அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் (Baku) பருவநிலை மாற்றம் தொடர்பான உலகநாடுகளின் உச்சி மாநாடான COP29 நவம்பர் 11 அன்று துவங்கி நடைபெற்று வருகிறது. இது நவம்பர் 22 வரை பாகு மைதானத்தில் நடைபெறும். இந்த மாநாட்டில் 200 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
பருவநிலை மாற்றத்தைத் தடுக்கப்போவதாக வெற்றுச் சவடால் அடிக்கும் COP மாநாடுகளை முதலாளித்துவ அறிஞர்களே கடுமையாக விமர்சனம் செய்கின்றனர். அதில் நடைபெறும் கேலிக்கூத்துகள் ஏராளம். சான்றாக, உலக அளவில் அதிகமான சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்தும் நிறுவனங்களுள் ஒன்றான கோக்கோ கோலா 2022 ஆம் ஆண்டு எகிப்தில் நடைபெற்ற COP27-க்கு ஸ்பான்சர் செய்ததைக் கூறலாம்.
COP என்பது ஆண்டுதோறும் நடத்தப்படும் முதலாளிகளின் அரட்டை மடமாகவே இருந்து வருகிறது. COP எனும் இந்த ஏமாற்று நாடகத்தை அம்பலப்படுத்தி 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாத “புதிய ஜனநாயகம்” இதழில் வெளிவந்த கட்டுரையை வாசகர்களுக்கு வழங்குகிறோம்.
***
கிளாஸ்கோ பருவநிலை மாநாடு (COP26):
முதலாளித்துவ அரசுகளின் மற்றுமொரு அரட்டை மடம்!
‘‘புவி வெப்பமயமாதல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், கடந்த நூற்றாண்டுகளுக்கு முன்பு எப்போதோ ஓரிருமுறை நிகழ்ந்த பேரிடர்கள் இனி வரும் காலங்களில் ஆண்டுதோறும் நிகழும்’’ – என எச்சரித்து கடந்த ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி பருவநிலை மாற்றத்திற்கான சர்வதேச அரசுக் குழுவின் (IPCC) ஆறாவது மதிப்பீட்டு அறிக்கை வெளியானது. இவ்வறிக்கையும் பருவநிலை மாற்றத்தால் தொடர்ச்சியாக நடந்துவரும் பேரிடர்களும் இப்புவிக்கோளத்தைப் பற்றிய அச்சத்தோடு கூடிய அக்கறையுணர்வை மக்கள் மனதில் தூவியுள்ளது.
இந்த ஆண்டு ஜூன் மற்றும் ஜுலை மாதங்களிலும்கூட பருவநிலை மாற்றத்தின் கோரமான, மிகச் சமீபத்திய விளைவுகளை உலக நாடுகள் சந்தித்திருக்கின்றன. மேற்கு கனடா மற்றும் வடமேற்கு அமெரிக்காவின் பெரும்பகுதியை கொடூரமான வெப்ப அலைகள் தாக்கின. ஒரு மதிப்பீட்டின்படி, இதனால் பாதிக்கப்பட்டு சுமார் 1,400-க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கின்றனர். ஜெர்மனியில் இரண்டு மாதங்களில் பெய்ய வேண்டிய மழை இரண்டே நாட்களில் கொட்டித் தீர்த்தது. சீனாவின் ஹுனான் பகுதியில் அம்மாகாணத்தின் ஓராண்டு சராசரி மழை அளவு வெறும் நான்கு நாட்களில் பெய்து வெள்ளக்காடாக்கியது. தெற்கு ஐரோப்பா பெரும் காட்டுத்தீயுடன் போராடியது. கிரீன்லாந்தில் முதல் முறையாக பனிப்பொழிவுக்கு மாறாக மழை பெய்தது. இந்தியாவிலும் கேரளா, உத்தரகாண்ட், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் பெய்துவரும் கனமழையால் நகரங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இந்நிலையில்தான், பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டங்களை வகுத்து செயல்படுத்துவதற்கான 26-வது ஐக்கிய நாடுகள் பருவநிலை மாற்ற மாநாடு (COP26) உலகெங்கும் உள்ள சுற்றுச்சூழலியலாளர்கள், அரசியல் பார்வையாளர்கள் மற்றும் புவியின் மீது அக்கறையுள்ள இளம் தலைமுறையினரால் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துப் பார்க்கப்பட்டது. அக்டோபர் 31 முதல் நவம்பர் 13 வரை இரண்டு வாரங்களுக்கு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று முடிந்த இம்மாநாட்டில் 200 நாடுகளில் இருந்து 30,000 பிரதிநிதிகள், 120 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
‘சூழலியல் அக்கறை’, முதலாளித்துவ அரசுகளுக்கு முதல்முறை வருவதல்ல!
