privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்புழுவல்ல தொழிலாளி வர்க்கம், கோடிக்கால் பூதம் - ஆர்ப்பாட்டங்கள் !

புழுவல்ல தொழிலாளி வர்க்கம், கோடிக்கால் பூதம் – ஆர்ப்பாட்டங்கள் !

-

“தொழிலாளர் நலச்சட்டங்களைத் திருத்தாதே! தீவிரமாகிறது, கூலி அடிமைமுறை! தொழிலாளிவர்க்கம் புழுவல்ல, கோடிக்கால் பூதம் என்பதை நிலைநாட்டுவோம்!” என்ற முழக்கத்தை முன்வைத்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…

ஓசூரில்…

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக 11.11. 2017 சனிக்கிழமை மாலை 5.00 மணியளவில் ஒசூர் ராம்நகர் அண்ணாசிலை அருகே எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாகலூர் பகுதி பொறுப்பாளர் தோழர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாநிலத் துணைத் தலைவர் தோழர் பரசுராமன் கண்டன உரையாற்றினார். இறுதியாக, கமாஸ்வெக்ட்ரா கம்பெனியின் கிளைச் சங்கத்தலைவர் தோழர் செந்தில் நன்றியுரையாற்றினார்.

தோழர் பரசுராமன் தனது கண்டன உரையில், “தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்துவது என்பது காங்கிரஸ் ஆட்சியிலே துவக்கப்பட்டாலும் அதனை இப்போது பி.ஜே.பி மோடி அரசு வெறிகொண்டு அமுல்படுத்த துடிக்கிறது.

குறிப்பாக, தொழிலாளர் நலச்சட்டங்கள் அனைத்தையும், அதாவது 44 வகையிலான தொழிலாளர் நலச் சட்டங்களையும் விதிமுறை தொகுப்புச் சட்டங்களாக மாற்றுவதன்மூலம் முதலாளிகளுக்கு பெயரளவில் இருந்த நிர்பந்தம்கூட இல்லாமல் ஆக்கிவிடுகிறது.

கார்ப்பரேட் முதலாளிகள் இந்த நாட்டின் இயற்கைவளம், கனிமவளம், ஆகியவற்றை வரம்பின்றி கொள்ளையிடுவதற்கும். கிராமப்புற விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்திக் கொள்வதற்கும். அதன்மூலம் அவர்களை ஏதுமற்ற அநாதைகளாக்கி நகரத்தை நோக்கி கூலி அடிமைகளாக விரட்டி, அவர்களை மீண்டும் கார்ப்பரேட்கள் தம் நிறுவனங்களில் சொற்பகூலிக்கு காண்ட்ராக்ட் முறையில் அமர்த்தி ஒட்டச் சுரண்டுகிறார்கள்.

நிலைமை இவ்வாறு இருக்க, இதுவரை மேற்கண்ட சட்டங்கள் தொழிலாளிகளுக்கு ஓரளவிற்கான பாதுகாப்பை தந்தன. இனிஅந்த குறைந்தபட்ச வாய்ப்புகளும் இல்லாது போய் கொத்தடிமைகளாக வாழும் நிலைக்கு தொழிலாளர்கள் தள்ளப்படுவார்கள்.

மேலும், இந்த அரசமைப்பு முழுவதும் கார்ப்பரேட்டுகளின் நலனுக்கு அடியாள்வேலை செய்து கொண்டே போராடும் தொழிலாளர்களை ஒடுக்குவதை தனது வேலையாக கொண்டிருக்கிறது. எனவே, மக்களுக்கு எதிராகிப் போய்விட்ட இந்த அரசுக்கட்டமைப்புக்கு வெளியே மக்கள் அதிகாரத்துக்கான போராட்டத்தைக் கட்டியமைக்கவேண்டும். அந்தவகையில் போராடும் பிற அனைத்துப் பிரிவு மக்களோடும் இணைந்து அவர்களுக்கு தலைமை தாங்கி தொழிலாளர்கள் போராட்டத்தை முன்னெடுத்து செல்லும் வகையில் வரலாற்றுக் கடமையாற்ற முன்வரவேண்டும்” என பேசி தனது உரையை நிறைவு செய்தார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
ஓசூர், தொடர்புக்கு: 97880 11784.

***

காஞ்சிபுரத்தில்…

காஞ்சிபுரம் பெரியார் சிலை அருகில் 11.11.2017 அன்று புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் தோழர் சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தோழர் சிவா கண்டன உரையாற்றினார்.

தோழர் சிவா அவர்கள் தனது கண்டன உரையில், “மோடி தலைமையிலான மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கையின் தொடர்ச்சியாக இதுவரை பெயரளவிற்கான பாதுகாப்பையாவது வழங்கிவந்த, தொழிலாளர் நலச்சட்டங்களை ஒழிக்க திட்டமிட்டுள்ளனர்.

அதாவது தொழிலாளர் நலச்சட்டங்களை விதிமுறைத் தொகுப்புச்சட்டங்களாக மாற்ற முனைகிறது மோடி அரசு. இது தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக மாறும் நிலையை நோக்கி நெட்டித்தள்ளுகிறது. தொழிலாளிகளின் உரிமைகளை பறிக்க நினைக்கும் இந்த அரசுக் கட்டமைப்பை தகர்த்து மக்கள் அதிகாரத்தை நிலைநாட்ட நாம் அனைவரும் போராடவேண்டியுள்ளது” என தனது உரையை நிறைவு செய்தார்.

ஆர்ப்பாட்டத்தின் இடையே விண்ணதிரும் முழக்கங்கள் முழங்கப்பட்டன. இதில் திரளான தோழர்கள் மற்றும் தொழிலாளிகள் கலந்துகொண்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
காஞ்சிபுரம் மாவட்டம். தொடர்புக்கு : 88075 32859.

***

திருச்சியில்…

முதலாளித்துவம் கொல்லும்! கம்யூனிசமே வெல்லும்!
தீவிரமடைகிறது கூலி அடிமைமுறை! தொழிலாளி வர்க்கம் புழுவல்ல, கோடிக்கால் பூதம் என்பதை நிலைநாட்டுவோம்!

  • உயிர்த் தியாகத்தால் எழுதப்பட்ட உரிமைகள் ஒழிக்கப்படுவதை முறியடிப்போம்!
  • மக்கள் எதிரியான அரசுக் கட்டமைப்பை அடித்து நொறுக்குவோம்!
  • புரட்சிகர அரசியலை ஏந்தி மக்கள் அதிகாரம் படைப்போம்!

என்ற முழக்கத்தை முன் வைத்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன. அதனடிப்படையில் திருச்சி BHEL Ph-II –வில் 11.11.2017 மாலை 4 மணிக்கு வாயிற்கூட்டம் நடைப்பெற்றது.

இக்கூட்டத்தை பு.ஜ.தொ.முவின் பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச்செயலாளர் தோழர் சுந்தரராசு தலைமை தாங்கி நடத்தினார். முதல் நிகழ்வாக தொழிலாளர்கள் மீதான முதலாளித்துவ அடக்குமுறையை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது. பிறகு மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பாடகர் தோழர் கோவன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவர் பேசும் போது “இன்றைய உலக முதலாளித்துவம் நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்திய முதலாளிகளும் சிக்கியுள்ளனர். அவர்களின் இலாப வெறிக்கு தொழிலாளர்கள் மீது வேலை பறிப்பு, காண்ட்ராக்ட்மயம்  போன்றவற்றை அமுல்படுத்தி நவீன கொத்தடிமையாக மாற்ற முயற்சிக்கிறார்கள். அதற்கேற்ப போராடி பெற்ற தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்துகிறார்கள். இந்த அபாயத்திலிருந்து மீள தொழிலாளி வர்க்கம் ஒன்றினைந்து போராட முன் வரவேண்டும்.” என்று பேசினார்.

