உலக அளவில் 2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் அதிக வெப்பநிலை பதிவாகி உள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவி பெறுகின்ற ”காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான கோப்பர்நிகஸ் சேவை அமைப்பு” (Copernicus Climate Change Service – C3S) என்கிற ஆய்வு நிறுவனம் கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி அன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் 2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட லா நினோ வானிலை மாற்றத்தின் காரணமாக குளிர்ச்சியான வெப்பநிலை இருந்தது. ஆனால் தொழிற்புரட்சி காலத்துக்கு (1830 ஆம் ஆண்டிற்கு) முன்பிருந்த பூமியின் சராசரி வெப்பநிலையை விட உலக அளவில் 1.75 டிகிரி செல்சியஸ் அதிகமான வெப்பநிலை பதிவாகி உள்ளது.
மேலும் 1991- 2000 வரையிலான ஆண்டுகளின் ஜனவரி மாதங்களில் நிலவிய வெப்பநிலையை விட 2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் 0.79 டிகிரி செல்சியஸ் அதிகமாகப் பதிவாகி உள்ளது என்று தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
குறிப்பாக 2024 ஆம் ஆண்டில் உலக அளவில் அதிக வெப்பநிலை பதிவானது. ஆனால் 2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட லாநினோ வானிலை மாற்றத்தின் மூலம் உலகம் முழுவதும் குளிர்ச்சியாக இருந்துள்ள போதிலும் வெப்பநிலை அதிகரித்திருப்பது கோப்பர் நிக்கர்ஸ் காலநிலை மாற்ற நிபுணர்களுக்கே ‘ஆச்சரியத்தை’ ஏற்படுத்தி உள்ளது.
மற்றொருபுறம் அதிக வெப்பநிலை காரணமாக ஆர்டிக் கடல் பகுதியில் உள்ள பனிப்பாறைகள் கடந்த ஆண்டைவிட 6 சதவிகிதம் குறைவாக உருவாகி உள்ளது. இதனால் 2025 ஜனவரி மாதத்தை விசித்திரமான மாதம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த கோபர்னிக்கஸ் காலநிலை மாற்ற நிறுவனத்தின் தலைவர் சமந்தா பர்கெஸ் “ஜனவரி 2025 மற்றொரு ஆச்சரியமான மாதமாகும். வெப்பமண்டல பசிபிக் பகுதியில் லா நினா நிலைமைகளின் வளர்ச்சி மற்றும் உலகளாவிய வெப்பநிலையில் அது ஏற்படுத்திய தற்காலிக குளிர்ச்சி விளைவு என இருந்தபோதிலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் காணப்பட்ட அதே வெப்பநிலை தொடர்கிறது,” என்று கூறியுள்ளார்.
அதாவது குளிர்ச்சியான காலநிலையிலும் வெப்பநிலை அதிகரித்திருப்பதால் உலக அளவில் பல்வேறு பகுதிகளில் அதிக மழைப் பொழிவு, வெள்ளம், கடுமையான குளிர், வறண்ட வானிலை ஆகியவற்றால் உணவு பற்றாக்குறையும் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
படிக்க: மழைவெள்ளத்திற்குக் காரணம் காலநிலை மாற்றமா? தொழில்நுட்ப பிரச்சினையா?
குறிப்பாக காலநிலை மாற்றத்தின் காரணமாக 2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் வடக்கு அரைக்கோளத்தில் மேற்கு ஐரோப்பாவிலும், இத்தாலி, ஸ்காண்டிநேவியா மற்றும் பால்டிக் நாடுகளின் சில பகுதிகளில் சராசரியை விட ஈரப்பதமான சூழல் நிலவியதையும் சில பகுதிகளில் அதிக மழைப்பொழிவும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டதையும் இவ்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
அதாவது ஐரோப்பாவிற்கு அப்பால் அலாஸ்கா, கனடா, மத்திய மற்றும் கிழக்கு ரஷ்யா, கிழக்கு ஆஸ்திரேலியா, தென்கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் தெற்கு பிரேசில் போன்ற பகுதிகளில் ஈரப்பதம் அதிகமாக இருந்ததால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு அதிகமான உயிரிழப்புகளும், மக்கள் தங்கள் உடைமைகளை இழந்து நிர்க்கதியாய் நிற்கின்ற கொடூர நிகழ்வுகளும் அரங்கேறியதை அறிக்கை நினைவூட்டுகிறது.
மறுபுறம் வடக்கு இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து, கிழக்கு ஸ்பெயின் மற்றும் கருங்கடலின் வடக்கு, தென்மேற்கு அமெரிக்கா மற்றும் வடக்கு மெக்சிகோ, வடக்கு ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, மத்திய ஆசியா முழுவதும் மற்றும் கிழக்கு சீனா, தெற்கு ஆப்பிரிக்காவின் பெரும்பகுதி, தெற்கு தென் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவிலும் சராசரியை விட வறண்ட வானிலையே நிலவியுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக 2015 ஆம் ஆண்டின் டிசம்பர் 12 ஆம் தேதி அன்று பாரிஸில் காலநிலை மாற்ற மாநாடு (COP 21) நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட உலக முதலாளித்துவ நாடுகளின் தலைவர்கள் காலநிலை மாற்றத்தையும் அதனால் ஏற்படுகின்ற விளைவுகளையும் கட்டுப்படுத்துவதற்கு உருவாக்கப்பட்ட பாரிஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
மேலும் தங்களின் நாடுகளில் பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வை கணிசமாகக் குறைப்பதற்கும், தொழிற்புரட்சிக்கு முந்தைய வெப்பநிலையை விட சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் உயராமல் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவும் உறுதி அளித்தன.
முக்கியமாக முதலாளித்துவ நாடுகளினால் ஏற்படுகின்ற காலநிலை மாற்றத்தினால் உலகம் பேரிடர்களாலும், வறட்சியாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஜனவரி 20 ஆம் தேதி அன்று அமெரிக்க அதிபர் டிரம்ப் பெயரளவில் உருவாக்கப்பட்ட பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்திருப்பது சர்வதேச அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலக முதலாளித்துவ நாடுகள் பூஜ்ஜியம் சதவிகித உமிழ்வை நோக்கி உலகை முன்னேற்ற வேண்டும் என்று கூறிக்கொண்டு COP 27, COP 28 போன்ற மாநாடுகளை மட்டும் பெயரளவில் நடத்திக்கொண்டிருக்கின்றன. ஆனால் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் தற்போது வரை எத்தகைய நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதே இங்கே கவனிக்கத்தக்கது.
குறிப்பாக ஏகாதிபத்திய நாடுகளும், பன்னாட்டு முதலாளிகளும், கார்ப்பரேட் கும்பல்களும் தங்களின் லாப வெறிக்காக காடுகளிலும், மலைகளிலும் உள்ள இயற்கை வளங்களையும், கனிம வளங்களையும் கட்டற்ற முறையில் சுரண்டுகின்றன. இது உலகையே அழிவுப் பாதையில் கொண்டு சென்று கொண்டிருக்கிறது.
தற்போதுள்ள முதலாளித்துவ கட்டமைப்பை வைத்துக் கொண்டு காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவது என்பது சாத்தியமற்றது. எனவே, சோசலிச சமுதாயத்தைக் கட்டமைப்பதே நம் முன்னுள்ள ஒரே தீர்வு.
ஆசாத்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram