மகத்தான மக்கள் விஞ்ஞானி மேக்நாட் சாகா

பின்தங்கிய சூழ்நிலையில் இருந்து கல்வி கற்க வரும் மாணவர்களிடம் மேக்நாட்டைக் கொண்டுபோய்ச் சேர்த்தால், அவர்கள் எதிர்மறைச் சூழல்களை வென்று எப்படிச் சாதிப்பது என்பதற்கான பாடத்தை அவரது வாழ்க்கையில் இருந்து கற்றுக் கொள்வர்.

மகத்தான மக்கள் விஞ்ஞானி, மேக்நாட் சாகா:
வரலாறு மறைத்தாலும்
வானியலுக்கு வெளிச்சம் பாய்ச்சிய அறிவியல் மேதை!


க்களை முட்டாள்களாக்கி, காட்டுமிராண்டி நிலைக்குத் தள்ளும் பார்ப்பன பாசிசக் கும்பல், இந்துராஷ்டிரத்தை நோக்கி முனைப்புடன் செயல்பட்டு வரும் காலமிது.

இந்தப் பார்ப்பன கும்பலின் சனாதன சித்தாந்தத்திற்கு எதிராக முற்போக்கு கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அதன் ஒரு அங்கமாக நவீன அறிவியல் சிந்தனைகளை மக்களிடம் விதைப்பது ஒரு முக்கியப் பணியாகும்.

அந்த வகையில் சித்தித்து செயல்பட்டவரும் சமத்துவ சமூகத்தைப் படைக்க வேண்டுமென பாடுபட்ட மக்கள் விஞ்ஞானியுமான, பல்துறை ஆற்றல் கொண்ட “மேக்நாட் சாகா”வின் வரலாற்றை, இன்றைய தலைமுறையிடம் கொண்டு செல்வது அவசியமானதொரு பணியாகும்.

இந்திய சமூகத்தின் சாதியும் வர்க்கமும் எத்தகைய கொடிய தன்மை கொண்டவை என்பதை இவரது வாழ்க்கை வரலாறு நமக்கு எடுத்துக் காட்டுகிறது. அத்தகைய விஞ்ஞானியான மேக்நாட் சாகாவை, அவரது 130-வது பிறந்த நாளை ஒட்டி (அக்டோபர் 06) வினவு வாசகர்களுக்கு அறிமுகம் செய்கிறோம்.

தமிழ் வாசிப்பு தளத்தில், பார்ப்பன இந்திய சிந்தனைப் போக்கும் மேலான்மையும் பல மக்கள் விஞ்ஞானிகளை, மக்கள் அறிஞர்களை இருட்டடிப்பு செய்திருப்பதன் தாக்கத்தை உடைக்கும் வகையில் பல முயற்சிகள் நடந்து வருகின்றன. அதில் ஒன்றுதான், “மேக்நாட் சாகா” குறித்து வெளிவந்துள்ள நூலாகும். 

தோழர் தேவிகாபுரம் சிவா, “மேக்நாட் சாகா – ஒரு புரட்சிகர விஞ்ஞானியின் கதை” என்ற தலைப்பில் எழுதியுள்ள, வாழ்க்கை வரலாற்று நூலை “பாரதி புத்தகாலயம்” தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளது சிறந்த பங்களிப்பாகும்.

அந்நூலுக்கு தோழர் தேவிகாரபுரம் சிவா எழுதிய முன்னுரையை சுருக்கிக் கொடுத்துள்ளோம். இந்நூலை அனைவருக்கும் பரப்புங்கள், பகிருங்கள். நம்மில் பல மேக்நாட் சாகா-க்கள் உருவாவதற்கு வழிகோலுங்கள்!


னிதம் ததும்பும் மகத்தான வரலாறு மேக்நாட் சாகாவினுடையது. வங்க மண் தந்த வண்ணமயமான ஆளுமை மேக்நாட் சாகா.

‘விஞ்ஞானி’ என்ற ஒற்றைச் சொல்லுக்குள் மட்டுமே அகப்பட்டுவிடாத விரிவும் செறிவும் கொண்ட விரிவுறு வெளியாக அவரது ஆளுமை பிரம்மாண்டம் காட்டி நிற்கிறது. விடுதலை வீரர், சோசலிச செயல்பாட்டாளர், வரலாற்று ஆய்வாளர், கல்வியாளர், பொருளாதார நிபுணர், நிறுவனக் கட்டமைப்பாளர், உலக அமைதிப் போராளி, சமூகப் புரட்சியாளர், தொல்பொருள் ஆய்வாளர், மனித உரிமைப் போராளி, நாடாளுமன்றவாதி என அவரது ஆளுமை விரிந்து நிற்கிறது.

உண்மையில், இந்தியா உலக அறிவியலுக்கு குறிப்பாக இயற்பியலுக்கு அளித்த முதல் நேரடி பங்களிப்பு மேக்நாட்டின் வெப்ப அயனியாக்கக் கோட்பாடும், அது குறித்த அவர் பெயரிலான அயனியாக்கச் சமன்பாடுமேயாகும்.

“ஃபில் மேக்” என அழைக்கப்படும் “ஃபிலாசாபிகல் மேகசின்” (Philosophical Magazine) எனும் ஆய்விதழில், 1920-ஆம் ஆண்டு வெளிவந்த “சூரிய நிறமண்டலத்தில் அயனியாக்கம்” என்ற ஆய்வுக் கட்டுரை, மேற்கண்ட வெப்ப அயனியாக்கக் கோட்பாட்டையும், அவரது சமன்பாட்டையும் கொண்டிருந்தது.

நூற்றாண்டுகளாகத் தேங்கிக் கிடந்த வானியற்பியல் ஆய்வுகளுக்கு, இவை புது வழிகாட்டிட நவீன வானியற்பியல் பிறந்தது. ஆம், நவீன வானியற்பியலின் தந்தை மேக்நாட் தான். இச்சாதனை நிகழ்த்தப்பட்டபோது அவரது வயது 27 மட்டுமே.


படிக்க: நூல் அறிமுகம் : ஐன்ஸ்டீன் வாழ்வும் சிந்தனையும்


மேக்நாட்டின் சாதனைக்கான பாதை அனிச்சம் பரப்பப்பட்ட மென்மலர்ப் பாதையாக இருக்கவில்லை. அது நெருஞ்சி முட்களால் நிரப்பப்பட்டதாகவே இருந்தது.

தீண்டாமைக்குட்பட்ட ஒடுக்கப்பட்ட சாதியில் ஓர் எளிய பெட்டிக்கடைக்காரரின் மகனாகப் பிறந்த மேக்நாட்டை வறுமையும், சாதிய ஒதுக்கலும் வைராக்கியமான இளைஞராகவும், சமத்துவ சிந்தனையாளராகவும் ஆக்கின.

அவரது சமகாலத்து இந்திய விஞ்ஞானிகள் ஆய்வுக்கூடங்களில் முடங்கிக் கிடந்தபோது தன் ஆசிரியர் பி.சி.ராயின் தாக்கத்தால் ஊக்கமடைந்து மக்கள் பிரச்சினைகளோடு தன்னை இணைத்துக் கொண்டார் அவர்.

சொந்த நாட்டின் ஆதிக்க சாதியினர் ஒடுக்கப்பட்ட மக்களிடம் காட்டிய வன்மம் மிக்க தீண்டாமை அணுகுமுறையையும், காலனி ஆட்சியாளர்கள் வெளிப்படுத்திய இனவெறியையும் ஒரு சேரக் கண்டு வளர்ந்தவர் மேக்நாட்.

அவரது அரசியல், சமூக நிலைப்பாடுகளைக் கட்டமைப்பதில் இவை முக்கிய பங்காற்றின. காலனிய ஆட்சியாளர்களை எதிர்த்த விதத்திலும் ஜனநாயக வகுப்பினர் எனத் தான் அழைத்த பெரும்பான்மை ஒடுக்கப்பட்ட மக்களின் தோழனாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட விதத்திலும் அவர் தன் காலத்தின் பிற அறிவியலாளர்களிடம் இருந்து மாறுபட்டு நின்றார்.

இந்த நாடு மேக்நாட்டுக்கான அங்கீகாரத்தை இன்றுவரை அளிக்கவில்லை. அதை நம்மால் புரிந்துகொள்ளவும் முடிகிறது. இந்தியச் சமூகம்போல் இந்தியாவின் அறிவியல் கட்டமைப்பும்  சாதிமயமாகித்தான் கிடக்கிறது. இந்தியா விடுதலை அடைந்து நேரு தலைமையில் அமைக்கப்பட்ட அரசு, அரசின் அனைத்து அறிவியல் கட்டமைப்புகளில் இருந்தும் மேக்நாட்டைத் திட்டமிட்டு ஓரங்கட்டி வைத்தது.


படிக்க: நூல் அறிமுகம்: ஆர்.எஸ்.எஸ். ஆழமும் அகலமும்


மேக்நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பே அதற்கான காரணம் என அபாசூர் போன்ற ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்தியாவில் அறிவியல் புலங்களில் கூட மேக்நாட்டை அவருக்குரிய பெருமைகளோடு அறிந்தவர்கள் குறைவே. அறிவியல் மேதைகளை அறிமுகப்படுத்தும் பணி, பள்ளி பாடத்திட்டங்களில் இருந்தே தொடங்கப்பட வேண்டும். இங்கு சி.வி.ராமன், ஜகதீஸ் சந்திர போஸ் போன்ற சிலரைத் தவிர்த்து மேக்நாட் உட்பட பல அறிவியல் மேதைகள் பற்றி மாணவர்களுக்குச் சொல்லித் தரப்படுவதில்லை.

பின்தங்கிய சூழ்நிலையில் இருந்து கல்வி கற்க வரும் மாணவர்களிடம் மேக்நாட்டைக் கொண்டுபோய்ச் சேர்த்தால், அவர்கள் எதிர்மறைச் சூழல்களை வென்று எப்படிச் சாதிப்பது என்பதற்கான பாடத்தை அவரது வாழ்க்கையில் இருந்து கற்றுக் கொள்வர்.

மேக்நாட்டின் மாபெரும் அறிவியல் பங்களிப்புகளான வெப்ப அயனியாக்கக் கோட்பாடும் சமன்பாடும் இந்தப் பேரண்டம் தோன்றிய சில வினாடிகளில் என்ன நிகழ்ந்தது? அது எப்படி இருந்தது? என்ற ஆராய்ச்சியில் அடிப்படையான பங்காற்றுகின்றன என அறிவியலாளர் ஜே.வி.நர்லிகர் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் முதல் ஏவுகணை முயற்சியில் ஏற்பட்ட இடர்பாடுகளை சாகா கோட்பாடே தீர்த்து வைத்ததாக அப்துல் கலாம் தெரிவித்துள்ளார். “அடிப்படை இயற்பியல் கோட்பாடு ஒன்று தவிர்க்க இயலாத வகையில் எதிர்பாராத ஆய்வுத்தளங்களிலும் பயன் அளிக்கின்றன. சாகா சமன்பாடு இதற்கு ஓர் உதாரணம்” என்று நர்லிகர் கட்டுரை குறிப்பிடுகிறது.

மேக்நாட்டின் தெரிவுசெய் கதிர்வீச்சு அழுத்தக் கோட்பாடு, ஒரு கோட்பாட்டு அறிவியலாளனின் ‘மாத்தி யோசி’க்கும் அற்புத ஆற்றலுக்கான சான்று. விண்மீன்களின் இயற்பியல் பண்புகளைப் புரிந்துகொள்வதில் இதுவும் முக்கியப் பங்காற்றுகிறது. உலக அளவில் ‘ஆய்வுக்கூட வானியற்பியல்’ (Laboratory Astrophysics) பெரும் துறையாக வளர்ந்து நிற்கிறது.