இறுதியாக பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியனின் உதவி செயலாளர் தோழர் சுரேஷ் நன்றியுரையாற்றினார். இக்கூட்டத்தினை 100 -க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நின்று கவனித்து ஆதரவு கொடுத்தனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன்,
இணைப்பு பு.ஜ.தொ.மு, திருச்சி.

***

புதுச்சேரியில்…

முதலாளிகள் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற சூழல் மிகுந்த நாடுகள் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருவதாக கந்து வட்டி கொள்ளைக்காரனான உலக வங்கி பாராட்டியுள்ளது. அதிலும் ஒரே ஆண்டில் 30 இடங்களுக்கு முன்னேறி உள்ளதை மோடியின் சாதனையாகச் சொல்லியுள்ளது. தமிழகத்திலும், நகர மற்றும் ஊரக திட்டமிடல், மாசுக் கட்டுப்பாடு, தீயணைப்பு, தொழிலாளர் மற்றும் தொழிலக பாதுகாப்பு உள்ளிட்ட 11 துறைகள் மூலம் 37 சேவைகளை மனிதத் தொடர்பின்றி இணைய வழி மூலம் பெறுவதற்கான ஒற்றைச் சாளர தகவை (சிங்கிள் விண்டோ போர்டல்) அறிமுகம் செய்துள்ளது மோடியின் அடிமை எடப்பாடி அரசு.

இப்படி முதலாளிகள் தொழில் தொடங்கி முதலீட்டை அதிகரித்தாலே வேலை வாய்ப்புகள் பெருகி விடும். ஆனால், நாட்டின் எல்லா வளங்களையும் அள்ளிக் கொடுத்தாலும், உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்கள் கொடுப்பதை வாங்கிக் கொண்டு வாய்மூடி வேலை செய்வதில்லை. பணிப்பாதுகாப்பு, ஊதிய உயர்வு என உரிமைகளைக் கேட்டு முதலீடுகள் வருவதைத் தடுக்கின்றனர் என்பது தான் மோடியின் வருத்தம்.

எனவே, தொழில் முதலீடுகள் அதிகரித்து வேலை வாய்ப்புகள் பெருகி, தேனும், பாலும் ஓட வேண்டும் என்றால், முதலாளிகள் கொழுக்க வேண்டும், தொழிலாளர்கள் அடிமையாக அவர்களின் காலில் விழுந்து கிடக்க வேண்டும் அப்போது தான் நாடு வளர்ச்சி அடைந்து வல்லரசாகும். இதுதான் மோடியின் மந்திரம்.

தொழிலாளர்களுக்கென 44 நலச் சட்டங்கள் இருந்தும் அவை நடைமுறையில் காலாவதியாகிக் கிடக்கிற நிலையில். அது காகிதத்தில் கூட இருக்கக் கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு பாய்கிறது மோடி கும்பல். தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்துவதன் மூலம் அதை ஒழிக்கும் வேலையை காங்கிரசு ஆரம்பித்தது.

ஆனால், சட்டத்தைத் திருத்திய பிறகும், இருக்கும் சட்டத்தை வைத்துக் கொண்டு தொழிலாளர்கள் ஏதும் முணுமுணுக்கக் கூடாது என்பதற்காக, மூக்கைச் சுற்றித் தலையைத் தொடும் வேலையை விட, ஸ்ட்ரைட்டாக, விதிகளாக மாற்றுவதன் மூலம், ஒட்டு மொத்தமாக ஒழித்துக் கட்டி விடலாம் என்பது தான் மோடியின் ‘வளர்ச்சி’ பார்முலா.

