சென்னை பெருங்குடியில் வசித்து வந்த தனியார் வங்கியின் உதவி மேலாளர் மணிகண்டன் என்பவர் ஆண்டுக்கு இருபத்தி எட்டு லட்ச ரூபாய்வரை ஊதியமாக பெற்றவர். ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் விளையாடி பணத்தை இழந்துவிட்டு, தொடர்ந்து விளையாட நண்பர்கள், உறவினர்களிடம் ஒரு கோடி ரூபாய் வரை கடன் வாங்கியுள்ளார். கடன் நெருக்கடி காரணமாக குடும்பத்தில் மோதல் அதிகரிக்கவே, மனைவியை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொன்றுவிட்டு, தனது இரு குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு அவரும் தற்கொலை செய்துகொண்டார்.
சென்னை திருவான்மியூரில் டிக்கெட் வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த டீக்காராம், அதிகாலையில் மூன்று பேர் துப்பாக்கி முனையில் தன்னைக் கட்டிப் போட்டு 1.25 லட்ச ரூபாயை கொள்ளையடித்துவிட்டுச் சென்றுவிட்டதாகக் கூறியதைத்தொடர்ந்து விசாரணை செய்தது  போலீசு. அதில் டீக்காராமே தன் மனைவியுடன் சேர்ந்து பணத்தை திருடிவிட்டு, கொள்ளையர்கள் வந்து திருடிச் சென்றதாக நாடகமாடியது தெரியவந்தது. ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அதிகப்படியான பணத்தை இழந்ததால், கடனை அடைப்பதற்காக இப்படியொரு வழியை தேர்வு செய்ததாக அவர் போலீசிடம் தெரிவித்துள்ளார்.
மேற்கண்ட இரண்டு சம்பவங்களுமே இந்த ஆண்டு தொடங்கிய முதல் வாரத்திலேயே  நடைபெற்றவை. ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்களுக்கு எதிராக தொடரப்பட்ட பொதுநல வழக்கொன்றில் (2020), தமிழகத்தில் இதுவரை ஆன்லைன் சூதாட்டத்தால் 30 பேர் வரை தற்கொலை செய்திருக்கக்கூடும் என்றது சென்னை உயர்நீதிமன்றம்.

படிக்க :

டாஸ்மாக் போதைக்கு போட்டியாக வரும் ஆன்லைன் ரம்மி !

ஆன்லைன் சூதாட்டம் : தடுக்கப் போகிறோமா ? இழக்கப் போகிறோமா ?

ஆன்லைன் சூதாட்டங்களால் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. மேலும் எண்ணற்ற குடும்பங்கள் ரம்மி போன்ற ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் கடன்பட்டு நடுத்தெருவிற்கு வந்திருக்கின்றன.
தெருக்களில் பணம் வைத்து சீட்டாடுபவர்களை, போலீசார் தேடிப்பிடித்துக் கைதுசெய்து அபராதம் விதிப்பதாக காட்டும் அதே தொலைக்காட்சி சேனலில், ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்கள் ஒருநாளில் மட்டுமே பலமுறை வந்து “ஈசியாக சம்பாதிக்கலாம்” என்று ஆசையை கிளறிவிட்டுக் கொண்டிருக்கின்றன.
ஏழை மக்களை பெரிதும் பாதிப்பிற்குள்ளாக்கும் அரசு லாட்டரியும் ஒருவித சூதாட்டமே எனக் கூறி 2003-ஆம் ஆண்டு லாட்டரி விற்பனையை தடை செய்தது தமிழ்நாடு அரசு. ஆனால் இன்று, எதற்கும் கட்டுப்படாமல் கார்ப்பரேட் கம்பெனிகளால் தொடங்கப்பட்ட ஆன்லைன் சூதாட்டங்கள் மக்களை மிகப்பெரிய போதையில் ஆழ்த்தி கொன்று கொண்டிருக்கின்றன. “2019-ம் ஆண்டு கணக்குப்படி தினமும் ஒரு நாளைக்கு லட்சம் பேர் புதிதாக ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையாகிறார்கள். கொரோனா காலத்தில் இந்த நிறுவனங்களின் லாபம் 200 சதவீதம் அதிரித்துள்ளது” என்று இந்து குழுமத்தின் காமதேனு இதழ் குறிப்பிடுகிறது.
சீட்டாட்ட சூதாட்டம் போலவே, நடப்பு ஐ.பி.எல்-ஐ வைத்து நடக்கும் வீரர்களை தேர்வு செய்யும் சூதாட்ட விளையாட்டும் உள்ளது. கிரிக்கெட் மோகம் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இந்தியாவில் ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்டம் எளிதில் பலரையும் வீழ்த்திவிடுகிறது. “வீரர்களை கணிப்பதுதான் பிரச்சினை, சொற்ப பணம்தான், ஒரு டைம் பாஸூக்குக்குதான்” என இளைஞர்கள் பல காரணங்களை ‘சாதகமாக’ சொன்னாலும் ஒரு சூதாட்ட மனநிலைக்கு படிப்படியாக இவ்விளையாட்டுகள் அவர்களை தயார் செய்துவிடுகின்றன.
ஆன்லைன் சூதாட்ட போதையைப் பயன்படுத்தி பணமோசடி செய்யும் தரகு கும்பல்கள் பல முளைத்துள்ளன. கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்த அரசு என்பவர், மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்திருந்தார்; அதில், தான் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டில் ஈடுபட்டு வந்ததாகவும் அப்போது சில ஆட்டங்களில் வெல்ல வைத்து பின்னர் பல லட்சம் ரூபாய் வரை இழந்து விட்டதாகவும் இந்த மோசடி செயலில் ஒரு கும்பல் ஈடுபடுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
மனைவியை கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்றுவிட்டு, இரண்டு குழந்தைகளையும் கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்ட பெருங்கடியைச் சேர்ந்த தனியார் வங்கி உதவி மேலாளர் மணிகண்டன்.
ஆன்லைன் ரம்மி விளையாடும்போது தொடக்கத்தில் ஒருசில ஆட்டங்களில் வெற்றி பெறுவர். அதனால் தொடர்ந்து வெற்றிப் பெறலாம் என்று நம்பி அடுத்தடுத்து கூடுதலான பணத்தைக் கட்டி விளையாடுவார்கள். ஆனால் யாரேனும் ஒருவர் மட்டுமே வெற்றி பெறுவதும் மற்றவர்கள் தோல்வியடைந்து பணத்தை இழப்பதும்தான் சூதாட்டத்தின் சிறப்பு. சூதாட்டப் போதை இதை பரிசீலிப்பது இல்லை. இதனால் அதிகப் பணத்தை கட்டி இழந்தவர்கள் விரக்தியில் தற்கொலை செய்துகொள்கின்றனர்.
000
இந்தியாவில் சூதாடினால், சூதாட்ட பொதுச் சட்டம் 1867-ன் கீழ் வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல தமிழக விளையாட்டுச் சட்டத்தின் கீழ் பணம் வைத்துச் சீட்டாடுவது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதே சூதாட்டம் ஆன்லைனில் நடைபெற்றால் அது குற்றமாக வரையறுக்கப்படுவதில்லை.
ஏஸ்2த்ரீ, போக்கர்டங்கல், பாக்கெட் 52, ‘கேஸ்டோ க்ளப்’, போக்கர், ஷீட்டிங் பைட்டர்ஸ்… இப்படி பல பெயர்களில் இந்தியாவில் 132 ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு செயலிகள் உள்ளன. இவற்றை ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஜங்லி கேம்ஸ், கே.பி.எம்.ஜி, ஆர்.ஜி.எம் போன்ற சர்வதேச கார்ப்பரேட் கம்பெனிகள் நடத்துகின்றன. இதன் மூலம் ஒவ்வொரு நிறுவனமும் பல்லாயிரம் கோடி ரூபாய் லாபம் ஈட்டுகின்றன. இதை தடுப்பதற்கு மத்திய அரசுக்கு பல மாநில முதல்வர்களும் கடிதங்கள் எழுதியுள்ளனர்.
அக்டோபர் 2020-ஆம் ஆண்டு, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மத்திய அரசுக்கு ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வலியுறுத்தி எழுதிய கடிதத்தில், “ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு அடிமையாகி பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர். இளைஞர்களின் மனநலமும் பாதிக்கப்படுகிறது. எனவே ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு என்ற மிகக்கொடிய சமூகக் கொடுமையை கூடிய விரைவில் ஒழிக்க வேண்டும். இவ்விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக குறுக்கிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியதோடு, தடை செய்யப்பட வேண்டிய 132 ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு இணையதளங்கள் மற்றும் செயலிகளின் பட்டியலையும் தனது கடிதத்தில் இணைத்திருந்தார். அதற்கு மோடி அரசு இதுவரை எந்த பதிலையும் அளிக்கவில்லை. கார்ப்பரேட்டுகளுக்காக சட்டமியற்றும் பாசிச மோடியிடம் இதை எப்படி எதிர்பார்க்க முடியும்?
000
ஒன்றிய அரசு, “ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம்” கொண்டு வராதவரை மாநில அரசுகள் எப்படிப்பட்ட தடைச்சட்டம் போட்டாலும் அவை நீதிமன்றங்கள் மூலம் செல்லாததாக்கப்படும்; ஆக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டிலும் ஆன்லைன்  சூதாட்ட கொலைகளை தடுக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்த நிலையில், ஆன்லைன் சூதாட்டங்களைத் தடை செய்து, கடந்த 2020-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு அவசரச் சட்டம் கொண்டு வந்தது. அந்த அவசரச் சட்டத்தின்படி, ஆன்லைன் ரம்மி விளையாட்டு அரங்கம் வைத்திருந்தால் ரூ.10,000 அபராதமும் இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும். மேலும் பணம் வைத்து விளையாடுவோரின் கணினி, செல்போன் மற்றும் அது தொடர்பான உபகரணங்கள் பறிமுதல் செய்யப்படவும் தடையை மீறி விளையாடினால் ரூ.5,000 அபராதம் விதிக்கவும் 6 மாதம் சிறை தண்டனை வழங்கவும் வழிவகை செய்தது. அச்சட்டம் சென்னை உயர்நீதிமன்றத்தால் செல்லாது எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்துக்கு எதிராக அவற்றின் நிறுவனங்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன. ஆன்லைன் கார்ப்பரேட் கம்பெனிகளின் தரப்பில் ஒருமுறை ஆஜராகுவதற்கே பல லட்சம் கட்டணம் வாங்கும் மூத்த வழக்கறிஞர்களான அபிஷேக் மனுசிங்வி, ஏ.கே. கங்குலி, ஆரியமா சுந்தரம், பி.எஸ்.ராமன் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் ஆஜராகினர். தமிழக அரசின் தரப்பிலோ இரு வழக்குரைஞர்கள் மட்டுமே ஆஜரானார்கள் என்பதில் இருந்தே தமிழ்நாட்டு அரசுக்கு மக்கள் மீது என்ன அக்கறை என்பது சொல்லாமலே விளங்கும்.
இந்த வழக்கினை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, ஆன்லைன் சூதாட்ட கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு போடப்பட்ட தடையானது அரசியலைமைப்புச் சட்டம் 19(1)-G-க்கு எதிரானது என்ற ‘வரலாற்று சிறப்புமிக்க’ தீர்ப்பை வழங்கியது. அச்சட்டப் பிரிவானது தொழில், பணி மற்றும் வணிகம் அல்லது வியாபாரத்தை செய்யும் சுதந்திரத்தின் மீதான நியாயமான கட்டுப்பாடுகளைப் பற்றிக் கூறுகிறது.
அப்படி என்றால் ஆன்லைன் சூதாட்ட கார்ப்பரேட் கம்பெனிகளின் கொள்ளைக்காக யாரும் கொல்லப்படலாம் என்பதே 19(1)-G குறித்து உயர் நீதிமன்றத்தின் புதிய சட்ட விளக்கமாக (interpretation) இருக்கிறது.
“ஆன்லைன் ரம்மி என்பது திறமை சார்ந்த விளையாட்டு, சூதாட்டம் அல்ல” என்று உச்ச நீதிமன்றம் பல தருணங்களில் தீர்ப்பளித்துள்ளது. சட்ட ஆணையமும் இதே கருத்தைத்தான் தெரிவித்திருக்கிறது. அந்த அடிப்படையில்தான் “ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளைத் தடை செய்ய முடியாது; முறைப்படுத்துவதற்கு மட்டுமே முடியும்” என்று கூறி ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
000
1990-களில் தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கை அமல்படுத்தப்பட்டது தொடங்கி, ஒன்றிய அரசு மட்டுமின்றி எல்லா மாநில அரசுகளும் வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்கு போட்டிப் போட்டுக்கொண்டு பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு சலுகைகளை வாரிக்கொடுத்து வருகின்றன. கார்ப்பரேட்டுகளுக்கு உகந்தவைகளே சட்டங்களாக்கப்படுகின்றன. கார்ப்பரேட்டுகளுக்கு ஒவ்வாத சட்டங்களும் அரசின் வடிவங்களும் ஒவ்வொன்றாக கைவிடப்படுகின்றன.
இதிலிருந்து நோக்கும்போது, ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது என்பது சாதாரண விசயம் அல்ல. கடும் கட்டுப்பாடுகள் நிலவுவதாகக் கூறப்படும் சீனாவில் கூட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கள் தடை செய்யப்படவில்லை; மாறாக ஒரு நாளில் குறிப்பிட்ட நேரம் மட்டுமே பார்க்க முடியும் என்று ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளது. இவையெல்லாம் ஆன்லைன் சூதாட்ட கம்பெனிகளின் உலகுதழுவிய பலத்தை மட்டும் காட்டவில்லை; இதுபோன்ற விளையாட்டுகள் முதலாளித்துவ அரசுகளுக்கும் தேவை என்பதையே காட்டுகிறது.
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை மட்டுமல்ல, இதனோடு ஆபாச இணையதளங்களின் நவீன பரிணாமத்தையும் இணைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. “ஆன்லைன் பாலுறவு” (Online Sex) எனும் புதிய வக்கிரம், ஆபாச இணையதள முதலாளிகளால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரு ஆணோ, பெண்ணோ தங்களை ஒரு ஆபாச இணையதளத்தின் இணைப்பில் இணைத்துக் கொண்டு ஆன்லைனிலேயே “வீடியோ கால்” மூலம் மெய்நிகர் உறவுகொள்ளும் ஒரு குரூரம்; இதுவரை கேள்விப்பட்டிராத வக்கிரம்; இன்று இளைஞர்களிடையே பரவிக் கொண்டிருக்கிறது. ஆன்லைன் ரம்மியைப் போல இதிலும் மோசடி கும்பல்களின் கைவரிசையால் பணத்தை இழந்தவர்கள் எத்தனையோ பேர். ஆனால் அசிங்கப்பட்டுப் போவோமோ என்று பலர் புகார் கொடுப்பதில்லை.

