ன்ஸ்டீன் பற்றிய இந்த நூல் சிறிய நூல்தான். எனினும் விஞ்ஞானிகளைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை பெரிய அளவில் இந்த சிறிய நூல் தூண்டும்.

ஐன்ஸ்டீன், படிப்படியாக முழு மனிதனாக உருப்பெறுவது காட்சிகளாய் இந்த நூலில் விரிகிறது. நூலைப்படித்து முடித்தவுடன் பல நூல்களைப் படித்துவிட்ட திருப்தி ஏற்படுகிறது. இந்த நூலை கடைசியில் இருந்து அத்தியாயம் அத்தியாயமாகப் படித்தாலும் சிக்கல் இருக்காது. ஒவ்வொன்றும் தனித்தனியாகவும் தொடர்போடும் கதை சொல்கிறது.

”அறிவு முக்கியமானதுதான், ஆனால் அதைவிட முக்கியமானது கற்பனைத்திறன்” என்று ஐன்ஸ்டீன் கூறினார். இந்தக் கற்பனைத்திறன் எப்படிக் கைவரப்பெறும்? இளம்வயதில் சொந்த மொழியில் பயிலுவதும், இதைத்தான், இப்படித்தான் பயில வேண்டும் என்ற கட்டாயத்திற்காளாகாமல் சொந்த வழியில் கற்பதும் கற்பனைத்திறன் வலுப்பெறுவதற்கு அவசியமான நிபந்தனைகள்.

சிறுவயதிலேயே ஐன்ஸ்டீன் அவர்களின் கற்பனைச் சிறகுகள் வெளியிலிருந்து வருகிற எந்த ஆணைக்கும் அடிபணியவில்லை. இளங்கன்று பருவத்திலேயே பட்டாளத்துக்காரனின் மிடுக்கான நடையும், விரைப்பான கை வீச்சும் அவருக்கு கிலுகிலுப்பையும் கிளர்ச்சியையும் தரவில்லை. சமாதான வேட்கையும், மனிதாபிமானமும், சமூகக் கவலையும் கொண்ட மனிதனாக இந்தப் பயிர் விளையும் என்பது இப்படி முளையிலேயே தெரிந்தது.

ஒரு மனிதனின் மனதிற்குள் புதைந்திருக்கும் விஷயங்களை உளவியல் பூர்வமாக நுட்பமாக சொல்வதற்கும் இந்த நூலில் முயற்சி செய்யப்பட்டுள்ளது. இது இந்த நூலின் தனிச்சிறப்பு.

… ஹிட்லரின் இன வெறி மற்றும் பாசிச ஆட்சியின் வேட்டையில் இருந்து அவர் தப்பியது உலகம் செய்த பேறு எனலாம். அவர் மயிரிழையில் தான் தப்பியிருக்கிறார். நாசி ஆட்சியின் எதிரிகளும் குற்றவாளிகளும் என்று ஹிட்லரின் ஆட்சி ஒரு ஆல்பத்தை வெளியிட்டிருந்தது. அந்த ஆல்பத்தின் முதல் பக்கத்தில் ஐன்ஸ்டீன் படம் போடப்பட்டு, இவர் செய்த குற்றம் என்ற பட்டியலில் ”சார்புநிலைக்கொள்கை” என்று எழுதப்பட்டிருந்தது. இதன் பின் குறிப்பில் ”இன்னும் தூக்கிலிடப்படவில்லை” என பதிவாகியுள்ளது.

இது போன்ற மனதை அறுக்கும் பல தகவல்கள் இந்த நூல் தருகிறது.

ஹிட்லரின் ஜெர்மனி அணுகுண்டைத் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது என்பதையும், அவர்கள் பேரழிவு ஆயுதத்திற்கு நெருக்கத்தில் உள்ளனர் என்பதையும் அறிந்து பதறிப்போன ஐன்ஸ்டீன் அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்டிற்கு இதைத் தடுக்கும் உபாயங்கள் பற்றி கடிதம் எழுதினார். ஆனால், அமெரிக்காவே அணுகுண்டை தயாரித்துக் கொண்டது.

நூல் நெடுக உளவியல் பூர்வமாகவும், தத்துவ சாயலோடும், விஞ்ஞான நுணுக்கத்தோடும் தகவல்கள் பரிமாறப்பட்டிருப்பது பாராட்டிற்குரியது படித்துப் பயன்பெற வேண்டிய கையடக்க நூல். (நூலின் முன்னுரையிலிருந்து)

பாடப்புத்தகங்களில் தனது கேள்விகளுக்கு விடைகள் கிடைக்கவில்லையென்றால், வேறு புத்தகங்களில் தேடும் பழக்கம் ஆல்பர்ட்டிடம் இருந்தது.

அன்று ஜெர்மனியில் மிகவும் பிரபலமாக இருந்த இயற்கை விஞ்ஞான பொது விளக்க வரிசைகளை ஆல்பர்ட் விரும்பிப் படித்தான். கேள்வி கேட்டால் எள்ளி நகையாடும் ஆசிரியர்களிடமிருந்து பெற முடியாததைப் பெற இப்புத்தக வரிசை உதவியது. விலங்கியல், தாவரவியல், வானவியல், புவியியல் ஆகியவை பற்றிய விளக்கங்கள் இப்புத்தக வரிசையில் இருந்தன. மதவாத விளக்கங்களாகவும், புராணக் கதைகள் மூலம் விளக்கங்களாகவும் இல்லாமல், இவை பொது விளக்கங்கள் தந்தன. சிறு பிராயத்திலேயே இந்த விளக்கங்களை அறிய நேர்ந்ததால் மத அடிப்படையிலான நம்பிக்கைகள் ஐன்ஸ்டீனின் மனதில் ஒட்டவே இல்லை. (நூலிலிருந்து 17-18)

1909 முதல் 1911 வரை சூரிச் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஐன்ஸ்டீனிடம் கற்ற ஹான்ஸ்டானர் என்ற மாணவர் அவரது பாட உரையைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார் :

வகுப்பறையின் மேடை மீது முதலில் ஐன்ஸ்டீன் ஏறிய பொழுது, நாங்கள் நொந்துப்போனோம். கலைந்த, சற்றும் பொருத்தமில்லாத நிறங்கள் கொண்ட சூட்டுடன் அவர் ஏறியதால் புதிய பேராசிரியர் பற்றி சலிப்புடன் பார்த்தோம். வெகுசீக்கிரத்திலேயே அவர் பாடக்குறிப்பை விளக்கிய விதம், கடினமான எங்கள் இதயங்களைக் கவ்விப் பிடித்தது. கையடக்க அளவில் உள்ள தாளில் ஒரு குறிப்பை வைத்துக்கொண்டு அவர் உரையாற்றினார். அவரது தலையிலிருந்து அந்த உரைகள் நேரடியாக வருவது போல் தோன்றியது. அவரது மூளை வேலை செய்கிற விதத்தை நாங்கள் பார்த்தோம்.

இதைவிட குறையற்ற நடையில் மேன்மையான பாட உரைகள் கேட்டிருக்கிறோம். ஆனால், அவைகள் எங்கள் மனதிலே ஆசிரியருக்கும், மாணவனுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் கசப்புடன் உணரவைக்கும். ஆனால், இவரது உரை அந்த இடைவெளியை உணர்த்தாத சுவையான அனுபவமாக இருந்தது.

சில நேரங்களில், நூதனமான முறையில் சில மதிப்புமிக்க விஞ்ஞான முடிவுகள் பெற முடியும் என்பதை நாங்களாகவே உணர முடிந்தது. ஒவ்வொரு பாட உரைக்குப் பிறகும், இப்படி நாமேகூட உரை ஆற்றலாம் என்று எங்களை உணர வைக்கும். (நூலிலிருந்து பக்.47)

ஐன்ஸ்டீன் எழுதுகிறார் : ” எனது அகவாழ்வும், புறவாழ்வும் மறைந்த மற்றும் உயிருடன் இருக்கிற பிற மனிதர்களின் உழைப்பை அடிப்படையாகக் கொண்டது என்பதை தினசரி நூறு தடவையாவது நினைத்துப் பார்ப்பேன். இதுவரை பெற்றதற்கும், இன்று பெறுவதற்கும் கடன்பட்டுள்ளேன் என்ற உணர்வோடு உழைக்க வேண்டும் என்று நினைப்பேன். இந்த நினைப்பு என்னை சிக்கன வாழ்விற்கு ஈர்த்ததோடு, சகமனிதர்களின் உழைப்பை கூடுதலாக அனுபவிப்பது போல் என் மனசாட்சி உறுத்திக்கொண்டே இருந்தது”

படிக்க:
கேள்வி பதில் : ‘மூன்றாம் கலைஞரா’ உதயநிதி ஸ்டாலின் ?
நாட்டு மக்களை கண்காணிக்க வரும் மரபணு அடையாள மசோதா !

சமூக உழைப்பைச் சுற்றித்தான் மானுட சமூகம் உயிர்வாழ முடியும் என்ற உண்மையை, எத்தனை விஞ்ஞானிகள், அரசியல், பொருளாதார நிபுணர்கள் அரசியல் தலைவர்கள், தத்துவ மேதைகள் இன்றும் ஏற்பார்கள் என்பது சந்தேகமே. தாங்கள் அவதரிக்கப் போய்தான் மானுடம் முன்னேறுகிறது என்ற மயக்கத்தில் இருப்பவர்களுக்கு சமூக உழைப்பின் மகிமையை உணர முடியுமா என்பதும் கேள்விக்குறியே. பிறர் உழைப்பை மதிக்கும் குணம் ஐன்ஸ்டீனிடம் இருந்ததாலேயே சாமான்ய மக்களின் பார்வையிலே உயர்ந்த மனிதனாகக் காட்சி அளித்தார். (நூலிலிருந்து பக்.89)

ஐன்ஸ்டீன் இன்பெல்டோடு பேசியதிலிருந்து ; ” வாழ்வு என்பது ஒரு கிளர்ச்சியுறச் செய்யும் காட்சி. நான் அதை அனுபவிக்கிறேன். அது ஆச்சரியகரமானது. ஆனால் அடுத்த மூன்று மணிநேரத்தில் நீ சாக வேண்டுமென்ற நிலை இருந்தாலும், என்னை அது பாதிக்காது. அந்த கடைச மூன்று மணி நேரத்தையும் எவ்வாறு நல்ல முறையில் செலவிடுவது என்றுதான் யோசிப்பேன்; ஆவணங்களை தயாரிப்பேன். அமைதியாகப் படுத்துவிடுவேன்” – (நூலிலிருந்து பக்.95)

நூல் : ஐன்ஸ்டீன் வாழ்வும், சிந்தனையும்
ஆசிரியர் : வே. மீனாட்சி சுந்தரம்

வெளியீடு : பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
தொலைபேசி எண் : 044 – 2433 2424.
மின்னஞ்சல் : info@tamizhbooks.com

பக்கங்கள்: 96
விலை: ரூ 30.00 (முதற் பதிப்பு)

இணையத்தில் வாங்க : noolulagam | panuval

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க