privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்அடிமை முறை திரும்புகிறது ! என்ன செய்யபோகிறோம்?

அடிமை முறை திரும்புகிறது ! என்ன செய்யபோகிறோம்?

-

அடிமைமுறை திரும்புகிறது ! மார்க்சிய-லெனினிய ஆயுதமேந்துவோம் ! மூலதன ஆதிக்கத்திற்கு முடிவு கட்டுவோம் !

அன்பார்ந்த தொழிலாளர்களே !

டந்த மூன்றாண்டுகளில் இந்தியா முழுவதும் புதிய வேலைவாய்ப்புகள் இலட்சக்கணக்கில் குறைந்திருக்கிறது. மறுபுறத்தில் பல கோடி பேருடைய வேலை பறிக்கப்பட்டிருக்கிறது. ஐ.டி துறை துவங்கி ஆட்டோமொபைல் துறை வரையிலும் வேலைப்பறிப்புகள் அதிகரித்தவண்ணம் இருக்கிறது. இதே நிலை நீடித்தால் இந்தியாவின் முன்னணி கார்ப்பரேட் கம்பெனிகள் மூடுவிழா நடத்தி இன்னும் பலருடைய வேலையை பறிக்க நேரிடும் என்கிறார், ஏர்டெல் செல்போன் கம்பெனியின் முதலாளி சுனில் பார்தி மிட்டல்.

நாட்டின் தொழில் முதலீட்டை அதிகரித்துவிட்டால், புதிய வேலை வாய்ப்புகள் அதிகரித்துவிடும். அவ்வாறான தொழில் முதலீட்டுக்கு தடையாக இருப்பது இந்தியாவின் தொழிலாளர்கள் தான். தொழிலாளர்களிடம் நெகிழ்வான வேலைமுறை இல்லாமல் இருப்பது தான் தொழில்முதலீடுகளை அதிகரிக்க முதலாளிகள் தயங்குகின்றனர் என்கிறது, மோடியின் அரசு.

தொழிலாளர்கள் நெகிழ்வாக இருக்க வேண்டும் என்பதன் அர்த்தம் என்ன? நிரந்தரமான வேலை வேண்டும் என்று அடம் பிடிக்கக்கூடாது. ஒரே கம்பெனியில் வேலை செய்து , 58 வயதில் அங்கேயே ரிட்டயர்ட் ஆக வேண்டும் என்று நினைக்கக்கூடாது. அதாவது கிடைத்த வேலையை செய்ய வேண்டும், ஒரு இடத்தில் வேலை முடிந்து விட்டால் அடுத்த வேலை எங்கு கிடைக்கிறதோ அந்த வேலைக்கு போவதற்கு பழகிக் கொள்ள வேண்டும். அதாவது, காண்டிராக்ட் வேலையை தொழிலாளர்கள் மனமுவந்து ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அதேபோல 8 மணிநேரம் தான் வேலை செய்வேன் என்று சட்டம் பேச கூடாது. கம்பெனிக்கு தேவை ஏற்பட்டால் 12 மணிநேரம்கூட வேலை செய்ய வேண்டும், ஷிப்ட் முடிந்த பின்னர், அடுத்த ஷிப்டில் தொடர்ந்து வேலை செய்ய வேண்டும். வாராந்திர விடுமுறை இல்லாமல் ஏழு நாட்களும் வேலை செய்ய பழகிக் கொள்ள வேண்டும்.

அதாவது,முதலாளியின் இலாபம் அதிகரிக்க வேண்டும். அவர்கள் மனம் கனிந்து புதிய, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவார்கள்.வேலை இல்லா திண்டாட்டம் இருக்கவே இருக்காது. இதுதான் மோடியின் வேலைவாய்ப்பு பார்முலா.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

மோடியின் புதிய இந்தியா பிறப்பதற்கு நாட்டில் இருக்கின்ற தொழிலாளர் நலச்சட்டங்கள் தடையாக இருக்கின்றன; இந்த சட்டங்களை வைத்துக் கொண்டு தொழிற்சங்கங்கள் குடைச்சல் கொடுக்கின்றன என்று முதலாளிகள் மோடியிடம் ஒப்பாரி வைத்ததால், தொழிலாளர்களின் உரிமைகளை பறிப்பதற்கு தொழிலாளர் நலச்சட்டங்களையும், தொழிற்சங்க அமைப்புகளையும் ஒழித்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு பாய்கிறது, மோடி கும்பல்.

இந்திய தொழிலாளி வர்க்கம் பல்வேறு தியாகங்கள் செய்து உருவாக்கிய தொழிலாளர் நலச்சட்டங்களை முதலாளிகளது இலாப வேட்டைக்கு பலியிடச் சொல்லுகிறார், மோடி. முதலாளியின் இலாபம் நிரந்தரமாக உயர வேண்டும் என்றால், நாமெல்லாம் நிரந்தர வேலை கேட்கக்கூடாது, என்கிறார், டீ கடைமோடி. முதலாளி கொழுக்க வேண்டும் என்றால், தொழிலாளர்கள் காலநேரம் பார்க்காமல் உழைக்க வேண்டும் என்கிறது, மோடியின் அரசு.

தொழிலாளர் நலச்சட்டங்களை காலாவதியாக்கும் திருப்பணியை காங்கிரசு கட்சி தான் துவக்கி வைத்தது என்கிற போதிலும், இப்படிப்பட்ட உரிமைகள் காகிதத்தில்கூட இருக்கக்கூடாது என்று வெறித்தனமாக செயல்படுகிறது, பா.ஜ.க அரசு. இந்த அடிப்படையில் தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்துவது என்று காங்கிரசு கட்சி எடுத்த முயற்சிகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு, இந்த சட்டங்களை வெறும் விதிமுறையாக மாற்றுகின்ற வேலையை தீவிரமாக்கியுள்ளனர்.

சட்டமாக இருந்தால்அதை கடைபிடிப்பது கட்டாயம் என்று போராட முடியும். விதிமுறையாக இருந்தால் எந்த முதலாளியும் அதை மதிக்கமாட்டான். சட்டம் என்கிற பாதுகாப்பை ஒழித்துவிட்டு, வாய்ப்பிருந்தால் செய்யுங்கள் என்று முதலாளிகளுக்கு அறிவுரை சொல்லப்போகிறதாம் அரசு. இதைவிட அயோக்கியத்தனம் வேறென்ன இருக்க முடியும்?

இதற்கு முதல்படியாக 44 தொழிலாளர் சட்டங்களை தொழிலுறவு விதிமுறைத் தொகுப்பு, ஊதிய விதிமுறைத் தொகுப்பு மசோதா, சமூகப்பாதுகாப்பு மற்றும் தொழிலகப் பாதுகாப்பு விதிமுறைத் தொகுப்பு என 3 விதிமுறைத் தொகுப்புகளாக மாற்ற முடிவெடுத்து, அதற்கான சட்ட மசோதாக்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது, மோடி அரசு. எதிர்வரும் நாடாளுமன்ற குளிர்கால தொடரில் இந்த மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு தயாராகி வருகின்றனர். அவ்வாறு நிறைவேறினால் என்ன நடக்கும் என்பதற்கு சில உதாரணங்களை பார்க்கலாம்.

