இந்தியாவின் தலைநகரான டெல்லி இன்று மஞ்சள் நிற புகையினுள் மறைந்தது போலக் காட்சியளிக்கிறது. காணும் இடங்களெல்லாம் கண்களை எரிச்சலூட்டும் புகைமூட்டங்களும், திடீரென புகைக்குள்ளிருந்து எதிரே வரும் வாகனங்களும், மூச்சுத் திணறலை ஏற்படுத்திக் கொல்லக்கூடிய நச்சுப் புகைகளும் மக்களின் தினசரி வாழ்வைப் பெரிதும் பாதித்துள்ளன.
இந்த காற்று மாசுபாடானது ஒரு நபர் ஒரு நாளில் 40 சிகரெட் பிடிப்பதற்குச் சமானம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். காற்று மாசுபாடு டெல்லியில் ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது. இதனால் ஆஸ்துமா பிரச்சனையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. இந்நிலையே நீடித்தால் டெல்லி மக்களின் ஆயுட்காலம் பன்னிரண்டு ஆண்டுகள் வரை குறைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் புற்று நோயினால் கர்ப்பிணிப் பெண்களும் குழந்தைகளும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பள்ளிகளில் விடுமுறை அளிக்கப்பட்டு இணைய வழி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. முகக் கவசமும் கண்ணாடியும் இன்றி மக்கள் வெளியே செல்வதே ஆபத்தானது என்ற நிலை உருவாகியுள்ளது.
இதனால் அம்மாநில அரசு காற்று மாசுபாட்டினைக் குறைக்கப் பல விதிமுறைகளை வகுத்து கட்டுப்பாடுகள் விதித்து வருகிறது. அதில் முக்கியமாக கனரக வாகனங்கள் நகரத்திற்குள் வரத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தண்ணீர் பஞ்சத்தில் தவித்துக் கொண்டிருந்த டெல்லிக்குக் கனரக வாகனங்களால் மட்டுமே தண்ணீர் வினியோகம் நடந்து கொண்டிருந்தது. மேலும் காய்கறி, மளிகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் கனரக வாகனங்களின் மூலமே கொண்டுவரப்படும். இதைத் தடுப்பதினால் பெரும்பாலும் டெல்லியின் உழைக்கும் மக்களே எண்ணற்ற இன்னல்களைச் சந்திக்கின்றனர்.
டெல்லியில் காற்று மாசுபாடு பருவகாலங்களில் ஒன்றாக மாறிவிட்டதோ என்று எண்ணும் அளவிற்கு நிலைமை மோசமாகியுள்ளது. டெல்லி காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த 1981 ஆம் ஆண்டு காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் இது பல கார்ப்பரேட்டுகளின் உற்பத்தியைக் குறைக்கும் வண்ணம் இருந்ததனால் கார்ப்பரேட் சேவையையே மூச்சாகக் கொண்ட அரசினால் இச்சட்டம் தளர்த்தப்பட்டது.
படிக்க: பாகிஸ்தான்: அபாயகரமான காற்று மாசுபாட்டால் பாதிக்கப்படும் 1 கோடி குழந்தைகள்!
பின்பு 2015-ல் இந்திய அரசு, ஐஐடி கான்பூர் உடன் இணைந்து தேசிய காற்று தரக் குறியீட்டை அறிமுகப்படுத்தியது. இதில் துகள் பொருள்கள் PM2.5 மற்றும் PM10 ஆகியவற்றை 20 -30 சதவிகிதம் குறைக்க இலக்கு வைக்கப்பட்டது. புதைபடிம எரிபொருள்களை எரிப்பதானது ஹைட்ரோகார்பன்கள் (HC) ,கார்பன் மோனாக்சைடு (CO), நைட்ரஜன் ஆக்சைடுகள் (NO x) மற்றும் துகள்கள் (Particulate Matter – PM) ஆகியவற்றின் உமிழ்வை அதிகரிக்கிறது. இது பருவநிலை மாற்றத்திற்கும் காரணமாக அமைகிறது. இதனைக் குறைக்க இலக்கு வைக்கப்பட்டதேயன்றி எந்த நடவடிக்கையும் அரசால் மேற்கொள்ளப்படவில்லை.
2019 ஆம் ஆண்டில் காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா ஏழாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. 2018 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி டெல்லியில் மட்டும் 8,632 தொழிற்சாலைகள் இருக்கின்றன. இதிலிருந்து வெளிப்படும் கழிவுகளால் 18 சதவிகிதத்திற்கும் அதிகமாகக் காற்று மாசு ஏற்படுகிறது. இது மிகப்பெரும் அளவு காற்று மாசுபாட்டிற்குக் காரணமாக உள்ளது.
இந்தியாவில் PM2.5 துகள் பொருள்கள் அதிகம் உள்ள 13 நகரங்களில் டெல்லி முதல் இடத்தில் இருக்கிறது. ஆனால் இதனைப் பற்றி சிறிதும் பேசாமல் கார்ப்பரேட் காப்பாளராக இருக்கக்கூடிய ஊடகங்கள், மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தி வரும் எரிபொருட்கள், வாகனங்கள் மற்றும் விவசாயிகள் பயிர் எச்சங்களை எரித்தலை (stubble burning) காற்று மாசுக்குக் காரணமாகக் காட்டி வருகின்றன.
டெல்லியின் சீர் குலைந்த கட்டமைப்பும், ஒழுங்கு முறையற்ற சட்டதிட்டங்களும் பல கொள்ளைக்காரர்களுக்குக் கதவைத் திறந்து வைத்துள்ளது. இதனைப் பயன்படுத்திக் கொண்டு பல ஆண்டுகளாக பெரும் தொழிற்சாலைகள், எந்த ஒரு வரம்புக்கும் உட்படாமல் தங்களின் ஏகபோக உற்பத்தியால் பெரும் காற்று மாசுபாட்டை ஏற்படுத்தி வருகின்றன. இது முழுக்க முழுக்க ஆளும் வர்க்கத்தினாலும் அதிகார வர்க்கத்தினாலும் சேர்ந்து நடத்தப்பட்ட கொள்ளையின் விளைவே ஆகும்.
படிக்க: அதிகரிக்கும் காற்றுமாசு: இந்தியர்கள் ஐந்தாண்டு ஆயுளை இழக்கும் அபாயம்!
குறிப்பாக, அனல் மின் நிலையங்கள் காற்று மாசுபாட்டினை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால் ஊடகங்கள் விவசாயிகள் அறுவடை முடிந்து பயிர் எச்சங்களை எரிப்பதை மட்டுமே காற்று மாசுபாட்டிற்கான முக்கிய காரணமாக சித்தரிக்கின்றன. மொத்த பழியையும் தூக்கி விவசாயிகளின் மீது போடுகின்றன ஊடகமும் அரசும். சொல்லப்போனால், கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது பயிர் எச்சங்களை எரிப்பதானது இவ்வாண்டு குறைந்துள்ளது.
ஆனால், உண்மை என்னவென்றால் விவசாயிகள் பயிர் எச்சங்களை எரிப்பதால் ஆண்டுதோறும் 17.8 கிலோ டன்கள் கந்தகம் டைஆக்ஸைடு (SO₂) உமிழ்வு ஏற்படுகிறது. ஆனால் அனல் மின் நிலையங்கள் இதை விட 240 மடங்கு அதிகமான அளவில் கந்தகம் டைஆக்ஸைடு வாயுவை வெளியிடுகின்றன என எரிசக்தி மற்றும் தூய்மையான காற்று ஆராய்ச்சி மையம் (Centre for Research on Energy and Clean Air – CREA) வெளியிட்டுள்ள ஆய்வுகள் கூறுகின்றன.
தொழிற்சாலைகள் மற்றும் அனல் மின் நிலையங்களை விட்டுவிட்டு கனரக வாகனங்களை நகரத்திற்குள் வரத் தடை என்பது ஆளும் அரசுக்கு மக்கள் மீது எந்த ஒரு அக்கறையும் இல்லை என்பதை அப்பட்டமாக நமக்குக் காட்டுகிறது. காற்றின் தரக் குறியீடு (AQI) அபாயகரமான நிலையான 400 என்ற அளவீட்டைத் தாண்டியுள்ள நிலையில் கடுமையான சட்டங்களின் மூலம் அனல் மின் நிலையங்களையும் மற்ற காற்று மாசுபாடு ஏற்படுத்தக் கூடிய தொழிற்சாலைகளையும் கட்டுப்படுத்துவதின் மூலம் காற்று மாசடைதலைக் குறைக்க முடியும்.
ஆனால் கார்ப்பரேட் கைக்கூலியான அரசானது தானாக முன்வந்து நடவடிக்கை எடுப்பது என்பது நடக்காத காரியம். மத்திய மாநில அரசுகள் மாறிமாறி பழிபோட்டுக்கொள்வதே நடக்கிறது. மக்கள் நலனில் அக்கறை கொள்ளாத அரசை மக்களின் போராட்டங்களின் மூலம் மட்டுமே பணிய வைக்க முடியும்.
துருவன்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram