ஊழிக்காலம் (காலநிலை மாற்றம்: ஒரு விரிவான அறிமுகம்) | நூல் மதிப்புரை

கரிம உமிழ்வுகளைக் கட்டுப்படுத்த தங்களது லாபத்தில் ஒருபகுதியை செலவு செய்ய வேண்டும் என்பதால் காலநிலை மாற்றம் ஒன்றே இல்லை என்பதுபோன்ற பிரசாரத்திற்கு பல மில்லியன் டாலர்களை இந்த பெருநிறுவனங்கள் செலவு செய்கின்றன

ஊழிக்காலம்
(காலநிலை மாற்றம்: ஒரு விரிவான அறிமுகம்)

இப்புத்தகம் மிக எளிய நடையில் எழுதப்பட்டிருக்கிறது. சிக்கலான காலநிலை மாற்றம் குறித்த அறிவியல் பார்வையை மிகச் சுலபமாகப் புரிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது. இந்த பூமியில் வாழும் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய ஒரு புத்தகம் என்றே சொல்லலாம்.

இந்நூல் சிறந்த அறிவியல் தமிழ் கட்டுரைகளை எழுதி வரும் “நாராயணி சுப்ரமணியன்” அவர்களால் விகடன்.காம்-ல் எழுதப்பட்ட தொடர் கட்டுரைகளின் தொகுப்பாகும். Nomad Fairy Tales & Hope Emoji Publications வெளியீடு.

இந்நூல் கூறும் விஷயங்கள் நமக்கு ஒரு ரெட் அலர்ட்

ஆம். ரெட் அலர்ட் என்ற சொல் சமீப காலங்களில் சகஜமாகி வருவதை சுட்டிக்காட்டுகிறது இந்நூல். சில ஹாலிவுட் படங்களில் வருவதுபோல கற்பனையான, பூமிப்பந்தின் சிதைந்த எதிர்காலம் பற்றியதாக இல்லாமல் அறிவியல் பூர்வமாக நமது எதிர்காலம் ஆபத்து நிறைந்ததாக இருக்கப்போவதாக எச்சரிக்கிறது இந்நூல்.


படிக்க: மகத்தான மக்கள் விஞ்ஞானி மேக்நாட் சாகா


காலநிலை மாற்றத்தால் மனிதர்களுக்கு ஏற்படவிருக்கும் பாதிப்புகளை இந்த இந்நூல் மையப்படுத்தியிருக்கிறது. உலக அளவில் காலநிலை மாற்றத்தால் அதிகமாக பாதிக்கப்படப்போகிற 181 நாடுகளின் பட்டியலில் இந்தியா 5 ஆவது இடத்தில் இருக்கிறது என்கிற செய்தி நம்மை காலநிலை மாற்றத்தை கூர்ந்து கவனிக்க வைக்கும் என்று நம்புகிறேன்.

“மிக கன மழை” “அதி கன மழை” என்கிற சொல்லாடல்களெல்லாம் சமீப காலங்களில் நமக்கு அறிமுகமாகவை. சமீபத்தில் யாருமே கணிக்க முடியாத வகையில் நெல்லை சுற்றவட்டாரப் பகுதிகளில் “அதி கனமழை” பெய்து பல ஊர்கள் வெள்ளத்தில் மூழ்கியதை நாம் பார்த்தோம். இப்படி பேரழிவுகள் அடிக்கடி நடக்கிற நிகழ்வுகளாகி வருகின்றன என்ற எச்சரிக்கையை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.

காலநிலை மாற்றத்திற்கான அடிப்படைக் காரணம் என்ன?

இதற்கான அடிப்படைக் காரணத்தை ஒரு வரியில் சொல்ல வேண்டுமானால் “புவி வெப்பமடைதல்” என்பதுதான். புவி வெப்பமடைவதற்கு அடிப்படைக் காரணம் என்ன? அதிகப்படியான பசுமைக்குடில் வாயுக்களின் வெளியேற்றம் தான் புவி வெப்பமடைவதற்கு அடிப்படைக் காரணம் என்பதை எளிமையாக விளக்கியிருக்கிறது இந்நூல்.

வாகனங்களின் எரிபொருள் பயன்பாடு, மின்சார உற்பத்தி, தொழிற்சாலைகள், காடுகள் அழிக்கப்படுவது, செயற்கை உரங்கள், சிமெண்ட் தொழிற்சாலைகள் ஆகியவை அதிகமான பசுமைக்குடில் வாயுக்களை வெளியேற்றுவதாக காலநிலை விஞ்ஞானிகள் தெரிவிப்பதைப் பட்டியலிடுகிறது இந்நூல். பத்து நிமிடத்திற்கு ஒருமுறை 1 மில்லியன் டன் பசுமைக்குடில் வாயுக்கள் காற்றில் கலக்கிறதாம். பசுமைக்குடில் வாயுக்களிலேயே அதிக தாக்கத்தை ஏற்படுத்துவது CO2 என்கிற கரியமில வாயு தான்.


படிக்க: ஸ்பார்ட்டகஸ் (அடிமைச் சமுதாய சரித்திர நாவல்) | நூல் அனுபவம்


இந்த சூழலியல் பிரச்சினையை முன்பு ’புவி வெப்பமடைதல்’ என்று மட்டும் சொல்லிக்கொண்டிருந்த விஞ்ஞானிகள், இப்பிரச்சினையின் பரிணாமத்தின் அடிப்படையில் ”காலநிலை மாற்றம்” என்று பெயர் மாற்றியுள்ளனர்.

வளிமண்டத்தில் கலந்துள்ள இந்தக் கரியமிலவாயு உமிழ்வை மீண்டும் திரும்ப உறிஞ்சுக்கொள்ள முடியுமா என்பது குறித்தெல்லாம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை சுட்டிக்காட்டியுள்ளது இந்நூல். ஆனால் அதற்கான தொழில்நுட்பம் அவ்வளவு எளிதானதல்ல என்பதையும் விளக்குகிறது.

புவி சராசரி வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியஸ் முதல் 2.0 டிகிரி வரை மட்டும் அதிகரிக்கலாம் என்பதே “காலநிலை மாற்றத்திற்கான பன்னாட்டு அரசுக் குழுவின்” (IPCC) பரிந்துரை என்பதை சுட்டிக்காட்டுகிறது இந்நூல். அதற்கு காற்றில் கரியமிலவாயுவின் அளவு 450 PPM (parts per million) ஆக இருக்க வேண்டும் என்கிறது.

காலநிலை மாற்றத்தால் எதுவெல்லாம் பாதிக்கப்படும்?

நம் அன்றாட உணவு, அதிலுள்ள சத்துக்கள், விவசாயம், கால்நடை வளர்ப்பு, மனிதர்களின் வாழிடம், மனிதர்களின் உளவியல் என இதனால் பாதிக்கப்படாத விஷயமே இல்லை எனும் அளவிற்கு காலநிலை மாற்றத்தின் தாக்கம் மிக மோசமானது என்பதை என்பதை உணர முடிகிறது.

முக்கியமாக காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படப் போவது விளிம்புநிலை மக்கள் தான். காலநிலை அகதிகள் உருவாகும் அவலத்தையும் அப்படியான அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்க முடியாத நிலைமை ஏற்படும் என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.

காலநிலை மாற்றத்தால் அதீத வெப்பம், தண்ணீர் தட்டுப்பாடு, கடல்மட்டம் உயர்தல் என பல்வேறு பிரச்சினைகளை நாம் சந்திக்க வேண்டிவரும்.

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் கடல்மட்ட உயர்வால் உலகின் பல்வேறு கடலோரப் பகுதிகள் கடலில் மூழ்கும் அபாயத்தை சுட்டிக்காட்டுகிறது இந்நூல். இதனால் அங்கு வசிக்கும் விளிம்புநிலை மக்களின் வாழிடம் முற்றிலும் மூழ்கும் அபாயத்தை எச்சரிக்கிறது இந்நூல்.

இன்னும் அச்சுறுத்தலான விஷயம் குடிநீர் தட்டுப்பாடு. 2018 ஆகஸ்ட் மாதம் தென் ஆப்பிரிக்க நகரம் கேப்டவுனில் ஜீரோ டே (ZERO DAY) கடைபிடிக்கப்பட்டதே அதைப்போல உலகின் பல்வேறு நகரங்களில் உள்ள மொத்த நீர்வளம் 2050-ஆம் ஆண்டுக்குள் மூன்றில் ஒரு பங்காகக் குறையும் என்ற உலக வங்கியின் எச்சரிக்கையை கோடிட்டுக் காட்டி நம்மை சிந்திக்க வைக்கிறது இந்நூல்.

இன்னும் “காலநிலை மாற்றத்திற்கான சர்வதேச ஒப்பந்தங்கள்”, மரங்களை நடுவதால் காலநிலைப் பேரிடர்களைத் தடுக்க முடியுமா? அளவுக்கதிகமாக வெப்சீரியஸ் பார்த்தால் காலநிலைக்கு ஆபத்தா? CARBON FOOTPRINT என்றால் என்ன? நிலக்கரி, பெட்ரோல், டீசலைத் தடை செய்தால் காலநிலை மாற்றம் தடுக்கப்படுமா? காலநிலை மாற்றத்தைத் தடுக்க கற்கால வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டுமா? என பல்வேறு தலைப்புகளில் உள்ள கட்டுரைகள் காலநிலை மாற்றம் குறித்த அறிவியல்பூர்வமான புரிதலை ஏற்படுத்துகின்றன.

காலநிலை மாற்றத்திற்கான தீர்வுகளை முன்வைக்கிறதா இந்நூல்?

காலநிலைத் தீர்வுகளின் சில முக்கிய அம்சங்களை இந்நூல் பேசுகிறது. தனிநபர் தீர்வுகள், தனிநபர் உந்துதலால் சுற்றமும் நண்பர்களும் தீர்வு செயல்பாடுகளில் இணைந்துகொள்ளுதல், சமூகமாக முன்னெடுக்கப்படும் தீர்வுகள், அரசு அளவிலான தீர்வுகள், சர்வதேச அளவிலான தீர்வுகள் என பல கோணங்களில் தீர்வுகளை அணுக வேண்டிய அவசியத்தை முன்வைக்கிறது இந்நூல்.

காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த சர்வதேச அளவிலும் அரசு அளவிலும் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் முக்கியமானவையாகவும் முதன்மையானவையாகவும் இருக்கின்றன என்கிறது இந்நூல்.

காலநிலை மாற்றத்திற்கு மிக முக்கியக் காரணம் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் தான் என்பதை நிறுவுகிறது இந்நூல். வளர்ந்த நாடுகளை ஒப்பிடும்போது, ஏழை நாடுகள் நூறில் ஒருபங்கு உமிழ்வுகளை மட்டுமே வெளியிடுகின்றன; ஆனால் காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிப்படையப் போவது ஏழை நாடுகள் தான் என்பதையும் பேசுகிறது இந்நூல்.

‘காலநிலை மாற்றம் எல்லாம் வெறும் புனைவு; அது ஒரு பேய்க்கதை’ என்பன போன்ற கருத்துக்களைப் பரப்ப பெருநிறுவனங்கள் பல்வேறு பிரச்சாரங்களை முன்னெடுப்பதை அடையாளம் காட்டுகிறது இந்நூல். ஏனெனில் 1988 முதல் வெளியிடப்பட்ட கரிம உமிழ்வுகளில் கிட்டத்தட்ட 71% உமிழ்வுகளுக்கு வெறும் 100 பெருநிறுவனங்களே காரணமாம்.

கரிம உமிழ்வுகளைக் கட்டுப்படுத்த தங்களது லாபத்தில் ஒருபகுதியை செலவு செய்ய வேண்டும் என்பதால் காலநிலை மாற்றம் ஒன்றே இல்லை என்பதுபோன்ற பிரசாரத்திற்கு பல மில்லியன் டாலர்களை இந்த பெருநிறுவனங்கள் செலவு செய்கின்றன என்கிற தகவலையும் முன்வைக்கிறது இந்நூல்.