முதலாவதாக, தற்போது அமலில் இருக்கும் 1947 ஆம் வருடத்திய தொழிற்தகராறு சட்டத்தின் அத்தியாயம் V (B)-ல் காணப்படும் அனைத்து சட்டப்பிரிவுகளையும் ஒழிக்கிறது, புதிய விதிமுறைத் தொகுப்பு. அத்தியாயம் V (B)-ல் இடம் பெற்றுள்ள சட்டப்பிரிவுகள், 100 பேருக்கு மேல் வேலை செய்யக்கூடிய நிறுவனத்தில் ஆட்குறைப்பு, தற்காலிக கதவடைப்பு ( லே-ஆப் ), நிரந்தர ஆலைமூடல் ஆகியவற்றின்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளையும், நிபந்தனைகளையும் தெரிவிக்கின்றன. குறிப்பாக, ஆட்குறைப்பு மற்றும் தற்காலிக/நிரந்தர ஆலைமூடலுக்கு அரசின் முன்அனுமதி பெற வேண்டும் என நிபந்தனை இருக்கிறது.

300 பேருக்கு மேல் வேலை செய்கின்ற நிறுவனங்களுக்குத் தான் மேற்படி நிபந்தனை பொருந்தும் என்கிற வகையில் சட்டத்தை திருத்த வேண்டும் என்கிறனர், முதலாளிகள். அதேபோல தொழிலாளர்களது வேலை நிலைமைகளில் ஏதேனும் மாற்றம் செய்வதற்கு 21 நாட்களுக்கு முன்னதாக அறிவிப்பு செய்வதோடு அரசின் அனுமதியையும் பெற வேண்டும் என தொழிற்தகராறு சட்டத்தின் பிரிவு 9A சொல்லுகிறது. இதையும் மாற்ற வேண்டும் என்கிறனர். இந்த பிரிவு மாற்றப்பட்டால் முதலாளிகள் நினைத்த மாத்திரத்தில் ஷிப்ட் எண்ணிக்கை, ஷிப்ட் நேரம், வாராந்திர விடுமுறை, வேலைநேரம், வேலைமுறை உள்ளிட்ட எதையும் மாற்றிவிட முடியும்.

இரண்டாவதாக, 1970 ஆம் வருடத்திய காண்டிராக்ட் தொழிலாளர் முறைப்படுத்துதல் மற்றும் ஒழித்தல் சட்டத்தில் ( Contract Labour Regulation and Abolition Act ) திருத்தங்கள் செய்ய முதலாளிகள் நிர்பந்திக்கின்றனர். 20 பேருக்கு மேலாக காண்டிராக்ட் தொழிலாளர்களை பயன்படுத்தினால் லைசென்ஸ் வாங்க வேண்டும் என்பதை 100 ஆக உயர்த்துவது, நேரடி உற்பத்தி சார்ந்த எந்த வேலையிலும் காண்டிராக்ட் தொழிலாளர்களை பயன்படுத்த அனுமதிப்பது ஆகியவை முதலாளிகளது முக்கிய கோரிக்கைகள்.

நேரடி உற்பத்தியில் காண்டிராக்ட் தொழிலாளர்களை பயன்படுத்துவதற்கு சட்டபூர்வ தடை இருக்கும்போதே, அனைத்து துறைகளிலும், அனைத்து தொழில்களிலும், அனைத்து வேலைகளிலும் காண்டிராக்ட் தொழிலாளர்கள் அதிக அளவில் இருக்கின்றனர்.சட்டம் திருத்தப்பட்டால் பெயரளவுக்குகூட நிரந்தரத் தொழிலாளர்கள் இருக்கமாட்டார்கள்.

மூன்றாவதாக, தொழிலாளர் துறை மற்றும் தொழிற்சாலைகள் துறை அதிகாரிகள் அடிக்கடி ஆலைகளில் ஆய்வுக்கு வந்து தொந்தரவு கொடுக்கின்ற “இன்ஸ்பெக்டர் ராஜ் “ கட்டமைப்பை ஒழிக்க வேண்டும் என்று கூக்குரலிடுகின்றனர், முதலாளிகள். இதற்கேற்ப 1948 ஆம் வருடத்திய தொழிற்சாலைகள் சட்டத்தை திருத்த வேண்டுமென்கிறனர்.

