மிழ்நாடு, கேரளா, பஞ்சாப் போன்ற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மோடி அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் அம்மாநில மக்களுக்கு எதிராக செயல்படுவதையும், ஆளும் மாநில கட்சிகளுக்கு நெருக்கடி கொடுப்பதையுமே முழுநேர வேலையாக செய்து வருகின்றனர். மாநில சட்டமன்றங்களில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டு வைத்து காலம் தாழ்த்தி வருகின்றனர். ஆளுநர் என்பதை தாண்டி, பா.ஜ.க. கட்சியின் உறுப்பினரைப் போல, அந்தந்த மாநில ஆளும் கட்சிகளுக்கு எதிரான கருத்துகளையும், சனாதனம் போன்ற இந்துத்துவ கருத்துகளையும் பிரச்சாரம் செய்வதையே தனது முழுநேரப் பணியாக கொண்டிருக்கின்றனர்.

ஆளுநர்கள் மாநில அரசுகளின் செயல்பாடுகளில் தலையிடுவது ஆளும் கட்சிகளுக்கு ஏற்படும் பிரச்சினையல்ல; பெயரளவிலான மாநில அரசுகளின் இறையாண்மையை பறிக்கும் பாசிச தாக்குதல். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டாலும் தனது உளவாளிகளான ஆளுநர்கள் மூலம் அரசு அதிகாரத்தை தன் கைக்குள் வைத்து, இணையாட்சியை நடத்தி வருகிறது.

மேற்கூறிய அடிப்படையிலே, நாகாலாந்து மக்களால் விரட்டியடிக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் உளவாளி ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். தன்னுடைய நடவடிக்கைகள் மூலம் ஆளுநராக நியமிக்கப்பட்டதிலிருந்தே தமிழ்நாட்டின் மக்களின் எதிர்ப்புக்கு தொடர்ச்சியாக ஆளாகிவருகிறார். “ஆர்.எஸ்.எஸ் உளவாளி”, “மோடியின் அடியாள்” என்று விமர்சிக்கும் அளவுக்கு மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு போயுள்ளார். ஆளுநர் பதவியிலிருந்து ஆர்.என்.ரவியை வெளியேற்ற வேண்டும் என்ற கருத்து மக்களிடம் வலுப்பெறுவதற்கு தானே காரியகர்த்தாவாக இருந்து வருகிறார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 20க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்திய அவர், பரந்தூர் விமான நிலையம் போன்ற நாசகாரத் திட்டங்கள் மூலம் கார்ப்பரேட்டுகள் தமிழ்நாட்டின் நீர்வளத்தையும் நிலவளத்தையும் கொள்ளையடிப்பதற்கான  “தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்புத் திட்டங்களுக்கான) சட்டம் 2023” க்கு மட்டும் ஒப்புதல் அளித்தது; “நீட் விலக்கு மசோதாவிற்கு” எப்பொழுது ஒப்புதல் அளிப்பீர்கள் என்று மாணவியின் பெற்றோர் ஒருவர் கேட்ட போது, “நான் இருக்கும் வரை நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க மாட்டேன்” என்று திமிர்த்தனமாக பதிலளித்தது; தனக்கு அதிகாரம் இல்லாத போதும் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து தகுதி நீக்கம் செய்தது; ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் ஆயிரக்கணக்கானோரின் உயிரும் பணமும் பறிக்கப்பட்டப்போதும் “ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவிற்கு” ஒப்புதல் அளிக்காமல் இருந்தது போன்ற நடவடிக்கைகள் மூலம் ஆளுநரை வெளியேற்ற வேண்டும் என்ற கருத்து மக்களுக்கு வலுப்பெறத் தொடங்கியது.


படிக்க: தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023-க்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி இன்று ஒப்புதல்!


இந்த நிலையில்தான், தமிழ்நாடு அரசால் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க, ஆளுநருக்கு கால வரம்பு நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது, தமிழ்நாடு அரசு. அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, “தமிழ்நாடு ஆளுநர் இப்படி அரசியல் ரீதியாக சட்ட முட்டுக்கட்டையை ஏற்படுத்தியிருப்பது தீவிர கவலை அளிக்கிறது” என்று கூறியிருக்கிறது.

