புதுவையைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர், ஆன்லைன் விளையாட்டுகளில் 25 இலட்சம் முதல் 30 லட்சம் வரை இழந்துவிட்டதைத் தொடர்ந்து கடந்த வாரத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

புதுவையில் திறன்பேசி விற்பனையகத்தை வெற்றிகரமாக நடத்திவந்த விஜயகுமார், ஆன்லைன் விளையாட்டுகளில் சுமார் 30 இலட்சம் வரை இழந்ததன் காரணமாக தற்கொலை செய்வதாக தனது மரணத்திற்கான காரணத்தை ஆடியோ குறிப்புகள் மூலம் தனது மனைவிக்குத் தெரிவித்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். விஜயகுமாருக்கு ஒரு குழந்தையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தனது ஆடியோ குறிப்பில் தாம் பணத்தை இழந்த பின்னணியைக் குறிப்பிட்டுள்ள விஜயகுமார், அந்த ஆடியோ குறிப்பை அனைவருக்கும் சுற்றுக்கு விடும்படி தனது மனைவியிடம் கோரியுள்ளார்.

தனது ஆடியோ குறிப்பில் பேசிய விஜயகுமார், “நான் மூன்று ஐ.டி.களில் இருந்து விளையாடி இதுவரை சுமார் 25 இலட்சம் முதல் 30 இலட்சம் வரை இழந்துள்ளேன். நான் இந்த விளையாட்டை இரவும் பகலுமாக விளையாடினேன். எனது உடல்நலத்தை இழந்தேன். இந்த விளையாட்டிற்கு நான் அடிமையாகிவிட்டேன். நான் 2 இலட்ச ரூபாயை இழந்தால்தான் எனக்கு 30,000 ரூபாய் கிடைக்கிறது என்பதை – இதுதான்  இந்த ஆன்லைன் சூதாட்ட விளையாட்டின் அடிப்படை என்பதை – உணர்ந்தபின்னரும் என்னால் இதிலிருந்து வெளிவர முடியவில்லை.” என்று தனது ஆடியோ குறிப்பில் தெரிவித்துள்ளார் விஜயகுமார்.

தனது ஆடியோ குறிப்பை சுற்றுக்கு விடுமாறும், அப்போதுதான்  ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளின் பாதிப்பை பலரும் உணர்வார்கள் என்று தனது மனைவியிடம் கோரியிருக்கிறார் விஜயகுமார்.

கடந்த ஜூலை மாதத்தில் நிதிஷ் என்றொரு இளைஞர் தாம் பணியாற்றிய கடையில் இருந்து ரூ.20,000-ஐ திருடி ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்திருக்கிறார். எடுத்த காசை மீண்டும் வைக்க முடியாத நிலையில் தற்கொலை செய்து கொண்டார்.

சூதாட்டங்களின் முந்தைய வடிவங்களான குதிரைப் பந்தயம், சீட்டாட்டம், லாட்டரி ஆகியவற்றில் குறைந்தபட்சம் நேரக் கட்டுப்பாடாவது இருந்தது. தற்போதைய கைப்பேசி வடிவத்தில், ஒரே அழுத்தில் பணம் செலுத்தும் வசதியும் நேரங்காலமின்றி விளையாடும் வாய்ப்பும் இருப்பதைத் தொடர்ந்து இழப்பின் அளவு பாரதூரமாக அதிகரித்திருக்கிறது.

தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில், சூதாட்ட விளையாட்டில் ஈடுபடுபவர்களின் மனநிலைக்கு ஏற்ப அவ்வப் போது அவர்களை வெற்றிபெறச் செய்து, மேலும் பணத்தை இழக்கச் செய்யும் வழிமுறையை திட்டமிட்டே செய்கின்றன, ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள்.

இதனை பணத்தை இழந்த பின்னர் தனது அனுபவத்தில் இருந்தே உணர்ந்தாலும், அந்த விளையாட்டு போதைக்கு அடிமையாகி அதிலிருந்து வெளிவரமுடியாமல் மேலும் பணத்தை இழக்கின்றனர், மாணவர்களும் இளைஞர்களும்.

இறுதியில் மெய்யுலகில் பணம் தீர்ந்ததும் தான், இழந்த பணத்திற்கு என்ன பதில் சொல்லப் போகிறோம் என்ற எண்ணம் அவர்களை அடுத்தகட்டத்திற்கு நகர்த்துகிறது. மனச்சோர்வு, மன அழுத்தம், படபடப்பு, பயம் காரணமாக பலரும் தற்கொலையை நோக்கிச் செல்கின்றனர்.

மனைவி, குழந்தை, சொந்தத் தொழில் என நம்பிக்கையோடு வாழ்க்கையை நடத்திவந்த விஜயகுமாரின் மனநிலை தற்கொலையை நோக்கி நகர்ந்ததன் பின்னணியில், அந்த விளையாட்டினால் ஏற்பட்ட நட்டம் மட்டுமல்லாமல், அதிலிருந்து மீளமுடியாத வகையில் அந்த சூதாட்ட போதைக்கு அடிமையான மனநிலையும் ஒரு காரணமாக இருக்க வேண்டும்.

படிக்க :
♦ டாஸ்மாக் போதைக்கு போட்டியாக வரும் ஆன்லைன் ரம்மி !
♦ விஜய் டி.வி-யின் வை ராஜா வை !

ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் இழந்து வாழ்க்கையையும், உயிரையும் இழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. லாட்டரி, குதிரைப் பந்தயம், பணம் கட்டி சீட்டாடுதல் ஆகியவற்றை மக்களின் கடுமையான எதிர்ப்பையொட்டி சட்டவிரோதமானதாக திராவிட கட்சிகளின் முந்தைய ஆட்சியாளர்கள் அறிவித்துள்ளனர். தற்போதைய எடப்பாடி அரசோ, அதிகரித்துவரும் ஆன்லைன் சூதாட்டத்தைப் பற்றி துளியும் கண்டுகொள்வதில்லை.

சென்னை உயர்நீதிமன்றம் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குமுறைபடுத்துமாறு கடந்த ஜுலை 24 அன்று தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது. தடை செய்ய வேண்டிய விவகாரத்தை ஒழுங்குபடுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் ஒழுங்குபடுத்துவதற்குக் கூட தமிழக அரசு எவ்வித நடவடிக்கைகளையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

சூதாட்டத்தின் காரணமாக உயிரிழப்பு மற்றும் உடைமையிழப்பு என்பதை, வெறுமனே ஒரு தனிநபர் பிரச்சினையாக சுருக்கிவிட முடியாது. அது போதைக்கு அடிமையாவது போன்றதொரு கேடான உளவியல், சமூகப் பிரச்சினை. இது ஏற்படுத்தும் பொருளாதார மற்றும் குடும்ப உறவுகள் இழப்பு என்பது சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

இத்தகைய சீரழிவுகளிலிருந்து மக்களைக் காக்க உடனடியாக ஆன்லைன் சூதாட்டம் மற்றும் பணம் கட்டி விளையாடும் ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்வதே இன்றைய அவசியத் தேவையாக இருக்கிறது. பெரும் கார்ப்பரேட்டுகளின் அடிமையான மோடி அரசின் அடிமையாக விளங்கும் தமிழ்நாடு அரசு, பெரும் நிறுவனங்களின் கையிலிருக்கும் ஆன்லைன் சூதாட்டத்தைத் தானாகத் தடை செய்யும் என்று எதிர்பார்ப்பது மடமை. போராட்டங்களின் மூலம் தடை செய்ய வைக்க வேண்டியது நமது அவசியக் கடமை. தனது மரண வாக்குமூலத்தில், இந்தச் சமூகத்திடம் விஜயகுமார் முன்வைத்த கோரிக்கையும் அதுவே !


சரண்
செய்தி ஆதாரம் :
தி நியூஸ் மினிட்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க