ஏற்கனவே, தொழிற்சாலைகள் ஆய்வாளர் ( Inspector of Factories ) என்றிருந்த பெயரை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார அதிகாரி என்று பெயர் மாற்றம் செய்தபோதே இந்த துறைக்கு இருந்த அரைகுறை அதிகாரம் பறிக்கப்பட்டது. பல் பிடுங்கப்பட்ட இந்த அதிகாரிகள் தான் தொந்தரவு தருகிறார்களாம்…இதைவிட ஒரு அப்பட்டமான பொய் ஏதாவது இருக்க முடியுமா?

கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில்கூட 24 மணிநேரமும் வேலை செய்ய அனுமதிப்பது, இரவு ஷிப்டுகளில் பெண் தொழிலாளர்களை ஈடுபடுத்துவது, ஓவர்டைம் செய்வதற்கான கட்டுப்பாடுகளை நீக்குவது, குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரித்து அனைவருக்கும் ஒரே சம்பளம் என்கிற பெயரில் இலாபத்துக்கேற்ப சம்பள உயர்வு கேட்கிற உரிமையை மறுப்பது போன்ற பல்வேறு தாக்குதல்களை இந்த மசோதாக்கள் சுமந்து வருகின்றன.

இந்த மசோதாக்கள் நிறைவேறினால் தொழிலாளர்களது உரிமைகள் சட்டபூர்வமாக இருக்காது. மாறாக, முதலாளிகள் நல்லவர்களாக இருப்பது எப்படி என்று அரசாங்கம் வழிமுறைகளை சொல்லித்தரும். அதனை ஏற்றுக்கொள்வது முதலாளிகளது விருப்பம்.இதனை தட்டிக் கேட்பதற்கு தொழிற்சங்கம் என்கிற அமைப்பு இருக்காது. அப்படி இருந்தாலும் உரிமைகள் ஏதுமற்ற லெட்டர்பேடாகத் தான் இருக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக, நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்கிறோம் எனக் கூறி முதலாளிகளின் இலாபத்தை அதிகரிப்பதற்காக தொழிலாளி வர்க்கத்தை முற்றிலும் அடிமையாக்கும் சதித்தனம் தீவிரமாக அரங்கேறுகிறது.

இதனை ஏற்றுக்கொண்டு, நம்முடைய முன்னோர் உயிர்த்தியாகம் செய்து நிலைநாட்டிய உரிமைகளை இழந்து கூலி அடிமையாக இருக்கப்போகிறோமா ? பெயரளவில் எதிர்ப்புகளை தெரிவித்துவிட்டு, எந்திரத்தோடு எந்திரமாய் தேய்ந்து மடியப்போகிறோமா? முதலாளிகளது அடியாள்படையாக செயல்பட்டு வருகின்ற அரசு எந்திரத்தை அடித்து நொறுக்கி, உழைக்கும் மக்களுடைய அதிகாரத்தை படைக்கின்ற போரில் களமிறங்க வேண்டிய தருணத்தை இனியும் தள்ளிப்போட முடியாது.மார்க்சிய-லெனிய ஆயுதத்தை ஏந்தி மூலதன ஆதிக்கத்திற்கு முடிவு கட்டுவோம்!

தொழிலாளி வர்க்கத்தை கார்ப்பரேட்டுகளுக்கு அடிமையாக்கும் சதியை மோதி வீழ்த்துவோம்!

செயலிழந்த இந்த அரசு கட்டமைப்புக்கு எதிராகப் போராடுவோம்! புரட்சிகர அரசியலின் கீழ் அணிதிரளுவோம்!

உயிர்த்தியாகத்தால் எழுதப்பட்ட உரிமைகள் ஒழிக்கப்படுவதை முறியடிப்போம்!

புழுவல்ல தொழிலாளி வர்க்கம்; கோடிக்கால் பூதம் என்பதை நிலைநாட்டுவோம்!

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
ஒசூர், தொடர்புக்கு: 97880 11784.