உலகக் கோப்பை: மோடி தோல்வி; முகமது ஷமிகள் வெற்றி!

நேற்றைய(19.11.23) ஆட்டத்திலும் மோடி மைதானத்திற்கு வந்ததும், மோடி பெயர் கொண்ட மைதானத்தில் போட்டி நடந்ததும் தான் தோல்விக்கு காரணம் என்று மோடியை தரித்திரம் என்று திட்டி தீர்க்கிறார்கள்.

கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 இறுதிப்போட்டி இந்தியா VS ஆஸ்திரேலியா அணிகளுக்கு மத்தியில் நேற்று(19.11.23) அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்து முடிந்தது. இப்போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது.

நரேந்திர மோடி, ஆஸ்திரேலியா துணை பிரதமர் ரிச்சர்ட் மார்லஸ், அசாம், மேகாலயா உள்ளிட்ட 8 மாநில முதலமைச்சர்கள், உச்ச நீதிமன்ற மற்றும் குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதிகள், கார்ப்பரேட் முதலாளிகள் உள்ளிட்டோர் போட்டியை காண்பதற்காக வருகைப் புரிந்தனர். மேலும், அகமதாபாத் நரேந்திர மோடி மைதானம் முழுவதும் நிரம்பி வழிந்தது. இந்தியா முழுவதும் முக்கிய நகரங்களில் போட்டியை நேரலையில் ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சென்னையில் மெரினா கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் ஆகிய இடங்களில் திரைசீலைகள் வைக்கப்பட்டன. ஹாட்ஸ்டார் நேரலையில், 5.5 கோடி பேர் பார்த்தனர், மேலும் இந்திய மக்கள் தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் இப்போட்டியை கண்டனர்.

படிக்க : உலகக் கோப்பை கிரிக்கெட் 2023: பி.ஜே.பி – ஆர். எஸ். எஸ் சங்கி கும்பலுக்கான மற்றுமொரு களம்

ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் (Pat Cummins), “நாளைய போட்டியில் ரசிகர்கள் கூட்டம் ஒரு சார்புடையதாக இருக்கும். மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை அமைதியாக்குவதை விட விளையாட்டில் வேறு எதுவும் மன நிறைவைத் தராது. அதைச் செய்வதே எங்களின் இலக்கு” என்று கூறினார். அதேபோன்று கூட்டத்தை அமைதியில் ஆழ்த்தினார். இந்த அமைதி எதோ இந்திய ரசிகர்களுக்கான அமைதி அல்ல; தேசவெறியூட்ட முயற்சித்த பிஜேபி சங்கப் பரிவார கும்பலுக்கு கொடுத்த அமைதி!

லீக் சுற்றுகளில் இந்தியாவின் தொடர் வெற்றி மோடியின் மேக்கின் இந்தியா திட்டத்தின் மற்றொரு சாதனையே என்று சங்கிகள் கூக்குரல்யிட்டு வந்தன. லீக் சுற்றில் நடந்த இந்தியா VS பாகிஸ்தான் ஆட்டத்தை பயன்படுத்தி மதக் கலவரத்தை நடத்த முயன்றது காவிக் கும்பல். தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி பாசிசக் கும்பல் இந்தியாவின் வெற்றியை குதுகலித்து கொண்டாடி வருகின்றனர். ஒருவேளை இறுதி சுற்றில் இந்திய அணி வெற்றி பெற்றுவிட்டால் சரிந்துவரும் மோடியின் பிம்பத்தை தூக்கி நிறுத்துவதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்தியிருக்கும்.

1925-ஆம் ஆண்டில் ஆர்.எஸ்.எஸ் பாசிச அமைப்பு தொடங்கியதிலிருந்து இந்தியாவை ஒரு ‘தூய்மையான’ இந்துராஷ்டமாக உருவாக்க வேண்டும் என்பதே காவிகளின் இலக்கு. 1992-ல் பாபர் மசூதி இடிப்பு, 2002-ல் குஜராத் இனப்படுகொலை, 2014-ல் பிஜேபி ஆட்சி அரியணையில் அமர்ந்ததை அடுத்து, சிறுபான்மை மக்கள் மீதான பாசிச கொலைவெறி தாக்குதல்கள் அனுதினமும் அதிகரித்து வருகின்றன. லவ் ஜிகாத், நில ஜிகாத், மசூதியில் பாங்கு ஓதத்தடை, இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக்கும் CAA – NRC – NPR சட்டங்கள், கர்நாடகாவில் திருவிழாக்களில் முஸ்லீம் வியாபாரிகள் கடை வைப்பதற்கு தடை, பள்ளி-கல்லூரிகளில் ஹிஜாப் அணிவதற்கு தடை என இஸ்லாமிய மக்கள் தொடர்ச்சியாக பாசிசக் கும்பலால் தாக்குதலுக்குள்ளாகி வருகின்றனர்.

இந்திய அணி இந்த உலக கோப்பை போட்டிகளில் ஒருமுறை கூட தோல்வியை சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருப்பதற்கு இந்திய அணியின் கூட்டுழைப்பு காரணமாக இருந்தாலும் இந்த வெற்றிக்கு காரணமாக இருந்தவர் –ஆர்.எஸ்.எஸ் சங்கப் பரிவாரக் கும்பல்களின் பார்வைபடி  ‘இஸ்லாமியர்’ ‘துலுக்க பையன்’ ‘பயங்கரவாதி’- ஒரு விவசாய குடும்பத்தை சார்ந்த முகமது சமி, வேகப் பந்துவீச்சாளர்.