படிக்க: நூல் அறிமுகம்: மறுகாலனியாக்கத்தின் இரும்புப்பிடியில் இந்திய விவசாயம்!


முதலாளித்துவ அரசுகள் காலநிலை மாற்றத்திற்கான தீர்வுகளை முன்னெடுக்குமா என்பதை இந்நூல் வலுவாக முன்வைக்கவில்லை.

இன்றைய அரசுகளைப் பொறுத்தவரையில் அனைத்து நாடுகளின் அரசுகளும் பெருநிறுவனங்களின் கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றன.

உதாரணமாக இந்தியாவில் இவ்வளவு பேரிடர்களுக்கு மத்தியிலும் கார்பரேட் பகாசுர கம்பெனிகளின் பேரழிவுத் திட்டங்களுக்காக, கார்பரேட் கம்பெனிகள் இயற்கை வளங்களை சூறையாட ஏதுவாக ”சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020” ”உயிரியல் பன்முகத்தன்மை (திருத்தம்) மசோதா-2021” ”வன (பாதுகாப்பு) திருத்த மசோதா 2023” உள்ளிட்ட பல்வேறு சட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

பிரேசிலை எடுத்துக்கொண்டால், உலகின் நுரையீரல் என்று சொல்லப்படும் அமேசான் காடுகளை அழித்து பெருநிறுவனங்களுக்கு வனத்தை திறந்துவிடும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை பிரேசில் முன்னாள் அதிபர் பொல்சனரோ மேற்கொண்டதைப் பார்த்தோம்.

இப்படி பூமியே அழிந்தாலும் அதைப்பற்றிக் கவலைப்படாமல் தனது எஜமானர்களான கார்பரேட் முதலாளிகளின் கொள்ளை லாபத்திற்காக இயற்கை வளங்களை சூறையாடுவதை இலக்காகக் கொண்டு வேலை செய்து வருகின்றன அரசுகள் என்ற நிதர்சன உண்மையை புரிந்துகொள்வதும் அவசியமாகும்.

அந்த அரசுகள் ஒருபோதும் காலநிலை மாற்றத்திற்கான ஆக்கப்பூர்வமான தீர்வுகளை முன்னெடுக்கப்போவதில்லை. பல்வேறு பேரழிவுத் திட்டங்களால் பாதிக்கப்படும் உழைக்கின்ற மக்களும் சூழலியல் ஆர்வலர்களும் இந்த பூமிப்பந்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் இந்த முதலாளித்துவ அரசுகளை நோக்கி நமது கரங்களை உயர்த்த வேண்டியிருக்கிறது. அந்தவகையில் உலக அளவில் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தக் கோரி நடைபெறும் மாணவர்கள் இளைஞர்கள் போராட்டங்கள் நம்பிக்கையளிக்கின்றன என்பதை பகிர்கிறது இந்நூல்.

சமூக மாற்றத்தை விரும்பும், இயற்கையை நேசிக்கும் ஒவ்வொருவரும் காலநிலை மாற்றம் குறித்து படித்து விவாதிப்பதோடு மட்டுமல்லாமல் களச் செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்பதை இந்நூல் நமக்கு உணர்த்துகிறது.

அதனால் தான் இந்நூல் கீழ்கண்ட வார்த்தைகளோடு முடிவடைகிறது. ”இந்த நூல் மட்டுமே முடிவடைந்திருக்கிறது, செயல்பாடுகள் இல்லாவிட்டால் ஊழிக்காலம் தொடரும்” வாருங்கள் நம் பூமிப்பந்தைக் காக்க செயல்பாடுகளில் இறங்குவோம்.


நூலின் பெயர்: ஊழிக்காலம் (காலநிலை மாற்றம்: ஒரு விரிவான அறிமுகம்)

ஆசிரியர்: நாராயணி சுப்ரமணியன்

விலை: ₹ 170

பதிப்பகம்: Nomad fairy tales and Hope Emoji Publications

 


 


அஜய்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube