காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை ‘எழுந்தருளும்’ அத்தி வரதர் வைபவத்தால் தமிழ்நாட்டின் எட்டுத் திக்கிலும் ஊடகங்கள் பரபரக்கின்றன. வணிக ஊடகங்களின் விளம்பரத் தீயில் உள்ளூர் மக்களும், ஏழை பக்தர்களும் நாளும் வதைப்படுவது வாடிக்கையாகிவிட்டது.

அரசு – அதிகார வர்க்கமும், உயர்மட்டப் பார்ப்பனக் கூட்டமும் ஒன்று சேர்ந்து இங்கு, விழா நிர்வாக வேலை என்ற பெயரில் தினவெடுத்துத் திரிகின்றனர். இதனால், காஞ்சிபுரத்தில் வசிக்கும் உள்ளூர் மக்கள், தொழிலுக்குக்கூட வெளியே செல்ல முடியாமல் அல்லலுறுகின்றனர். காஞ்சிபுரம் நகரையே திறந்தவெளி கொட்டடியாக மாற்றியுள்ளது, போலீசு.

இரண்டு, நான்கு சக்கரம் ஓட்டுவதற்குக் கூட உள்ளூரில் கட்டுப்பாடு. ஒரு மாதத்துக்கு முன்னரே வண்டி எண் குறித்துக் கொடுத்து, அதிகார வர்க்கத்திடம் அனுமதிச் சீட்டு வாங்கியிருக்க வேண்டும். அப்படி வாங்கியிருந்தாலும் ஓட்டும்போது மரியாதையின்றிப் பேசி அலைக்கழிக்கின்றனர். அபராதம் விதிக்கின்றனர். காஞ்சிபுரத்திற்குள் திடீரேன பொதுப் போக்குவரத்தை குறைத்தும்; நிறுத்தியும் திட்டமிட்டு அத்தி வரதர் கூட்ட நெரிசலை வடியாமல், குறையாமல் பார்த்துக் கொள்கின்றனர்.

கட்டுக்கடங்காத கூட்டம். பத்து லட்சம் பக்தர்கள் குவிந்தனர் என்று பரவசக் கதைகளை பரப்புகின்றனர். குவிந்த கூட்டத்திற்கு அவசர ஏற்பாடுகள் செய்வதாகக் கூறி நிர்வாக முறைகேடுகளிலும், பகல் கொள்ளையிலும் ஈடுபடுகின்றனர்.

ஏற்கெனவே காஞ்சிபுரத்தில் வரலாறு காணாத  தண்ணீர்ப் பஞ்சம். தற்போதைய திடீர் கூட்ட நெரிசலால் குடிநீர், சுகாதாரப் பாதுகாப்பு அனைத்தும் தறிகெட்டுக் கிடக்கிறது. குடிக்கவே முடியாதபடி குளோரின் நீரை கொடுக்கின்றனர். போதுமான கழிப்பிட வசதி செய்ய வக்கற்ற அதிகார வர்க்கம், போலீசு, பாதுகாப்பு என்ற பெயரில் பொது மக்களை வதைப்பதோடு உயிரையும் எடுத்து படுகொலையும் செய்கிறது.

அத்திவரதர் விழா தொடங்கியதும் நேரடியாக அதிகாரவர்க்கத்தால் பலி கொடுக்கப்பட்ட உயிர்கள் :

 1. ஆந்திர மாநிலம் ராஜ முந்திரியிலிருந்து வந்த வயதான பார்ப்பன குடும்பத்தினர் அத்தி வரதரை தரிசித்துவிட்டு திரும்பும்போது அக்குடும்பத்தைச் சேர்ந்த இளைஞரை சன்னதிற்குள்ளேயே லத்தியால் தாக்கி பிணமாக அனுப்பியது. காரணம், ‘அத்தி வரதரை செல்ஃபி’ எடுத்ததாகவும், அதை வாங்கி அழிக்க சொன்னதை அவர் மறுத்ததாகவும், அதற்காக அவரை எச்சரித்ததாகவும் வழக்கமாகப் பொய் செய்தியைப் பரப்பியது போலீசு.
  போலீசு தாக்கியதால் உயிரிழந்த ஆந்திர இளைஞர் (படம் : நன்றி விகடன்)

