எல் நினோ: ஏழை மக்கள் எதிர்நோக்கவிருக்கும் பட்டினி அபாயம்!

சர்க்கரையின் விலை உயர்வால், ரொட்டி உற்பத்தியை பாதியாகக் குறைக்க முடிவு செய்துள்ள ரொட்டி விற்பனையாளர்கள், “இது மிகவும் மோசமான சூழ்நிலை” என்று வேதனை பெருமூச்சுவிடுகின்றனர். இதனால், அந்நாட்டு ஏழை, எளிய மக்கள் பட்டினி அபாயத்தை எதிர்நோக்கவிருக்கின்றனர்.

ல் நினோ தாக்கத்தால் ஏற்பட்ட பருவநிலை மாற்றம் காரணமாக ஆசியாவில் கரும்பு சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உலகளவில் சர்க்கரை விலை உயர்ந்துள்ளது.

சர்க்கரை ஏற்றுமதியில் முக்கிய அங்கம் வகிக்கும் இந்தியா, தாய்லாந்து ஆகிய ஆசிய நாடுகளில் எல் நினோ காரணமாக வறண்ட வானிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்நாடுகளில் கரும்பு உற்பத்தி பெரிதளவில் பாதிப்படைந்துள்ளது; வரத்து குறைவால் சர்க்கரையின் விலையும் உயர்ந்துள்ளது.

சர்க்கரையின் உலகளாவிய இருப்பு என்பது கடந்த 2009-ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போது மிகவும் குறைந்து வருகிறது. உணவிற்கு மட்டுமல்ல எத்தனால் போன்ற உயிரி எரிபொருள்கள்(biofuel) உற்பத்திக்கும் சர்க்கரை அதிகளவில் பயன்படுத்தப்படுவதால் விலையேற்றமும் பற்றாக்குறையும் பல துறைகளில் பெரிதளவில் பாதிப்பை உண்டாக்கக் கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

படிக்க : உலகக் கோப்பை: தேசவெறிக்கு நாங்கள் பலியாக மாட்டோம்!

இந்தியாவில் வறண்ட வானிலை கடந்த ஆகஸ்ட் மாதம் பதிவாகியுள்ளது. இதனால், கரும்பு உற்பத்தியில் முக்கிய மாநிலமாக இருக்கக் கூடிய மகாராஷ்டிரத்தில் கரும்பு சாகுபடி குறைந்து சர்க்கரை உற்பத்தி 8 சதவிகிதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இதே காரணத்தால், தாய்லாந்து நாட்டிலும் கரும்பு சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில்(2023) 9.3 கோடி மெட்ரிக் டன் கரும்பு அறுவடை செய்யப்பட்ட நிலையில், வரும் ஆண்டில்(2024) அது 7.6 கோடி மெட்ரிக் டன் ஆக குறையும் என தாய்லாந்து கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் நரதிப் ஆனந்தசுக் தெரிவிக்கிறார்.

நடப்பு ஆண்டில் உலகளாவிய சர்க்கரை உற்பத்தி மேலும் 2 சதவிகிதம் குறையும் என ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பு தெரிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டைவிட உற்பத்தியில் சுமார் 35 லட்சம் மெட்ரிக் டன் குறைவு என்கிறது.

இதேபோல், உலகின் சர்க்கரை ஏற்றுமதியில் பெரியளவில் பங்காற்றும் நாடான பிரேசிலில், கரும்பு அறுவடை கடந்த ஆண்டைவிட 20 சதவிகிதம் அதிகரிக்கும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். ஆனால், அதுவும் தற்போது ஏற்பட்டிருக்கும் பற்றாக்குறையை உடனடியாக தீர்த்துவிடாது. அடுத்தாண்டின்(2024) இறுதியில்தான் இந்த பற்றாக்குறையை ஓரளவு சரிசெய்ய முடியும். அதுவரை சர்க்கரை இறக்குமதிக்கு பிரேசிலை நம்பியிருக்கும் ஆப்பிரிக்காவின் பெரும்பாலான நாடுகளுக்கு மோசமான நிலைமைதான்.

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவிற்கு 98 சதவிகித சர்க்கரை இறக்குமதி மூலம்தான் பெறப்படுகிறது. 21 கோடி மக்கள் வசிக்கும் அந்நாட்டின் ஏழை, எளிய உழைக்கும் மக்களின் முக்கிய உணவாக இருப்பது ரொட்டிதான். அந்த ரொட்டிக்கு தேவையான முக்கிய மூலப்பொருளே சர்க்கரைதான். சர்க்கரையின் விலை உயர்வால், ரொட்டி உற்பத்தியை பாதியாகக் குறைக்க முடிவு செய்துள்ள ரொட்டி விற்பனையாளர்கள், “இது மிகவும் மோசமான சூழ்நிலை” என்று வேதனை பெருமூச்சுவிடுகின்றனர். இதனால், அந்நாட்டு ஏழை, எளிய மக்கள் பட்டினி அபாயத்தை எதிர்நோக்கவிருக்கின்றனர்.

படிக்க : உலகக் கோப்பை: மோடி தோல்வி; முகமது ஷமிகள் வெற்றி!

இப்படி, உலகளாவிய உணவு சங்கிலி பாதிப்பதற்கு முக்கிய காரணம் எல் நினோ எனப்படும் காலநிலை மாற்றமாகும். எல் நினோ என்பது இயற்கையாக கடல் பரப்பிலும் அதன் மேல்பகுதியிலுள்ள வான் பரப்பிலும், வெப்ப நிலையில் ஏற்படும் உயர்வாகும். எல் நினோவும், லா நினாவும் (வெப்பநிலை குறைவு) இரண்டு முதல் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறிமாறி ஏற்படுகின்றன. 2020-ஆம் ஆண்டிலிருந்து லா நினா தொடங்கியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஆனாலும், புவியின் வெப்ப நிலை உயர்வு காரணமாக லா நினா தொடங்கிய பின்னரும் பூமியின் சராசரி வெப்பநிலை உயர்வு குறையவில்லை. அதாவது, பூமி தனது வெப்பநிலை உயர்வை சரிசெய்ய முடியாத நிலையை அடைந்திருக்கிறது.

இத்தகைய காலநிலை பேரழிவிற்கான மூல முதல் காரணம், முதலாளிகள் தங்களது லாபவெறிக்காக அடர்ந்த காடுகளை அழித்துவருவதும், இயற்கைக்கு கேடான தொழிற்சாலைகளை அதிகரித்துவருவதும்தான். மனிதனுக்கும் இயற்கைக்கும் விரோதமான முதலாளித்துவத்திற்கும் அதனை கட்டிக்காக்கும் ஆளும்வர்க்கத்திற்கும் முடிவு கட்டினாலொழிய காலநிலை மாற்றத்திற்கும் பட்டினி சாவுகளுக்கும் முடிவு கட்டமுடியும்.

ஆதினி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க