ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்ட மசோதா: தேவை, ஒரு மக்கள் போராட்டம் !

ஆன்லைன் சூதாட்டத் தடை விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பலுக்கு பக்கபலமாக நீதிமன்றங்களும் செயல்படுகின்றன. அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்தை, “ஆன்லைன் ரம்மி சூதாட்டம் அல்ல, திறமை சார்ந்த விளையாட்டு” என உச்சநீதிமன்ற தீர்ப்பை காரணம் காட்டி சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

ஆன்லைன் சூதாட்டத் தடை மக்கள் விரோதிகளை விரட்டியடிப்போம்!

மிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தினால் தொடர்ந்து தற்கொலைகள், கொலை மற்றும் கொள்ளைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. மக்கள் மத்தியில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டுமென்றக் கோரிக்கையும் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. அதற்கு அடிபணிந்து தமிழக அரசும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. ஆனால், ஆளுநர் இம்மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் முட்டுக்கட்டை போட்டு வருகிறார். ஆளுநருக்கு பா.ஜ.க. கும்பலும் வக்காலத்து வாங்கி வருகிறது.

அதிகரிக்கும் தற்கொலைகளும் மீளமுடியாமல் தவிக்கும் மக்களும்

2014 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் ஆன்லைன் சூதாட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதுவரை தமிழகத்தில் மட்டும் கிட்டதட்ட 100 பேர் ஆன்லைன் சூதாட்டத்தினால் உயிரிழந்துள்ளனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் 38 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த காலங்களை ஒப்பிடும் போது தற்கொலை எண்ணிக்கையானது படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையானவர்கள் கடன் தொல்லையால் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள் என்பதைத் தாண்டி, கொள்ளையடிப்பது, குடும்பத்தினரைக் கொலை செய்வது என இதனால் விளையும் குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன என்பதுதான் மிகுந்த வேதனைக்குரியது.

ஆண்டுக்கு 28 லட்சம் ரூபாய் ஊதியம் பெறும் வங்கி மேலாளர், தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளைக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டிருப்பது; கல்லூரி மாணவர் ஒருவர் மூதாட்டியைக் கொலை செய்து நகையை கொள்ளையடித்தது; திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் “என்னுடைய மரணத்துக்கு முழு காரணம் ஆன்லைன் ரம்மிதான். அதில் நான் அடிமையாகி அதிகப் பணம் இழந்ததால் என் உயிரை மாய்த்துக் கொள்கிறேன்” என தன்னுடைய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் தகவல் போட்டுவிட்டு ரயிலின் முன்பாகப் பாய்ந்து தற்கொலை செய்திருப்பது; தென்காசியில் வடமாநில பெண் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டிருப்பது போன்ற சம்பவங்கள் அதற்கான சில சான்றுகளாகும்.

இதுபோன்ற தற்கொலைகள் எல்லாம் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி, அதிலிருந்து மீள வழி தெரியாமல், மனநிலை பாதிக்கப்பட்டுதான் நடக்கின்றன. ஆன்லைன் சூதாட்டத்தில் இரு மனிதர்களுக்கிடையே போட்டி நடைபெறுவதில்லை; மாறாக, மனிதருக்கும் ஆர்.என்.ஜி. (RNG Random number generator) எனப்படும் மென்பொருளுக்கும் (அல்காரிதம்) இடையேதான் போட்டி நடக்கிறது. செயற்கை தொழில்நுட்ப அறிவினால் உருவாக்கப்பட்டுள்ள இந்த மென்பொருளை வெல்வது மிக மிகக் கடினம். இது மக்களை அடிமையாக்கி, அவர்களின் பணத்தைக் கொள்ளையடிப்பதற்காகவே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.


படிக்க : ஆன்லைன் சூதாட்டம்: இதுவும் ஒரு போதையே!


தொடக்கத்தில், இந்த ஆன்லைன் சூதாட்ட செயலி (App) சொற்பத் தொகையிலான வெற்றிகளைத் தந்து பங்கேற்பாளர்களைத் தொடர்ந்து விளையாட உற்சாகமூட்டும். நாளடைவில், தோல்வி அடைந்தவுடன் எவ்வளவு துரிதமாக மற்றொரு ஆட்டத்தை ஆரம்பிக்கிறார்; தங்களுடைய விளையாட்டுக் கணக்கில் பண இருப்பு தீர்ந்தவுடன் எவ்வளவு துரிதமாகப் பணத்தைச் செலுத்துகிறார் என்பதைப் பொறுத்து, அவர் அடிமையாகிவிட்டாரா? இல்லையா? என்பதை எல்லாம் இந்த மென்பொருள் முடிவு செய்து அதற்கேற்ப விளையாடும்.

