10.11.2023

ஆன்லைன் ரம்மி தடை சட்டம் மீதான அநீதித் தீர்ப்பு!
கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்காக மக்களை காவு கொடுக்கும் நீதிமன்றம்!

பத்திரிகை செய்தி

மிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்து இயற்றப்பட்ட சட்டத்தின் பல பிரிவுகள் செல்லும், சில பிரிவுகள் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. கார்ப்பரேட் ஆன்லைன் ரம்மி முதலாளிகளை காப்பாற்றி அவர்களுக்காக மக்களை காவு கொடுப்பதே இந்தத் தீர்ப்பு.

அதிர்ஷ்டம் சார்ந்த விளையாட்டுகளை தடை செய்யும் சட்டப்பிரிவுகள் செல்லும் என்று தீர்ப்பளித்திருக்கும் சென்னை உயர்நீதிமன்றம், அதேநேரத்தில் ரம்மி திறமைக்கான விளையாட்டு என்பதால், ஆன்லைன் ரம்மிக்கான தடை செல்லாது என்று அறிவித்திருக்கிறது. ஆக மொத்தத்தில் ஆப்ரேஷன் சக்சஸ்; பேஷண்ட் டெத்.

ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளையாட்டுகள் காரணமாக தமிழ்நாட்டில் மட்டும் பலர் தற்கொலை செய்து மாண்டு போயினர். ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளையாட்டுகளைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்ததன் விளைவாக திராவிட முன்னேற்றக் கழக அரசனது ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றியது. எடுத்த உடனே இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுமதி அளிக்கவில்லை. முதல் முறை திருப்பி அனுப்பினார், ஆளுநருக்கு எதிராக மிகப்பெரிய கண்டனங்கள் எழுந்தன. வேறு வழியின்றி இரண்டாவது முறை மிகவும் தாமதமாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார். இதற்கிடையே ஆளுநர் ஆர் என் ரவியை கார்ப்பரேட் ஆன்லைன் ரம்மி முதலாளிகள் சந்தித்ததும் குறிப்பிடத்தக்கது.

பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் எதிர்காலம் மற்றும் அப்பாவிகளின் உயிருடன் தொடர்புடைய இந்த வழக்கினை நீதிமன்றம் அணுகிய விதத்தில் இருந்து மக்களின் உயிரைப் பற்றிய நீதிமன்றங்களின் அணுகுமுறை அம்பலமாகி இருக்கிறது.

ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய முடியாது என்றும், மாறாக அதை ஒழுங்குபடுத்தலாம் என்றும் கூறியுள்ள நீதிமன்றம் ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளையாட்டு என்பது திறமை சார்ந்தது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளதை எடுத்துக்காட்டி உள்ளது.


படிக்க: ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநரே தமிழ்நாட்டை விட்டு ஓடு! | மக்கள் அதிகாரம் கண்டனம்


ஒரு மாநில அரசு தன்னுடைய மக்களுக்காக கொண்டு வரும் திட்டங்களை அச்சட்டத்தின் நலனிலிருந்து பார்க்காமல், அச்சட்டத்தின் தேவைகளில் இருந்து பார்க்காமல் வழங்கப்பட்ட தீர்ப்பு தமிழ்நாட்டு மக்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதியாகும். அதுமட்டுமின்றி மாநில அரசின் உரிமையும் பறிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டு இளைஞர்கள் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் மாண்டு போவதை வரவேற்கிறதா நீதிமன்றம்? ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்ற கருத்து நிலவுகின்ற போது இத்தகைய தீர்ப்பு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. நாட்டு மக்களை பலி கொடுத்து வரி பிடுங்கி வாழும் மோடி அரசிடம் வேறு எதை நாம் எதிர்பார்க்க முடியும்?

தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் உருவாக்கிய இதுபோன்ற நுகர்வு கலாச்சார விளையாட்டுகள் மக்களை கொஞ்சம் கொஞ்சமாக அரித்து தின்று கொண்டிருக்கின்றன. இதற்கு எதிரான அரசியல் மற்றும் பண்பாட்டுப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியது நம்முடைய கடமையாகும்.

மேலும் உயர் நீதிமன்றத்தின் இந்த அநீதியான தீர்ப்புக்கு எதிராக உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்,
தோழர் சி.வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை,
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க