பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த ஐக்கிய நாடுகள் சபை காலநிலை மாற்ற மாநாட்டை (COP) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இதன் அடிப்படையில் இவ்வாண்டு இந்த மாநாடு நவம்பர் 11 முதல் 22 வரை அஜர்பைஜான் நாட்டின் தலைநகரான பாகுவில் (Baku) நடைபெற்றது.
இந்நிலையில் இது குறித்து, ஐ.நா. முன்னாள் பொதுச் செயலர் பான் கி மூன், ஐ.நா. பருவநிலைப்பிரிவு முன்னாள் தலைவர் கிறிஸ்டானியா ஃபுகுயெரெஸ், அயர்லாந்து முன்னாள் அதிபர் மேரி ராபின் சன் மற்றும் சுற்றுச்சூழல் நிபுணர்கள் ஐ.நா. அமைப்புக்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளனர். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவையாவன:
“பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காகக் கடந்த 2015 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் தொடர்ந்து மாநாடுகள் நடைபெற்றுக் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. அவை வரவேற்கத்தக்கவை தான் என்றாலும் தற்போதைய சூழலில் அந்த மாநாடுகளால் ஒப்பந்தத்தின் குறிக்கோளை நிச்சயம் அடைய முடியாது என்ற நிலைதான் உள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் இலக்கு என்னவென்றால், புவியின் வெப்பநிலையானது, தொழில் புரட்சிக்கு முன்பிருந்ததைக் காட்டிலும் 1.5 டிகிரி செல்சியஸ் மட்டுமே அதிகம் என்ற அளவில் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதுதான். இந்த இலக்கை அடைய வேண்டுமெனில் மிகவும் துரித கதியில் பசுமை வாயுக்கள் வெளியேற்றத்தைக் குறைத்தாக வேண்டும்.
ஆனால் தற்போது பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் நடைபெறும் ஐ.நா மாநாடுகளால் அவ்வளவு விரைவாக நடவடிக்கைகளை எடுக்க உறுப்பு நாடுகளை நிர்ப்பந்திக்க முடியவில்லை. இதனால் குறிப்பிட்ட காலத்திற்குள் அந்த இலக்கை அடைந்து மனிதக் குலத்தைக் காக்கும் எண்ணம் நிறைவேறுவதற்கான வாய்ப்பே இல்லை.
எனவே, கரியமில வாயு வெளியேற்றத்துக்கு பெரும் காரணமான படிம எரிபொருள்களின் (நிலக்கரி, பெட்ரோல், டீசல், எரிவாயு) பயன்பாட்டை வெகுவாக குறைக்க உலக நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பாரிஸ் பருவநிலை ஒப்பந்த நடைமுறை கட்டமைப்புகள் மாற்றியமைக்கப்பட வேண்டும்.
பருவநிலை மாநாடுகளில் அளிக்கும் வாக்குறுதிகளை நாடுகள் நிறைவேற்றியே ஆக வேண்டும். அவ்வாறு நிறைவேற்றாவிட்டால் அதற்கு பதில் சொல்லியாக வேண்டும் என்ற நிலையை மாற்ற வேண்டும்”. இவ்வாறு அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
படிக்க: மஞ்சள் புகைக்குள் மறைந்த தலைநகரம்
“புதைபடிவ எரிபொருள்கள் உட்பட எந்தவொரு குறிப்பிட்ட துறையும் குறுவைக்குப் படுவதையும் அரபு குழு ஏற்றுக்கொள்ளாது” என்று சவுதி தூதுக்குழுவைச் சேர்ந்த அல்பாரா தவ்ஃபிக் கூறியுள்ளார்.
எண்ணெய் ஏற்றுமதியை பிரதானமானதாகக் கொண்டுள்ள அஜர்பைஜான், சவுதி அரேபியா போன்ற நாடுகள் எண்ணெய் பயன்பாடு மீதான கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன. வரலாற்று ரீதியாக அதிக மாசுபாட்டை ஏற்படுத்திய அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள் தற்போது உத்தம வேடம் போடுகின்றன. வளர்ந்து வரும் நாடுகள் மீது குறை கூறுகின்றன.
இதைத்தான் நாம் இந்த மாநாடு முதலாளித்துவ அரசுகளின் மற்றுமொரு அரட்டை மடம் என்றும், இம்மாநாட்டினால் எந்த ஒரு பலனும் ஏற்படப் போவதில்லை என்றும் முன்பே கூறியிருந்தோம்.
அதைத்தான் தற்போது முதலாளித்துவ நிபுணர்களும் தலைவர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
அதுமட்டுமன்றி சட்ட விரோதமாக வனங்களையும், வனவாழ் உயிரினங்களின் வழித்தடத்தையும் அழித்து ஆக்கிரமிப்பு செய்து கொண்ட அயோக்கியன் ஜக்கியும் இம்மாநாட்டில் கலந்து கொண்டுள்ளான் என்பது காயத்திற்கு மருந்து போடக் கழுத்தை அறுத்தவனையே அழைப்பது போன்றது.
இம்மாநாட்டினால் புவி வெப்பமாதலைக் கட்டுப்படுத்தவும், உலக மக்களை அவற்றிலிருந்து காப்பாற்றவும் முடியாது என்பதே உண்மை. இலாப வெறிக்கான உற்பத்தி முறையில்லாமல் மக்கள் நலனுக்கான , மக்களின் தேவைக்கான உற்பத்தி முறையைக் கொண்ட சோவியத் கட்டமைப்பே இறுதித் தீர்வு.
கனிம வள கொள்ளையைத் தடுத்து நிறுத்தவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் முதலாளிகளின் லாப வெறிக்காக நாட்டின் சொத்துகளையும் கனிம வளங்களையும் தாரை வார்த்துக் கொண்டிருக்கும் கார்ப்பரேட் நல அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் மக்கள் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும்.
துருவன்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram