பாகிஸ்தான்: அபாயகரமான காற்று மாசுபாட்டால் பாதிக்கப்படும் 1 கோடி குழந்தைகள்!

பாகிஸ்தானின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான செயலாளர் ராஜா ஜஹாங்கீர் அன்வர், இப்பிரச்சினையை “பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினையாக” ஒப்புக்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் காற்று தரக் குறியீடு (AQI) முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மோசமான நிலையை அடைந்துள்ளது. குறிப்பாக லாகூர் மற்றும் முல்தானில் காற்று மாசுபாட்டால் புகைமூட்டம் சூழ்ந்ததன் காரணமாக அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அபாய அளவைத் தாண்டி லாகூரில் 1067 ஆகவும், முல்தானில் 1914 ஆகவும் காற்றின் தரக் குறியீடு அளவு உயர்ந்துள்ளது. நிலவும் புகைமூட்டத்தைக் குறைக்கும் நோக்கில், அதாவது மாசு – தூண்டுதல் செயல்பாட்டைக் குறைக்கும் நோக்கில் அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் நிறுத்தவும், ஞாயிற்றுக் கிழமைகளில் சந்தைகளை மூடவும் லாகூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் காற்றின் தரக் குறியீடு அளவானது முல்தானில் 2000-ஐத் தாண்டியது. இது உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடுகின்ற வழிகாட்டுதலை விட 6 மடங்கு அதிகம். எனவே லாகூர், முல்தான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள பள்ளிகள், பொதுப் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் நவம்பர் 17 வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதேபோல் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணமும் பெரும்பாலான வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதித்துள்ளது.

லாகூர், முல்தான், பைசலாபாத் மற்றும் குஜ்ரன்வாலா மாவட்டங்களில் முன்னெப்போதும் இல்லாத வகையில் சுவாச நோய்கள், கண் மற்றும் தொண்டை எரிச்சல் மற்றும் இளஞ்சிவப்பு கண் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகப் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண அரசு தெரிவித்துள்ளது.

இந்த அபாயகரமான காற்று மாசுபாட்டின் காரணமாக ஐந்து வயதுக்குட்பட்ட 1.1 கோடி குழந்தைகள் உடல்நலன் சார்ந்த கடுமையான அபாயங்களை எதிர்கொள்வதாகப் பாகிஸ்தானில் உள்ள யூனிசெஃப் (UNICEF) பிரதிநிதி அப்துல்லா ஃபாதில் எச்சரித்துள்ளார். “அசுத்தமான, நச்சுக்காற்றைச் சுவாசிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள இளம் குழந்தைகளின் நல்வாழ்வில் நான் அக்கறை கொண்டுள்ளேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.


படிக்க: அதிகரிக்கும் காற்றுமாசு: இந்தியர்கள் ஐந்தாண்டு ஆயுளை இழக்கும் அபாயம்!


யூனிசெஃப்-இன் பிரதிநிதி இவ்வாறு கூறுவதற்குக் காரணம் உள்ளது. பாகிஸ்தானில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்புகளில் 12 சதவிகிதம் காற்று மாசுபாட்டினால் ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது. தற்போது நிலவும் நெருக்கடியில் இவ்விகிதம் மேலும் அதிகரிக்கும் என்றும் அவர் கூறுகிறார். மேலும் குழந்தைகள் முன்கூட்டியே பிறப்பது, சுவாச சிக்கல்கள், குறைந்த எடையுடன் குழந்தைகள் பிறப்பது ஆகிய விளைவுகளைச் சுட்டிக்காட்டி, காற்று மாசுபாட்டினால் தாய்மார்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் கவனத்தில் கொண்டுவந்து எச்சரிக்கிறார்.

இந்தியாவிலிருந்து வரும் மாசடைந்த காற்றின் காரணமாகப் புகைமூட்டம் அதிகமாகியுள்ளதாகப் பாகிஸ்தான் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். பாகிஸ்தானின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான செயலாளர் ராஜா ஜஹாங்கீர் அன்வர், இப்பிரச்சினையை “பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினையாக” ஒப்புக்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது எனவும் கூறியுள்ளார்.

”லாகூரில் ஏற்பட்டுள்ள அபாயகரமான காற்று மாசுபாடானது பயிர் எச்சங்களை எரிப்பதாலும், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் உமிழ்வுகளாலும் ஏற்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் – நவம்பர் மாதங்களில் பாகிஸ்தான் மாசு நெருக்கடியை எதிர்கொள்கிறது” என பாக்கிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் மூத்த அமைச்சர் மரியம் ஔரங்கசீப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஆனால், இது ஒருபக்க உண்மைதான்.

ஏற்கெனவே ஏகாதிபத்திய உற்பத்தி முறையின் இலாபவெறியின் காரணமாக இயற்கை அழிக்கப்பட்டு, அதனால் ஏற்படும் காலநிலை மாற்றத்தால் பெருமழை, பெருவெள்ளம், பேரிடர்களில் பாகிஸ்தான் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டு வருவதைப் பார்க்கிறோம்.


படிக்க: வாரணாசி : அதிகரித்து வரும் காற்றுமாசு – மோடியின் தூய்மை இந்தியா !


தற்போது ஏற்பட்டிருக்கும் அபாயகரமான காற்று மாசுபாட்டையும் அதனுடன் இணைத்துத்தான் பார்க்க வேண்டியுள்ளது. சூழலியல் பிரச்சினைகளைப் பொறுத்தவரை ஒரு நாட்டின் பிரச்சினை என்ற அளவில் பார்த்து, அதனைத் தீர்க்க முடியாது. ஏகாதிபத்தியங்கள், பெருமுதலாளிகளின் இலாபவெறியோடு, அதற்கான கொள்கைகளோடு முழுவதுமாக இணைக்கப்பட்ட எல்லா நாட்டு அரசுகளும் சுற்றுச்சூழலை மையப்படுத்தி எந்தத் திட்டங்களையும் கொண்டு வருவதில்லை. அதனைப் பொருட்டாகவும் மதிப்பதில்லை. விளைவுகள் மோசமாக இருக்கும்போது அதன்மீது சிற்சில நடவடிக்கைகள் எடுப்பது என்ற அளவில் பிரச்சினையின் உண்மைத்தன்மையை மூடி மறைக்கவே முயல்கின்றன. தற்போது அஜர்பைஜானில் நடந்துகொண்டிருக்கும் காப்29 மாநாடும் சுற்றுச்சூழல் அழிவைத் தடுக்க எந்தவித உருப்படியான நடவடிக்கையையும் எடுக்காத முதலாளித்துவ அரட்டைமடம் மட்டும்தான்

சுற்றுச்சூழலை நாசப்படுத்தும் உற்பத்தியைத் தடை செய்வது, இலாபவெறிக்காக இயற்கையை அழிப்பதைத் தடை செய்வது, அத்தகைய நிறுவனங்களை இழுத்து மூடுவது, காற்று மாசுபடுவதைத் தடுக்கும் வகையிலான திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பது, அதற்கான மாற்றுக் கொள்கைகளை முன்னெடுக்க நிர்ப்பந்திப்பது என்ற வகையில் உலகளாவிய அளவில் உழைக்கும் மக்கள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய காலமிது.


கருப்பன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க