கேள்வி: பட்டத்துக்கு வந்துவிட்ட “மூன்றாம் கலைஞர்” என்று பிளெக்ஸ் – டிஜிட்டல் – கடவுட்-களில் ஜொலிக்கிற உதயநிதி பற்றி உங்களின் பார்வை ..?
கார்பொரேட் அரசியல் கட்சிகளில் இது சாதாரணம் என்று “மௌனமாக” இருக்கப் போகிறீர்களா ..?

– எஸ். செல்வராஜன்

ன்புள்ள செல்வராஜன்,

கார்ப்பரேட் அரசியல் கட்சிகள் மட்டுமல்ல தேமுதிக, பாமக போன்ற லோக்கல் கட்சிகளிலும் இதுதான் நிலைமை. முன்பெல்லாம் வாரிசு அரசியல் என்ற வாதம் நடைபெறுமளவுக்கு இருந்த நிலைமை, தற்போது அப்படி வாதிட்டு பயனில்லை என்ற நிலைமையை அடைந்து விட்டது.

உதயநிதி ஸ்டாலின் சில வருடங்களுக்கு முன்பு திடீரென திரைப்படத் தயாரிப்பாளர் ஆனார். ஏதோ அப்பா கொடுத்த பாக்கெட் மணியை வைத்து சகஜமாக படம் தயாரிப்பது போல அவரது படக்கம்பெனி துவக்கப்பட்டது. பின்னர் திடீரென நடிகரும் ஆனார். தற்போது சில பல படங்களில் ‘நடித்து, பாடி, ஆடி’ முகத்தை மக்கள் திரளிடம் பதிய வைத்தார். அப்புறம் என்ன? அடுத்து “இளைஞரணி செயலாளர்”தான்.

தி.மு.க போன்ற தரகு முதலாளிகளின் கட்சியில் வாரிசுரிமை என்பது குடும்ப அரசியலாக மாவட்டம், வட்டம் வரை பிரதிபலிக்கிறது. ஒருபுறம் திராவிடம் 2.0 என்று கொள்கை பரப்புகிறார்கள். மறுபுறம் குடும்ப அரசியல் 2.0 அல்லது 3.0-வாக வாரிசுகளை இறக்குகிறார்கள்.

கனிமொழியின் மகன் ஆதித்தியன் எப்போது பட்டத்துக்கு வருவார் என்று தெரியவில்லை. இந்நிலைமை அ.தி.மு.க, பாஜக, காங்கிரசு என்று எல்லாக் கட்சிகளிலும் வழிந்தோடுகிறது. ஒய்.எஸ்.ஆர் மகன் ஜெகன் மோகன் தந்தையின் மரணத்திற்கு பிறகு கட்சி ஆரம்பித்து முதல்வரே ஆகிவிட்டார். தெலுங்கானாவின் முதல்வர் சந்திரசேகர ராவ் மகளை எம்.பி தேர்தலிலே நிறுத்தினார்.

சென்ற பாராளுமன்றத் தேர்தல் தோல்வியை ஒட்டி நடந்த காங்கிரசு கட்சி கூட்டத்தில் பல தலைவர்கள் தமது வாரிசுகளுக்கு சீட் கேட்டு மிரட்டினார்கள் என்று ராகுல் காந்தியே பகிரங்கமாக குற்றம் சாட்டினார். அவரும் நேரு குடும்பம் இன்றி காங்கிரசு கடைத்தேற முடியாது என்று அரசியலுக்கு இழுத்து வரப்பட்டவர்தான். பாஜக-வில் மாநில அளவில் பல்வேறு வாரிசுகள் களமிறக்கப்படுகிறார்கள். இன்னும் லல்லு, முலாயம் போன்ற சமூகநீதிக் கட்சிகளிலும் மகன்களே அடுத்த தலைவர்களாக அரியணை ஏறியிருக்கிறார்கள்.

படிக்க:
தமிழகத்தில் மட்டும்தானா வாரிசு அரசியல் ?
♦ காஞ்சிபுரம் அத்தி வரதர் கெடுபிடியில் ஆட்டோ ஓட்டுநர் தீக்குளிப்பு !

இப்படி கட்சிகளில் வாரிசுகள் நேரடியாக களமிறக்கப்படுவதனால் என்ன நட்டம்? அக்கட்சிகளில் உட்கட்சி ஜனநாயகம் என்ற வஸ்து இருக்காது; இல்லையென்றால் பெயரளவுக்கு இருக்கும். தி.மு.க போன்ற கட்சிகளில் கூட பெயரளவுக்கு உட்கட்சி ஜனநாயகத்தை வைத்திருக்கிறார்கள். கட்சியின் தலைவர், செயலர், பொருளாளர் போன்றோர் கட்சி உறுப்பினர்களால் தெரிவு செய்யப்படுகிறார்கள். இவை போக உள்ள பதவிகள், எம்.எல்.ஏ, எம்.பி சீட்டுக்கள் எல்லாம் நியமனமாக உட்கட்சி தேர்தல் இன்றி நியமிக்கப்படுகின்றனர்.

நாம் தமிழர், தேமுதிக, பாமக போன்ற கட்சிகளில் அனைத்துமே நியமனம்தான். அங்கே பெயரளவுக்கு கூட தேர்தல் கிடையாது. சீமான் போன்றோர் கட்சியை தன்னுடைய பாக்கெட்டில் இருக்கும் பர்ஸ் போல பாவிக்கிறார்கள். அன்புமணி, சுதீஷ், பிரேமலதா போன்றோர் எந்த தகுதியுமின்றி அரசியலுக்கு வந்து குடும்பம் போல கட்சிகளை நிர்வகித்து வருகிறார்கள்.

இப்படி கட்சிகள் அனைத்தும் குடும்பமயமாகி வருகின்றன. ஜெயா உயிரோடு இருந்த போது கூட அவர் நினைத்தால் யாரையும் எந்த பதவிக்கும் நியமிப்பார் என்ற நிலைமை இருந்தது. அதனால் பலருக்கு அதிர்ஷடவசமாக பதவிகள் கிடைத்தன. இங்கேயும் ஜனநாயகம் இல்லை. அம்மா மனது வைத்தால் வார்டு கவுன்சிலர் கூட நாடாளுமன்ற மேலவை எம்.பி-யாக மாறலாம். தி.மு.க.வில் இந்த அதிருஷ்டங்கள் இல்லவே இல்லை எனலாம். மாவட்ட அளவிலேயே வாரிசுகளுக்குத்தான் பதவிகள் என்பது பெரும்பான்மையாக இருக்கிறது.

கட்சித் தொண்டர்களும் இத்தகைய குடும்ப அரசியல் குறித்து அலட்டிக் கொள்வதில்லை. மாறாக கட்சி தனக்கு என்ன செய்தது என்று அதாவது தான் சம்பாதிப்பதற்கு என்ன வழி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது என்றே பார்க்கிறார்கள். உள்ளூர் தலைவர்களிடம் கல்லூரி சீட்டுக்கள், அரசு மானியங்கள், இலவச வீடுகள் – பொருட்கள், நிவாரண நிதிகள் போன்றவை சுமூகமாக கிடைக்கிறதா, அதில் கொஞ்சம் கமிஷன் அடிக்கலாமா என்பதே அவர்களுடைய கவலையாக இருக்கிறது. அதிமுக போன்ற கட்சிகள் இப்படித்தான் தனது கீழ்மட்ட தொண்டர் படையை தீனி போட்டு நடத்துகிறது.

கீழ்க்கண்ட பகுதி தேர்தல் முடிவுகளை ஒட்டி எழுதப்பட்டது. வெளியிடப்படாத அந்தக் கட்டுரையை இங்கே பொருத்தம் கருதி இணைக்கிறோம்.

 ♦ ♦ ♦

“இன்டர்ஸ்டெல்லர்” படத்தில் ஒரு வசனம் வரும் “மரிப்பதற்கு முன்னால் கணிசமான அளவு ஆண்கள் தமது குழந்தைகளை நினைத்துக் கொள்கிறார்கள்”. இப்படி குடும்பம் குழந்தை வாரிசு என்பது ஏதோ அரசியல்வாதிகளுக்கு மட்டுமே உரிய ஒன்றல்ல. கோலிவுட் முதல் பாலிவுட் வரை குடும்பத்தின் சென்டிமென்ட் இல்லாத ஒரு கதையோ காட்சியோ பார்க்க இயலாது.