COP26 மாநாடு, 1994-ம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட ‘காலநிலை மாற்றத்திற்கான ஐக்கிய நாடுகள் கட்டமைப்பு உடன்படிக்கை’-இன் (UNFCCC) கீழ் நடைபெறும் ஒரு வருடாந்திர மாநாடு ஆகும். நிலக்கரி, பெட்ரோல் உள்ளிட்ட புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதால் உருவாகக்கூடிய புவி வெப்பமயமாதலுக்கு காரணமான, பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வை (கார்பன்-டை-ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ்-ஆக்சைடு உள்ளிட்டவை) இந்த நூற்றாண்டின் பாதிக்குள் உலகளாவிய அளவில் நிகர பூஜ்ஜியத்திற்கு கொண்டுவருதல்; அதன் மூலம் உலக வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரிக்குள் கட்டுப்படுத்துதல்; பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்கவும், உமிழ்வுகளை குறைப்பதற்கும் ஏழை நாடுகளுக்கு, பணக்கார – வளர்ந்த நாடுகள் ஒவ்வொரு ஆண்டிற்கும் 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்க வேண்டும் என்ற 2009-ம் ஆண்டு உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட குறிக்கோள்களோடு இம்மாநாடு நடைபெற்றது.
இந்த ‘குறிக்கோள்கள்’ ஒன்றும் புதியவையுமல்ல. இவற்றை அடைவதற்காக நடத்துவதாகச் சொல்லப்படும் இதுபோன்ற மாநாடுகளும் புதியவையல்ல. இது ஐ.நா.வின் 26-ஆவது மாநாடாகும் (COP26). வரன்முறையற்ற கனிமவளச் சுரண்டல், காடுகள் அழிப்பு, நீர்நிலைகள் அழிப்பு, சுற்றுசூழலை நாசம் செய்யும் நாசகர தொழிற்சாலைகள், அவை வெளியேற்றும் கழிவுகள் என பருவநிலை மாற்றத்திற்கு மூலக்காரணமே சூழலியலைப் பற்றி சிறிதும் கவலைகொள்ளத் தயாரில்லாத ஏகாதிபத்திய முதலாளித்துவ உற்பத்திமுறையும் இலாபவெறியும்தான்.
முதலாளிகளின் நலனைக் கட்டிக் காக்கும் அரசுகளின் பிரதிநிதிகளோ தாங்கள் சூழலியல் சிதைவைப் பற்றி பெரிதும் ‘கவலைப்படுவதாகவும்’ அதனை சரிசெய்வதற்காக ‘பெருமுயற்சியெடுத்து’ வருவதாகவும் ஒவ்வொரு முறையும் உலக மக்களை ஏய்ப்பதற்காக இதுபோன்ற மாநாடுகளை நடத்துவதும், அதில் கூடிப் பேசி கலைவதும் வழக்கம். இதுவரை போடப்பட்ட உடன்படிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்ட இலட்சணத்தைப் பற்றி பரிசீலித்தாலே இதைப் புரிந்துகொள்ள முடியும்.
1997-ல் முதன்முதலாக, கியோட்டோ உடன்படிக்கை (Kyoto Protocol) போடப்பட்டது. இந்த உடன்படிக்கை, ‘‘தொழில்துறையில் வளர்ந்த ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட 37 நாடுகளே வரலாற்றுரீதியாக புவி வெப்பமயமாதலுக்கு காரணம். எனவே அவை உடனடியாக பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வைக் குறைக்க வேண்டும்’’ என்று கூறியது. பெரும்பாலான நாடுகள் இவ்வொப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தன. ஆனால், அதிக அளவில் பசுமை இல்ல வாயுக்களை வெளியேற்றும் நாடான அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தைக் கைவிட்டதால் ஓராண்டில் இவ்வொப்பந்தம் தன்னியல்பாக காற்றில் கரைந்தது.
அதன்பிறகு, 2015-ல் போடப்பட்ட பாரிஸ் ஒப்பந்தம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. 192 நாடுகளால் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தமானது, ‘‘பூமியின் வெப்ப அதிகரிப்பை 2 டிகிரிக்குள் வைத்திருக்க பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வைக் குறைக்க வேண்டும்; பருவநிலை மாற்றத்திற்கான நிதியாக ஆண்டுதோறும் 100 பில்லியன் டாலர்களை வளர்ந்த நாடுகள் ஏழை நாடுகளுக்கு வழங்க வேண்டும்’’ என்று கூறியது. இது இரண்டுமே தற்போது நடைபெற்ற COP26 மாநாடுவரை நிறைவேற்றப்படவில்லை.
இந்நிலையில், தற்போது நடந்துள்ள COP26 மாநாட்டின் முடிவுகளையும் உள்ளபடியே இவர்கள் குப்பைத் தொட்டியில் தூக்கிப் போடத்தான் போகிறார்கள் என்பதற்கு இவர்களது கடந்தகால மாநாடுகளே சான்று. எனினும் தற்போது மாநாடு நடந்த விதம் அதில் தலைவர்கள் ஆற்றிய உரை, நிறைவேற்றிய தீர்மானங்கள் ஆகியவற்றிலிருந்தும் இந்த மாநாட்டு முடிவுகள் எவ்வாறு வெறும் பகட்டு ஆரவாரங்களாக உள்ளன என்பதைப் பார்ப்போம்.
ஒப்பந்தங்களல்ல.. கழிப்பறை காகிதங்கள்!
இந்த மாநாட்டில் 2030-க்குள் காடழிப்பை முடிவுக்குக் கொண்டு வரும் ஒப்பந்தத்தில் கனடா, பிரேசில், ரஷ்யா, சீனா, இந்தோனேசியா என 100-க்கும் மேற்பட்ட நாடுகள் கையொப்பமிட்டுள்ளனர். இந்தோனேசிய அரசு அதிகாரிகள் இதில் கையெழுத்திட்டுள்ள நிலையில் இந்தோனேசிய அமைச்சர் சிடி நுர்பயா பாகர், ‘‘எங்களால் செய்யமுடியாததை அதிகாரிகளால் உறுதியளிக்க முடியாது. இந்தோனிசியாவிற்கு ‘வளர்ச்சி’தான் பிரதானமானது’’ என போட்டுக்கொண்ட ஒப்பந்தத்திற்கு எதிராக பகிரங்கமாகவே பேசியுள்ளார்.
உலகத்தின் நுரையீரலான அமேசான் காடுகளை அதே ‘வளர்ச்சிப் பணிகளுக்காக’ அழித்து வரும் பிரேசிலும் 2030-க்குள் காடழிப்பை முடிவுக்குக் கொண்டுவரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. பிரேசிலின் முன்னாள் அதிபர் பொல்சனாரோ ஆட்சியில், கடந்த ஆண்டில் மட்டும் இலண்டன் நகரை விட ஏழு மடங்கு பெரிய அமேசான் மழைக் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன என்ற செய்தியும், தற்போதுள்ள அரசும் சுற்றுச்சூழலைக் காப்பதற்கான எந்த அக்கறை கொள்ளவில்லை என்பதும், இத்தீர்மானங்கள் – ஒப்பந்தங்கள் நடைமுறைக்குப் போவதன் மீது நமக்கு கேள்வியை எழுப்புகின்றன.
ஏற்கெனவே 2014-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.நா. பருவநிலை மாநாட்டில், இதே போல் 2030-க்குள் காடழிப்பை நிறுத்த ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், அதன் பிறகு காடழிப்பு விகிதம் 41 சதவிதம் அதிகரித்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. கடந்த 2000-ம் ஆண்டிலிருந்து 2010-ம் ஆண்டிற்குள்ளான பத்து ஆண்டுகளில், சராசரியாக ஆண்டொன்றுக்கு 1.5 கோடி ஹெக்டேர் காடுகள் அழிக்கப்பட்டன. ஆனால் 2015-லிருந்து 2020 வரையான ஐந்தாண்டுகளில் – அதாவது பாரிஸ் ஒப்பந்தம் போடப்பட்ட பிறகு – சுமார் 1 கோடி ஹெக்டேர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தங்களை முதலாளித்துவ நாடுகள் வெறும் கழிப்பறைக் காகிதமாகத்தான் கருதுகிறார்கள் என்பதற்கு இவையே சான்று.