அரிய பெரிய வானியல் ஆய்வுக்கருவிகள் எதும் இல்லாமல் நுட்பமான வானியற்பியல் ஆய்வுகளைச் செய்து காட்டமுடியும் என்பதற்கான இத்துறையின் முன்னோடி மேக்நாட் தான். சாகா சமன்பாட்டின் இன்னொரு வடிவமான சாகா – லாங்மியூர் சமன்பாடு (Saha-Langmuire equation) அணுத்துகள் முடுக்கிகள் (Particle Accelerators) நிறை நிறமாலை மானிகள் (Mass Spectrometers) ஆகியவற்றை வடிவமைப்பதில் முக்கிய வழிகாட்டியாக உள்ளது. பிளாஸ்மா இயற்பியல் (Plasma Physics) ஆராய்ச்சிகளிலும் வெப்ப அயனியாக்கக் கோட்பாடு முக்கியப் பங்காற்றுகிறது.

சாகா, வெப்ப அயனியாக்கக் கோட்பாடு மட்டுமின்றி வளிமண்டல அடுக்கான அயனிமண்டல (ionosphere) ஆய்விலும் குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தினார். இன்றைய வானொலி, தொலைக்காட்சி மற்றும் விண்வெளி தகவல் தொடர்பு தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்த ஆய்வுகளுக்கு முக்கிய பங்கு உள்ளது.

அணு ஆற்றல் குறித்த விஷயங்களில் சாகா முன்னோடி ஆய்வாளர் ஆவார். 1931-இல் அணுக்கருத் துகள் நியூட்ரான் கண்டுபிடிக்கப்பட்டது. 1932-இல் ஜேம்ஸ் சாட்விக் அதை உறுதிப்படுத்தினார். அணு இயற்பியலில் அடுத்து நடந்த வளர்ச்சிகளை சாகா எல்லையற்ற உற்சாகத்தோடு கொண்டாடியதோடு தன் ஆய்வுத்துறையையும் நிறமாலையியலில் இருந்து அணுக்கரு இயற்பியலுக்கு மாற்றிக் கொண்டார்.

வெப்ப அயனியாக்கக் கோட்பாட்டின் தர்க்கரீதியான விளைவுதான் அணுக்கரு இணைவு (nuclear fusion) வினைகள். இதை உலக அறிவியல் அறியும் முன்பே சாகாவின் கட்டுரை ஒன்று தெரிவித்துள்ளது.

காந்த தனி துருவத்தின் (Magnetic Monopole) துருவ வலிமை (pole strength) பற்றி “பால் டிராக்”-இன் சூத்திரத்தை மேம்படுத்தியதன் மூலம் துருவ வலிமை பற்றிய டிராக்-சாகா சூத்திரம் உருவானது.

கல்கத்தா பல்கலைக்கழகத்தில் துகள் முடுக்கியான சைக்ளோட்ரானை அமைக்கவும், அணுக்கரு இயற்பியல் ஆய்வு நிறுவனம் ஒன்றை அமைக்கவும் அவர் எடுத்துக் கொண்ட இமாலய முயற்சிகள் இந்திய இயற்பியல் வரலாற்றின் தனித்துவமான பக்கங்களை அலங்கரிக்கின்றன.

மேக்நாட் சாகா ஆய்வுக்கூடங்களில் மட்டுமே முடங்கிப் போனவர் அல்லர். அவர் சமூகம், அறிவியல், அரசியல் எனப் பல தளங்களில் தன் ஆளுமையைப் பதித்தவர். அவரது வாழ்க்கை வரலாற்றை வாசிப்பது என்பது அவர் வாழ்ந்த 62 ஆண்டுகால இந்திய வரலாற்றையும், இந்தியாவின் அறிவியல், குறிப்பாக இயற்பியல் வரலாற்றையும் வாசிப்பதாக இருக்க முடியும்.

ஜவகர்லால் நேருவின் அறிவியல் சிந்தனைகளில் மேக்நாட்டின் தாக்கம் அதிகம். குறிப்பாக, விடுதலைக்கு முன் சாகா நேருவுக்கு எழுதிய பல கடிதங்களில் அறிவியலின் சமூகப் பயன்பாட்டைத் தொடர்ந்து வலியுறுத்தியிருக்கிறார். மேக்நாட் நடத்திய ‘சயின்ஸ் அண்ட் கல்ச்சர்’ இதழை நேரு தொடர்ந்து வாசித்து வந்தார்.

மேக்நாட்டால் செல்வாக்கு செலுத்தப்பட்ட விடுதலைக்கு முந்தைய நேருவின் அறிவியல் பார்வை, விடுதலைக்குப் பின் அதிகார அரசியலின் விதிகளுக்கு உட்பட்டு திசைமாறியது. கோடிக்கணக்கான எளிய மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கானதாக அல்லாமல் சில முதலாளிகளின் வணிக நோக்கத்தை வலுப்படுத்தும் ஒன்றாக இந்த நாட்டு அறிவியல் மாறியதை மேக்நாட் தன் வாழ்நாளிலேயே கண்டார்.

1956-இல் அவரது மறைவுக்குப் பின் அறிவியலை ஜனநாயகப்படுத்துவதற்கான அவரது முன்னெடுப்புகளைத் தொடர ஆள் இல்லாமல் போய்விட்டது. மக்களின் இல்லாமை, கல்லாமை, நோய்மை ஆகியவற்றை நீக்குவதற்கான கருவியாக மேக்நாட் அறிவியலை முன்மொழிந்தார். அதை வாழ்நாள் முழுதும் வலியுறுத்தினார்.

அந்த வகையில், இந்தியாவில் “மக்கள் அறிவியல்” என்ற கோட்பாட்டை முன்வைத்த முன்னோடி அவர். அவரது பிறந்த நாளான அக்டோபர் 06-ஐ ”மக்கள் அறிவியல் தினமாகக்” கொண்டாடுவதன் மூலம் மட்டுமே அவருக்குப் பெருமை சேர்க்க முடியும். அந்த நாளை எளிய மக்களின் வாழ்வை மேம்படுத்த அறிவியலை எப்படிப் பயன்படுத்த வேண்டும் எனச் சிந்திப்பதற்கும் விவாதிப்பதற்குமான தேசிய தினமாகக் கடைபிடிக்கலாம்.

இன்று, தேசிய தினங்கள் என அறியப்படும் பெரும்பான்மை தினங்கள் உயர்சாதி தலைவர்களின், அறிஞர்களின் வாழ்க்கையோடு தொடர்புடைய தினங்களாக மட்டுமே உள்ளன. இவற்றின் மூலம் தேச நிர்மாணத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே பங்கெடுத்தனர் என்பது போன்ற பொய்மை நிலைநாட்டப்படுகிறது.

இந்தியாவின் முதல் பிரதமர், முதல் குடியரசுத் தலைவர் என எல்லா ‘முதல்’-உம் குறிப்பிட்ட பிரிவினராக இருப்பது தற்செயல் அல்ல. அவைபோல், எல்லா தேசிய தினங்களும் குறிப்பிட்ட பிரிவினரின் பிறந்த நாள், நினைவு நாள் என இருப்பதும் தற்செயல் அல்ல. அதிகாரம் தொடர்பான அரசியல் சதி அதில் அடங்கியுள்ளது.

சி.வி.ராமன் “ராமன் விளைவை” கண்டுபிடித்த பிப்ரவரி 28 ‘தேசிய அறிவியல் தினமாக’க் கடைபிடிக்கப்படுகிறது. ஆனால், “ராமன் விளைவு” கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே மேக்நாட்டின் “வெப்ப அயனியாக்கக் கோட்பாடு” நவீன வானியற்பியலின் தந்தையாக அவரை உயர்த்தியிருந்தது.