  உண்மையில் அந்த இளைஞர் கோவிலின் சுற்றுச்சுவரில் கருங்கல் புடைப்பில் செதுக்கி இருக்கும் பல்லியை தன் ஃபோனில் படம் பிடித்துள்ளார். இதற்குதான் வெறிபிடித்த மாதிரி அவர்மீது பாய்ந்த பெண் போலீசு லத்தியால் அவர் முன் மண்டையில் அடிக்க அங்கேயே அவர் சுருண்டு விழுத்தார். அப்போதும் அவரை கவனிக்கவில்லை. குடும்பத்தினர் பதறி அழுதபோதுதான், அவர் இறந்தது தெரிந்தது. உடனே போலீசு, ”அவர் மாரடைப்பில் இறந்தார். வலிப்பு நோயில் இறந்தார்” என்று சுருட்டி ஆந்திராவுக்கு பிணமாக அனுப்பியது.

 2. காஞ்சிபுரம் – அய்யம்பேட்டை புறநகரைச் சேர்ந்த ஆட்டோ ஒட்டுநர் குமார். இவரை எம்.ஜி.ஆர். குமார் என்றே அப்பகுதி ஆட்டோ ஓட்டுநர்கள் அழைப்பார்கள். அந்த அளவிற்குத் தீவிரமான எம்.ஜி.ஆர். ரசிகர். கடந்த 20 ஆண்டுகளாக காஞ்சிபுரம் நகரில் ஷேர் ஆட்டோ ஓட்டுபவர்.  நாற்பது வயதுடைய அவருக்கு கல்லூரியில் படிக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர். ஷேர் ஆட்டோ வருமானத்தில்தான் அவர்களை படிக்க வைத்து குடும்பத்தை நடத்தியுள்ளார். அவரையும் அத்தி வரதருக்கு பாதுகாப்பு என்ற பெயரில் பட்டப் பகலில் படுகொலை செய்தது போலீசு. அவர் குடும்பப் பிரச்சினையாலும், கடன் தொல்லையாலும் தற்கொலை செய்து கொண்டதாக, வழக்கம்போல பொய்ச் செய்தியை பத்திரிகையில் பரப்பியது.

தற்போது நிற்கதியாக நிற்கும் குமாரின் குடும்பத்தை காண வினவு சார்பில்  சென்றிருந்தோம் :

“அன்னைக்கு மதியம் ஒண்ணேகாலுக்கு சாப்பாட்டுக்கு வந்தாரு,  நான் சொல்லி அனுப்புன, டூத்பேஸ்ட், பிரசு, மதியம் பிரிஞ்சி சாதத்துக்கு பச்சடி செய்ய தயிரு எல்லாம் வாங்கினு வந்தாரு. குளிச்சிட்டு வந்து எங்கிட்ட ஆசையா பேசிட்டு, கிளம்புனாரு… அடுத்த ஒரு மணி நேரத்துல என் வீட்டு பக்கத்துல இருக்கற புள்ளளைங்கல்லாம் ஓடி வந்து அக்கா… நம்ம அண்ணன் எரிஞ்சிப் போயிட்டாருன்னாங்க இன்னமும் என்னால நம்ப முடியலயே….”.

“அவருக்கு ஒரு வாரமாவே அலைச்சல். அத்தி வரதர் திருவிழாவுல ஷேர் ஆட்டோ ஓட்டணும்னா உள்ளூர் வாகனமுனு ‘ஸ்டிக்கர் ஒட்ட’ கலெக்டர் கெடு வைச்சாங்க…. அதுக்கு  அலைஞ்சி ஆயிரம் ரூபா கொடுத்து ஸ்டிக்கர் வாங்கினாரு.”

