இந்தியாவை மிரட்டும் வெப்ப அலை! காரணம் என்ன?

பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

டந்த ஜூன் மாதத்தில் பொதுவெளிhயில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.

000

கேள்வி: இந்தியாவில் வெப்ப அலை காரணமாக, இதுவரை 143 பேர் உயிரிழந்துள்ளனர். 42,000 பேர் வெப்பம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் வெப்ப அலையால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கூடிக்கொண்டேதான் செல்கிறது. பருவநிலை மாற்றத்தினால்தான் வெப்ப அலைகளின் தீவிரம் அதிகரித்து வருகிறதா? அல்லது இதற்கு வேறு காரணங்களும் உள்ளதா?

டந்த 2022-ஆம் ஆண்டு இந்தியா தீவிரமான வெப்ப அலையை எதிர்கொண்டது. அதன்பிறகு 2023-ஆம் ஆண்டும் சுமார் 122 ஆண்டுகளுக்கு பின்னர் அதிகபட்ச வெப்பநிலை பதிவானது; இதனால் மகாராஷ்டிராவில் ஒரேநாளில் 13 பேர் உயிரிழந்தனர். இந்தாண்டு அதைவிட அதிகளவு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

சமீபத்தில் “வேர்ல்டு வெதர் ஆட்ரிபியூஷன்” (World Weather Attribution) என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், தெற்காசியாவில் பருவமழைக்கு முந்தைய காலத்தில் வெப்பநிலை தொடர்ச்சியாக அதிகரித்துவருவதும், காலநிலை மாற்றத்தால் இது மேலும் தீவிரமாகியுள்ளதும் தெரியவந்துள்ளது. அதேசமயம், இவ்வாறு வெப்பநிலை உயர்வதற்கு மனித நடவடிக்கைகளே காரணமென்றும் ஆய்வு குறிப்பிடுகிறது.

2021-இல் ஐக்கிய நாடுகள் பருவநிலை மாற்ற மாநாட்டில் (COP26) பிரதமர் நரேந்திர மோடி 2070-இல் நிகர பூஜ்ஜியத்தை அடைவதாக உறுதியளித்தார். ஆனால் இன்றும், நாட்டின் எரிசக்தித் தேவைகளில் 50 சதவீதத்திற்கும் மேலாக நிலக்கரி பயன்பாட்டில்தான் உள்ளது. வேதாந்தா போன்ற சுற்றுச்சுழலுக்கு பேராபத்தை விளைவிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து கோடிக்கணிக்கில் தேர்தல்நிதிகளை லஞ்சமாக பெற்றுக்கொண்டு, நாட்டின் வளங்களை கொள்ளையடிப்பதற்கு பாசிச மோடி அரசு அனுமதி வழங்கி வருகிறது.

இயற்கை வளங்களை கொள்ளையடிப்பதற்கான திட்டங்களுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்த ஆண்டில் மட்டும் சுமார் 675 பெரிய தொழில்துறை திட்டங்களுக்கு பாசிச மோடி அரசு சுற்றுச்சுழல் அனுமதிகளை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு, இயற்கையை நாசம் செய்யும் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படுவது காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பை தீவிரப்படுத்துகிறது. சான்றாக, இமாச்சலப் பிரதேசத்தில் வளர்ச்சி என்ற பெயரில் மோடி அரசு அமைத்துவரும் பகாசுரமான சாலைகளும், திட்டமிடப்படாத கட்டுமானங்களும் கனமழையின்போது தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

ஒருபுறம் இயற்கை வளங்களை அழித்து காலநிலை மாற்ற பாதிப்புகளை தீவிரப்படுத்தும் பாசிச மோடி அரசு, இயற்கை பேரிடர்களால் உயிரிழப்புகள் ஏற்படாமல் இருப்பதற்கு எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், பேரிடர் நிவாரண நிதிகளை மாநிலங்களுக்கு வழங்காமல்  மக்களை படுகொலை செய்கிறது. சான்றாக, கடந்த ஆண்டே நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வெப்பத்தின் தாக்கத்தால் பலியாகிய நிலையில் இந்தாண்டு அதனை காட்டிலும் இறப்பு விகிதம் அதிகரிப்பதற்கான அபாயம் இருந்தது. ஆனால், இதனையெல்லாம் நன்கு அறிந்தும் மக்கள் வெயிலுக்கு பலியாவதை தடுக்க ஒன்றிய அரசின் சார்பாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. போர்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது; மருத்துவ கட்டமைப்புகளை தயார்ப்படுத்தி வைப்பது போன்ற உயிராதாரமான விசயங்களை மேற்கொள்ளாமல் மக்களை சாகவிட்டு வேடிக்கை பார்க்கிறது, பாசிச மோடி அரசு.

அதிலும், ஏற்கெனவே உயிரிழப்புகள் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் 80 நாட்களுக்கு தேர்தலை நடத்தியதெல்லாம் பாசிச பயங்கரவாத நடவடிக்கையின் உச்சம். இந்த தேர்தல் சமயத்தில் இந்தியாவில் நூற்றுக்கணக்கானோர் பலியாகினர். தேர்தலின் இறுதி நாளான ஜூன் 1 அன்று மட்டும் 33 வாக்குச்சாவடி ஊழியர்கள் உயிரிழந்தனர். இவையெல்லாம் இந்தியாவில் காலநிலை மாற்றம் மட்டுமின்றி,பாசிச மோடி அரசின் ஆட்சியும் பேரழிவுகளை ஏற்படுத்துவதற்கான காரணம் என்பதை துலக்கமாகக் காட்டுகிறது.


பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

(புதிய ஜனநாயகம் – ஜூலை 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க