மேக்நாட்டின் அறிவியல் சாதனை, சி.வி.ராமன் போன்றோரின் அறிவியல் சாதனைக்கு எந்த நிலையிலும் குறைவானதல்ல. அதைவிடவும், அறிவியலின் சமூக செயல்பாட்டையும் தேச கட்டுமானத்தில் அதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தி செயல்பட்ட வகையில் மேக்நாட்டின் அறிவியல் பார்வைகள் கவனத்துக்குரியவை.

மேக்நாட் சாதாரண பொறியியல் பணிகளில் கூட மக்கள் பங்கேற்பை வலியுறுத்தியவர். பங்கேற்பு ஜனநாயகம் (participatory democracy) என்னும் உயரிய கருத்தாக்கத்தை முன்வைத்த மிகச் சிறந்த ஜனநாயகவாதி ஆவார்.

“எளிய மக்களின் வாழ்வைச் சூழ்ந்திருந்த கல்லாமை, ஏழ்மை, நோய்மை ஆகிய இடர்பாடுகளை நீக்க தனக்கான வழியில் அறிவியலை ஆயுதமாக ஏந்தி நின்றவர் மேக்நாட். அந்த வகையில், ஒரு போர்ப்படைத் தளபதிபோல் முன்நின்று சுபாஷ் சந்திர போஸ், ஜவகர்லால் நேரு, இந்திய அறிவியலாளர்கள் அனைவருக்கும் அறிவியல் தொழில்நுட்பத்தின் சமூக செயல்பாட்டை விளக்கிப் பொருளாதாரத் திட்டமிடலைக் கற்றுக் கொடுத்தார்.

ஆனால், விடுதலை பெற்ற இந்தியா, அதிகாரம் உயர்சாதியினர் கையிலும் இந்திய முதலாளிகளின் கையிலும் இருக்க வேண்டும் என்று விரும்பியது. மேக்நாட் போன்றவர்கள் ஓரங்கட்டப்பட்டனர்.

மேக்நாட் மறைந்து 59 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால், அவரைப் போல் சமூகத்திற்கான அறிவியலையும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியலையும் தூக்கிப்பிடிக்கும் அறிவியலாளர் ஒருவரும் உருவாகவில்லை. இந்திய ஐ.ஐ.டி.க்கள், எய்ம்ஸ்-கள் போன்றவை ஏன் எளிய மக்களுக்கு எட்டாக்கனியாக உள்ளன? ஏன் அவை சாதிப் பண்டாரங்களின் தினவெடுத்த சதைப் பிதுக்கல்களாக மட்டுமே நீடிக்கின்றன? இந்த நிலை மாற என்ன செய்யவேண்டும்?

மேக்நாட் போன்ற அறிவியல் போராளிகளின் வாழ்க்கையை மீண்டும் மறுவாசிப்பு செய்ய வேண்டும். அவரது தொடர்ச்சியாகப் பல்லாயிரக்கணக்கான மேக்நாட்டுகள் ஒடுக்கப்பட்ட மாணவர்களில் இருந்து உருவாக வேண்டும்.

மகாத்மா ஜோதிபா பூலே, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், மேக்நாட் போன்றோரின் மானுடநேயம் ததும்பும் வாழ்க்கைக் கதைகளை எளிய மக்களின் புதல்வர்களிடம் விளக்கிக் கூற வேண்டும். மேக்நாட்டின் வாழ்வியல் இளம் தலைமுறையினருக்கான வழிகாட்டியாக விளங்கும் தகுதி பெற்றது.


நூலின் பெயர்: மேக்நாட் சாகா: ஒரு புரட்சிகர விஞ்ஞானியின் கதை
ஆசிரியர்: தேவிகாபுரம் சிவா
பக்கங்கள்: 288
விலை: ₹ 260
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
7, இளங்கோ சாலை
தேனாம்பேட்டை
சென்னை – 600 018
தொலைபேசி: 044 2433 2924
மின்னஞ்சல்: bharathiputhakalayam@yahoo.com

இணையதள முகவரி: thamizhbooks.com


ஆசிரியர் குழு,
புதிய ஜனநாயகம்.



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க