“அதுக்குப் பிறகு, ‘சவாரி ஏத்திக்கிட்டு காஞ்சிபுரத்தில் மற்ற வாகனங்களுக்கு ஒதுக்கியுள்ள டோல்கேட் வரை போக அவரை போலீசு அனுமதிக்கல. அத்தி வரதர் கோயிலிலிருந்து ஐஞ்சு கிலோ மீட்டர் தூரத்துலயே ஆட்டோவை முத்தியால் பேட்டையிலேயே நிறுத்தி உள்ள விடாம திருப்ப சொல்லிட்டாங்க..’ன்னு காலைல எங்கிட்ட குறைப்பட்டாரு…. அப்போது போனில் அவர், ஆட்டோ நண்பர்களிடம் பேசியது… இதுதான்….

‘எல்லா ஆட்டோகாரங்களுமா சேர்ந்து இதுதான் எங்களுக்கு பொழப்பு, இந்த நேரத்துல போலீசு கெடுத்தா எப்படினு? கலெக்டர்கிட்ட பேசுவோம்…. அவரும் விடலன்னா…. ஆட்டோ சாவிய எல்லாரும் சேர்ந்து அவர்கிட்டயே  கொடுத்துட்டு வந்துடுவோம்… எல்லாரும் தயாரா வந்துடுங்க…’னு சொன்னாரு. நான், அவரு பேசி கேட்ட கடைசி வார்த்தை இதுதான்.”

படிக்க:
இந்தியாவில் #MeToo இயக்கம் ! புதிய கலாச்சாரம் நூல்
♦ ஒரு வரிச் செய்திகள் – 01/07/2019

“கஷ்ட நிலைமையில… நிறைய செலவு செஞ்சி ஆட்டோவுக்கு எஃப்.சி இப்பத்தான் வாங்குனாரு.. அத்தி வரதர் விழாவுக்கு மக்கள் வெளியூர்ல இருந்தெல்லாம் வருவாங்க, ஆட்டோ நல்லா ஓடும். கஷ்டம் தீரும்னு நினைஞ்சாரு…. நாங்க பெரிசா ஒண்ணும் நினைக்கலயே.

அன்னைக்கு அவருக்கு நேர்ந்த கொடுமைய நாங்க எதுவும் நேர்ல பாக்கல, பார்த்தவங்க சொல்லறததான் கேட்டோம். மதியம் இங்கிருந்து போனவரு, முக்கால் மணி நேரமா போலீசுக்கிட்ட வாக்குவாதம் பண்ணியிருக்காரு. அவங்க மரியாத இல்லாம அவர பேசியிருக்காங்க, இங்கேயே தீக்குளிச்சி செத்துடுவேன்னு சொல்லியிருக்காரு.”

போலிசார் அவமானப்படுத்தியதால் தீக்குளித்து இறந்த ஆட்டோ ஓட்டுநர் குமார்.

“போலீசு மேலும் அவமானம் படுத்தியிருக்காங்க அதனால, அவங்க எதிரிலேயே வண்டிக்கு வைச்சிருந்த பெட்ரோல ஊத்தி கொளுத்திக்கினாரு, பல பேரு பக்கத்துல இருந்தும் யாருமே தடுக்கலையே….. எரிஞ்சி கரிக்கட்டயாவர வரைக்கும் வேடிக்கை பார்த்திருக்காங்க, முழுசா எரிஞ்சதால அவர யாருக்கும் அடையாளம் தெரியல, அவர் ஆட்டோவை வைச்சி எங்களுக்கு தகவல் கொடுத்தாங்க.

அந்த கோரத்த என்னால பாக்கவே முடியல, மயக்கமாயிட்டேன்… அங்க என்ன நடந்ததுனு கேட்கக்கூட என்னால முடியலயே.”

