சென்னை டி.எல்.எஃப் ஐடி நிறுவனத்தின் கால் டாக்ஸி ஓட்டுநரை போலீசு திட்டியதால் அவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். அவரின் மரணத்திற்கு நீதி கேட்டும் சம்பந்தப்பட்ட போலீசுமீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் அந்த நிறுவனத்தின் முன்பாக சக ஓட்டுநர்கள் 31.01.2019 அன்று போராட்டம் நடத்தினர்.

போலீசு திட்டியதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட ஓட்டுநர் ராஜேஷ்.

சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஐடி நிறுவனத்தில் என்.டி.எல் கால்டாக்ஸியின் ஓட்டுநராக பணியாற்றி வந்தார் ராஜேஷ். காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஸ் சென்னை மாங்காட்டில்  வாடகை வீட்டில் தங்கி பணிபுரிந்து வந்தார். கடந்த 25 -ம் தேதி காலை 7 மணிக்கு  டி.எல்.எஃப்-ன் முதல்  சவாரிக்காக கோயம்பேட்டில் இருந்து பாடி செல்லும் வழியில் உள்ள அண்ணாநகரில் பெண் ஊழியரை ஏற்றி வர சென்றிருக்கிறார்.

அப்பெண் ஊழியரை ஏற்றிக் கொண்டு மற்றொரு ஆண் ஊழியர் வருவதற்காக காத்திருந்த போது அங்கு வந்த போலீசுக்காரர், காரின் பின் பக்கம் அடித்து  ராஜேஷை  அசிங்கமாக திட்டியிருக்கிறார். அதனால் அடுத்த 100 அடி தள்ளி வண்டியை பார்க் செய்திருக்கிறார். அப்பொழுதும் அதே போலீசு வந்து திட்டியிருக்கிறார். வண்டியில் பெண் ஊழியர் இருப்பதாக சொல்லியும் அவமானப்படுத்தி இருக்கிறது போலிசு.  இதனால் மனமுடைந்த ராஜேஷ் மறைமலை நகர் ரயில் நிலைய தண்டவாளத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

உடலை கைப்பற்றிய போலீசு தற்கொலைக்கான  காரணம் குறித்து அவரது மொபலை ஆராய்ந்து பார்த்தபோது மரண வாக்கு மூலத்தில் தனக்கு நேர்ந்த துயரத்தைப் பற்றி வீடியோவாக பதிவு செய்திருக்கிறார். அந்த ஆதாரத்தை அழித்து விட்டு மொபலை ராஜேஷின் சகோதரரிடம் ஒப்படைத்து இருக்கிறது.  அவருடைய மரணத்தில் சந்தேகமடைந்த உறவினர்கள் போனை ரெக்கவரி செய்து பார்த்த போதுதான் தற்கொலைக்கான காரணம் தெரிய வந்துள்ளது. உடனடியாக அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இல்லையென்றால் வழக்கம் போல் காதல் தோல்வி, பணிச்சுமை, குடும்ப தகறாறு என்ற பொய்யை சொல்லி போலீசு கிரிமினல்கள் மூடி மறைத்திருப்பார்கள்.

இதற்கு முந்தையநாள் திருவொற்றியூரில் வாடிக்கையாளரை அழைக்கச் சென்றபோது நோ பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தியதாக சொல்லி ரூ. 500  அபராதம் விதித்துள்ளது. அதற்கு பில் கேட்டதற்கு அசிங்கமாக திட்டியுள்ளது போலீசு. அதுபற்றி தன் மரணத்திற்கு முன் பேசிய அந்த வீடியோவில் பதிவிட்டுள்ளார் ராஜேஷ்.

மேலும் அந்த வீடியோவில், “பப்ளிக் ஸ்ட்ரைக் பண்ணால் அடிச்சி உள்ள ஏத்துறீங்க. போலிசு தப்பு பன்னா என்ன பன்றது. இதுக்கு எதனா ரூல் இருக்கா உங்க சட்டத்துல… எதுவும் கிடையாது. போலீசு வைத்ததுதான் சட்டம். நீங்க எட்டு மணி நேரம் டூட்டி பாத்துட்டு போயிட்டு தூங்குறிங்க. நாங்க எவ்ளோ நேரம் வண்டி ஓட்டுறோம்னு உங்களுக்கு தெரியுமா?  காலையில் ஐந்து மணிக்கு எழுந்து 6 மணிக்குள் கம்பனி சென்று ஏழு மணிக்குள் பிக்கப் பாயிண்ட் போயிவிட்டு நைட்டு தூங்க ஒன்றை மணி ஆகி விடுகிறது..  மூன்றரை மணி நேரம் தான் தூக்கமே. இதை எல்லாம் தாங்கிட்டு வண்டி ஓட்டிட்டு இருந்தா உங்காளுங்க என்ன கேக்குறாங்கன்னா, “நீ உங்க அம்மாளுக்குத்தான் பொறந்தியா” என்று கேட்கிறார்கள். இது உன் வேலையா? நோ பார்க்கிங்கில் இருந்தால் நீ ஃபைன் போடு. நான் நோ பார்க்கிங்கில் கூட நிறுத்தவில்லை. என் சாவுக்கு காரணம் சென்னை போலீசுதான்” என்று கூறியிருக்கிறார்.