போட்டியின் தொடக்கத்தில் புறக்கணிக்கப்பட்டு வந்த இவர், ஹர்டிக் பாண்டியா காயப்பட்டதனால் அவருக்கு மாற்றாக முகமது சமி ஆட்டத்திற்குள் வந்தார். இவரின் முதல் ஆட்டத்திலேயே ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார். தொடர்ந்து இவரின் அசாதாரணமான பந்துவீச்சில் இந்திய அணி தொடர் வெற்றிகளை சாதித்தது. நியூசிலாந்து அணி உடனான அரை இறுதிப் போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியை இறுதி போட்டிக்கு கைப்பிடித்து அழைத்துச் சென்றவர் ‘இஸ்லாமியரான’ முகமது சமிதான். இந்த உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகளை எடுத்த முதல் வீரர் முகமது சமி என்பது குறிப்பிடத்தக்கது.

முகமது சாமியின் உழைப்பின்றி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு சென்றிருக்குமா என்பது கேள்விக்குறியே? இது உலகம் அறிந்த உண்மை. ஆகையால் இந்திய அணியின் தொடர் வெற்றியையும், ஏன் நேற்றைய தோல்விக்கு ஆறுதல் கூருவதற்கு கூட மோடிக்கும், சங்கி கூட்டத்துக்கும் அருகதையில்லை…

நேற்று(19.11.23) இந்திய அணி தோல்வியடைந்துள்ளது. ஒரு கால் இந்திய அணி இறுதிப் போட்டியில் வென்று இருந்தால் அதனை தனது அரசியல் துருப்புச்சீட்டாக பயன்படுத்திக் கொண்டு 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு நெம்புகோளாக பயன்படுத்தி இருக்கும் பாசிச கும்பல். அதற்கான முன்னோட்டத்தை தான் இதற்கு முன்பு அகமதாபாத் மைதானத்தில் நடந்த பாகிஸ்தான் அணி உடனான போட்டியின் போது ஜெய் ஸ்ரீ ராம் என்று வெறி கூச்சல் முழங்கத் தொடங்கினார்கள்.

படிக்க : உலகக் கோப்பை: “வேண்டாம் பிஜேபி” என்று முழங்குவதே தேசபக்தி!

ஆனால் அதற்கு  இந்திய ரசிகர்களும் பாகிஸ்தான் ரசிகர்களும் சம்பட்டி அடி கொடுத்துள்ளனர். போட்டி முடிந்தவுடன் பாகிஸ்தான் கேப்டன் பவர் அசாமுக்கு விராட் கோலி தனது ஜெஸ்ஸியை கையெழுத்திட்டு கொடுத்துள்ளதை இரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடினார்கள். குஜராத் மைதானத்தில் பாக்கிஸ்தான் கேப்டன் ஆட்டமிழந்து வெளியேறும் போது சங்கிகள் ஜெய் ஶ்ரீராம் என்று கூச்சலிட்டதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பும், தென்னிந்திய இரசிகர்கள் காறி துப்பினார்கள். பின்பு 12 வருடங்களுக்கு பிறகு சென்னை மைதானத்தில் பாகிஸ்தான் அணி விளையாடு வந்த பொழுது ரசிகர்கள் அனைவரும் பாகிஸ்தான் மற்றும் இந்திய ஜெசிகளை அணிந்து தனது சகோதரத்துவத்தை வெளிப்படுத்தினர்.

ஒரு பாக்கிஸ்தான் இரசிகை தனது முகத்தில் இந்தியா மட்டும் பாகிஸ்தான் கொடியை வரைந்து கொண்டு, செய்தியாளரிடம் தனக்கு கோலியை மிகவும் பிடிக்கும் என்று கூறியது, சமூக வலைதளத்தில் கிரிக்கெட் இரசிகர்கள் பகிர்ந்து கொண்டாடினார்கள். நேற்றைய ஆட்டத்திலும் மோடி மைதானத்திற்கு வந்ததும், மோடி பெயர் கொண்ட மைதானத்தில் போட்டி நடந்ததும் தான் தோல்விக்கு காரணம் என்று மோடியை தரித்திரம் என்று திட்டி தீர்க்கிரார்கள். லாஜிக் இல்லை இங்கு விவாதம், இந்த இந்திய இரசிகர்களின் எதிர்வினை மதவெறி அரசுக்கு எதிரான எதிர்வினை.மோடியின் 9 ஆண்டு கால ஆட்சியின் வெறுப்பில் இருந்து வெளிப்பட்ட எதிர்வினை. இந்திய இரசிகர்களுக்கு தேச வெறியூட்ட கிளம்பிய பாசிச கும்பலுக்கு செருப்படிதான் மிச்சம். ஆகவே தோற்றது மோடிதான். வென்றது  இந்திய இரசிகர்கள்.

2 மறுமொழிகள்

  1. முதலில் இந்த தெருப்புழுதி விளையாட்டை மக்கள் நிராகரிக்கபடவேண்டும் மேலும் இந்த கேவலமான விளையாட்டை வைத்து கார்ப்பரேட் கும்பல் மதவெறி தூண்டுவதை தடுக்க வேண்டுமானால் இதுபோல நடக்கும் விளையாட்டு போட்டிகளை நிராகரிக்கவேண்டும்.

  2. அப்படி நிராகரித்தாலே இதனுடைய பவுசு குறைந்து விடும் மேலும் வெளி நாடுகளில் இந்த விளையாட்டுக்கு மரியாதையே கிடையாது 60 கோடி இளைஞர்களை கொண்ட் நம் நாட்டில் வைத்து மிகபெரிய வியாபார மறைமுக சதியே நடக்கின்றது எனவே இளைஞர்கள் குறிப்பாக முற்போக்கு இளைஞர்கள் இந்த விளையாட்டுக்கு எதிராக சமூகத்தில் எழுச்சி ஏற்படுத்த வேண்டும்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க