டிவிட்டர் நிறுவனம் டிரம்ப்பின் கணக்கை முடக்கியது. இன்று, டிரம்ப்புக்கு ‘பேச்சு சுதந்திரம்’ கிடைத்துள்ளது.
டிரம்ப்பை போலவே, வன்முறை மற்றும் வெறுப்பு பேச்சுகள் காரணமாக தடைசெய்யப்பட்ட டிவிட்டர் கணக்குகள் பலவற்றை மஸ்க் தற்போது விடுவித்துள்ளார். கிறிஸ்துவ மதவெறியைப் பரப்புகிற நையாண்டி வலைத்தளமான பாபிலோன் பீ மற்றும் மாற்று பாலினத்தவர் குறித்து இழிவாக பேசிய கனடாவைச் சேர்ந்த உளவியல் நிபுணர் ஜோர்டன் பீட்டர்சன், யூத எதிர்ப்பு பேச்சுக்காக விமர்சிக்கப்பட்ட அமெரிக்கப் பாடகர் கன்யே வெஸ்ட், பெண்களைப் பற்றி மிக இழிவாக பேசிய பிரிட்டன் முன்னாள் குத்துச் சண்டை வீரர் ஆண்ட்ரூ டேட் போன்றோரின் டிவிட்டர் கணக்குகள் அதில் குறிப்பிடத்தக்கவை.
மஸ்க் டிவிட்டரை வாங்கியதிலிருந்து ஒரு வார காலம்வரை அதன் செயல்பாடுகளை ஆய்வுசெய்த ‘டிஜிட்டல் வெறுப்புகளுக்கு எதிரான மையம்’ (Centre for Countering Digital Hate) எனும் அமைப்பு டிவிட்டரில் வெறுப்புப் பேச்சுகளைப் பரப்புவோர் தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறுகின்றது.
இன்னொரு பக்கம், பாசிச-சர்வாதிகார அரசுகளுக்கு எதிராக குரலெழுப்பும் ஊடகக் கணக்குகள் முடக்கப்பட்டு வருகின்றன. அண்மையில், இஸ்ரேலின் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக பாலஸ்தீனத்தில் செயல்பட்டு வந்த டிவிட்டர் ஊடகக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
எலான் மஸ்க்கை கொண்டாடும் பாசிஸ்டுகள்!
டிவிட்டர் உலகம் முழுவதும் சுமார் 40 கோடி (396.5 மில்லியன்) பயனர்களைக் கொண்டுள்ளது. இது மற்ற சமூக ஊடகங்களைக் காட்டிலும் குறைவே என்றாலும் அரசியல் கருத்துரையாடல்களுக்கான முக்கிய ஊடகமாக டிவிட்டர் விளங்குகிறது. விளையாட்டு வீரர்கள், நடிகர்கள், அரசியல்வாதிகள், அறிவுத்துறை பிரபலங்கள் ஆகியோரே டிவிட்டரின் பெரும்பகுதி பயன்பாட்டாளர்கள். இணையவெளியில் பலராலும் விவாதிக்கப்படும் கருத்துக்களை பிரபலமாக முன்னிறுத்தும் ‘டிரெண்டிங்’ எனப்படும் வசதி டிவிட்டரில்தான் உள்ளது.
பிற்போக்காளர்களை அம்பலப்படுத்தவும், பாசிச-சர்வாதிகார அரசுகளின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக கருத்து தெரிவிக்கவும் ஜனநாயக சிந்தனை கொண்ட குட்டிமுதலாளித்துவ சக்திகளுக்கு டிவிட்டர் குறிப்பிட்ட அளவிற்கு பயன்பட்டுவந்தது. அதேநேரம், வெறுப்பு பேச்சுகள், வன்முறையைத் தூண்டும் பதிவுகளை வெளியிடுவோர் மீது நடவடிக்கை எடுப்பதில் மற்ற சமூக ஊடகங்களைக் காட்டிலும் டிவிட்டர் முனைப்புக் காட்டியது. இக்காரணங்களாலேயே உலகெங்கிலும் உள்ள வலதுசாரி பிற்போக்காளர்கள் டிவிட்டரை தாக்கி வந்துள்ளனர்; ஆனால், இன்று டிவிட்டரை எலான் மஸ்க் கைப்பற்றியதை, அவர்கள் அனைவரும் பெருமகிழ்ச்சியோடு வரவேற்றுக் கொண்டாடுகின்றனர்.
டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதைத் தொடர்ந்து, “டிவிட்டர் இப்போது நல்ல கைகளில் உள்ளது என்பதை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கருத்து தெரிவித்துள்ளார் டிரம்ப். மேலைநாட்டு பாசிஸ்டுகள் மட்டுமல்ல, சங்கப்பரிவாரத்தைச் சேர்ந்த கோயபல்சுகளுள் ஒருவரான விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி, கங்கனா ரனாவத் என நம் நாட்டு பாசிசக் கும்பலும் டிவிட்டர் 2.0-வை வரவேற்றுள்ளனர்.
படிக்க : பொய்களை பரப்பும் முகநூல் மார்க்கை தொடர்ந்து ட்விட்டர் மஸ்க் | ஆர்.எம்.பாபு
இதற்குரிய காரண-காரியங்களை விளங்கிக்கொள்ள நாம் சிரமப்படத் தேவையில்லை. விஷயம் சுலபமானது. வெள்ளை நிறவெறியனும் பழமைவாதியுமான எலான் மஸ்க் டிவிட்டரை கைப்பற்றியிருப்பதால், இனி தங்களது கருத்துகளை தடையின்றி பரப்புவதற்கு ஒரு பிரச்சார பீரங்கி கிடைத்துள்ளதாக பல வண்ணப் பாசிஸ்டுகளும் பூரிப்படைகிறார்கள்.
பாசிச ஆட்சிக்கான தயாரிப்பு
கடந்த மே மாதம், நான் இனி (அதாவது, அடுத்த தேர்தலில்) ஜனநாயகக் கட்சியை ஆதரிக்கப்போவதில்லை, குடியரசுக் கட்சியையே ஆதரிப்பேன் என்றார் எலான் மஸ்க். டிவிட்டர் எலான் மஸ்க் கட்டுப்பாட்டுக்கு வந்து சில வாரங்கள் கூட ஆகாத நிலையில், அடுத்துவரும் அதிபர் தேர்தலில் தாம் போட்டியிடப்போவதாக முந்திக்கொண்டு அறிவிக்கிறார் டிரம்ப். அமெரிக்க தேர்தல் பிரச்சாரம் ஆரம்பமாகிவிட்டதை நாம் சொல்லாமலே புரிந்துகொள்வோம்.
அதானி என்.டி.டி.வி-ஐ சதித்தனமாக கைப்பற்றியதும், டிவிட்டரை எலான் மஸ்க் கைப்பற்றியதும் சாரம்சத்தில் ஒன்றுதான். ஊடகங்களை பாசிஸ்டுகளின் ஊதுகுழலாக மாற்றுவதன் மூலம் அவர்கள் மக்களிடையே தங்களுக்கு ஆதரவாக கருத்துருவாக்கத்தை மேற்கொள்ள விழைகிறார்கள்.
ஏகாதிபத்திய உலகக் கட்டமைப்பானது இன்று தீர்க்க முடியாத அரசியல்-பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ளது. இனியும் ஜனநாயக முகமூடி அணிந்து கொண்டு தங்களது சுரண்டலை நடத்த முடியாது என்ற நிலைக்கு ஆளும் வர்க்கங்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஆகவே, ஆளும் வர்க்கங்களில் ஆகப் பிற்போக்கான ஒரு பிரிவினர் பாசிசக் குழுக்களை ஊட்டி வளர்த்து வருகின்றனர்; பாசிச வெறியர்களை ஆட்சிக்கட்டிலில் ஏற்றுவதற்கும் முயன்று வருகின்றனர். அவ்வாறான ஆளும் வர்க்கப் பிரிவில் குறிப்பிடத்தக்க கார்ப்பரேட் முதலாளியே எலான் மஸ்க்.
மதி