நேற்று (07-05-2015) 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. பிராய்லர் கோழிகளை வளர்த்து அது எத்துணை முட்டையிடும் என்று முட்டையின் தரத்திற்கேற்ப தரம்பிரிக்கும் ஒரு சந்தை நாள். அன்று என் வாழ்விலும் மதிப்பெண் பட்டியல் வந்தது.
மதிப்பெண்ணை மட்டுமே மையமாக கொண்ட வாழ்க்கையில் எதைப் பெற்றேன்? எதை இழந்தேன்?
எனக்கு தற்பொழுது வயது முப்பது, இன்றைக்கு பட்ட ஆராய்ச்சி மேற்படிப்பை படித்துக் கொண்டிருக்கிறேன். அதாவது மூன்றாம் எட்டில் செய்யாதது திருமணம் அல்ல என்று பாட்சா படத்தில் ரஜினி சுட்டிக்காட்டும் வயதைவிட ஆறுவயது அதிகமான ஒரு பேச்சுலர்!
பட்ட ஆராய்ச்சி மேற்படிப்பு என்பது 25-ம் கிளாஸ் ஆகும். அதாவது 12-ம் வகுப்பு முடித்த பிறகு, மூன்றாண்டு இளங்கலை, இரண்டாண்டு முதுகலை, ஆறாண்டு பிஹெச்டி, பிறகு இரண்டாண்டு இன்னொரு ஆராய்ச்சி.
நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் வரை என் தந்தை தையல் தொழிலாளியாக இருந்தார். அதற்குப்பிறகு கந்துவட்டி கொடுமையால் என் தந்தை குடும்பத்தை கவனிக்க இயலவில்லை. அண்ணனும் அம்மாவும் குடும்ப பொறுப்பை ஏற்றனர். அண்ணன் கட்டிடத்திற்கு பெயிண்ட் அடிப்பவராக இருந்தார். அம்மா கட்டிட வேலை வேலை பார்த்தார். நான் ஒரு குழந்தைத் தொழிலாளியாக என்னென்ன செய்யமுடியுமோ அதை அனைத்தையும் செய்திருக்கிறேன். நான் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பயின்றதாலும் (அதாவது நான் பெற்ற கல்வியில் தனியார் பள்ளிக்கு இடம் இல்லை) பலபேர் வரிசை கட்டி உதவியதாலும் கல்விச்சுமையை சமாளிக்க முடிந்தது.
பட்ட ஆராய்ச்சி மேற்படிப்புக்கு பிறகு, நான் வேலை ஒன்றை தேட வேண்டும். அதாவது நமது இந்திய சமூகத்தில் படித்து, அயல்நாட்டில் விஞ்ஞானியாகி (உள்நாட்டில் விஞ்ஞானிக்கு வேலை கிடையாது; அதை ஆர் எஸ் எஸ் டவுசர்கள் முழு குத்தகைக்கு எடுத்திருக்கிறார்கள். தனது மூத்திரத்தை தாவரங்களுக்கு 50லிட்டர் கேனிலே சேகரிக்கிற நிதின் கட்காரி ஓர் தாவரவியலாளர்; புத்ரஜீவிக் மருந்து விற்கும் யோகா ராம்தேவ் ஆண்பிள்ளை உருவாக்கும் பிசிசியன்; இப்படி நிறைய போட்டி உண்டு) ஓர் இரண்டாண்டு சம்பாதிக்க வேண்டுமென்றால் அதற்கு நீங்கள் இத்துணையும் கடந்திருக்க வேண்டும்.
தான் சம்பாதித்து தான் ஒரு குடும்பத்தையே காப்பாற்ற வேண்டும் என்ற நிலையில் இருப்பவருக்கு இந்த முறை சாத்தியமா? என் வாழ்வில் ஒரு கட்டிட வேலை செய்யும் தாயும் பெயிண்டரும் ஓர் அறிவுத்துறையினரை உருவாக்குகிறார் என்பதற்கும், கூலியுழைப்பு தான் மூலதனத்தை உருவாக்குகிறது என்று மார்க்சியம் சொல்வதற்கும் என்ன தொடர்பு?
ஏன் இதற்கு அழுத்தம் கொடுக்கவேண்டுமென்றால் இதுவரை சொன்னது சுயமுன்னேற்ற சொரிதலாக நம் சமூகத்தில் ஊடகங்களால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகிறது. திறமையிருந்தால் என்ன வேண்டுமானால் ஆகலாம்; எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பது யதார்த்தம் அல்ல. அதற்குப்பின்னால் இருப்பது அப்பட்டமான சுரண்டல்! கூலியுழைப்பு!
மறுபடியும் எனது கேள்விக்கு வந்துவிடுகிறேன். தான் சம்பாரித்துதான் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற நிலையில் நம் சமூகத்தில் 25-ம் வகுப்பு வரை படிக்க முடியுமா?
இதற்கு இளங்கலை, முதுகலையில் தேர்ச்சி பெற்று அகில இந்திய நுழைவுத் தேர்வு எழுதி, நேர்முகத்தேர்வும் எழுதி ஆராய்ச்சி மாணவராக வாய்ப்பு கிடைத்து அந்த அறிவியல் துறையில் ஒரு தேர்ந்த அடிமையாக தன்னை வார்த்துக்கொண்டு பிறகு ஒருவேளை இச்சந்தைக்கு ஏற்ப பொருந்தி வருவாராயின், அவர் பட்ட ஆராய்ச்சி மேற்படிப்பு படிக்க ஒரு சதவீதம் வாய்ப்புண்டு.
ஏனெனில், நான் படித்த நிறுவனத்திலும் ஆராய்ச்சி மாணவராக இருந்த கணிசமான மாணவர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய இந்த வாய்ப்பும் இன்னும் கிட்டவில்லை. இனி மற்ற பல்கலைக்கழங்களில் உள்ள தியாகிகளையும் வீரர்களையும் பற்றி தனியாக கதைக்கவேண்டிய அவசியம் இல்லை.
இனி மூன்றுமாதம் கழித்து இந்த இருவருட அனுபவத்தை வைத்து அவர்களோடு சேர்ந்து ஒரு வேலையைத் தேட வேண்டும்! அந்த வேலைக்கான சராசரி சம்பளம் 20 ஆயிரத்திலிருந்து-40 ஆயிரம் முடிய. இதைத்தாண்டி பணிக்காக சேரவேண்டுமானால் சாதி மிக மிக முக்கியம்.
எனது துறையின் ஆசிரியர் குழுவில் 45 பேருக்கு மேல் ‘உயர்’ சாதியினர். ஐந்து பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்டவர். எஸ்.சி, எஸ்.டி யாரும் கிடையாது. இத்தகைய உயர்கல்வி நிறுவனங்கள் பெஸ்ட் என்று ஊரை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் பலவழிகாட்டி நிகழ்ச்சிகள் உண்மையை மறைக்கின்றன என்பதைச் சொல்லவேண்டுமில்லையா?
ஆதிதிராவிடர்களை கணக்கில் எடுத்துக் கொண்டால் மூன்றில் ஒருவர் 5-ம் வகுப்பிற்கும் 10-ம் வகுப்பிற்கும் இடையில் கல்வியை நிறுத்துகின்றனர். இவர்களின் ஏழ்மையையும் பொருளாதாரச் சுரண்டலையும் எழுத்தில் வடித்துவிட இயலாது. 5-ம் வகுப்பை தாண்டுவதற்கே வாய்ப்பு கிடைக்காத சமூகம் ஒருபுறமிருக்க மெரிட்டையும் இடஒதுக்கீடையும் ஒப்பீடு செய்யும் ஈரவெங்காயங்கள் நம்நாட்டில் இருக்கத்தான் செய்கின்றனர். இடஒதுக்கீடு இருந்தாலும் இல்லாவிட்டாலும் பார்ப்பனியம் நீடிக்கும்வரை விஞ்ஞானி மட்டுமல்ல பள்ளிக்கல்வியே தாண்ட முடியாது என்பதுதான் சமூகத்தின் நிதர்சனம்.
சரி ஓர் ஆணாக பட்ட ஆராய்ச்சி மேற்படிப்பு படிக்கிற வாய்ப்பு பெண்ணுக்கு கிடைக்குமா? ஒரு பெண் பாப்பாத்தியாக இருந்தாலும் சூத்திரர் என்று வகைப்படுத்தி வேதங்களை மறுத்தது இந்து சமூகம். இதில் வயதுக்கு வந்தபிறகு ஒரு பெண் நம் சமூகத்தில் படிப்பது மிகவும் கடினம். என்னுடன் ஐந்தாம் வகுப்பு படித்த கங்காவும் ராணியும் படிப்பில் கெட்டிக்காரர்கள். அவர்கள் சவுராஷ்ட்ரா சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பெரும்பாலும் தறிநெய்யும் கொடிய ஏழ்மை இவர்களுக்குச் சொந்தமானது. இவர்கள் பள்ளிக்கல்வியை தாண்டவில்லை என்று பின்னாளில் கேள்விபட்டேன்.
இதுதவிர முதுகலையில் பெண்களோடு சேர்ந்து பயிலும் வாய்ப்பு கிட்டியது. அதில் கணிசமானவர்கள் இளங்கலையோடு பியெட் படித்துவிட்டு முதுகலை முதல் வருடத்தில் திருமணம் அல்லது படிப்பை முடித்தவுடன் திருமணம், பிறகு தனியார் பள்ளியில் ஆசிரியை வேலை என்பதைத்தாண்டி எதற்கும் அனுமதிக்கப்படாதவர்கள்.
மொத்தம் இருந்த 15 பெண்களில் எம்.ஃபில் படித்தால் கல்லூரியில் ஆசிரியை என்று அடுத்த கட்டத்தில் வெகு சிலர் இருந்தனர். இதைத்தாண்டி சில பெண்கள் கேட் நுழைவுத் தேர்வு எழுத வீட்டில் அனுமதிக்கப்பட்டு , எம்.ஃபில், பி.ஹெச்.டி அல்லது கேட் தேர்வு பிஹெச்டி என்று எதுவாக இருந்தாலும் திருமணம் என்பது அழுத்தமாக முன்வைக்கப்பட்ட நிபந்தனையாக இருந்தது. அதாவது அவர்கள் பயிர்செய்யப்படுவதற்காக படைக்கப்பட்டவர்கள்! இதில் பி.ஹெச்.டி ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்கிற பொழுது சிலருக்கு திருமணமும் நடைபெற்றது.
நீங்களே சொல்லுங்கள் எவனாவது பி.ஹெச்.டி படித்த பெண்ணை கல்யாணம் பண்ண வருவானா என்ன? பொண்டாட்டியா இருக்கிறதுக்கு எதுக்கு பி.ஹெச்.டி பண்ணனும்னுதான் நிறைய பேரு கேட்பாங்க!
மூன்றாவதாக, இந்த அனுபவத்தை வாசிக்கிற பொழுது ஒன்றாம் வகுப்பு படிக்கிறபொழுதே ஒருவர் விஞ்ஞானி என்று முடிவெடுத்துக்கொண்டுதான் தயாராகிறா? இல்லை. இன்றைக்கு மதிப்பெண் பட்டியலை வாங்கிவிட்டு, நல்ல மதிப்பெண் பெற்றவர் மருத்துவராக, மற்றபடி பாஸ் செய்தவரில் பணம் இருப்பவர்கள் பொறியியல் என்று போக, பெரும்பாலான ஏழைகள் தேர்ந்தெடுக்கப்போவது ஏதாவது ஓர் இளநிலை படிப்புதான்!
இளநிலை படிப்பை தேர்ந்தெடுப்பதற்குப் பின்னால் இருப்பது துறை சார் அதீத தாகமா? எனது அனுபவம் அப்படி இல்லை. பொறியியலுக்கும் அப்படி ஒரு கண்ணியம் அடிப்படையிலேயே துடைத்தெறியப்பட்டிருக்கிறது. என்றைக்கு மென்பொருள் துறை என்றார்களோ அன்றைக்கு இந்தநாடு மெக்கானிக்கல், எலக்டிரிக்கல், சிவில் பிரிவில் எந்தவொரு அறிவுச் சக்தியையும் ஓர் இம்மியளவும் படைக்கவில்லை என்று சொல்வதைவிட அதுபற்றி சிந்திக்கவேயில்லை என்று சொல்வது பொருத்தமாயிருக்கும்.
பொறியியல் பிரிவைத் தேர்ந்தெடுத்த பெரும்பாலானவர்கள் தங்களது துறைசார் புலத்தில் கிடையாது. ஏனெனில் அப்படியொரு எண்ணம் நமது கல்விமுறைக்கே கிடையாது. மென்பொருள்துறை, கைநிறைய சம்பளம் என்ற ‘இலட்சியம்’ இவர்களுக்கு விதைக்கப்பட்டதன் பின்னணியில் ஏன் என்னைப் போன்றவர்கள் சேர்க்கப்படவில்லை?
அதற்குக்காரணம் ஏழ்மை நிலைதான் இளங்கலையை நோக்கித் தள்ளியது. எனது மதிப்பெண் முட்டைகளை கவனிக்க வேண்டும். நான் பன்னிரெண்டாம் வகுப்பில் தாய்மொழி வழிக்கல்வியில் 93% மதிப்பெண்கள் பெற்றிருந்தேன். தமிழில் 88.5% ஆங்கிலத்தில் 80% கணிதத்தில் 98.5% வேதியியலில் 99% இயற்பியலில் 98% உயிரியலில் 96% மதிப்பெண்களும் பெற்றிருந்தேன்.
உயிரியலில் பெற்ற இந்த மதிப்பெண்ணை வைத்து நம் சமூகத்தில் ஒரு மயிரையும் பிடுங்க இயலாது. ஆனால் தமிழ் மொழிக்கு அடுத்தபடியாக எனக்கு விருப்ப பாடம் இதுதான்! அப்படியானால் மருத்துவத்திற்காக தயாரிக்கப்படும் மாணவர்களுக்கு இருக்கிற மன அழுத்தத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலுமா? பன்னிரெண்டாம் வகுப்பிலேயே தூக்கச் சமநிலையை நான் இழந்திருந்தேன்.
இன்றைக்கு நாமக்கல் பிராய்லர் கோழி மெட்ரிக்குலேசன் பள்ளியில் மருத்துவம் படிப்பதற்கு ஒரு கோழியை தயார் செய்ய ஆறு இலட்சம் கட்ட வேண்டுமாம். ஆனால் ஒட்டுமொத்த முதுகலையையும் சேர்த்தே எனது கல்விச் செலவு ஆறு இலட்சம் அல்ல. பி.ஹெச்.டி.யும் நிதி நல்கையால் படித்தேன்.
நான் பயின்றது மிகப்பிரபலமான கிறிஸ்துவ உயர்நிலைப்பள்ளி. இங்கு ஒரு பிரேக் எடுப்போம். சமீபத்தில் ஜெயமோகன் “அஜிதனும் அரசுப்பள்ளியும்” என்று ஒரு கட்டுரை எழுதி அரசுப்பள்ளியின் மீது ஆதரவு செலுத்துவதைப்போன்று ஒரு நாடகம் ஒன்றை அரங்கேற்றியிருந்தது நினைவிருக்கலாம். ஆனால் ஆசிரியர்கள் ஒரு சங்கமாக இணைந்து போராடிய பொழுது இதே அரசுப்பள்ளியை அஜிதனை வைத்து எள்ளி நகையாடவும் செய்திருந்தார்! அது தான் ஜெயமோகன்! ஆனால் இங்கு விசயம் வேறு. அரசுப்பள்ளிக்கு ஆதரவாக பேசுவது போல் கிறித்துவ பள்ளி மிகக் கொடூரம் என்று குறிப்பிட்டு மதம் சார்ந்து தனது பிரச்சாரத்தை நுணுக்கமாக மடைமாற்றியிருந்தார். கன்னியாகுமரியில் மண்டைக்காடு கலவரம் மூலமாக இந்துத்துவம் காலூன்றுவதற்கு இத்தகைய ஆர்.எஸ்.எஸ் அபிமானிகள் தான் களம் அமைத்துக்கொடுக்கின்றனர் என்பதை வாசகர்கள் மறந்துவிடக் கூடாது.
மீண்டும் நம் விசயத்திற்குள் நுழைவோம். நான் பயின்ற அரசு உதவி பெறும் கிறித்தவப்பள்ளியும் ஏகாதிபத்திய முகமைதான். ஆனால் தனியார்மயம் தாராளமயம் உலகமயம் கல்வியில் உருவாக்கியிருக்கிற கொடூரத் தாக்குதல் ஜெயமோகன் சொல்வதைப்போல ஒரு மதம் சார்ந்த கொடூரமாக நிற்கவில்லை. ஏனெனில் பார்ப்பனிய சமூகத்தில் கல்வி நிலையங்களும் கிடையாது. அதில் படிக்கவும் பெரும்பாலான சாதிகளுக்கு இடமும் கிடையாது. அதே சமயம் இன்றைக்கு சாதிச்சங்கங்கள் எப்படி வேர்விட்டு வளர்ந்து நிற்கிறதோ அதே போன்று சிறுபான்மை கல்வி நிறுவனங்களும் இன்றைக்கு காலனிய மறுகாலனிய கொள்கைகளுக்கு சேவகம் புரிந்துவருகின்றன.
இது ஒருபுறமிருக்க இலக்கியம், ஓவியம், வாசிப்பு, தமிழ் மொழி, நாத்திகம் போன்றவற்றை அறிகிற தளமாக எனது பள்ளி இருந்தது. அதைச் செய்தவர்கள் எனது தமிழாசிரியர்களும் தமிழ் மொழியிலும் கலைகளிலும் ஆர்வம் கொண்ட எனது வெகுசில அறிவியல் ஆசிரியர்களும்.
இங்குதான் ஆசிரியர்களும் மாணவர்களும் மோதுகிற பட்டிமன்றத்தில் பங்கேற்று ஆசிரியத் தரப்பை வெளுத்து எறிந்தோம். தி.மு.க தமிழாசிரியர் ஒருவர் தொடர்நிலைச் செய்யுள்களான கம்பராமாயணத்தையும் வில்லிபாரதத்தையும் கடைசிவரை கொள்கை காரணமாக தொட்டதில்லை. ஆனால் இன்று தி.மு.க தலைவர்கள் முந்திக் கொண்டு தீபாவளி வாழ்த்தையே தெரிவிக்கிறார்கள்
சர்வ சமயம் வழிபாட்டுக்கூடம் என்ற இடத்தில் சர்வ சமயத்தையும் தாக்கிப்பேசுகிற நன்னெறி வகுப்புகளும் நடைபெற்றிருக்கின்றன. ஆம் நன்னெறி வகுப்பிற்கு அமையக்கூடிய வாத்தியார்களைப்பொறுத்து நாத்திகமா ஆத்திகமா என்று முடிவாகும்.
எனது பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பாடங்களும் பதினோறாம் வகுப்பு பாடங்களும் முழுமையாக அக்கறையோடு நடத்தப்பட்டிருக்கின்றன. பதினோறாம் வகுப்பில் தொகை நுண்கணிதம் வருகிறது. ஆனால் பன்னிரெண்டாம் வகுப்பில் வகை நுண் கணிதம் வருகிறது. தொகை நுண்கணிதத்தை கசடற கற்க முடியவில்லையென்றால் மதிப்பெண்ணை ஒட்டி பதினோறாம் வகுப்பு பாடத்தை புறக்கணித்தால் வகை நுண் கணிதத்தை கற்பதில் அர்த்தம் இல்லை. மேற்படிப்பிற்கும் இது உதவாது. 12-ம் வகுப்பு இயற்பியலும் இதுவன்றி சுரத்தாக புரியாது.
தாவரவியலில் யூகேரியாட்டுகளுக்கும் புரேகேரியாட்டுகளுக்கும் உள்ள அடிப்படை வேறுபாடுகளையும் கரப்பான் பூச்சியின் உணவு மண்டலத்தையும் உமிழ் நீர்சுரப்பிகளையும் கசடற கற்கிற பொழுது அங்கே வெறுமனே உயிரியலாளர் மட்டுமே தோன்றுவதில்லை. மாறாக ஓர் உயிரியல் கண்டுபிடிப்பாளர் அங்கே தோன்றுகிறார். மனித உணவு மண்டலத்தை விட கரப்பான் பூச்சியின் உணவு மண்டலம் சற்று சிக்கலானது (தற்பொழுதைய பதினோறாம் வகுப்பு பாடத்தில் இது நீக்கப்பட்டுள்ளது)! 12 விட 11 முக்கியம்!
இதனுடைய முக்கியத்துவத்தைப் புறக்கணித்து விட்டு வெறும் மதிப்பெண்ணை உருவாக்குகிற பிண்டங்களை வெளித்தள்ளும் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் ஒன்பதாம் வகுப்பு மத்தியிலேயே மாணவர்களை பத்தாம் வகுப்பிற்கு தயார்படுத்துவதும் பதினோறாம் வகுப்பிலேயே பன்னிரெண்டாம் வகுப்பிற்கு தயார்படுத்துவதும் குழந்தைகளை வன்புணர்வு செய்கிற செயலுக்கு ஒப்பானது. இதற்கு முழுக்கவும் காரணம் இலாபவெறியை அடிப்படையாகக் கொண்ட நுகர்வுச் சமூகம் தான்.
சம்பாதிப்பது தான் வாழ்க்கை என்று முடிவாகிவிட்டால் அங்கே திறமைகள் சம்பாதிப்பதற்கு ஏற்றபடிதான் வடிவமைக்கப்படுகிறது. அப்படியான ஒரு சமூகம் மலட்டுச்சமூகமாக இருக்குமேயன்றி அங்கே திறமையும் கலையும் எதுவும் பல்கிப் பெருகாது. இப்படியொரு நிலையை எனது அனுபவத்தில் தரமான கல்வியை வழங்குகிற எனது பள்ளிலேயே கண்டேன்.
சான்றாக பத்தாம் வகுப்பில் ஓவிய வகுப்புகளையும் நாத்திகம் பேசும் நன்னெறி வகுப்புகளையும் முக்கியமாக தமிழ் ஆங்கில வகுப்புகளையும் அறிவியல் ஆசிரியரும் கணித ஆசிரியரும் ஈவு இரக்கமின்றி பிடுங்கிக் கொள்வர். அப்பொழுது இத்தகைய ஆசிரியரின் மனநிலையும் எங்களின் மனநிலையும் நிச்சயித்து திருமணம் நின்றுபோன பெண்ணின் மனநிலையில் இருக்கும்!
இன்று பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை வைத்துக் கொண்டிருக்கிற பெரும்பாலான மாணவர்களில் ஓவியரும், பேச்சாளரும், எழுத்தாளரும், விளையாட்டு வீரரும் புதைக்கப்பட்டிருக்கிறார்கள். இதெல்லாம் இல்லாமல் எதற்காக இந்த சமூகம் வெட்கங்கெட்டு இன்னும் நீடிக்க வேண்டும்?
பெரும்பாலான பள்ளியில் ஓவிய ஆசிரியர்கள் தமது வேலை போக ஆண்டு விழாவிற்காக நெட்டி அறுத்து அலங்காரப்படுத்துவதும், தமிழ் ஆசிரியர்கள் மதிப்பெண் பட்டியல் நிரப்புவதும் என இலாபவெறிகொண்ட சமூகம் இவர்களை நடத்துகிற இழிவு நம் நாட்டைத் தவிர வேறு எங்காவது உண்டா?
இதைவிட விளையாட்டு ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் இன்றைய தனியார் பள்ளியை சேர்த்துப் பார்த்தீர்களேயானால் மாவட்ட அளவில் விளையாட்டு வீரராக, சோனல் பிளேயராக இருப்பார். அவரது வீட்டில் கண்டிப்பாக பல சான்றிதழ்களும் சில மெடல்களும் இருக்கும்.
ஆனால் அவர்கள் நடத்தப்படுகிற விதம் என்பது ஏறக்குறைய எல்லா பள்ளிகளிலும் அசெம்பிளியை விசில் வைத்து ஒழுங்குபடுத்துவதற்கும் ரவுண்ட்ஸ் வந்து வாயில் விரல் வைக்கச் சொல்லவுமே பயன்படுத்தப்படுகிறார்கள். ஆனால், அங்கே ஆஸ்திரேலிய டெஸ்டில் சோப்ளாங்கி இசாந்த் சர்மா வெஜிடேரியன் கிடைக்கவில்லையென்று இடைவேளை நேரத்தில் வெளியே போய் வாங்கிவந்து தனது உயர்சாதி பாசத்தை நிறுவுகிறார். இப்படி இருந்தால் இந்த நாடு விளையாட்டில் எப்படி சாதிக்கும்? சம்பாதிப்பது தான் வாழ்க்கை என்றாகிப்போன சமூகம் பல ஆசிரியர்களை விசல் ஊத மட்டும் அனுமதித்தன் மூலம் ஓர் ஊனத்தை உருவாக்கியிருக்கிறது.
மூன்றாவதாக, என்னைப் போன்ற ஏழ்மையான சமூகத்தில் இருந்து வந்தவர்கள் முழுக்கவும் பள்ளியை மட்டுமே நம்பியிருந்தோம். ஆனால், பொறியியலுக்கும் மருத்துவத்திற்கும் பயிற்சி பெற்ற மாணவர்கள் தனியாக டியூசன் வைத்துக்கொண்டார்கள். நன்றாக கற்றுக் கொடுக்கும் எனது வேதியியல் ஆசிரியர் டியுசன் படிக்கிறவர்களுக்கு மட்டும் கணக்கு தீர்ப்பது எப்படி என்று சொல்லித்தருவார். ஆனால் வகுப்பில் இதைப் புறக்கணித்துவிடுவார். இவர் அன்றைக்கு கொடுத்த மன அழுத்தத்தை ஒருவழியாக சமாளித்தேன். ஆனால் இரண்டாண்டுகளுக்கு பிறகு இதே ஆசிரியர் மூலமாக மாணவர் டியுசன் சேரச்சொல்லி வற்புறுத்தப்பட்டதால் தற்கொலை என்று நாளிதழ்களில் செய்தி வந்தது. இதற்குப்பிறகும் அதற்கு முன்னும் கூட தமிழ்நாடு முழுவதிலும் நிறைய மாணவர்களை நாம் இப்படி இழந்திருக்கிறோம்.
நான்காவதாக, பொறியலுக்கும் மருத்துவத்திற்கும் பயிற்சி பெற்ற மாணவர்கள் தமிழ் படிக்கத் தேவையில்லை என்று அறிவியலுக்கான அடிப்படையையே இழந்தார்கள். எப்படி? ஒரு தாய்மொழி தான் கற்றலுக்கான நான்கு நிலைகளை வழங்குகிறது. அவை முறையே கேட்டல் (listening), வாசித்தல் (reading), எழுதுதல் (writing) மற்றும் புரிந்துகொள்ளுதல் (Understanding) என அடிப்படையை வழங்குகிறது. இதைத் தகர்த்துவிட்டு அறிவியல் அறிஞர்களை நீங்கள் கண்டடைந்துவிட முடியாது.
ஆங்கிலமோ நம் நாட்டில் அடிமையின் மொழியாக மட்டுமே கற்றுத்தரப் படுகிறது. இதைத் தூக்கிப்பிடிக்கிறவர்களின் உளவியல் வெள்ளைக்காரன் வளர்க்கும் நாயைப்போன்று வாளை மட்டுமே சுழற்றுகிறது.
ஐந்தாவதாக, மொழிப்பாடம் மட்டும் அல்ல அறிவியல் பாடமும் அடிமைச் சமூகத்தில் இருந்து தப்பவில்லை. பொறியியல் படிக்க வேண்டியவர் உயிரியலை முற்றிலும் புறக்கணிக்கிறார். அதே போல மருத்துவம் படிக்க வேண்டியவர் கணிதத்தையும் புறக்கணிக்கிறார். இவர்கள் அனைவரும் சேர்ந்து விளையாட்டு, ஓவியம், கலை என அனைத்தையும் புறக்கணிக்கின்றனர். இங்கிருந்து வருகிற சமூகம் வெறும் சக்கையின்றி வேறென்ன?
