ஸ்பார்ட்டகஸ் (அடிமைச் சமுதாய சரித்திர நாவல்) | நூல் அனுபவம்

அடிமைகளைப் பொறுத்தவரை வாழ்க்கை என்பதே உயிரோடு வாழ்வது மட்டும் தான். அன்றாடம் எஜமானர்களின் சவுக்கடிகளில் இருந்து தப்பித்தாலே போதுமானது. இதுபோன்ற வரலாற்றுச் சூழல் தான் ஸ்ப்பார்ட்டகஸ்ஸை உருவாக்கியது.

நீதிக்கு எதிரான இந்தப் போர் எங்களோடு தொடங்கவும் இல்லை; எங்கள் வாழ்நாளோடு முடியப்போவதுமில்லை” என்று பகத்சிங் கூறினார். அடடா! எவ்வளவு ஆழ்ந்த பொருளுள்ள வாக்கியம். ஆம், எப்போது வர்க்கங்கள் தோன்றியதோ, எப்போது ஒடுக்குமுறைகள் தோன்றியதோ, அப்போதே அதற்கெதிரான போராட்டங்களும் தோன்றின.

இந்த நீண்ட நெடிய போராட்டத்தில், கி.மு-வில் (அதாவது ஆண்டான் அடிமை காலகட்டத்தில்) தோன்றியவன் தான் ஸ்ப்பார்ட்டகஸ். இவன் ஒரு அடிமை, கோரூ! கோரூ என்றால் அடிமைகளின் வாரிசு. இது தான் ஸ்ப்பார்ட்டகஸின் வரலாறு. ஆனால், மிகுந்த கட்டுப்பாடுடைய நேர்த்தியான ரோமானிய படையையும் ஒட்டுமொத்த ரோம் சாம்ராஜ்யத்தையும் கதிகலங்க வைத்தவன்.

நாம் 21-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்று பெயரளவில் ஜனநாயகம் இருப்பதாகக் கூறிக் கொண்டாலும் எவ்வளவு அடக்குமுறைகள்! தற்போது உழைக்கும் மக்களுக்கு இருக்கும் சில உரிமைகள் கூட பல்வேறு போராட்டங்களாலும் தியாகங்களாலும் அடையப்பட்டவை தான்.

தற்போதைய நிலையே இதுவென்றால், ஆண்டான் அடிமைச் சமுதாயத்தில் அடிமைகளின் வாழ்நிலை எப்படிப்பட்டதாக இருந்திருக்கும் என்று நாம் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். அது எப்படிப்பட்டதாக இருந்தது என்ற சித்திரத்தை தான் இந்நூல் நமக்கு வழங்குகிறது.

இந்நூலில் அடிமைகளின் வாழ்வும் ஆண்டைகளின் வாழ்வும் மிகவும் அருமையாக சித்தரிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் ஆட்டு மந்தைகள்; ஆளத்தகுதியற்றவர்கள். இவர்களை வழிநடத்திச் செல்ல திறமை தகுதி வாய்ந்த மனிதர்கள் தேவை; அவர்கள்தான் ரோமானிய உயர்குடியினரும் நாடாளுமன்ற உறுப்பினர்களும். இவர்களுக்கு சேவை செய்யப் படைக்கப்பட்ட ஒரு இயந்திரம் தான் அடிமை! அன்று முதல் இன்றுவரை ஆளும் வர்க்கத்தின் அடிமைகளாகவே உழைக்கும் மக்கள் இருத்த வைக்கப்பட்டுள்ளனர்.


படிக்க: நூல் அறிமுகம் : பீமா கோரேகான் – பேஷ்வாக்களை வீழ்த்திய மகர்களின் வீர வரலாறு || மு. இனியவன் || முரா. மீனாட்சி சுந்தரம்


அடிமைகளை சிலுவையிலுடுவது என்பது சர்வசாதாரணமான நிகழ்வு. ஒரு அடிமை ’தவறு’ செய்தால் அவனை சிலுவையிலிட்டு மற்ற அடிமைகளுக்கு உணர்த்துவது தான் அங்கு பின்பற்றப்பட்ட நடைமுறை. சிலுவையிலிடப்பட்ட அடிமை எவ்வளவு நாட்கள் உயிர்பிழைத்திருப்பார் என்று பந்தயமே நடைபெறும்.

அடிமைகளை விவசாயத்தில் தொடங்கி வீட்டு வேலை, சுரங்க வேலை, மாடமாளிகைகள் எழுப்புவது என அனைத்து பணிகளிலும் ஈடுபடுத்தி இரத்தத்தை உறிஞ்சி வேலை வாங்கினார்கள்‌.  அடிமைகளின் குருதியால்தான் ரோமானிய சாம்ராஜ்யம் உருவாக்கப்பட்டது. மேலும், ரோமானிய ஆண்டைகளின் பொழுதுபோக்குக்காக மற்போர் அரங்குகள் நடத்தப்படும். அங்கு, சேவல் சண்டைகளைப் போல் அடிமைகளுக்கிடையில் சண்டை போடவிட்டு ரசித்துக் கொண்டிருக்கும் கொடூரங்கள் அரங்கேறும்.

அடிமைகளைப் பொறுத்தவரை வாழ்க்கை என்பதே உயிரோடு வாழ்வது மட்டும் தான். அன்றாடம் எஜமானர்களின் சவுக்கடிகளில் இருந்து தப்பித்தாலே போதுமானது. இதுபோன்ற வரலாற்றுச் சூழல் தான் ஸ்ப்பார்ட்டகஸ்ஸை உருவாக்கியது.

கொடூரமான நியூபியா தங்கச் சுரங்கத்தில் வேலைவாங்கப்பட்ட  ஸ்ப்பார்ட்டகஸ் மற்போர் அரங்கில் சண்டைபோடுவதற்காக வாங்கப்படுகிறான். மற்போர் அரங்கில் அடிமை வீரர்களுக்கு சகல வசதியும் செய்து கொடுக்கப்படும்; பலி கொடுக்கும் ஆட்டினை நன்கு வளர்ப்பதுபோல். அப்பொழுதுதான் அடிமை நன்றாகச் சண்டையிடுவான். ஸ்ப்பார்ட்டகஸூம் பல சண்டைகள் போடுகிறான்; வெற்றி அடைகிறான். ஆனால், அவனால் கொல்லப்படுவதோ அவனைப் போன்றதொரு அடிமை தான்.

ரோமானிய ஆண்டைகளுக்காக அடிமைகள் பலியிடப்படுகின்றனர். இந்த அடிமைமுறையை அவன் முற்றிலும் வெறுத்தான். மற்போர் அரங்கில் உள்ள சக அடிமைகளின் நம்பிக்கையைப் பெற்றுக் கொள்கிறான். மற்போர் அரங்கின் சமையலறையில் இருந்து தான் அந்த கிளர்ச்சி உதயமானது; ரோமானியர்களை ஆட்டங்காண வைத்த அடிமைகளின் கிளர்ச்சி! ஆனால் அது நசுக்கப்பட்டுவிட்டது என்பது கசப்பான செய்தி.

இந்த புத்தகத்தை படித்தால் பல இடங்களில் நம்மை அறியாமலேயே அழுகை வந்துவிடும். ஹோவர்ட் ஃபாஸ்டின் காட்சியை விளக்கும் முறையும் தமிழில் மொழிபெயர்த்த ஏ.ஜி. எத்திராஜுலுவின் மொழிபெயர்ப்பும் நம்மை கதையோடு ஒன்ற வைக்கிறது.

உலகில் உள்ள பெரும்பாலான நூல்கள் அரசர்களைப் பற்றியும் தளபதிகளைப் பற்றியும் எழுதப்பட்டிருக்கிறது. இதுபோன்ற நூல்களை இயற்றத்தான் எழுத்தாளர்களும் விரும்புவார்கள். ஆனால், அமெரிக்கா கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரான ஹோவர்ட் ஃபாஸ்ட் எழுதிய இந்நூல் அடிமைகளின் வாழ்வியலைப் படம்பிடித்துக் காட்டுகிறது.