அருகிலிருந்த அவரது மகன் திருநாவுக்கரசு:

“அன்னிக்கு காலைல என்ன காலேஜ்க்கு வண்டியில விட்டுட்டு போனாரு, மதியம் பக்கத்து வீட்டு சூர்யா வந்து கூப்பிட்டான். “வாடா உங்கம்மா கூப்பிட்டாங்க… உங்கப்பாவுக்கு உடம்பு சரியில்லையாம்” என்றான்.. வந்து பார்த்தா ஆஸ்பத்திரி மார்சுவரியில உங்கப்பா பாடி இருக்குன்றாங்க, எனக்கு என்ன சொல்லறதுனே தெரியல அப்போ.. போலீசெல்லாம் சேர்ந்து, அம்மாகிட்ட கையெழுத்து போடுனு கேட்டாங்க… அங்க சப் கலெக்டரும்  கூட நிக்கிறாரு… நான் அவங்கக்கிட்ட “எங்கப்பா எப்படி செத்தாரு” னு கேட்டேன். திரும்ப… திரும்ப அதையே கேட்டேன்.

அவங்க எனக்கு பதில் சொல்லாம, காதுல வாங்காத மாதிரி.. எங்கம்மாவ விடாம ‘வீட்ல பிரச்சினை, டென்ஷனா இருந்தாருனு கையெழுத்துப்போடு’-ன்னு தொல்லை பண்ணாங்க, அவங்க எங்கிட்ட, ‘இன்னா கேள்வி கேட்குற? உங்களுக்கு இப்ப உங்கப்பா பொணம் வேணுமா வேண்டாமா? எங்களுக்கு பல கேஸ்கள், பந்தோபஸ்த்துனு பல வேலைகள் இருக்கு. உங்ககிட்ட பதில் சொல்லிக்கினு இருக்க முடியாது…. நாங்க சொல்ற மாதிரி எழுதி கையெத்துப்போட்டா பாடிய சீக்கிரம் நீங்க எடுத்துட்டு போயிடலாம். இல்லேன்னா… ஆஸ்பிட்டல்லயே காத்துக்கினு இருக்க வேண்டியதுதான் நாங்க கிளம்பிடுவோம்’னு மிரட்டனாங்க. எனக்கு அப்பா போய்ட்டாரேனு அழுவுறதா, இவங்க மிரட்டறதுக்கு கோவப்படுறதானே தெரியல….” என்றார் சோகத்தோடு.

ஆட்டோகாரங்க நிறைய பேர் இருப்பாங்களே… யாரும் துணை நிக்கலயா?

“ஆஸ்பிட்டலுக்கு அவர கொண்டு வந்தது எனக்கு ஆறுதல் சொன்னதோட; டிரைவர்ங்க எல்லாம் நியாயம் கேட்டு  ஆஸ்பிட்டல் ரோட்டுல உக்காந்தாங்க. ஐஞ்சி நிமிசத்துலயே போலீசு மிரட்ட ஆரம்பிச்சிடுச்சி. இந்த ரோட்டுலத்தானே நீங்க ஆட்டோ ஓட்டணும்,  பாத்துக்கறோம்…. என்று மிரட்டியதும் வேறு வழியில்லாம எங்கிட்ட வந்து ஆக வேண்டியத பாப்போம்னு சொன்னாங்க.

அந்த நேரத்துல சப்கலெக்டர்: உங்க பசங்க என்ன படிச்சிருக்காங்க..? அவங்களுக்கு கவர்மெண்ட் வேல போடலாம்; சி.எம் கிட்ட பேசி நிவாரணம் வாங்க ஏற்பாடு பண்றேன்; வேற எதுவும் பிரச்சினை பண்ண வேண்டாம். பாடிய நல்லபடியா அடக்கம் பண்ணுங்க…. இதுல கையெழுத்துப்போடுங்க…..னு வாய் ஒழுக பேசி எங்கிட்ட கையெழுத்து வாங்கிட்டானுங்க….