வாக்குமூல வீடியோவின் சுட்டி:

மேலும், “ஒவ்வொரு டிரைவரும் தினந்தோறும் செத்து செத்து வண்டி ஓட்டிட்டு இருக்கான். அதிலும் இந்த மாதிரி பிச்சைப் பசங்களால் மாசத்துக்கு ஒரு டிரைவர் செத்துகிட்டு இருக்கான். என் சாவே கடைசியா இருக்கனும். இதுக்கப்புறம் இந்த மாதிரி நடந்துச்சினா எடப்பாடி பழனிச்சாமியோ, ஏ.கே விஸ்வநாதனோ வேஸ்ட்தான்…

தரமணியில் ஒரு ஓட்டுநர் இதே போல் இறந்தார். எதாவது நடவடிக்கை எடுத்திங்களா? கேட்டா, இடம் மாத்திட்டேன், ஆயதப் படைக்கு மாத்திட்டேன்னு சொல்லுவிங்க. மாத்திட்டிங்க….. மறுபடியும் அதே மாதிரி தானே நடந்துக்கினு இருக்கு. அதுக்கு எதாவது தீர்வு இருக்கா. ஒன்னும் கிடையாது. மேற்கொண்டு இதுமாதிரி நடந்தா வேலையை விட்டு போயிடுங்க. மக்கள்கிட்ட கொடுத்துடுங்க. மக்களாட்சி பண்ணிக்கட்டும்” என்று கூறி இருக்கிறார்.

இந்த வீடியோ வாயிலாக தகவலறிந்த ஓட்டுநர்கள் தற்போது போராடி வருகிறார்கள். முக்கியமாக “மாடாக உங்கள் நிறுவனத்துக்காக நாங்கள் உழைக்கிறோம். எங்களுக்காக குரல் கொடுங்கள்”. சம்பந்தப்பட்ட போலீசை தண்டிக்க வலியுறுத்துமாறும் சம்பவம் நடந்தபோது வாகனத்தில் இருந்த ஊழியரை போலீசுக்கு எதிரான சாட்சியாக முன்னிறுத்துமாறும் கோருகிறார்கள். ஆனால் டி.எல்.எஃப் நிறுவனமோ அதன் ஊழியர்களோ அரசோ இப்போராட்டத்தை கிஞ்சித்தும் கண்டுகொள்ளவில்லை.

ஒருபக்கம் பணி பாதித்துவிடக்கூடாது என்று டி.எல்.எஃப் ஊழியர்களே இறங்கி வந்து ட்ராபிக் கிளீயர் செய்கிறார்கள். மற்றொரு பக்கம் அலுவலகத்தின் முன் போராடுவது பிரச்சனை எனக்கருதி போலிசின் மூலம் முடக்க முயற்சித்து வருகிறனர்.

போலீசை கண்டித்து டி.எல்.எஃப் நிறுவனம் முன்பாக ஓட்டுநர்கள் நடத்திய போராட்டம்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

சென்னையில் ஐ.டி நிறுவனங்கள் அதிகரித்த பிறகு கால் டாக்சிகள் பெருமளவு அதிகரித்து விட்டன. இந்தக் கார்களின் ஓட்டுநர்கள் சவாரிக்காக சென்னை முழுவதும் காத்துக் கிடக்கின்றனர். எல்லா இடங்களிலும் கார் நிறுத்த வழியில்லை. மீறி நிறுத்தினால் போலீசு அடாவடி செய்கிறது. தள்ளி நின்று வந்தால் தாமதமா என்று வாடிக்கையாளரோ இல்லை கால் டாக்சி நிறுவனங்களோ பதிவு செய்கின்றன. மேலும் குறிப்பிட்ட வேலை நேரத்தில் இத்தனை சவாரி செய்தே ஆக வேண்டிய கட்டாயத்திலும் அவர்கள் இருக்கின்றனர். மற்றொரு புறம் பொதுப்போக்குவரத்தை கிட்டத்தட்ட இல்லாமல் ஆக்கி வருகிறார்கள்.

இன்று சென்னையில் கால் டாக்சி ஓட்டும் ஓட்டுநர்கள் அனைவரும் பெரும் பதட்டத்திலேயே ஓட்டுகிறார்கள். அந்த பதட்டத்தை மேலும் கிளறிவிடுகிறது போலீசு. கார் வசதி வேண்டுமென்று ஆக்கிய கார்ப்பரேட் நிறுவனங்கள் இது குறித்து கவலைப்படுவதில்லை. இறுதியில் நம் தொழிலாளிகள் தற்கொலை செய்கிறார்கள். தனியார்மயமாக்கத்தால் கார்களும், உணவு செயலிகளும் இப்போது நவீன பாணியாகி வருகின்றன. ஆனால் இந்த நவீன அடையாளங்களுக்குள்ளே பணியாற்றுவோர் ஒரு போர்க்களத்தில் பணியாற்றுவது போல ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இங்கே அரசோ, ஆளும் வர்க்கமோ எதற்கும் பொறுப்பேற்பதில்லை. என்ன செய்யப் போகிறோம்?

2 மறுமொழிகள்

  1. தன் இறப்பின் மூலமாவது,தன்னுடன் பணிபுரிபவர்களின் பிரச்சினை தீரவேண்டும் என்ற எண்ணம்; தான் எதிர்ப்பவர்களின் அதிகாரத்தை பற்றி அஞ்சாமல் துணிச்சலுடன் ,மக்கள் முன்னிலையில் பகிரங்கமாக வெளிப்படுத்திய விதம்,மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் சாட்டை அடி!

  2. பீ அள்ளிப் பொழக்கிற அருந்ததியின மக்களை இழிவுபடுத்தும் சமூகம்
    பீ தின்னுப் பொழக்கும் போலீசை மதிக்கிதே …. தூ

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க