அடிமைமுறையை எதிர்த்து அடிமை வீரன் ஸ்ப்பார்ட்டகஸ் தோன்றினான். இன்றோ பாசிச இருளால் சூழப்பட்டு ஒடுக்குமுறைகளை சந்தித்து வருகிறோம். எனவே, இன்றைய காலகட்டத்திற்கும் பல ஸ்ப்பார்ட்டகஸ்கள் தேவைப்படுகிறார்கள்.

நூலின் பெயர்: ஸ்பார்ட்டகஸ் (அடிமைச் சமுதாய சரித்திர நாவல்)
ஆசிரியர்: ஹோவர்ட் ஃபாஸ்ட் | ஏ.ஜி.எத்திராஜ்லு (தமிழில்)
பதிப்பகம்: சிந்தன் புக்ஸ்


ஹைதர்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube1 மறுமொழி

  1. நூல் பற்றிய இந்த அறிமுகம் கண்டு மகிழ்ச்சி! தமிழ் மொழி பெயர்ப்பு வந்திருப்பதை இதன் மூலம் அறிந்து கொண்டேன். நான் ஆங்கில முலத்தைப் படித்துள்ளேன்! இன்றைய பாசிச அடக்குமுறைச் சூழலில் இந்த நூல் கட்டாயம் படிக்க ஒன்றே! ஒரு சில தகவல் பற்றி மேலும் கூடுதலான புரிதலுக்காக! ஸ்பார்டகஸ் அடிமையாக பிடித்து வரப்பட்டு, சுரங்க ஆண்டானால் விலைக்கு வாங்கப்பட்டு சுரங்க வேலைக்கு தள்ளப்படுகிறார். திறந்த வெளி சுரங்கம் அல்ல அது. பூமிக்குள் குடைந்து கொண்டே செல்லும் மூடிய சுரங்கம்! அங்கு சிறிது தண்ணீருடன் இறக்கி விட்டு விடுவார்கள்! மீண்டும் மேலே உயிருடன் வருபவர்களை இழுத்து இன்னொரு குகை போன்ற சிறைக்குள் அடைத்து விடுவார்கள்! இறந்தவர்களைப் பற்றி யாரும் கவலைப் பட மாட்டார்கள்! பெரும்பாலும் சுரங்கத்தின் வெப்பத்தில் உழைக்கும் போது வியர்வை வழிந்தோடி தாகத்தில் நீரை விரைவாக குடித்து விட்டால் அவ்வளவுதான்! அது வியர்வையாக வெளியேறி மீண்டும் தவித்து சுரங்க நீரைக் குடித்து இறப்பது சாதாரணம்! அதிலும் தாக்குப் பிடித்து உயிருடன் நீண்ட காலம் இருக்கும் அடிமைகளையே கிளாடியேட்டர்களாக சண்டைக்கு பயிற்றுவிக்கும் ஆண்டைகள் விலைக்கு வாங்கிச் செல்வார்கள்! அப்படி வாங்கப்பட்ட சுரங்கத் தொழிலாளியான அடிமைதான் ஸ்பார்டகஸ்! அடிமைகளே ஒருவருடன் ஒருவர் பேசக் கூடாது! ( ஈரான் ஷா மன்னன் அரண்மனையில் வேலை செய்த அடிமைகளும் இதே போல நடத்தப் பட்டது சமீபத்திய வரலாறு ). அதை மீறி பேசி கிளாடியேட்டர்களை ஒன்று படுத்திய ஸ்பார்டகஸ் அவர்களின் தலைவனானது வரலாறு! மூன்று பெரும் போர்களில் வெற்றி பெற்று ஆண்டைகளை கலங்கடித்த ஸ்பார்டகஸ்சுக்கு சாவே இல்லை என ஆண்டைகள் அஞ்சி நடுங்கக் காரணம், அடுத்து நடந்த ஒவ்வொரு அடிமைகளின் எழுச்சிக்குத் தலைமை தாங்கியவர் தன்னை ஸ்பார்டகஸ் என்றே அழைத்துக் கொண்டார்கள்…….

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க