எனக்கும்  இருந்த மனநிலையில என்ன பண்றதுனே தெரியல, யாரும் எனக்கு துணை இல்ல… வக்கீலா வந்தவனும் அவங்க பக்கமே நின்னு பேசிட்டான்…. என்  குடும்ப சொத்தே போச்சு….. இவனுங்க கொடுக்கற நிவாரணம் எனக்கு எதுக்கு?”

என்று அழுத அவர்… “நாப்பது வருசத்துக்கு ஒரு தடவை  அத்தி வரதர தண்ணியிலருந்து எடுக்கறானுங்களாம், அந்த சாமி என் புருஷன எரிச்சி குளிர் காய்ஞ்சிடுச்சிப்போல”என்றார் விரக்த்தியோடு.

படிக்க:
சென்னை : டாக்சி ஓட்டுநரை தற்கொலைக்கு தள்ளிய போலீசு – ஓட்டுநர்கள் போராட்டம் !
♦ புல்லட்டு பைக் இல்லாம கல்யாண சீர்வரிசை இல்லை !

டி.வி, செய்திதாள்களில் “கடன் தொல்லையால் தீக்குளிப்புனு..” போட்டீருந்தாங்களே என்றோம்.

அவனுங்க “குடும்ப கஷ்டமுனுக்கூட சொன்னானுங்களா……? அவருக்கு நான் பொண்டாட்டியா? இவனுங்க… பொண்டாட்டியா? எங்க குடும்பத்துல எந்த கஷ்டமும்… இல்ல….நாங்க கட்ட முடியாத அளவுக்கெல்லாம் கடனுமில்ல…. எங்க ரெண்டு பிள்ளங்கள நல்லா படிக்க வைச்சாரு…. ஆட்டோத்தான் அவருக்கு உசுரு.. ஒருநாள்கூட ஆட்டோவ ஓட்டாம இருக்க மாட்டாரு…. உடம்பு சரியில்லனாக்கூட ஒரு ரவுண்டு போனாத்தான் தூங்குவாரு…. அப்படி அந்த தொழில நேசிச்சாரு…. எந்த நேரமும் காக்கி சட்டத்தான் போடுவாரு…. காக்கித்தான் டிரைவருக்கு கெத்து…னு சொல்வாரு, அதே காக்கியோட போயிட்டாரு. போன வராத்துலக்கூட முன்னூரு ரூபாத்தான் இன்னிக்கு வருமானம்.. சொன்னவரு, நான் பரவாயில்ல வாடகை ஆட்டோ ஓட்டுற மத்தவங்களுக்குத்தான் ரொம்ப கஷ்டம். வாடக கட்டணும்; போலீசுக்கு மாமூல் தரணும்; வண்டி ரிப்பேர் பாக்கணும்; அவங்க எப்படித்தான் குடும்பம் நடத்துறாங்களோனு வேதனைப்பட்டாரு.

ஆனா, அந்த மனுசன் எரிஞ்சி கட்டையாவர வரைக்கும் வேடிக்கை பாத்திருக்காங்க ஏன் போலீசு ஒரு தட்டு தட்டி, பெட்ரோல புடுங்கிப் போட்டிருக்க முடியாதா? எவன் செத்த நமக்கென்ன-ன்ற திமிர் தானே… நாளைக்கு போலீசு உனக்கு இதே நில வந்தா யாரு தடுப்பா?

இதுமட்டுமில்ல, அவரு கொளுத்திக்கனப்போ பக்கத்துல இருக்குற பேக்கரியில வீடியோ கேமரா இருக்கு. அதுல எல்லாம் பதிவாயிருக்கும்… அதையும் போலீசு மிரட்டி புடுங்கிட்டாங்க..

அந்த மனுசன் எவ்வளவு கஷ்டத்தயும் தாங்குவாரு… ஆனா, மாரியாத இல்லனா கோவப்படுவாரு, போலீசு மேல கோவப்பட்டு எங்கள விட்டுப்போனத நெனஞ்சாத்தான் தாங்க முடியல….. எந்த கெட்ட பழக்கமும் இல்ல குடி, பீடி எதுவுமே இல்லேயே. எங்கம்மா வீட்டவிட என்ன அவரு நல்லா பாத்துக்குவாரு, இனி நான் என்ன பண்ணப்போறானே தெரியலயே.

ஆட்டோ சவுண்டு நைட்டலெல்லாம் கேட்கற மாதிரியே இருக்கு, ஒருநாள் கூட அம்மா வீட்ல என்ன விட மாட்டாரு, வாம்மா நம்ம வீட்டுக்கு போலாம்னு அங்க வந்து நிப்பாரு… இனி யாரு என்ன கூப்பிடப்போறாங்க….”னு அழ ஆரம்பித்துவிட்டார்.

ஆட்டோ ஓட்டுநர் சங்கம் இருக்குமே அதுல எதுவும் உதவலயா?

“காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா ஆட்டோ ஓட்டுநர் சங்கத்துலத்தான் இருக்காரு. அதுக்கு மாசமாசம் பணம் கட்டுவாரு, எப்பவுமே சொல்லுவாரு; அங்க யாரும் தைரியமா பேசமாட்டாங்க, ஏன்னா எல்லாருமே வாடகை ஆட்டோ ஓட்டுறவங்க. எதிர்த்து பேசுனா தொழில் பண்ண முடியாதுனு சொல்லுவாரு, அங்கிருந்துவந்து ஒரு மாலை போட்டுட்டு தியாகி ஆகிட்டாருனு போயிட்டாங்க, வேற ஒண்ணும் சொல்லல.

ஆனா, அவரு இறந்து பிரச்சினை ஆனாதால போலீசு இப்ப எல்லா ஆட்டோவும் உள்ள விடுறான்… அதனால, இன்னிக்கு பல குடும்பங்கள் சந்தோஷமா இருக்கு…. இவரு எங்கள நடுத்தெருவுல நிறுத்திட்டு போயிட்டாரு…” என்றார்.

அடுத்து என்ன செய்வது என்று வழி தெரியாமல் குடும்பமே பித்து பிடித்தவர்கள் போல ஆதரவின்றி தவிக்கின்றனர்.

வினவு செய்தியாளர்.

3 மறுமொழிகள்

 1. கல்லை கடவுள் என்று நம்பும் மட்டரகமான மனிதர்களால் ஒரு குடும்பம் நடுத்தெருவில் நிற்கும் நிலை வந்துவிட்டது

  • உங்களின் சகிப்பின்மை மதவாதம் நன்றாகவே இந்த கருத்தில் தெரிகிறது. சவுதிக்கு செல்லும் கூட்ட நெரிச்சலிலும் உலகில் பல பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் இறக்கிறார்கள் அதற்காக அந்த மக்களையும் அதற்காக இஸ்லாமியர்களையும் மட்டரகமான மனிதர்கள் என்று சொல்விர்களா ?

   மேலும் இந்த மாதிரியான செய்திகளின் வினவு மற்றும் மதமாற்ற கூட்டங்களின் பொய்களும் கலந்து இருக்கும், அவர்களை பொறுத்தவரையில் ஹிந்து மதத்தின் மீது வெறுப்பை விதைக்க எந்தளவுக்கு வேண்டுமானாலும் பொய்களை மனசாட்சி உறுத்தாலே இல்லாமல் சொல்ல கூடியவர்கள்.

   கவுரி லங்கேஷ் தனது கடைசி டீவீட்டில் பொய் என்று தெரிந்தே பல பொய்களை வேண்டும் பரப்பினோம் என்று சொல்லி இருக்கிறார்…. இவர்கள் எப்படி உண்மையை சொல்கிறார்கள் என்று உங்களை போன்றவர்கள் நம்புகிறார்கள் என்று தெரியவில்லை.

 2. ஒரு பார்ப்பன பையன்தான் அடிபட்டான் அதுக்கெல்லாம் பொங்கறிங்களே

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க