000
அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளே, வாக்குறுதி கொடுக்கத் தயங்கி தங்களது இலக்குகளைத் தெளிவாக முன்வைக்காமல் இருந்தபோது, நமது ‘56 இன்ஞ்’ மோடி அரசோ, தைரியமாக ஒரு திட்டத்தை முன்வைத்திருப்பது உலகநாடுகளால் பாராட்டப்பட்டிருப்பதாக செய்திகள் பரப்பப்பட்டன. அத்திட்டத்திற்குப் ‘பஞ்சாமிர்தம்’ (ஐந்து அம்ச திட்டம்) என பெயர்சூட்டியது இந்திய அரசு. ‘‘2070-ம் ஆண்டு இந்தியா பூஜ்ஜிய உமிழ்வை அடையும்; 2030-ம் ஆண்டிற்குள் தனது ஆற்றலின் 50 சதவிதத்தை புதுப்பிக்கத்தக்க வளத்திலிருந்து பெறும், புதைபடிவ பொருள் அல்லாத எரிசக்தியின் திறனை 500 ஜிகா வாட்டாக அதிகரிப்போம்; 2030-ம் ஆண்டு முடிவுக்குள் ஒரு பில்லியன் டன் அளவுக்கு கரியமிலவாயு உமிழ்வைக் குறைப்போம்; நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2005-உடன் ஒப்பிடும்போது கார்பன் தீவிரத்தை 45% குறைப்போம்’’ – என ஐந்து வாக்குறுதிகளை கொடுத்திருக்கிறார்.
இந்தியாவின் தற்போதைய மின் உற்பத்தித் திறன் 388 ஜிகா வாட்டாகத்தான் உள்ளது. ஆனால், மோடியோ 2030-ம் ஆண்டிற்குள் புதிப்பிக்கத்தக்க ஆற்றலில் இருந்து மட்டும் 500 ஜிகா வாட் திறனை பெறப்போவதாக கூறியுள்ளார். இக்காலகட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் மொத்த ஆற்றலில் 50 சதவிகிதம் புதைபடிம எரிபொருளல்லாத மின் உற்பத்தியின் மூலம் சாதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். அப்படியானால், 2030−ஆம் ஆண்டுக்குள் 1000 ஜிகா வாட்-டுக்கும் அதிகமான மின்னுற்பத்தி செய்தால் மட்டுமே அது சாத்தியம். எனில், அடுத்த 9 ஆண்டுகளில் இந்தியாவின் மின் தேவை கிட்டத்தட்ட 2.5 மடங்கு அதிகரித்துவிடுமா என்ன?
அது சரி, வாக்குறுதிகளை நிறைவேற்றும் பழக்கம் இருந்தால் தானே இதைப்பற்றி எல்லாம் யோசிக்க வேண்டும். மோடியின் வரலாற்றிலேயே அந்தப் பழக்கம் கிடையாதே. ஆக, இதுவும் ‘5 டிரில்லியன் பொருளாதாரம்’ கட்டியெழுப்பப்பட்ட கதைதான்.
சூழல் அழிப்பு குற்றவாளிகளுடன், சூழலியல் ‘நீதி விசாரணை’
ஐக்கிய நாடுகள் சபையால் வழங்கப்பட்ட மாநாட்டின் பங்கேற்பாளர்களின் பட்டியலை ஆய்வு செய்த போது , COP26-ல் எந்தவொரு தனி நாட்டையும் விட புதைபடிவ எரிபொருள் நிறுவனங்களின் பிரதிநிதிகள் தான் மிகப்பெரிய எண்ணிக்கையில் பங்கெடுத்தது தெரியவந்ததுள்ளது. உலக அளவில் 71 சதவீத பசுமை இல்ல வாயு உமிழ்வுகளுக்கு, வெறும் 100 உலகளாவிய நிறுவனங்கள் தான் காரணமாகின்றன. யார் இந்த சுற்றுசூழல் சீர்குலைவுக்கு முக்கியமான காரண கர்த்தாக்களோ அவர்களோடு ஆலோசனை நடத்தித்தான் ‘பூமியை பாதுகாப்பது’ பற்றி திட்டம் வகுத்திருக்கிறார்கள்.
இந்த மாநாட்டின் இறுதியில் இந்தியா, சீனா உள்ளிட்டு அதீத நிலக்கரி பயன்பாட்டாளர்களின் அழுத்தத்தால், மாநாட்டின் வரைவறிக்கையில் நிலக்கரி பயன்பாட்டை ‘‘படிப்படியாக நிறுத்த வேண்டும்’’ என்ற சொல்லுக்கு பதிலாக ‘‘படிப்படியாக குறைக்க வேண்டும்’’ என்று மாற்றப்பட்டதை முதலாளித்துவ ஊடகங்களே கடுமையாக விமர்சித்தன. மொத்தத்தில், இம்மாநாடு ஏகாதிபத்திய முதலாளித்துவ அரசுகளால் நடத்தப்பட்ட ஒரு கபட நாடகமே என்பதற்கு இவையெல்லாம் சான்றுகளே!
கண்துடைப்புக்கான வாய்ச் சவடால் இலக்குகள்
புதைபடிம எரிசக்தியைத் தவிர்த்து புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறுவதன் மூலம் புவி வெப்பமயமாதல், காலநிலை மாறுபாட்டைத் தவிர்ப்பதற்காக, நிர்ணயிக்கப்பட்ட ‘‘தேசவாரியாக தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகள்’’ (NDC-Nationally determined contributions) COP26-இன் குறிக்கோளாகச் சொல்லப்பட்ட 1.5 டிகிரி வெப்பநிலையில் புவியை பராமரிப்பது என்ற திட்டத்திற்கு போதுமானதாக இல்லை என்று சில ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
பாரிஸ் ஒப்பந்தத்தின்படி ‘‘தேசவாரியாக தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகள்’’-ஐ ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை விவாதித்து மாற்றியமைக்கும் வழக்கம் இருந்துவந்தது. இந்த மாநாட்டில் ‘‘தேசவாரியாக தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகள்’’ புதியதாக தீர்மானிக்கப்பட்டன. ஆனால் அந்தந்த நாடுகள் தமது பங்களிப்பை முழுமையாக நிறைவேற்றினாலும் கூட 2.4 டிகிரிக்கு மேலாக வெப்பநிலை உயரும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இந்த 2.4 டிகிரி வெப்பநிலை உயர்வினால் உலகில் பேரழிவுகள் நிகழக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. உலகின் வெப்பநிலை வெறும் 2 டிகிரி உயர்ந்தாலே ஒரு பில்லியன் மக்கள் கடுமையான வெப்ப அழுத்தத்தால் பாதிக்கப்படுவார்கள்.
இதன் காரணமாக, ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறையே NDC-க்களை மீண்டும் புதுப்பித்துக்கொள்ள முடியும் என்ற வழமையான முறையை மாற்றி 2022-ல் 27-வது பருவநிலை மாற்ற மாநாட்டில் இதனை மாற்றும் முடிவுக்கு வந்துள்ளார்கள்.
புவியைக் காக்க, முதலாளித்துவத்தின் கழுத்தை நெறி!
COP26 மாநாடு ஒரு ஏமாற்று நாடகம் என்று உலகெங்கும் உள்ள சுற்றுச்சூழல் களச் செயல்பாட்டாளர்கள் மாநாடு துவங்கும் முன்னரே கூறிவந்தனர். இத்தகைய மாநாடுகளில் ஏற்கெனவே போடப்பட்ட ஒப்பந்தங்கள் கழிவறைக் காகிதமாகவே அனைத்து நாடுகளின் அரசுகளால் கையாளப்படுகின்றன என்பதை சுட்டிக்காட்டியே இவ்வாறு கூறுகின்றனர். முதலாளித்துவ நாடுகள் தங்கள் இலாப வெறியையே முதன்மையாகக் கருதி சூழலியலின் மேல் அக்கறை காட்டுவதில்லை என்பதையும் அவர்களின் நோக்கமெல்லாம் தங்களது முதலாளிகளின் இலாபத்தை உறுதிப்படுத்துவது மட்டும்தான் என்பதை அவர்கள் புரிந்துவைத்துள்ளார்கள்.
உலகின் பலநாடுகளையும் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், இளைஞர்கள் என ஒரு இலட்சம் பேர் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற மாநாட்டை அம்பலப்படுத்தி அந்நகரின் வீதிகளில் திரண்டு மிகப்பெரிய பேரணிகளையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினார்கள். குழந்தைகள் தங்கள் பெற்றோர்கள், வகுப்புத் தோழர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் வீதிகளில் இறங்கினர். தங்களது கண்டனக் கூட்டத்தில் COP26 மாநாட்டில் கூடியிருந்த அரசு பிரதிநிதிகள் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றினார்கள்.