அறிவியலைத் தாண்டிப் பார்த்தால் பன்னிரெண்டாம் வகுப்பு மூன்றாம் பிரிவினரை இச்சமூகம் பார்க்கும் பார்வையென்ன? “தேர்டு குரூப்பா? மக்கு தடிக தான் படிக்குங்க! பத்தாங் கிளாஸ்ல ஒழுங்கா படிச்சா பர்ஸ்ட் குரூப் எடுக்கலாம் இல்ல!” என்று சொல்கிறார்கள்.
வரலாறு, அரசியல் அறிவியல், பொருளியல், வணிகவியல், உளவியல் என இத்துறைசார் அறிவுத்துறையினர் எல்லாம் இந்தியாவைப்பொறுத்தவரை மக்குத்தடிகள்! ஆனால் இப்படிச்சொல்கிற இதே சமூகம் பொறியியல் பட்டதாரியை எம்.பி.ஏ படிக்கச் சொல்லி கங்காணிகளை உருவாக்குகிறது. அறிவியல் இளங்கலை படித்தவர்களை எம்.எஸ்.டபிள்யு (Master of social work) படிக்கச் சொல்லி ஏகாதிபத்தியத்திற்கு என்.ஜி.ஓ வடிவில் சேவை செய்ய கைக்கூலிகளை உருவாக்குகிறது!
ஆறாவதாக, யோசித்துப் பார்த்தால் ஒரு மனிதனுக்கு இருக்க வேண்டிய நட்புணர்ச்சி பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கிற மாணவருக்கு இக்கல்வி முறையால் கிடைக்குமா? எனது வகுப்பில் டியுசன் படிக்கிற மாணவர்களை அன்றைக்கு பிடிக்கவில்லை. அவர்கள் ஒரு கேங்காக இருந்தார்கள். கேவலம் ஒருமதிப்பெண் வினா கூடத்தெரிந்துவிட்டால் ஓராயிரம் விரிசல்கள் அங்கு வந்தன. கணித ஆசிரியர் பாடம் எடுக்கிற பொழுது விட்டேத்தியாக அமர்ந்திருப்பர். ஏனெனில், அவையெல்லாம் அவர்களுக்கு முன்பே நடத்தி முடிக்கப்பட்ட பாடங்கள். தமிழ் ஆசிரியர் பாடம் எடுக்கிற பொழுது கவனிக்கவும் மாட்டர்.
இன்றைக்கு மென்பொருள் துறையில் இருப்பவர்கள் போராட வராமல் எனக்கென எருமைமாட்டில் மழைபெய்தவர்கள் போன்று இருக்க எது காரணம்? அடிப்படை விழுமியங்களை பள்ளியிலேயே கழற்றி எறியச் சொல்கிற ஒரு நுகர்வுச் சமூகம் இன்றைய இளைஞர்களுக்கு எந்தவிதமான பிரக்ஞையை அளிக்க முடியும்?
ஏகாதிபத்தியத்தின் கொடூரத்தை பாதிக்கப்படுகிற தன்னாலேயே புரிந்துகொள்ள முடியாமல் படுக்கையில் மலம் கழித்த மன நிலையற்றவரைப்போன்று இன்றைக்கு அவலத்தை உணராத முடியாத நிலைக்கு இருப்பதற்கு இக்கல்வி முறை ஒரு பெரும் குற்றவாளி இல்லையா?
ஆக, தொகுப்பாக பார்த்தோமேயானால் விஞ்ஞானியாகவோ, மென்பொருளாளராகவோ, மருத்துவராகவோ ஆவதற்கு இந்தச் சமூகம் தனது அடிப்படையையே காவு கொடுத்துவிட்டு அம்மணமாக நிற்கிறது. இன்றைக்கு கொத்துக்கொத்தாக டி.சி.எஸ்.-இலும் சிண்டெலிலும் மென்பொறியாளர்கள் கழுத்தைப்பிடித்து வெளித்தள்ளப்படுகின்றனர்.
இன்றைக்கு பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்ணை வைத்துக்கொண்டு இருக்கிற சற்றேறக்குறைய எட்டு இலட்சம் மாணவர்களுக்கு என்ன எதிர்காலம் இருக்கிறது?
ஒரு ஓவியனும், பேச்சாளனும், கலை வல்லுநரும் விளையாட்டு வீரரும் எழுத்தாளரும் இங்கே தோன்றுவதற்கு உண்டான வாய்ப்பை இச்சமூகம் முளையிலேயே கிள்ளிவிடுகிறது. வெறும் மதிப்பெண் பொம்மைகள் சம்பாரிப்பதற்கும் வாத்து உண்டியலில் காசு சேர்ப்பதற்கும் என்ன வித்தியாசம்?
அல்லது எதற்காக சம்பாதிக்கிறோம்? இந்தக் கேள்வியை அடுத்த பதிவில் விவாதிப்போம்.
அதற்கு முன்பு மூன்று முடிவுகளைப் பரிசிலீப்போம்.
1. பெற்றோர்களும் சனநாயக சமூகத்தின் மீது அக்கறை கொண்ட மனிதர்களும் நமது குழந்தைகளை இக்கல்வி முறையிலிருந்து மீட்டெடுக்க வேண்டும். இலாபவெறிச் சமூகத்திற்கு முடிவுகட்டாமல் நமது குழந்தை நமக்குச் சொந்தமாக இருக்கப்போவதில்லை என்பதை நினைவில் வைப்போம்.
2. பள்ளி மாணவர்கள் போராடக் கற்றுக்கொள்வோம். ஏற்கனவே மென் பொருள் வல்லுநராக, அறிவியல் துறையில் ஆசிரியத்துறையில் இருக்கிற இளைஞர்கள் நமது மாணவர்களை புரட்சிகர அரசியல் நோக்கி வழிநடத்துவோம். நமது அனுபவங்கள் இழவுக்கதையாக அல்லாமல் இலாபவெறிச்சமூகத்தை கறுவறுக்கும் வெடிமருந்தாக இருக்கட்டும்.
3. நமக்கான கல்வியை போராட்டத்தில் இருந்து தொடங்குவோம்.
– இளங்கோ
நல்ல கட்டுரை. கட்டுரையின் கருத்தோடு முழு உடன்பாடு. அறிவியல், வரலாறு போன்ற துறைகளில் ஆய்வாளனாக இந்திய சூழலில் வருவது பெரும்பாடு. சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய நிலையில் இருப்பது இன்னும் மோசம். தன் ஒருவனை பிறர் தயவின்றி பார்த்துக்கொள்வதே பெரிய விஷயம். எனது பாதை மாற்றிவிட்டதால் முழு அனுபவம் இல்லை. முளையில் கிள்ளி எறியப்பட்ட அனுபவம் மட்டுமே உண்டு.
எனக்கு +12 காலத்தில் மிகவும் பிடித்த பாடம் தாவரவியல். அதை கல்லூரியில் படிக்க விரும்பியபோது, “லூசாடா நீ” என சொல்லி கணினிப் பொறியியலில் சேர்த்து விட்டார்கள். அதிர்ஷ்டவசமாக கணினினியல் பிடித்துபோய் விட்டது. சின்ன வயது அரும்புக் காதலை மனதில் தேக்குவதை போல, இப்போதும் பத்திருபது தாவரவியல் புத்தகங்களை என் அலமாரியில் வைத்து அழகு பார்த்துக் கொண்டு இருக்கிறேன். அடிக்கடி பிரித்து வைத்துக்கொண்டு படம் பார்ப்பதோடு சரி. அருவி, ஓடை, மரங்கள் என குளிர்ந்த பகுதிகளில் சுற்றுலா செல்ல நேரிட்டால், ஏதாவது லிவர்வோர்ட் கண்ணில் படாதா என ஆர்வத்தோடு பார்ப்பதுண்டு. அமெரிக்க பிரையலாஜிகல் அசோசியேஷனில் உறுப்பினராகி நானும் ரவுடி தான் என சந்தோஷப்பட்டதுண்டு (சந்தா கட்டினால் யாரை வேண்டுமானாலும் உறுப்பினராக சேர்த்துக்கொள்வார்கள்).
காதலை முறிக்கிறார்கள். இயல்பாக சக பெண்ணின் மீது மட்டுமின்றி, பாடத்தின் மீது எழும் காதலையும் முறிக்கிறார்கள். இரண்டு விதத்திலும் அனுபவமாகி விட்டது.
பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. வேறொன்றும் இல்லை.
எல்லாம் சரி….
குல கல்வி கூடாது ……..
சிறுவர்கள் தொழிலில் ஈடுபடுத்த கூடாது…………
ஆனால்
//பள்ளி மாணவர்கள் போராடக் கற்றுக்கொள்வோம்!!!//
புற்று நோய்க்கு மருந்து ?
எலி பாஷனம் சாப்பிட வாருங்கள் !!!
உருப்பிட வழி கேட்டால் போராட ஆள் பிடிக்கிறீர்கள் !!
போராட்டம் என்றால் என்னவென்று தெரியுமா? இயற்கை அளிக்கும் வளங்களை ஒரு சில திருடர்கள் மட்டும் தின்பதைத் தடுத்து பசிக்கின்ற அனைவரும் பங்கிட்டு உண்போம் என்பது… இதை பசி தெரியாத பல மண்டுகள் அறிய வாய்ப்பில்லை.
பள்ளீ சிறுவர்களை போரட அழைபது ????
நாம் முத்திவிட்டோம் நண்பரே! வாழ வேண்டிய பிஞ்சுகளாவது நல் எண்ணங்களுடன் வாழட்டுமே, இழப்புகள் இல்லாமல் வரலாறு எழுதப்பட முடியாது அல்லவா?
நம் அறியாமையை மேலும் அறிந்து கொள்வதே கல்வி ஆகும்