நூல் அறிமுகம்: மறுகாலனியாக்கத்தின் இரும்புப்பிடியில் இந்திய விவசாயம்!

டிஜிட்டல் தரவுகள் மூலம் விவசாயம் கட்டுப்படுத்தப்படுவது குறித்தும், செங்குத்துமுறை விவசாயம் என்ற புதிய நாசகரமான இயற்கைக்கு எதிரான விவசாய முறை குறித்து இந்நூல் விரிவாக விளக்கியுள்ளது. நூலைப் பெற தொடர்பு கொள்ளவும்: 99623 66321

தற்போது விற்பனையில்...

சோறு தின்பவர்களின் பிரச்சினை! – நூல் அறிமுகம்

ண்மைக் காலங்களில் விவசாயம் சார்ந்த மாத இதழ்கள் அதிக அளவில் வந்து கொண்டிருக்கின்றன. விவசாயத்தின் மூலமாக நன்கு சம்பாதிக்கலாம் என்பது இவை பரப்புகின்ற முக்கியமான கருத்தாகும்.

இது, பரப்பப்படும் கருத்தல்ல, மக்கள் மத்தியில் கார்ப்பரேட் ஊடகங்கள் விதைக்கும் நச்சுக் கருத்தாகும். எதனையும் தீர பரிசீலிக்கும் திறன் குறைந்துவருகின்ற இன்றைய அரசியல், சமூகச் சூழலில், விவசாயம் தொடர்பாக பரப்பப்படும் இவ்வாறான கருத்துகள், விவசாயிகள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள், அவர்கள் படுகின்ற துன்பங்கள், அரசும் கார்ப்பரேட் நிறுவனங்களும் விவசாயிகளுக்கு எதிராக மேற்கொண்டுவரும் பல்வேறு நடவடிக்கைகளைப் புரிந்து கொள்ள இயலாமல் தடுக்கும் ‘மாய’க் கண்ணாடி தான் இக்கருத்தாகும்.

தொடர்ச்சியான நகரமயமாக்கத்தின் விளைவாக, பெரும்பாலான மக்கள் விவசாயத்தில் இருந்தும் விவசாயப் பின்னணியில் இருந்து பிரிந்து வருகின்றனர். இது விவசாயிகள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளைப் புரிந்து கொள்ள இயலாமல் போவதற்கு மற்றொரு காரணமாகும்.

படிக்க : ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்ட மசோதா: தேவை, ஒரு மக்கள் போராட்டம் !

ஏறக்குறைய, இந்தியாவில் பாரம்பரிய வடிவிலான விவசாயம் என்பது அதன் அந்திம நிலையை சந்தித்து வருகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில்(GDP) விவசாயம் குறைவான பங்கையே வகிக்கிறது. ஆனால், இந்த நாட்டின் ஆகப் பெரும்பான்மையான மக்கள் இன்னும் விவசாயத்தையே சார்ந்து வாழ்கின்றனர். இன்னும் கார்ப்பரேட் முதலாளிகள் விவசாயத்தில் புகுந்து அடிக்கும் கொள்ளையைக் கணக்கிட்டால் விவசாயிகளின் வருவாய் என்பது மிகமிக மோசமாகும். இந்த நிலைமை, விவசாயம் எந்த அளவிற்கு அழிக்கப்பட்டு விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர் என்பதற்குச் சான்றாகும்.  நாள்தோறும் அதிகரித்துவரும் விவசாயிகள் தற்கொலை இதன் வெளிப்பாடாகும்.

விவசாயம் அழிந்ததற்கான காரணங்களை பலரும் அவரவர் அறிந்த வகையில் விளக்கி வந்தாலும் சரியான காரணங்களையும் அதற்கான தீர்வுகளும் முன்வைக்கப்படுவதில்லை. விவசாயமும் விவசாயிகளும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி அரிதும் அரிதாகவே நூல்கள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன.

இச்சூழலில், மக்கள் அதிகாரம் கொண்டுவந்துள்ள, “மறுகாலனியாக்கத்தின் இரும்புப் பிடியில் சிக்கியுள்ள இந்திய விவசாயம்” என்ற சிறுநூல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்றும் நவீன தாராளவாதம் என்றும் அழைக்கப்படுகின்ற மறுகாலனியாக்கக் கொள்கைகள் விவசாயத்தில் புகுத்தப்பட்ட பின்னர் ஏற்பட்டு வரும் மாற்றங்களை இந்த நூல் சுருக்கமாக எடுத்துரைக்கிறது.

அரசும் கார்ப்பரேட் நிறுவனங்களும் விவசாயத்தில் புகுந்து மேற்கொள்ளப்படும் இந்த மாற்றங்கள் புதிய வகை விவசாயத்தையும் அதற்கேற்ற சட்டத்திருத்தங்களையும் கொண்டுள்ளது. இவற்றின் குறியிலக்கு, இன்னமும் பாரம்பரிய முறையிலும் சிறுவீத அளவிலும் ஆகப் பெரும்பான்மை மக்களால் மேற்கொள்ளப்படும் விவசாயத்தைக் கைப்பற்றிக் கொள்வதும், நவீனம் என்கின்ற பெயரில் மக்களுக்கும் இயற்கைக்கும் எதிரான நச்சு, பேராபத்துக் கொண்ட விவசாயத்தைப் புகுத்துவதுமாகும்.

குறிப்பாக, மோடி அரசு அண்மையில் கொண்டுவர முயற்சித்த மூன்று வேளாண் சட்டங்கள் முதல் இனி எதிர்காலத்தில் கொண்டு வர இருக்கின்ற மாற்றங்களும் இந்த வகையிலானவை. இவற்றின் பின்னணி பற்றியும் பிற நாடுகளின் மேற்கொள்ளப்பட்டு வரும் மாற்றங்களில் இருந்து இந்த சிறுநூல் எடுத்துரைக்கிறது.

பில்கேட்ஸ், மைக்ரோசாப்ட் போன்ற பன்னாட்டுக் கம்பெனிகளும் மகேந்திரா, சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா, பாரத் பயோடெக், பயாலஜிக்கல்-ஈ போன்ற இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களும் இணைந்து டிஜிட்டல் முறையிலான விவசாயத்தைப் புகுத்தும் முயற்சிகளை மேற்கொள்வது குறித்தும், விவசாயம் தொடர்பான தகவல் திருட்டுகளில் ஈடுபடுவதைப் பற்றியும் இதற்கு மோடி அரசு செய்துவரும் துரோகத்தனமான ஆதரவு குறித்தும் விரிவாக விளக்கியுள்ளது, இந்நூல்.

டிஜிட்டல் தரவுகள் மூலம் விவசாயம் கட்டுப்படுத்தப்படுவது குறித்தும், செங்குத்துமுறை விவசாயம் என்ற புதிய நாசகரமான இயற்கைக்கு எதிரான விவசாய முறை குறித்து இந்நூல் விரிவாக விளக்கியுள்ளது.

படிக்க : ஹல்த்வானி: ஆக்கிரமிப்பு அகற்றமா? இஸ்லாமிய மக்கள் மீதான படையெடுப்பா?

இதைப் போலவே, பால் உற்பத்தியில் கார்ப்பரேட் ஆதிக்கம் அதிகரித்து வருவதையும் அது தொடர்பான சட்டங்கள், திட்டங்களும் தனித்தலைப்பாக விளக்கப்பட்டுள்ளது. “இந்தியாவில் விரிவடையும் கார்ப்பரேட் பால் நிறுவனங்கள்” என்ற தலைப்பில், ஜெர்ஸி, ஹெரிட்டேஜ் புட்ஸ், ரிலையன்ஸ், குவாலிட்டி லிமிடெட், ஹட்சன் அக்ரோ, குரூப் லேக்டலிஸ், பராக் மில்க் புட்ஸ், நெஸ்லே, டேன்ஒன், ஃப்யூச்சர், ஷ்ரீய்பெர், டைனமிக்ஸ் போன்ற கார்ப்பரேட் பால் நிறுவனங்கள் பால் உற்பத்தியில் ஆதிக்கம் புரிவதை விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

பால் உற்பத்தியில் கார்ப்பரேட் ஆதிக்கத்தின் விளைவாக, இந்திய அரசாங்கத்தில் இருந்த பால் உற்பத்தி தொடர்பான பல்வேறு திட்டங்கள், கட்டமைப்புகள் சிதைக்கப்பட்டதையும் இந்த நூல் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

சமகாலத்தில் விவசாயத்தில் ஏற்படும் மாற்றங்களை விரிவாக அலசும் இந்த நூல், இந்த மறுகாலனியாக்கத் தாக்குதல்களுக்கு எதிராக உழைக்கும் மக்கள் ஒன்றிணைந்து ஒரு விடுதலைப் போராட்டத்தை நடத்த வேண்டும் என்று அறைகூவி அழைக்கிறது! அப்படி ஒரு போராட்டத்திற்கு மக்களைத் தயார்ப்படுத்த இந்த நூல் ஒரு ஆயுதமாகத் திகழும்!

நன்கொடை : ரூ.70
நூலைப் பெற தொடர்பு கொள்ளவும் : 99623 66321