இம்மாநாட்டில் கலந்துக்கொண்ட பருவநிலை மாற்ற செயல்பாட்டாளர் கிரெட்டா துன்பெர்க் COP26 மாநாடு ஒரு “தோல்வி”, ‘‘தலைவர்கள் எதுவும் செய்யவில்லை, அவர்கள் தீவிரமாக ஓட்டைகளை உருவாக்கி, தங்களுக்கு நன்மை பயக்கும் கட்டமைப்புகளை வடிவமைத்து வருகின்றனர். மேலும் இந்த அழிவுகரமான அமைப்பில் இருந்து தொடர்ந்து இலாபம் ஈட்டுகின்றனர்’’ என்று சாடினார். ‘‘எங்களுக்கு ‘2030க்குள்.. 2070க்குள்’ போன்ற வாக்குறுதிகள் தேவையில்லை.. நாங்கள் இப்போதே, இன்றே மாற்றத்தை எதிர்ப்பார்கிறோம்’’ என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் முழங்கினர்.
புவிப் பரப்பே நிலைத்திருக்குமா? என்று மனிதகுலமே கவலையோடு பருவநிலை மாற்ற அபாயத்தை எதிர்கொள்ளும் நிலையில், புதை படிம எரிபொருளிலிருந்து திடீரென புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறுவதன் மூலம் ஏற்படக்கூடிய மிகப்பெரிய நட்டத்தை ஏற்றுக்கொள்ள முதலாளிகள் தயாராக இல்லை. முதலாளிகளின் நலனைக் காக்கவே உருவாக்கப்பட்டுள்ள இந்த முதலாளித்துவ அரசுகள், முதலாளிகளுக்கு எப்படி அழுத்தம் கொடுப்பார்கள்?
ஆகவே, இதுபோன்ற மிகப் பிரம்மாண்டமான சர்வதேச மாநாடுகள் நடத்துவதும் அதில் வெற்று ஒப்பந்தங்களையும், பொய் வாக்குறுதிகளையும் கொடுப்பதெல்லாம், சுற்றுச் சூழல் சீர்கேடுகளால் கொதித்தெழும் மக்களின் எதிர்ப்புகளுக்கு முகம்கொடுக்க முடியாமல் முதலாளித்துவ அரசுகள் நடத்தும் நாடகமே.
இந்த ஒட்டுமொத்த முதலாளித்துவ பொருளாதார அமைப்பின் அடித்தளமே இலாப வெறியாக இருக்கும்போது, பசுமைக்குடில் வாயுக்களைக் குறைப்பது, கரியமில வாயு உமிழ்வைக் குறைப்பது போன்ற தமது இலாபத்தைப் பாதிக்கும் எவ்வித முயற்சிகளையும் முதலாளிகள் நடைமுறைப்படுத்தப் போவதில்லை. வேதாந்தா என்ற ஒரு கார்ப்பரேட்டின், ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சுற்றுச் சூழல் மாசுபாட்டை தடுத்து நிறுத்தவே 15 பேர் படுகொலையையும், பலநூறு பேர் மீதான வழக்கையும் கடந்துதான் சாதிக்க முடிந்திருக்கிறது. எனில் இந்தப் புவியின் மீதான ஒட்டுமொத்த கார்ப்பரேட் கும்பலின் தாக்குதலைத் தடுத்து நிறுத்த, எவ்வளவு வீச்சான மக்கள் திரள் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டியது இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
சுற்றுச் சூழல் மாசுபாட்டுக்கு எதிரான சூழலியல் போராட்டங்கள் முன்னேறி வளர்ந்துவருவதை நாம் ஆதரிக்கும் அதேவேளையில், முதலாளிகளின் இலாபவெறியே போட்டி போட்டுக் கொண்டு சுற்றுச் சூழலை சீரழித்து வருகிறது என்பதை உணரவேண்டும். முதலாளித்துவப் பொருளாதாரக் கட்டமைப்பைத் தகர்த்தெறிய, உழைக்கும் மக்களின் நேரடிக் கட்டுப்பாட்டிலான சமூகக் கட்டமைப்பை − சோசலிசத்தை − மாற்றாக முன்வைக்கும் அரசியல் முழக்கத்தின் கீழ் அணிதிரள வேண்டும். அதுதான் சுற்றுச்சூழல் பேரழிவில் இருந்து இந்த உலகைக் காப்பதற்கான ஒரே வழி!
மதி
(புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2021 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram