25.08.2023
தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்புத் திட்டங்களுக்கான) சட்டம் 2023-க்கு
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி இன்று ஒப்புதல்!
கார்ப்பரேட் திட்டங்களை எதிர்க்காமல் பாசிச எதிர்ப்பு போராட்டம்
இலக்கை அடையாது!
பத்திரிகை செய்தி
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரின் இறுதி நாளில் தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மசோதாக்களில் ஒன்றான தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்புத் திட்டங்களுக்கான) சட்டம் 2023 (Tamil Nadu Land Consolidation (for special projects) Act 2023)-க்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி இன்று ஒப்புதல் அளித்துள்ளார். தமிழ்நாடு அரசு அனுப்பிய நீட் விலக்கு உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களுக்கு கையெழுத்திடாத ரவி, இந்தச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்புத் திட்டங்களுக்கான) சட்டம் 2023-ஆனது கார்ப்பரேட்டுகள் தமிழ்நாட்டின் நீர் வளத்தையும் நிலவளத்தையும் கொள்ளையடிப்பதற்கான சட்டமாகும்.
பொதுப் பணித் துறை, நீர்ப்பாசனத் துறை, கால்நடைத் துறை, வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறை, கல்வித் துறை, நகராட்சி நிர்வாகம், மருத்துவத் துறை எனப் பல துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களை தேவை என்று அரசு கருதினால் ஒருங்கிணைத்து கையகப்படுத்திக்கொள்வதற்கு அரசுக்கு இந்தப் புதிய சட்டம் அதிகாரம் அளிக்கிறது. பரந்தூர் விமான நிலையம் உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றுவதற்கு தடையாக இருக்கக்கூடிய உள்ளாட்சி அமைப்பு விதிகள் உள்ளிட்ட பல்வேறு தடைகளை சுக்குநூறாக உடைத்தெறிந்து கார்ப்பரேட்டுக்கு தாரை வார்க்கும் திட்டமே இது.
இந்தச் சட்டத்துக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் தொடர்ச்சியாக குரல் கொடுத்த போதும், அதை கொஞ்சமும் காதில் வாங்காமல் கார்ப்பரேட் நலனே முக்கியம் என்று தமிழ்நாடு அரசு, இச்சட்டத்தை நிறைவேற்றி இருக்கிறது.
படிக்க: நீட் ரத்திற்கு அனுமதி தரமாட்டேன் என்று தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்யும் ஆளுநர் ரவியே வெளியேறு!
கார்ப்பரேட் ஆதரவு திட்டங்கள் என்றால் திமுக அரசும் ஆளுநரும் மின்னல் வேகத்தில் செயல்படுகின்றார்கள் என்பதற்கு இதுவே ஒரு உதாரணம்.
இனி இந்த சட்டத்தின் மூலம் பரந்தூர் விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் விரோத மற்றும் கார்ப்பரேட் திட்டங்கள் இனி தமிழ்நாட்டில் தங்கு தடை இன்றி நடைபெறும். மக்கள் விரோத, இயற்கை விரோத இந்தச் சட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
பாசிச பாஜக விரும்பக்கூடிய எல்லா கார்ப்பரேட் திட்டங்களையும் திமுக அரசு படிப்படியாக நிறைவேற்றிவிட்டு தான் பாஜகவுக்கு மாற்று என்று சொல்வது நகைக்கத்தக்கதாகும்.
பா.ஜ.க – ஆர். எஸ் .எஸ் செயல்பாடுகளை எதிர்ப்பது மட்டுமல்ல பாசிச எதிர்ப்பு ; ஆர்எஸ்எஸ் – பாஜக; அம்பானி – அதானி பாசிசத்தை முறியடிப்பதே உண்மையான பாசிச எதிர்ப்பு. வேண்டாம் பிஜேபி ! வேண்டும் ஜனநாயகம் என்றால் பாசிச பாஜகவின் காவி கார்ப்பரேட் திட்டங்கள் வேண்டாம் என்பதே ஆகும். அதற்கான போராட்டங்களை தமிழ்நாடு முன்னெடுப்பதே பாசிச பாஜகவை ஒழிப்பதற்கு சரியான வழியாகும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321