ஹாலிவுட் படங்களில் கதை சொல்லும் பாணியில் ஒரு விசயத்தை கவனித்திருக்கலாம். நாயகர்களுக்கு குடும்பம் உண்டு மனைவி உண்டு பிள்ளை உண்டு. அவர்கள் விண்வெளிக்கு செல்பவர்களாக இருக்கலாம்; சிஐஏவின் தலைமை பொறுப்பில் இருந்து கொண்டு ஈராக்கில் ஏஜெண்டுகளை இயக்குபவர்களாக இருக்கலாம்; அமெரிக்க அதிபராக இருக்கலாம்; எகிப்து அல்லது தென்னமெரிக்காவின் தொல்லியல் தடயங்களைப் பின்பற்றி ஆய்வு செய்யும் பேராசிரியராக இருக்கலாம்; அனைவரும் குடும்பஸ்தராக இருப்பதோடு தமது அபாயகரமான அல்லது குடும்பத்தை பிரிந்திருந்து செய்யும் முக்கியமான பணிகளுக்கிடையே குடும்பத்தை நினைப்பதும் இறுதிக்காட்சியில் மனைவி குழந்தைகளோடு ஒன்று கூடுவதும் ஒரு முக்கியமான விடயம். ஆனால் வில்லன்களுக்கு இந்த பாக்கியத்தை ஹாலிவுட் படைப்பாளிகள் கொடுப்பதில்லை.

சென்னையின் அனைத்து பகுதிகளிலும் பொறியியல் கல்லூரி பேருந்துகள் வந்து நிற்கும்போது ஒரு காட்சியை கண்டிப்பாக அனைவரும் பார்க்கலாம். நடுத்தர வயதில் கவலையுடன் இருக்கும் ஒரு தந்தை அருகே பொறியியல் படிக்கும் ஒரு மகள்.

ஏன் அந்த மகள் வீட்டில் இருந்து தனியாகவோ இல்ல வாகனத்திலோ இல்ல வேறு நண்பர்களோடு கூடவோ பேருந்து செல்லும் இடத்திற்கு வருவதில்லை. அல்லது கல்லூரி தொடர்பான வேறு பயணங்கள்; தேர்வு தொடர்பான பயணங்கள்; மேற்படிப்பு அல்லது வேலை தேடும் பயணங்கள் அத்தனையிலும் இந்த சால்ட் அன்ட் பெப்பர் தந்தைகள் உடன் பயணிக்கிறார்கள். அப்போது அவர்கள் முகத்தை கண்டால் இது என் மகள் இது என் ரத்தம், அவ்வளவு நல்லது கெட்டது அனைத்தும் எண்ணில் குடிகொண்டிருக்கிறது என்பதான ஒரு பாச – நேச அல்லது இன்னதென்று விவரிக்க இயலாத ஒரு உணர்ச்சியை அந்த முகங்களில் பார்க்கலாம்.

மனிதகுலம் சொத்துடைமையை மையமாக வைத்து, வர்க்கங்களாக பிரியும் பொழுது தமது சொத்துக்களை காப்பாற்றுவதற்கும், கை மாற்றுவதற்கும் அவர்கள் கண்டுபிடித்த முதன்மையான நிறுவனமே குடும்பம்தான். நல்லது இப்போது நாம் தலைப்புக்கு திரும்புவோம்.

சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 20 திமுக வேட்பாளர்களில் ஆறு வாரிசுகளும், அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 4 பேர் வாரிசுகளாகவும் இருந்தனர்.

இவர்களில் கனிமொழி, தயாநிதி மாறன் போக துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் அமைச்சர் தங்கபாண்டியனின் மகளும் தங்கம் தென்னரசுவின் சகோதரியுமான தமிழச்சி தங்கபாண்டியன், ஆற்காடு வீராசாமி மகன் டாக்டர் கலாநிதி, பொன்முடி மகன் கவுதம் சிகாமணி ஆகியோர் குறிப்பிடத்தக்க வாரிசுகளாக களமிறக்கப்பட்டார்கள். துரைமுருகன் போன்றோர் பேட்டியளிக்கும் போது இதெல்லாம் ஒரு மேட்டரா என்று ஒரு அலட்சியம் நிச்சயம் இருக்கும்.

படிக்க:
மோடி இந்தியப் பிரதமரானார் ! அதானி உலகக் கோடீசுவரரானார் !
♦ இந்தியாவில் #MeToo இயக்கம் ! புதிய கலாச்சாரம் நூல்

அதிமுகவைப் பொறுத்தவரை அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்த்தன், மதுரை மாநகராட்சி முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பாவின் மகன் வி.வி.ஆர். ராஜ் சத்யன், மற்றும் ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத், பீச் பாண்டியன் மகன் மனோஜ் பாண்டியன் ஆகிய வாரிசுகளும் களமிறங்கினர்.

கட்சிகளில் வாரிசுகள் களமிறக்கப்பட்டாலும் அவர்கள் கண்டிப்பாக மக்களின் ஓட்டுக்கள் வாங்கித்தான் எம்.பி-யாகவோ, எம்.எல்.ஏ-வாகவோ பதவி ஏற்க முடியும். அந்த அளவுக்காவது அவர்களுக்கு ஒரு நிபந்தனை இருக்கிறது. ஆனால் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு அந்த நிபந்தனை கூட இல்லை. எல்லாம் பகிரங்கமான வாரிசு அரசியல்தான்.

தாதுமணற் கொள்ளையர் வைகுண்டராசனின் வாரிசு நியூஸ் 7 சானலையும், கல்விக் கொள்ளையர் பச்சமுத்துவின் வாரிசு புதிய தலைமுறை சானலையும் நிர்வகிக்கின்றன. பிறகு அம்பானி, அதானி, அகர்வால், டாடா, டி.வி.எஸ், தி இந்து குழுமம் என எந்த நிறுவனத்தை எடுத்தாலும் இந்தியாவின் தரகு முதலாளிகளின் தொழில் சாம்ராஜ்ஜியத்தில் வாரிசு அரசியல்தான். அரசியல்வாதிகளின் வாரிசுகள் களமிறக்கப்படுவதை விட கார்ப்பரேட்டுகளின் வாரிசுகள் களமிறக்கப்படுவதுதான் முக்கியமான பிரச்சினை என்றார் அருந்ததி ராய்.

அரசியல்வாதிகளை ஏஜெண்டுகளாக வைத்துக் கொண்டு நாட்டு வளத்தை இந்த வாரிசுகள்தான் கொள்ளையடிக்கிறார்கள். யாரும் தொழிற்முறையில் சாதனைகள் செய்து பதவி ஏற்பது கிடையாது. அப்பன் சொத்து மகனுக்கு என்ற முறைப்படி நிறுவனங்களுக்கு வருகிறார்கள். தனது அப்பாக்கள் என்னென்ன முறையில் ஊழல் செய்து தொழில் சாம்ராஜ்ஜியத்தை படைத்திருக்கிறார்கள் என்ற குறுக்கு வழியிலேயே பயணிக்கிறார்கள். அதற்காக கட்சிகளுக்கு குறிப்பாக பாஜக-விற்கு நன்கொடையை கொட்டிக் கொடுக்கிறார்கள். இயல்பிலேயே மக்கள் மீது வெறுப்பும், கட்சிகள் மீது எரிச்சலும் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

இப்படி நேரடியாக வரும் கார்ப்பரேட் வாரிசுகள் மூலம் நாட்டு மக்களை ஒடுக்கும் பல்வேறு திட்டங்கள் அரசாங்கங்களின் மூலம் வருகின்றன. மக்களுக்கு பதில் சொல்வதற்கு கடமைப்பட்டவர்கள் அல்ல என்பது இந்த கார்ப்பரேட் கட்டமைப்பிலேயே இருப்பதால் அவர்கள் இயல்பிலேயே அப்பன்களை விட அதிகமாய் மக்களை வெறுக்கும் நிலையை அடைகிறார்கள்.

இவர்களுக்குத்தான் நாம் முன்னர் கண்ட அரசியல் வாரிசுகள் சேவை செய்கிறார்கள். ஊடகங்கள் ஆளும் கட்சி சார்பாக இருப்பதற்கு காரணம், அந்த ஊடக நிறுவனங்களின் வாரிசு தலைமைகள்தான். இப்படி ஒவ்வொரு துறையிலும் இந்தக் கூட்டணி வேலை செய்கிறது. எனவே கார்ப்பரேட் வாரிசுகளை நாம் முதன்மையாக அம்பலப்படுத்த வேண்டும். கட்சி வாரிசுகளை அதற்கடுத்த அளவில் மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும்.


வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க