மேலும், “ஒரு மசோதா ஒப்புதலுக்காக வந்தால், அதன்மீது எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் முடிவெடுக்க வேண்டும் என்று அரசியல் சட்டத்தின் பிரிவு 200 கூறுகிறது. மாநில அரசு நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு, ஒன்று ஒப்புதல் கொடுங்கள்; திருத்தம் தேவை என்று தோன்றினால் அதை மாநில அரசுக்குத் திருப்பி அனுப்புங்கள் அல்லது குடியரசுத் தலைவரின் பார்வைக்கு அனுப்புங்கள். மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் நீண்ட காலத்திற்கு உட்காந்திருக்கக் கூடாது” என்றும் கூறியிருக்கிறார்கள் நீதிபதிகள்.

உடனே, ஆளுநர் ஆர்.என்.ரவி நீண்டகாலமாகதான் நிலுவையில் வைத்திருந்த “பல்கலைக்கழக மசோதா” உள்ளிட்ட 10 மசோதாக்களுக்கு விளக்கம் கேட்டு, தமிழ்நாடு அரசுக்குத் திருப்பியனுப்பினார். ஏற்கெனவே தமிழக மக்களின் மத்தியில் வெறுப்புக்கு உள்ளாகி இருந்த ரவி, இதன் மூலம் மக்களின் வசைபாடலுக்கு உள்ளானார். நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் அவரை வறுத்தெடுத்தனர். ஆளுநர்கள் அவசியம்தானா? என்று அறிவுத்துறையினர் விவாதிக்கத் தொடங்கினர். “அரசியலமைப்புச் சட்டத்தை ஆளுநர்கள் காற்றில் பறக்கவிடுகிறார்கள். உண்மையில் ஆளுநர்கள் அவசியம்தானா?” என்று மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் ஏ.என்.ஐ. ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கேள்வியெழுப்பியது அதற்கு சான்றாகும்.

ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்களை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது, தமிழ்நாடு அரசு. தற்போது தமிழ்நாட்டிலிருந்து ஆளுநரை வெளியேற்ற வேண்டும் என்ற வகையிலான விவாதங்கள் மக்கள் மத்தியில் குறைந்து இருந்தாலும், ஒட்டுமொத்த தமிழ்நாடும் ரவியை ஆளுநர் பதவியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற உணர்விலே உள்ளது. சங்கிகளை தவிர்த்து ஆளுநரை ஆதரித்து பேசுபவர்களை நாம் விரல்விட்டு எண்ணி விடலாம்.


படிக்க: ஆளுநர் ரவி ஒரு குற்றவாளி! | தோழர் வெற்றிவேல்செழியன்


ஆனால் ஆளும் தி.மு.க. கட்சியானது சட்டப்போராட்டத்தின் மூலமே ஆளுநரை தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்றி விட வேண்டும் என்று முயற்சித்து வருகிறது. தி.மு.க.-வின் கூட்டணிக் கட்சிகளும் அந்த மனநிலையில்தான் உள்ளனர்.

சட்டப் போராட்டத்தின் மூலம் ரவியை தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கான முயற்சிகளை நாம் தவறு என்று கூறவில்லை. ஆனால் சட்டப்போராட்டத்தின் மூலம் மட்டும் ரவியை தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்ற முடியாது என்றுதான் நாம் கூறுகிறோம். ஐந்து ஆண்டுகால சட்டப்போராட்டத்தின் மூலம் நீட் தேர்வை ரத்து செய்ய முடியவில்லை; ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் போன்ற மாபெரும் மக்கள்திரள் போராட்டங்கள் மூலமாகதான் ஒன்றிய அரசை பணிய வைக்க முடியும் என்பது தான் தமிழ்நாட்டின் அனுபவமாகும்.

மக்கள்திரள் போராட்டங்கள் மூலம் ஆர்.என்.ரவி ஆளுநர் பதவியிலிருந்து வெளியேற்றுவதற்கான சூழல் தமிழ்நாட்டில் மிகப் பிரகாசமாக உள்ளது. தமிழ்நாட்டில் இருந்து ஆளுநரை வெளியேற்றுவது பாசிஸ்டுகளுக்கு எதிரான போராட்டத்தில் பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமிக்க நடவடிக்கையாகும். தமிழ்நாட்டை சுற்றிவளைத்து கைப்பற்றத் துடிக்கும் பாசிசக்கும்பலுக்கு எதிரான தமிழ்நாட்டு மக்களின் போராட்டத்தில் அடுத்தக்கட்ட பாய்ச்சலாகும்.

எனவே தமிழ்நாட்டில் இருந்து ஆளுநரை வெளியேற்றுவதற்கான மாபெரும் மக்கள்திரள் போராட்டங்களை கட்டியமைக்க வேண்டியது பாசிசத்திற்கு எதிராக போராட நினைக்கும் அனைவரின் கடமையாகும்.


இனியன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க