நிரந்தரமான வேலை, 8 மணி நேர வேலை, வார விடுமுறை என அனைத்தையும் பறிப்பது, லே ஆஃப், ஆட்குறைப்பு, கதவடைப்பு விதிமுறைகளைத் திருத்துவது, அனைத்திலும் ஒப்பந்த வேலை, வரம்பில்லா ஓவர் டைம், ஷாப்பிங் மால்கள், கடைகளில் இரவிலும் வேலை, ஊதிய உயர்வு, உரிமை என்பனவற்றில் உள்ள கட்டுப்பாடுகளை ஒழிப்பது என அனைத்து நிலையிலும் பல்வேறு தாக்குதல்களை தொடுக்கக் காத்திருக்கின்றன சட்ட மசோதாக்கள்.

எனவே இருக்கின்ற காகித உரிமைகளைக்கூடப் பறித்து, நம்மை கொத்தடிமையிலும் கீழான அடிமைகளாக மாற்றுவதை ஏற்க மறுக்க வேண்டும். இதற்கு பெயரளவிலான போராட்ட வடிவங்களோ, அரசை நம்புவதோ பலன் தராது என்பது தான் அனுபவங்கள் நமக்கு கற்றுக் கொடுத்த பாடம். ஏனெனில், இந்த அரசமைப்பில் இருக்கும் தொழிலாளர் துறை தான் சட்டம் இருக்கும் போதே தொழிலாளர்கள் மீது அடக்குமுறை செலுத்துவதற்கு முதலாளிகளை உடனிருந்து இயக்குகிறது.

தொழிலாளர்களுக்கும், மக்களுக்கும் எதிரியாகவும், அவர்கள் மீது அடக்குமுறை செலுத்துவதற்காக அடியாள் வேலை செய்யும் அரசுக் கட்டமைப்பை தகர்த்து, தொழிலாளர்கள், உழைக்கும் மக்களுக்கான அதிகாரத்தைப் படைக்கும் வர்க்கப் போரில் களமிறங்குவதும், அதற்கு ஆயுதமாக புரட்சிகர அரசியலை ஏந்தும் போதுதான் தொழிலாளர்கள் மீது முதலாளித்துவம் திணித்து வைத்திருக்கும் கூலி அடிமை முறையை ஒழித்துக் கட்ட முடியும்.

இதனை முன்வைத்து, “தீவிரமடைகிறது கூலி அடிமைமுறை! தொழிலாளி வர்க்கம் புழுவல்ல; கோடிக்கால் பூதம் என்பதை நிலைநாட்டுவோம்!” என்ற முழக்கத்தினடிப்படையில் கடந்த 11.11.2017 அன்று காலை 10.00 மணிக்கு புதுச்சேரி கவர்னர் அலுவலக முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது.

முற்றுகைப் போராட்டத்தை அறிவிக்கும் விதமாக நகரத்தில் சுவரொட்டி ஒட்டியதைப் பார்த்து காலையில் இருந்தே போன் மேல் போன் செய்து, கவர்னரின் செயலாளர் முதல் ஏரியா இன்ஸ்பெக்டர் வரை போராட்டத்தைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினர்.

காலை 11.00 மணிக்கு கவர்னர் மாளிகைக்கு 100 மீட்டர் தூரத்தில் உள்ள தெருக்களில் இரு பிரிவுகளாக ஊர்வலமாக வந்து முற்றுகை நடத்தப்பட்டது. முற்றுகை துவங்கிய சில நிமிடங்களிலேயே மிரட்டும் வகையில் போலிசு சுற்றி வளைத்தது. முழக்கங்கள் தொடர்ந்த வண்ணம் இருந்தன. ஒரு கட்டத்தில் கேனப்பய மோடியின் கேழ்வரகு மந்திரத்தை முழக்கமாகப் போட்டவுடன் தோழர்களை கைது ஆக வற்புறுத்தி இழுக்க ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் கைது செய்து வண்டியில் ஏற்றி மதிய வேளையில் விடுவித்தது. இப்போராட்டம் தொழிலாளர் மத்தியில் போராட்டத்தின் ஒரு படியை முன்னேற்றும் வகையில் அமைந்தது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி. தொடர்புக்கு: 9597789801


விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க