படிக்க :

ஆன்லைன் சூதாட்டம் : கார்ப்பரேட்களின் இலாபவெறிக்காக தொடரும் படுகொலைகள்

ஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு !

இவ்வாறு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நுகர்வுவெறிப் பண்பாடு அனைத்து வகைகளிலும் திட்டமிட்டு பரப்பப்படுவதானது கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபவெறிக்கு தீனிபோடுவதாக மட்டும் அமையவில்லை. முதலாளித்துவ சுரண்டலால் பாதிக்கப்படும் மக்களை, தங்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளிலிருந்து திசைதிருப்பி அவர்களது போராட்ட உணர்வை காயடிக்கிறது.
“என்ன வேணா நடக்கட்டும் நான் சந்தோசமா இருப்பேன் ! உசுரு இருக்கு வேறென்ன வேணும்.. உல்லாசமா இருப்பேன்” என்ற திரைப் பாடல் வெளிப்படுத்தும் உள்ளடக்கமும் இதிலுள்ள மிருகப் பண்பாட்டை, அடிமைத்தனத்தை உச்சுக்கொட்டி நம்மில் பலர் இரசிக்க முடிவதும் அதற்கு எடுப்பான உதாரணங்கள். இதைத்தான் எல்லா முதலாளித்துவ அரசுகளும் விரும்புகின்றன. அம்பானி-அதானி தாசர் மோடி மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன!
சீனாவின் விடுதலைப் போராட்டத்தை சிதைப்பதற்காக அன்றைய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் கப்பலில் டன் டன்னாக அபினை இறக்குமதி செய்து சீன இளைஞர்களை போதையில் ஆழ்த்தியது. அதற்கெதிராக சீனர்கள் நடத்திய போரே அவர்களின் புரட்சிக்கு வித்திட்டது. எனவே போதை, ஆபாச சீரழிவிற்கு எதிரான போராட்டமும் மக்கள் விடுதலைக்கான போராட்டமும் வேறுவேறல்ல.
இன்று “ஆன்லைன் மார்க்கமாக” முதலாளித்துவம் நம் மீது தொடுக்கும் சீரழிவுகளை – தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டுமானால், இத்தகைய சூதாட்டங்களை தடைசெய்யக் கோரி சட்டரீதியாக வழக்கு தொடுப்பது, போராடுவது என்ற வரம்போடு மட்டும் நிறுத்திக் கொள்ளக்கூடாது. மனிதனை அடிமையாக்கி மனிதனுக்கே விற்பனைப் பொருளாக்கும் நுகர்வுவெறிக் கலாச்சாரத்தையும் அதற்கு அடிப்படையாக உள்ள ஏகாதிபத்திய பொருளாதாரத்தையும் ஒழித்துக்கட்டுவதை நோக்கமாகக் கொண்ட கம்யூனிச பண்பாட்டை மக்களிடம் கொண்டுசெல்லும்போதுதான் சமூகத்தை காப்பாற்ற முடியும்.


மருது

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க