ஆன்லைன் சூதாட்ட செயலியில் இருந்து வெளியேறினாலும், அவர்களுடைய கணக்கிற்கு சூதாட்ட செயலியே குறைந்த அளவிலான தொகையை வைப்பு வைத்து, ஆசையைத் தூண்டி, அவர்களை மீண்டும் விளையாட அழைக்கும். எனவே, ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையானவர்கள் முறையான மனநல மருத்துவரின் ஆலோசனை மற்றும் தொடர் கண்காணிப்பு இல்லாமல் அதன் கோரப்பிடியில் இருந்து மீண்டுவர முடியாது. அவ்வாறான முயற்சியும் வாய்ப்பும் இல்லாததன் விளைவாகவே அதிகப்படியான  தற்கொலைகள் நடக்கின்றன.

ஆன்லைன் சூதாட்டத்திற்கெதிராக ஒன்றுபட்டு நிற்கும் தமிழகம்

தற்போது ஆன்லைன் சூதாட்டமானது ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் பிரச்சினையாக மாறியுள்ளது. இதன் விளைவாகவே தமிழக மக்கள் இக்கொடூரங்களை எல்லாம் தாங்கிக்கொள்ள முடியாமல், ஆன்லைன் சூதாட்டங்களை நிரந்தரமாகத் தடை செய்ய வேண்டும் என்ற மனநிலைக்கு வந்துள்ளனர். இதை தடை செய்யாவிட்டால் மக்கள் எதிர்ப்பிற்கு உள்ளாக வேண்டும் என அஞ்சி, ஆளும் தி.மு.க அரசும் ஆன்லைன் சூதாட்டங்களைத் தடை செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வந்து மசோதா நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளது.

குறிப்பாக, திமுக ஆட்சிக்கு வந்த மூன்று மாதங்களில், அதிமுக ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை சட்டமானது உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. தி.மு.க. அரசாங்கமோ அதற்கெதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததே தவிர, புதிய சட்டத்தை இயற்ற முயற்சி செய்யவில்லை. அவ்வழக்கும் உச்சநீதிமன்றத்தால் கண்டுக்கொள்ளாமல் கிடப்பில் போடப்பட்ட போதும் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. ஆனால், தற்போது மக்கள் எதிர்ப்பின் காரணமாக ஆன்லைன் சூதாட்டத்தைத் தடைசெய்ய தி.மு.க. கூட்டணி முன்வந்துள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தைத் தடைசெய்ய மேற்கொள்ளப்படும் இந்த முயற்சியை நாம் அங்கீகரித்தே ஆக வேண்டும்.

ஆன்லைன் சூதாட்டத்தினால் தற்கொலைகள் நிகழத் தொடங்கியதில் இருந்து, தமிழகத்தில் உள்ள ஜனநாயக சக்திகள் அதை தடை செய்ய வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுத்து வருவதோடு மட்டுமல்லாமல் அதற்கெதிராகவும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. ஆனால், தமிழகத்தில் இன்றுவரை ஆன்லைன் சூதாட்டத்தைத் தடைசெய்ய முடியவில்லை; சமூக வலைத்தளங்களில் ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களைக்கூட நிறுத்தமுடியவில்லை. குறிப்பாக, யூடியூப் செயலில் பெரும்பாலான பதிவுகளில் ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களே முன்வந்து நிற்கிறது. ஆகையால், சட்டப்பூர்வமாக இந்த விளையாட்டைத் தடை செய்வதே தீர்வு.


படிக்க : ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்: ஒப்புதல் அளிக்காத ஆர்.என்.ரவியை வெளியேற்று! | மருது வீடியோ


ஆன்லைன் சூதாட்டத்தில் ஆதாயம் தேடும் பிணந்திண்ணி கழுகுகள்!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்யவிடாமல், தடைக்கல்லாய் முன்வந்து நிற்பதில் முதன்மையானவர் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதாவிற்கு, இன்றுவரை ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்திக் கொண்டே இருக்கிறார். இந்த மசோதாவிற்கு மட்டுமல்ல, இதுவரை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட 22 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ளார். அதில் சில தமிழக மாணவர்களின் கல்வி சம்மந்தப்பட்ட மசோதாக்களும் அடங்கும்.

ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதாவிற்கு ஒப்புதல் தராமல் இழுத்தடிக்கும் ஆளுநரின் நடவடிக்கைக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வக்காலத்து வாங்குகிறார். இம்மசோதாவில் விளக்கம் கோரப்பட்டு ஆளுநரால் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் சட்டத்தை சரியாக வடிவமைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்து கேட்கப்பட்டவை அல்ல. மக்கள் மத்தியில் எதிர்ப்புக்கு உள்ளாகி உள்ள ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்ய விடாமல் தடுப்பதன் மூலம், இச்சூதாட்டம் தடை செய்யப்படாமல் இருப்பதற்கு ஆளும் தி.மு.க. அரசுதான் காரணம் என்ற பிம்பத்தை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் தி.மு.க.வைத் தனிமைப்படுத்த வேண்டும் என்பதே இவர்களுடைய நோக்கம்.

தமிழக அரசால் இயற்றப்பட்ட அவசரச் சட்டம் காலாவதியாவதற்கு மூன்று நாட்கள் இருந்த நிலையில், தமிழக அரசிடம் ஆளுநர் மசோதாவில் சந்தேகம் இருப்பதாக விளக்கம் கேட்டது; மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததைப் பற்றி பேசாமல், அவசரச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த பிறகு தமிழக அரசு அரசாணை வெளியிடாததைப் பெரிதுப்படுத்தி அண்ணாமலை பேசியது போன்ற இவர்களது நடவடிக்கைகளும் மேற்கண்ட நோக்கத்திலிருந்து மேற்கொள்ளப்பட்டவையே.

தமிழக அரசு அரசாணை வெளியிடவில்லை என்பதை பெரிதுப்படுத்தி பேசும் அண்ணாமலை, அதை அவசரச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த மறுநாளே அது குறித்து பேசவில்லை; ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் அவசரச் சட்டத்திற்கு எதிராக தொடுத்த வழக்கில் தமிழக அரசின் சார்பாக வாதாடிய வழக்கறிஞர், சட்டம் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று கூறியது விவாதப் பொருளாகி, அன்புமணி மற்றும் உதயகுமார் ஆகியோர் தமிழக அரசின் இச்செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது கூட அண்ணாமலை வாயைத் திறக்கவில்லை.

தமிழக மக்கள் மத்தியில் இருந்து மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் எதிர்ப்பு கிளம்பிய போதுதான், “மசோதா விவகாரத்தில் அனைத்து பழியையும் ஆளுநர் மீது போட்டு தி.மு.க. தப்பிக்க முடியாது” என அண்ணாமலை அரசாணையைப் பற்றி பேச ஆரம்பிக்கிறார். மேலும், “ஆளுநர் சட்டம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டிருக்கிறார். எனவே, ஆளுநர் மீது குற்றம் சுமத்த முடியாது” எனப் பேசுகிறார். அண்ணாமலையின் இந்த நடவடிக்கைகள் அப்பட்டமாக திசைதிருப்பும் நடவடிக்கைகளே தவிர வேறொன்றுமில்லை.

இத்துடன் நில்லாமல், சில மாதங்களுக்கு முன்னர் தமிழகத்திற்கு பிரதமர் மோடி வந்தபோது சரியான பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்று எந்த முகாந்திரமும் இல்லாத, அப்பட்டமான அவதூறைக் கூறினார், அண்ணாமலை. ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் இரகசியமாக ஆளுநருடன் பேச்சுவார்த்தை நடத்தியதைப் பற்றி பத்திரிகையாளர்கள் அண்ணாமலையிடம் கேட்டபோது, கருத்து எதுவும் கூறாமல் அதுபற்றி தனக்கு ஏதும் தெரியாது என நழுவிவிட்டார்.

ஆன்லைன் சூதாட்டத் தடை விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பலுக்கு பக்கபலமாக நீதிமன்றங்களும் செயல்படுகின்றன. அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்தை, “ஆன்லைன் ரம்மி சூதாட்டம் அல்ல, திறமை சார்ந்த விளையாட்டு” என உச்சநீதிமன்ற தீர்ப்பை காரணம் காட்டி சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இத்தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டை உச்சநீதிமன்றமும், சுமார் ஒரு ஆண்டு கழித்தே விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இன்னும் எத்தனை ஆண்டுகள் அவ்வழக்கை விசாரணையை இழுத்தடிக்கும் என்று தெரியவில்லை.

மேலும், மதுரை உயர்நீதிமன்றக் கிளையானது, “18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் ஆன்லைன் சூதாட்டங்களில் ஈடுபடுவதற்கு பெற்றோர்கள்தான் பொறுப்பு” என ஒரு வழக்கில் கூறியுள்ளது. ஒழுக்கக்கேடுகளையும் மக்களைச் சுரண்டுவதையும் நியதியாகக் கொண்டுள்ள பார்ப்பனிய மரபில் வந்த நீதிமன்றங்களிடம் இதுபோன்ற தீர்ப்புகளை தவிர, வேறெதை நாம் எதிர்பார்க்க முடியும்.

இதைவிடக் கொடுமை என்னவென்றால், மத்திய அரசானது ஆன்லைன் சூதாட்டங்களுக்கு ஜி.எஸ்.டி வரியை 28 சதவிகிதமாக உயர்த்த ஆலோசித்துக் கொண்டிருப்பதுதான். ஜி.எஸ்.டி வரியை அதிகரிப்பதன் மூலம் ஆன்லைன் சூதாட்டங்கள் மீதான பொதுமக்களின் மோகத்தை ‘தணிக்க’ இயலும் என்று மத்திய அரசு கூறும் காரணம் கேட்பவன் கேனையாக இருந்தால் கேப்பையில் நெய் வடிகிறது என்ற கதையாக உள்ளது.

ஆன்லைன் சூதாட்டங்களில் ஈடுபட மக்களை ஊக்குவிக்கும் விதமாக, நடிகர்களும் ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடிக்கிறார்கள். இத்தகைய விளம்பரங்கள் ஒன்றும் அறியாத பாமர மக்களை குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்க முடியும் என்ற ஆசையைத் தூண்டி ஆன்லைன் சூதாட்டத்திற்குள் இழுத்துவருகிறது. இந்நடிகர்களுக்கு எதிராக மக்கள் மத்தியில் இருந்து எதிர்ப்பு கிளம்பினாலும் அவர்கள் அதை ஒரு பொருட்டாகக் கருதவில்லை என்பது மட்டுமல்லாமல் திமிர்த்தனமாகவே நடந்துக்கொள்கின்றனர். பணத்தாசையில் இதுபோன்ற விளம்பரங்களில் மீண்டும் நடிக்கவே செய்கின்றனர்.


படிக்க : ஆன்லைன் சூதாட்டம் : கார்ப்பரேட்டுகளின் இலாபவெறிக்காக தொடரும் படுகொலைகள் ! என்ன செய்ய வேண்டும்?


இவர்களில் முக்கியமானவர், சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும் நடிகருமான சரத்குமார். “குடும்பத் தகராறில் தற்கொலை செய்துக்கொண்டவர்களை எல்லாம் ஆன்லைன் ரம்மி தற்கொலை என்கிறார்கள், உண்மையில் ரம்மி அறிவுப்பூர்வமான விளையாட்டு” “நான் சொல்வதால் அனைவரும் கேட்டு விடுவார்களா என்ன? ஓட்டு போடுங்கள் எனக் கூறினேன். ஓட்டு போடவில்லை. ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள் எனக் கூறியபோதும் கேட்கவில்லை. இதையெல்லாம் கேட்காத நிலையில் நான் ரம்மி விளையாடுங்கள் எனக் கூறினால் மட்டும் கேட்டுவிடுவார்களா என்ன?” என அயோக்கியத்தனமாக பேசி வருகிறார்.

ஒன்றிய அரசு, நீதிமன்றங்கள், தமிழக ஆளுநர், அண்ணாமலை, சரத்குமார் போன்ற ஆன்லைன் சூதாட்ட ஆதரவாளர்கள் அனைவருக்கும் இருக்கும் பொதுத்தன்மை, மக்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை, எத்தனை குடும்பங்கள் சீரழிந்தாலும் கவலையில்லை என்ற பார்ப்பன மனநிலையும், அவரவரது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்ற காரியவாத, பிழைப்புவாத உணர்வும்தான்.

“இவர்களை யார் ஆன்லைன் சூதாட்டத்தை ஆடச் சொன்னது, அதுதான் குடும்பத்தைப் பாதிக்கிறதென்று தெரிகிறதல்லவா?” “அவனவன் பார்த்துத் திருந்த வேண்டும்” என்று இந்த பார்ப்பன மேட்டுக்குடி கும்பல்கள்தான் மக்களுக்கு உபதேசம் செய்கின்றன. ஆன்லைன் சூதாட்டத்திற்கு மட்டுமல்ல, குடிப்பழக்கம், புகைப்பழக்கம் முதல் பிளாஸ்டிக் ஒழிப்பு வரை அனைத்து சமூகக் கேடுகளுக்கும் மக்களைக் குற்றவாளிகளாக்கி, இவற்றால் கொள்ளையடிக்கின்ற கார்ப்பரேட் சூதாடிகளையும் கொள்ளையர்களையும் பாதுகாக்கின்றன.

இந்த அரசியல்-சமூகக் கட்டமைப்புதான் ஆன்லைன் சூதாட்டத்தை வளர்க்கிறது, பாதுகாக்கிறது. இந்தக் கட்டமைப்பிலுள்ள ஆன்லைன் சூதாட்டத்தைத் தடுக்க வேண்டும் என்றால், அதற்குச் சட்டப் போராட்டங்கள் தீர்வாகாது, சட்டத்தை நிறைவேற்றுவதற்கான மக்கள் போராட்டம் இல்லாமல் விடிவு பிறக்காது!


அமீர்
புதிய ஜனநாயகம்
ஜனவரி 2023

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க